தேவதச்சனின் கவிதையுலகம்

#goodreads #tamil_literature #15minsRead

வட்சப் பதிவு

-SK

கட்டுரை

கவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் –

எஸ்.ராமகிருஷ்ணன்

.

தேவதச்சனை எனது பதினெட்டாவது வயதில் கோவில்பட்டியில் சந்தித்தேன். அவரிடமிருந்தே இலக்கியத்தின் நுட்பங்களை, மேன்மைகளை, பொறுப்புணர்வுகளைக் கற்றுக்கொண்டேன். ஒருவன் தனது ஆசானைக் கண்டுகொள்வதும், அவரிடம் தன்னை ஒப்படைத்துவிட்டு அவரது அரவணைப்பில் வளர்வதும் பாக்கியம். இசைக்கலைஞர்கள் பெரிதும் அப்படித்தானிருக்கிறார்கள். இலக்கியத்தில் சிலருக்கே அப்படியான ஆசான்கள் கிடைத்திருக்கிறார்கள். உலகம் தேவதச்சனை ஒரு கவிஞராக மட்டுமே அறியும். நான் அவரது பன்முக ஆளுமையை அறிந்தவன். தேவதச்சன் சிறந்த ஓவியர், நகை வடிவமைப்பாளர், புனைகதைகள் குறித்து அவரளவுக்கு ஆழ்ந்த அறிதல் கொண்டவர்கள் குறைவு. தத்துவத்தில் எம்.ஏ.படித்தவர். அறிவியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தேர்ந்த இசை ரசிகர். தமிழ் செவ்விலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்; பேச்சிலும் எழுத்திலும் தனித்துவமான பார்வைகளை வெளிப்படுத்துகிறவர்.

நவீனத் தமிழ்க் கவிதையுலகின் மகத்தான கவியென்றே அவரைக் கூறுவேன். என் கல்லூரி நாள்களில் புத்தகம் படிப்பதும் ஊர் சுற்றுவதுமே எனது முழுநேர வேலை. கல்லூரி நூலகத்திலேயே கிடப்பேன். இலக்கியம் பேசும் நண்பர்களைத் தேடிப்போய் பார்ப்பதும் பகலிரவாக விவாதம் செய்வதும் விருப்பமானதாக இருந்தது. கோணங்கி எனது அண்ணனின் நண்பர். என் மாமாவோடு கூட்டுறவுப் பயிற்சி நிறுவனத்தில் உடன் படித்தவர். ஆகவே, அவருடன் மிகவும் நட்பாகப் பழகத் தொடங்கினேன். என் அம்மாவின் ஊர் கோவில்பட்டி. தாத்தாவின் வீடு மேற்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்தது. பள்ளி வயதில் சனி ஞாயிறு விடுமுறைக்கு கோவில்பட்டிக்குப் போய்விடுவேன். கோடை விடுமுறை முழுவதும் கோவில்
பட்டியில்தான் இருப்பேன். கோணங்கி வீடு இந்திரா நகரில். ஆகவே, அவரை அடிக்கடிச் சந்திப்பது வழக்கம். அப்படி ஒரு சந்திப்பின் போது கவிஞர் கௌரிசங்கரை அறிமுகம் செய்துவைத்தார். அவர்தான் என்னை செண்பகவள்ளியம்மன் கோவில் மேட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனார்.

அது இலக்கியச் சந்திப்பு நடைபெறும் மையம். புழுதிபடிந்த படிக்கட்டுகளில் அமர்ந்து நண்பர்கள் இலக்கியம் பேசிக் கொண்டிருப்பார்கள். நாங்கள் சென்றபோது ஏற்கெனவே சிலர் தீவிரமாக ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றிப் பேசிக்கொண்டி ருந்தார்கள். தத்துவம், அரசியல், இலக்கியம், பண்பாடு பற்றிய உரையாடல்கள் நாள் தவறாமல் கோவில்பட்டியில் நடந்து வந்தன. அந்த நாள்களில் இலக்கியவாதிகள் பலருக்கும் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆதர்சமாக இருந்தார். ஆகவே, அந்த விவாதத்தை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினேன். படியின் ஓரமாக உட்கார்ந்திருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர், மெல்லிய குரலில் “ஜே.கிருஷ்ணமூர்த்தியெல்லாம் அவுட்டேடட் ஆகிட்டாரு. காஸ்நாடாவை வேணும்னா கன்சிடேர் பண்ணலாம்” எனச் சொன்னார்.

உடனே, கௌரிசங்கர் இடைமறித்து ஆவேசமாக அதற்குப் பதில் சொல்லத் தொடங்கினார். நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடன் வந்திருந்த கோணங்கி சொன்னார். “அவர்தான் தேவதச்சன்.”

இருட்டில் முகம் தெரியவில்லை. ஆனால், தேவதச்சனின் குரல் ஈர்ப்புடையதாக இருந்தது. சிறுபத்திரிகைகளில் தேவதச்சனின் கவிதைகளை வாசித்திருக்கிறேன்

காற்றின் கிளையேறி
திகுதிகுவெனப் பரவின
எரியும் பிரச்சனைகள்
நாடி ஒடுங்கிற்று
வார்த்தை பூதம்

என்ற அவரது கவிதை வரிகள் மனதில் எழுந்தோடின.

எவ்வளவு அழகான சொல்லாட்சி. ‘நாடி ஒடுங்கிற்று வார்த்தை பூதம்’ என்ற சொற்கள் மனதில் ஒளிர்ந்தன. தேவதச்சனிடம் யாராவது என்னை அறிமுகம் செய்துவைக்க மாட்டார்களா என ஆவலோடு இருந்தேன். விவாதவேகத்தில் யாரும் அதை கவனம் கொள்ளவே இல்லை. 

அமைதியாக; எதிர்க்கருத்து சொல்பவர்களை முழுமையாகப் பேசவிட்டு; குறைவான சொற்களில் தன் தரப்புக் கருத்தை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் தேவதச்சன். “அப்படியில்ல ஆறுமுகம். கிருஷ்ணமூர்த்தி ஒருத்தன்தான் லைஃபை சரியாக அடையாளம் காட்டுறான். அவன் தொடுற இடங்கள் சாதாரணமானதில்லை” எனக் கவிஞர் கௌரிசங்கர் உணர்ச்சி பூர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

தேவதச்சனின் இயற்பெயர் ஆறுமுகம் என்பதை அந்த நிமிடம்தான் தெரிந்து கொண்டேன். பாதி விவாதத்தில் தேவதச்சன் எழுந்து போய்விட்டார். மெயின் பஜாரில் அவருக்கு நகைக்கடை ஒன்றிருந்தது. சேது ஜுவல்லர்ஸ் என்ற அந்த நகைக்கடை கோவில்பட்டியில் பிரபலமானது. தேவதச்சனின் அப்பா மிகச் சிறந்த இசை ரசிகர். காருகுறிச்சி அருணாசலத்தின் நண்பர். சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்றவர். மிகச் சிறந்த பண்பாளர்.

மறுநாள் நானாக தேவதச்சனைக் காண நகைக்கடைக்குச் சென்றேன். காலை நேரம் என்பதால் கூட்டமில்லை. நானே அறிமுகம் செய்துகொண்டேன். முதல் சந்திப்பிலேயே நீண்டகாலம் பழகியவரைப்போல பேசத் தொடங்கிவிட்டார். தேவதச்சனின் கடை எதிரில் சினிமா வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது வழக்கம். அந்த போஸ்டரில் இருந்த ஜெய்சங்கர் படம் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். பொதுவாக இலக்கியவாதிகள் பொழுதுபோக்கு சினிமாவைப் பற்றிப் பேசுவதைப் பாவம் எனக் கருதுகிறவர்கள். யாரும் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி பற்றிப் பேசுவதில்லை. ஆனால், தேவதச்சன் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகர். அவருக்குப் பிடித்தமானவை அரங்கில் ஓடும் வெகுசனப் படங்களே. அவற்றை ரசித்துப் பார்க்கக்கூடியவர். அதைப்பற்றி விருப்பத்துடன் பேசவும் செய்வார். அது எனக்கு வியப்பளித்தது. தேவதச்சனுடன் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அதில் சினிமா, இலக்கியம். கி.ராஜநாராயணன், நவீனக் கவிதைகள், சூபி தத்துவம், ஞானக்கூத்தன் என எத்தனையோ விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ஓய்வாக இருக்கும்போது வாருங்கள் பேசிக்கொண்டிருக்கலாம் என அனுப்பிவைத்தார். அன்றிரவு கோணங்கி வீட்டிற்குப் போய் தேவதச்சன் பற்றி வியந்து பேசிக்கொண்டிருந்தேன்.

“கோவில்பட்டியோட இலக்கிய ஆலமரம் அவருதான். நாம எல்லோருமே அதோட விழுதுகள். ஆயிரம் பறவைகள் வந்து அடையற மரமாக இருக்கார்” என கோணங்கி சொன்னது இன்றைக்கும் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. அது உண்மை. கோவில்பட்டியிலிருந்து உருவான எழுத்தாளர்கள் கௌரிசங்கர், சமயவேல், யுவன்சந்திரசேகர், ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, உதயசங்கர், வித்யாசங்கர், அப்பணசாமி, பொன்னுசாமி பிரதீபன், அப்பாஸ், மாரீஸ், சோ.தர்மன் உள்ளிட்ட பலரும் ஏதோ ஒரு வகையில் அவரது பாதிப்பு கொண்டவர்களே.

புதிதாக எழுத வருகிறவர்களை அடையாளம் கண்டு உத்வேகப்படுத்து வதிலும், பிரபல எழுத்தாளர்களை அழைத்து வந்து கடுமையான விவாதம் செய்வதும், புதிய சிந்தனைப்போக்குகளை அறிமுகம் செய்து காரசாரமான விவாதங்கள் செய்வதும் கோவில்பட்டியின் மரபு. அதில் தலைசிறந்தவர் தேவதச்சன். தமிழின் முக்கியக் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பலரும் கோவில்பட்டிக்கு விருந்தினராக வந்து தங்கி உரையாடிப் போயிருக்கிறார்கள். புதிதாக எழுத வருகிறவர்களின் எழுத்தைப் படித்து நிறை குறைகளை அடையாளம் காட்டுவதுடன், எழுத்தாளனுக்கு என்ன தேவை அதை எப்படி உருவாக்கிக்கொள்ள வேண்டும் என வழிகாட்டுவதில் தேவதச்சன் நிகரற்றவர்.

உரையாடலை எளிமையாகத் தொடங்கி அதிதீவிரத் தளங்களுக்குக் கொண்டுபோய் விடுவார். ஒரு கட்டு வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை இவைகொண்ட சிறிய பை. அதைக் கையிலேயே வைத்திருப்பார். வெற்றிலையை மென்றபடியே அவர் காலத்தைத் தாண்டி சஞ்சாரம் செய்யும்போது வியப்போடு பார்த்துக் கொண்டிருப்பேன். அசலான சிந்தனையுடன் கவித்துவமான தெறிப்புகளுடன் குழந்தை யைப்போல இந்த வாழ்க்கையை ரசிப்பவர் தேவதச்சன்.

அவரது கவிதைகளைப் பற்றிய பாராட்டுகளையோ, வியத்தலையோ கூச்சத்துடன் எதிர்கொள்ளக் கூடியவர். முடிந்தவரை அதைத் தாண்டிப் பேசவே முற்படுவார். எவராவது திரும்பத் திரும்ப அவரது கவிதைகளைப் பாராட்டிக் கொண்டிருந்தால், வேறு பேசலாமே என நேரடியாகச் சொல்லிவிடுவார். புகழ்ச்சியும் கடும் விமர்சனங்களும் அவருக்கு ஒன்றே.

கவிதை குறித்த தேவதச்சனின் எண்ணங்கள் யாவும் அவராக உருவாக்கிக் கொண்டவை. அசலானவை. அவரது கவிதையுலகம் கரிசலின் சூரியனையும் அத்துவான வெளியையும் கடவுளின் பெருமூச்சைப்போல வீசும் காற்றினையும் குருவிகளையும் வண்ணத்துப்பூச்சிகளையும் ஆடுமேய்க்கும் இடையர்களையும் கொண்டது. இன்னொரு புறம் அடையாளமற்றுப்போன நவீன மனிதனின் தத்தளிப்புகள், குழப்பங்கள், துயரங்களைப் பேசுபவை. காலம்-வெளி பற்றி தேவதச்சன் அளவுக்குக் கவிதைகள் எழுதியவர்கள் குறைவே.

ஒரு கவிதை என்பது அவரளவில் ஒளிர்தலே. அவரே ஒரு கவிதையில் இதைச் சொல்கிறார்:

கவிதை எழுதுவது
என்பது
ஒரு
குண்டு பல்பை
ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது
முழுமையானதின்
அமைதியை ஏந்தி
பல்ப்
ஒளி வீசத் தொடங்குகிறது
ஒரு
மெல்லிய இழை
நிசப்தத்தில்
எவ்வளவு
நீள
நன் கணம்

இந்தக் கவிதையிலும் குண்டு பல்பைத்தான் அடையாளமாகக் காட்டுகிறார். அது நடுத்தரவர்க்கப் பயன்பாட்டுப் பொருள். சென்ற தலைமுறையின் அடையாளம். முழுமையின் அமைதியை ஏந்தி ஒளிர்கிறது பல்ப். கவிதையும் அதையே மேற்கொள்கிறது. தேவதச்சனின் கவிதைகளை நன்கணத்தின் துளிகளாகக் கருதலாம். வாழ்க்கையை வெறுமனே அனுபவித்துக் கடந்து போவதைவிடவும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை அறிந்துகொள்ள முயல்கின்றன அவரது கவிதைகள். ஆகவே, அவற்றில் தத்துவச்சாயல் இயல்பாகப் படிந்துவிடுகிறது.

பொதுவாகத் தமிழ்க் கவிதையின் இயல்பே தத்துவச்சாயல் கொண்டதுதான். ஆகவே, இன்றும் அவரது கவிதைகளின் அடிநாதமாகத் தத்துவம் ஒலிக்கவே செய்கிறது. அதுதான் தனியழகு. கவிஞர் ந.பிச்சமூர்த்தி நேரடியாகத் தத்துவச்சார்புகொண்ட கவிதைகளை எழுதினார். அதில் தத்துவம் அளவுக்குக் கவித்துவம் கைகூடவில்லை. ஆனால், தேவதச்சன் கவிதைகளில் தத்துவம் தானாக மலர்ந்து கவிதையென உருக்கொண்டது போலாகிறது.

பழைய தாளைக் கிழிக்கின்றபோது பரவும்
ஓசை
பழையதாக இல்லை.
பற்பல நூற்றாண்டுகள் ஆன
புராதன மணியின்
ஒலி அலையும்போது கொஞ்சம்கூட
பழையதாக இல்லை.
மேலும்
பழங்காலக் கோட்டை ஒன்றில்
பொதிந்திருக்கும்
ஆளுயரக் கண்ணாடி
புதிதாகிக்கொண்டிருக்கிறது கோட்டைச் சுவர்களை
புத்தம் புதிதாக

இந்தக் கவிதை காலத்தைக் கடந்து நிற்கும் நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. பல நூற்றாண்டுகளான புராதன மணியின் ஒசை பழையதாக இல்லை என்பது ஜென் கவிதையின் தமிழ்வடிவம்போலவே இருக்கிறது. இக்கணமே தேவதச்சன் கவிதைகளின் இயங்குதளம். இக்கணம் நீண்டும் வளர்ந்தும் மறைந்தும் உருமாறுகின்றன. இக்கணத்தில் யாவும் புதிதாகவே இருக்கின்றன. இக்கணத்தின் மனிதன் உலகை வேறுவிதமாகவே அறிகிறான்.

அந்த நாள்களில் கோவில்பட்டி ரஷ்ய இலக்கியத்தின் தலைநகரைப்போல விளங்கியது. யாரைச் சந்திக்கச் சென்றாலும் தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்கனேவ், லெர்மன்தேவ், செகாவ், கார்க்கி, புஷ்கின், கோகல் எனப் பேசிக்கொண்டிருப்பார்கள். கோவில்பட்டியின் வீதிகளில் பனி பெய்ந்துகொண்டிருப்பதுபோலவும், தேவாலய மணி ஒலிக்க குதிரை வண்டியில் நாஸ்தென்காவும், பிச்சோரினும், அல்யோஷாவும், மாஸ்லாவும், தாரஸ்புல் பாவும் வந்து இறங்கி நடமாடுவதுபோலவே சூழல் இருந்தது. தேவதச்சன் லெர்மன்தேவின் ரசிகர். கௌரிசங்கர் துர்கனேவின் பரமரசிகர். நானும் கோணங்கியும் தஸ்தாயெவ்ஸ்கி, அப்பாஸுக்கு செகாவ், புஷ்கின், இப்படி ஆளுக்கு ஓர் ஆளுமையைக் கொண்டாடிக்கொண்டிருந்தோம்.

ரஷ்ய இலக்கிய வட்டத்துக்கு வெளியே அருணகிரிநாதரையும், காளமேகத்தையும், மணிமேகலையையும், வேர்ட்ஸ்வொர்த்தையும், கசான்சாகிஸையும், காப்காவையும் பற்றிப் பேசியவர் தேவதச்சன். சமகாலத் தமிழ் இலக்கியம் குறித்தும், மொழி பெயர்ப்புகள் பற்றியும் அதிகம் பேசியவர் தேவதச்சனே. சிற்றிதழ்களே அவரது உலகம். தன்னை ஓடையில் நீந்தும் சிறுமீனாகவே அவர் கருதுகிறார். அந்த மீன்களுக்குக் கடல் தேவையற்றது. கடலில் விட்டாலும் அவற்றால் உயிர்வாழ முடியாது என்றார். தேவதச்சனின் பெரும்பான்மை கவிதைகள் சிற்றிதழ்களில் வெளியானவையே.

“1970-களில் கே.ராஜகோபால் என்ற பேராசிரியர் `எழுத்து’ பத்திரிகையைப் படிக்கக் கொடுத்தார். அதன் வழியாகவே எனக்கு நவீனத்துவத்தோட சாறு கிடைச்சது. அதற்கடுத்து ‘கசடதபற’ பத்திரிகை எங்களைப் போன்றவர்களுக்கு எழுத இடம் கொடுத்தது” என்கிறார் தேவதச்சன்.

உலகின் புராதன மொழி கவிதை. இயற்கையின் ரகசியங்களை, புதிர்களைக் கவிதை அவிழ்த்துக் காட்டுகிறது. கவிதைகளே கடவுளுடன் பேசும் மொழியாக மாறுகின்றன. பிரார்த்தனையே கவிதையின் உச்ச வடிவம். சொற்களைத் தங்கத்தைப்போல உருக்கித் தாங்கள் விரும்பும் வடிவத்திற்கு உருமாற்றிக்கொள்கிறார்கள் கவிஞர்கள். கவிதை உச்சாடனம் ஆகும்போது புராதன நினைவுகளின் கொந்தளிப்புக்கு உள்ளாகிறோம்.

கவிதை தன் ரகசிய வழிகளின் வழியாக நம்மை பால்யத்திற்கு அழைத்துச் செல்கிறது. பருவ வயதின் காய்ச்சலை, தனிமையின் துயரை ஆவணப்படுத்துகிறது. கவிதை வாழ்வின் அபூர்வமான தருணங்களைப் பாதுகாக்கிறது. வாழ்க்கை அனுபவத்துக்கும் கவித்துவ அனுபவத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன. கவித்துவ அனுபவமானது ஒற்றை மையம் கொண்டதில்லை. சமூகப் பண்பாட்டு கூறுகளைக்கொண்டு அந்த அனுபவத்தை வரையறை செய்துவிட முடியாது. கவித்துவ அனுபவம் வாழ்க்கை அனுபவத்தைப்போல உணர்ச்சி வெளிப்பாடாக இருந்தாலும் அது பால் அடையாளமற்றதாகத் தன்னை வெளிப்படுத்துகிறது. கவித்துவ அனுபவங்கள் வாழ்வில் நாம் அடைய முடியாத, சாத்தியமற்ற அனுபவங்களை எளிதாக நமதாக்குகின்றன. தேவதச்சன் தனது கவிதையின் வழியாகத் தமிழ் வாழ்வின் நினைவுகளை மீள்பரிசீலனை செய்கிறார். இயேசுநாதரும், கண்ணகியும், ஆண்டாளும் அவரது கவிதைகளுக்குள் இதுவரை அறியப்பட்டிருந்த கருத்துவருங்களைக் கலைந்து பிரவேசிக்கிறார்கள்.

காதல் கவிதைகள் பல்லாயிரக்கணக்கில் தமிழில் எழுதிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தனித்துவமிக்க காதல் கவிதைகள் என எடுத்துக்கொண்டால் குறைவாகவே பட்டியலிட முடிகிறது. நான் வாசித்தவரை சமகாலத்தில் எழுதப்பட்ட காதல் கவிதைகளில் இதுவே தலைசிறந்தது.

நீ
தரும் முத்தங்கள்.
நீளம்: ஒரு வினாடி
அகலம்: முடிவிலி
நீ
பறித்துவிட்ட
முத்தம்.
அகலம்: ஒரு வினாடி
நீளம்: முடிவிலி
நீ
தராத
சிறுமுத்தம்
நீளம்:முடிவிலி
அகலம்:முடிவிலி
கனம்:முடிவிலி

இந்தக் கவிதை இரண்டாயிரத்திற்குப் பிறகான இந்தத் தலைமுறைக்கு மட்டுமில்லை, இன்னும் இரண்டாயிரம் வருடம் கழித்துக் காதலிக்கப் போகிறவருக்கும் பிடிக்கக்கூடியதே.

காற்றில் வாழ்வைப்போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்துகொள்கிறது.

தேவதச்சனின் முதல் தொகுப்பிலுள்ள இக்கவிதைக்கும் சமீபத்திய அவரது கவிதையான,

யாருமில்லை என்பதால்
வீட்டில் சில நேரம்
நிர்வாணமாக இருந்தாள்.
யாருமில்லை என்பதால்
நிர்வாணமாக இல்லை.

இரண்டுக்கும் இடையில் அவரது கவிதை உலகம் மிக உச்சத்தை அடைந்திருக்கிறது. 1970-களில் எழுதத் தொடங்கி இன்றுவரை தொடரும் தேவதச்சனின் கவிதைகள் தன் சொல்முறையாலும் கவித்துவமொழி
தலாலும், புதுமையான பாடுபொருளாலும் புதிதாகவே தொடர்கிறது.

பெரும்பான்மை கவிஞர்கள் ஞாபகத்தைத் தனது மூலப்பொருளாகக்கொண்டு செயல்படும்போது நினைவுகளை முதன்மைப் படுத்தாமல் நினைவுகளின் குறியீடுகளை, தொடர்பற்றப் பொருள்களைப் படிமங்களாக்குகிறார். வரலாறு என்பது அவருக்கு முடிந்துபோன விஷயமில்லை. துண்டிக்கப்பட்ட பாதிக்கயிறுபோல முன்பின் இல்லாத ஒன்று. கற்பனையின் உதவியால்தான் கயிற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்.

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் தேவதச்சன் பற்றிய கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘கண், செவி, மூக்கு, விரல்கள், நாக்கு என ஐந்து புலன்களையும் தொடும், மகிழ்விக்கும் கவிதைகள் தேவதச்சனின் கவிதைகள் என்று சொல்லலாம். அறிவை ஒரு முகமறைப்பைப்போல, திரைச்சீலைபோல, மெல்லிய ஆபரணத்தைப்போல இல்லாதது போல தோன்றும் இருப்பாய் தன் கவிதை களில் வைத்துள்ளார். தமிழ்க் கவிதையில் அதுவரை கவிதைசொல்லியாக இருந்த சமூகவயமான நானின் இடத்தை – பறவை உட்காரும் கிளைகளில், தண்ணீரில் துள்ளும் தவளையின் கல்லின் இடத்தில் வைத்து விடுகிறார். அறம், பாவம் என்னும் அருங்கயிற்றுக் கட்டிலிருந்து தமிழ்க் கவிதையை முற்றிலுமாக விடுவித்தவர் தேவதச்சன் என்று சொல்லலாம். அதனால்தான் தேவதச்சனின் கண்கள் துண்டிக்கப்பட்ட காண்நிலைகளை உணர்நிலைகளை அதன் வேதிவினை துவங்கும்போதே பார்க்கிறது.’

தேவதச்சனின் கவியுலகம் பற்றிய சரியான மதிப்பிடல் இது என்பேன்.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை எனது வீட்டிலோ அல்லது தேவதச்சன் வீட்டிலோ அல்லது ரயில்நிலைய பெஞ்சிலோ அமர்ந்து நாள் முழுவதும் பேசிக்கொண்டி ருப்பது எங்களின் வழக்கம். இப்படி ஐந்தாண்டுகள் பேசியிருப்போம். ஒவ்வொரு வாரமும் எதைப்பற்றிப் பேசலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துச் சொல்லிவிடுவார். அது பற்றி நாமாக யோசித்துப் பேச வேண்டும். பசி, காமம், சாதி, மதம், வன்முறை, மரணம், நித்யத்துவம், உலகமயமாக்கல் எனப் பல்வேறு விஷயங்கள் சார்ந்து விரிவாகப் பேசினோம். அதுதான் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான ஆதாரங்களாக எனக்குள் உருவாகின. என்னைச் சுற்றிய உலகம் அதன்பிறகே துல்லியமாகப் புரியத் தொடங்கியது.

இப்போதும் தினமும் ஒருமுறையாவது அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். சிலநேரம் நான், தேவதச்சன், ஆனந்த், க.வை.பழனிசாமி, ஷாஆ போன்ற நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஓர் இயற்கை வாழிடத்தில் ஒன்றிரண்டு நாள்கள் அறை எடுத்துத் தங்கிப் பேசுவதும் உண்டு. அதுபோன்ற நாள்களில் அவர் தனது எண்ணங்களை மழையெனப் பொழிந்துவிடுவார். ஒரு வருடத்திற்கு அவற்றை அசைபோட்டுக்
கொண்டேயிருக்கலாம்.

கவிதைகளைப் பற்றிப் பேசுவதைவிடவும் கதைகளைப் பற்றிப் பேசுவதில் தேவதச்சன் அதிகம் ஆர்வம்கொண்டவர். ‘அன்னா கரீனினா’ நாவலில் எந்தெந்த கதாபாத் திரங்கள் சந்தித்துக்கொள்ளவேயில்லை என ஒருமுறை கேட்டார். இப்படி ஒரு நாவலை வாசிக்க முடியும் என்பது புதிய திறப்பு இல்லையா?!

காலம் குறித்து தேவதச்சன் நிறைய யோசித்திருக்கிறார், எழுதியிருக்கிறார். அறிவியலும் புனைவியலும் மெய்யியலும் பேசித் தீர்த்த காலம் பற்றி கவிதையின் வழியே அவர் புதிய கருத்தாக்கங்களை முன்வைக்கிறார். அவரும் ஆனந்தும் இணைந்து காலத்தின் வரலாற்றைத் தொகுக்கும் முயற்சியில் ஒரு காலத்தில் தீவிரமாகச் செயல்பட்டார்கள். காலத்தைப் புரிந்துகொள்வதும், கடப்பதும், அகாலம்-முடிவிலி பற்றி உரையாடுவதும் தேவதச்சனுக்கு சாக்லேட் சாப்பிடுவதுபோல அவ்வளவு விருப்பமான விஷயம்.

பழத்தைச் சாப்பிட்டுவிடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு
உண்டேன்
இன்றை.

இக்கவிதையை வாசித்து முடித்தபிறகு நாம் உண்ணுவது பழத்தை மட்டுமில்லை. இன்றையும்தான் எனக் காலப்பிரக்ஞை ஒரு வாசகனுக்குள் உருவாகிவிடுகிறது.

வீடு என்பது அவரது கவிதைகளின் முக்கியக் குறியீடு. அதிலும் குளியலறை, சமையலறை இரண்டும் முக்கியமானவை. அவரது கவிதைகளில் வீடு, திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கிறது. வாழ்க்கையின் அடையாளம் என்பதே வீடுதானே. ஒருவனின் வீடுதான் அவனது உலகம். வீட்டின் வெளியே அவன் வேறு ஓர் ஆள். வீட்டிற்குள் அவன் முற்றிலும் புதிய மனிதன். அவனை வீடு அரவணைத்துக்
கொள்கிறது. தூய்மைப்படுத்துகிறது. உறங்கவைத்துக் கனவுகளை உருவாக்குகிறது. சிலநேரம் அவனைப் பிரச்னைகளுக்குள் தள்ளி மூச்சடைக்க வைக்கிறது. வீட்டின் சப்தமும், நிசப்தமும், தனிமையும் தேவதச்சனின் கவிதைகளில் அதிகம் இடம்பெற்றுள்ளன.

வீட்டைத் துறந்து வெளியே சென்றால்தான் பேரனுபவங்களைப் பெற முடியும் எனக் காலம்காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.அது உண்மையில்லை. வீட்டிற்குள் இருந்தபடியே பேரனுபவங்களை நாம் பெறலாம். நுண்ணுணர்வுகளுடன் வாழலாம் என தேவதச்சன் அடையாளம் காட்டுகிறார்.

தினசரி வாழ்வு என்பது பொருள்களால் நிரம்பியது. இந்தப் பொருள்களைக் குறைக்கக் குறைக்க, அல்லது இந்தப் பொருள்களிலிருந்து விலக விலக தினசரி வாழ்வு மாறத் தொடங்கிவிடுகிறது. குகைவாழ்க்கைக்கும் நமக்குமான மாற்றம் என்பது இன்று நாம் பல நூறு பொருள்களைச் சேகரித்துவைத்துள்ளோம்; பயன்படுத்து கிறோம் என்பதுதானே.

பொருள்களின் உலகை தேவதச்சன் தன் கவிதைகளின் வழியாகப் பகுப்பாய்வு செய்கிறார். விடைபெற்றுச் செல்லும் பொருள்களைப் பட்டியலிடுகிறார். பொருள்களின் மௌனத்தைக் கலைத்து உயிர்ப்புடன் பேசவைக்கிறார்.

உபயோகமற்ற பொருள்கள் ஒரு விலங்கைப்போல்
மூச்சுவிட்டுக்கொண்டிருக்கின்றன.
அகிலம் எல்லாம் அசைந்துகொண்டிருக்கும்போது
அவை அசைவற்று நிற்கின்றன.
…………..
சென்று வாருங்கள், உபயோகமற்ற பொருள்களே
நீங்கள்
இன்னொரு ஆற்றைப்போல் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்
எப்போது வேண்டுமானாலும் திரும்பி வாருங்கள்
வந்து,
மீண்டும் மீண்டும்
அன்பின் தோல்வியைக் காணுங்கள்.

அவரது ஒரு கவிதையில், தனிமையை உணர்கின்ற ஒரு மூங்கில் செடி வருகிறது. அந்த மூங்கில் செடி வெறும் ஓர் அலங்காரப் பொருளாக மட்டுமில்லாமல் பெருந்தனிமையின் வடிவமாக மாறிவிடுகிறது. தேவதச்சன் காலத்தைப்போலவே வெளியாலும் வசீகரிக்கப்படுகிறவர். குறிப்பாகத் தொலைவும் அண்மையும் அவரது கவிதையின் இரண்டு மையப்புள்ளிகள். நேற்றைக்கும் நாளைக்கும் இடையில் ஒரு பைனாகுலர் இருக்குமா? என்று ஒரு கவிதையில் ஒரு வரி இடம்பெற்றுள்ளது. உண்மையில் அவரது கவிதைதான் நேற்றைக்கும் நாளைக்கும் இடையில் உள்ள பைனாகுலர். வார்த்தைகளை லென்ஸாக மாற்றிவிடுகிறார். ஒரு பொருளை நம் புலன்களால் பார்ப்பதற்கும் சொற்களால் பார்ப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடு அவருக்கு முக்கியமானது. அதுவே அவரது கவிதைகளில் வெளிப்படுகிறது. தன்னைச் சுற்றி நடக்கும் அரசியல், சமூக நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிப்பதுடன் அது குறித்து நண்பர்களுடன் தீவிரமாக உரையாடுபவர் தேவதச்சன். அரசியல் கவிதை என்பது முழக்கமாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை,

தப்பித்து
ஓடிக்கொண்டிருக்கிறது, ஆறு
பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து.
அதன் கரையோர நாணலில்
அமர்ந்திருக்கிறது
வயதான வண்ணத்துப்பூச்சி ஒன்று.
அது இன்னும் இறந்து போகவில்லை
நமது நீண்ட திரைகளின் பின்னால்
அலைந்து திரிந்து களைத்திருக்கிறது
அதன் கண்கள் இன்னும் நம்மைப்
பார்த்துக்கொண்டிருக்கின்றன
பசியோடும்
யாருமற்ற வெறுமையோடும்.
அதைச் சுற்றி, கொண்டாடிக் கொண்டாடி
பிடிக்கவரும் குழந்தைகளும் இல்லை.
அதன் சிறகுகளில் ஒளிரும்
மஞ்சள் வெளிச்சம்
காற்றின் அலைக்கழிவை
அமைதியாய்க் கடக்கிறது
நீ
திரும்பிப் போனால், இப்போதும் அது
அங்கு
அமர்ந்திருப்பதைக்
காணலாம். உன்னால்
திரும்பிச் செல்ல முடிந்தால்.

இக்கவிதையை மிக முக்கிய அரசியல் கவிதையாகவே கருதுகிறேன். பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும், சந்தைக் கலாசாரத்தின் விளைவும் பற்றி அழுத்தமாக எழுதியிருக்கிறார் தேவதச்சன்.

செவ்வியல் இலக்கியங்கள் மகத்தான நிகழ்வுகளை எழுதும்போது நவீன இலக்கியங்கள் நுண்ணிகழ்வுகளை எழுதுகின்றன. நுண்ணிகழ்வுகள் பெருநிகழ்வுகளாகப் பெருகுவதை வரலாறு என்றும், பெருநிகழ்வுகள் நுண்ணிகழ்வு களாகக் கூர்மையடைவதைக் கவிதை என்றும் கூறலாம். நுண்ணிகழ்வுகள் பெருநிகழ்வுகளாக விரிவடையும்போது, கவிதை அதை நுண்ணிகழ்வுகளாக மட்டுமே வைத்திருக்கிறது என ஒரு நேர்பேச்சில் தேவதச்சன் குறிப்பிட்டது முக்கியமான உண்மை.

தேவதச்சனின் கவிதை ஒன்றில் ‘அன்பை விடவும் சிறந்த உணர்ச்சி’ ஒன்று இருப்பதாக ஒரு வரி இடம்பெற்றுள்ளது. அதை வாசித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது அன்பைவிட சிறந்த உணர்ச்சி என ஒன்று இருக்கிறதா, அப்படி இருந்தால் அதற்குப் பெயர் என்ன என யோசித்துக் கொண்டேயிருந்தேன். இதைப்பற்றி ஒருமுறை அவரிடமே கேட்டபோது, “ஏன் இருக்கக் கூடாது. அதற்குப் பெயர் என்னவென்று சொல்வது முக்கியமில்லை. நிச்சயம் அன்பைவிடச் சிறந்த ஒன்று இந்த உலகில் இருக்கும்தானே?” என்றார். அதுதான் கவியின் குரல்.

நவீனத் தமிழ்க் கவிதையுலகிற்குள் முதலில் நுழைந்த டினோசார் தேவதச்சனுடயதே. ஸ்பீல்பெர்க்கின் டினோசார்கள் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கடைசி டினோசாரை தனது கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். உண்மையில் கவிதை டினோசாரைப் பற்றியதாக மட்டுமில்லை. முழுமையை என்றும் நாம் அறிந்துகொள்ள முடியாது என்பதை விளக்குவதாகவே இருக்கிறது. டினோசாரை ஒரு குறியீடாகவே பயன்படுத்தியிருக்கிறார். நவீன கவிதையில் இது பெரும் தாவல். ‘டினோசார் தண்ணியில் நடந்து செல்லும் ஒலிதான் மொழி’ என்பது தேவதச்சனின் வரிகள்.

இயல்பிற்கும், கனவுகளுக்கும், காணுலகிற்கும், விந்தைகளுக்கும் இடையே முடிவற்று ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சல்போல அவரது கவிதைகள் முன்பின்னாக நகர்ந்து செல்கின்றன. பயம், கவலை, வேதனை, சந்தோஷம், தனிமை, அச்சம், ஆரவாரம், நிசப்தம் என உணர்வுகளின் நுண்ணிழைகளைப் பின்னிப்பின்னி அவர் கவிதைகளை உருவாக்குகிறார். மாயக்கம்பளம் ஒன்றைபோல முடிவில் கவிதையை மாற்றிவிடுகிறார். கவிதையை வாசிக்கும் வாசகனை அது ஏதேதோ அனுபவங்களின் மாயவுலகிற்கு அழைத்துச் செல்கின்றது.

நவீனத் தமிழ்க் கவிதையின் முகத்தை உருவாக்கியவர்களில் தேவதச்சன் முதன்மையானவர். அவரது கவிதைகளும் எண்ணங்களும் பெரும் வாசகப்பரப்பை கொண்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அவரது கவிதைகள் தனித் தொகுதியாக வெளியானால் உலகின் மிக முக்கிய கவிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுவார் என்பதே உண்மை. நவீன தமிழ் கவிதை யுலகின் ஒற்றை டினோசார் தேவதச்சனே என்றே கூறுவேன்.

பின்னூட்டமொன்றை இடுக