காக்கா – ஒரு சிறு குறிப்பு

Mohammed Shaakir 

(இவண் ஆவணன் – சாக்கீர்)
…………………..

உறவுமுறைச்சொற்கள் எனப்படுவது ஒரு நபர் இன்னொரு நபருடன் கொண்டுள்ள உறவுத்தொடர்பை விளக்குவதற்கு குறிப்பிடப்படும் சொல்லாகும்.

உலகில் தோன்றிய மொழிகளுள் பொதுவான பல சொற்களுள் இவ் உறவுமுறைச் சொற்களும் அடங்குகின்றன.

இலங்கை முஸ்லிம்களின் உறவுமுறை வழக்குகளைப் பொறுத்தவரை அவை திராவிட உறவுமுறை வழக்கை ஒத்திருந்தாலும் நெருங்கிய கருக்குடும்ப உறவுமுறைச் சொற்கள் மற்றும் பிற தூரத்து உறவுமுறைச் சொற்கள் சிலவற்றிலும் வேறுபட்டு காணப்படுகின்றது. அதாவது

அம்மா – உம்மா
அப்பா – வாப்பா
அண்ணா – காக்கா அல்லது நானா
அக்கா – ராத்தா
அம்மம்மா – உம்மம்மா, மூத்தம்மா
அப்பம்மா – வாப்பப்மா, மூத்தம்மா
சித்தி – சாச்சி
சித்தப்பா – சாச்சா, சின்னப்பா
அப்பப்பா, அம்மப்பா – மூத்தப்பா அல்லது அப்பா
அண்ணி – காக்காபொண்டி
……
என்று பல உதாரணங்களை காட்டலாம்.

இவற்றில் வயதில் மூத்த சகோதரனை அல்லது பொதுவாக வயதில் மூத்த ஆண்களை விளிக்கப் பயன்படும் ‘காக்கா’ ‘நானா’ ஆகிய சொற்கள் தொடர்பில் சிறு கலந்துரையாடலைத் தொடர வேண்டியுள்ளது.

“காக்காமார்“ “நானாமார்“ என்று முஸ்லிம்களைக் குறியிட்டு அழைக்கப் பயன்படும் இச்சொற்கள் தமிழில் “காக்கை“. “காக்காய்“ என்ற காகத்தைக் குறிக்கும் சொல்லோடு ஒத்திசைப்பதால் இது ஒரு எதிர்மறை விளிச்சொல்லாகவும் சில சந்தர்ப்பங்களில் பாவிக்கப்பட்டுள்ளது.

எ.கா: ‘காக்கா இல்லாத ஊருமில்ல – காக்காமார் இல்லாத ஊருமில்லை’

சிலர் இச்சொல்லை பாவிப்பதை கொச்சையாக கருதுகின்ற ஒரு நிலைப்பாடும் காணப்படுகின்றது. இதனோடு சிலர் ‘நானா’ என்கிற பதிலீட்டையும் புழங்கி வருகின்றனர்..

‘காக்கா’ என்ற சொல்லின் பின்னால் பல சுவாரஸ்யமான விடயங்கள் இருக்கின்றன.

முஸ்லிம் உறவுமுறைச் சொற்கள் பற்றி அறிஞர் அஸிஸ் அஹமத் கூறும்போது “கா“ (qa) என்ற சொல் சீன மொழியிலிருந்து உய்குர் களினூடாக பழைய துருக்கிய மொழியில் ‘கா கதெஸ்’ (Ka kadesh) – குடும்பம், இரத்த உறவுக்காரர் என்ற பொருளில் வழங்கியுள்ளது.
உஸ்மானிய சாம்ராஜ்ஜிய கால துருக்கி மொழியில் காகா kaka (qaqa) என்பது மூத்த சகோதரரை அல்லது பெற்றோரால் தத்தெடுக்ப்பட்ட சகோதரனை அழைக்க பயன்பட்டுள்ளது ஆனால் உருது மொழியில் ‘காகா’ என்றசொல் வழங்கப்படுவது போன்று தந்தையின் சகோதரைக் குறிக்கப் பயன்படவில்லை.

இது முகலாய சாம்ராஜ்ஜிய காலங்களிலேயே தந்தையின் சகோதரர்களையும் குறிக்க பயன்பட்டிருக்கலாம் எனகுறிப்பிடுகின்றார்.(Ahmad, 1977)

கேரளத்திலும் , சுவாஹிலி மொழியிலும் ‘காகா’ (Kakka) எனப்படுவது மூத்த சகோதரனைக் குறிக்கப் பயன்படுகின்றது. (Rechenbach et al., 1967).

இது தவிர இந்தோ – ஆரிய மொழிகளுக்கான ஒப்பியல் அகராதியை பார்க்கும்போது காக்கா எனப்படுவது பிற இந்திய மொழிகளில் சகோதரன் மூத்த சகோதரன் தவிர வேறு உறமுறைகளையும் குறிக்கப் பயன்படுவதையும் காணலாம். (Turner.R.L, 2008)

மேலும்

மழலைகளின் ஆரம்ப வார்த்தைகளான ம்மா ப்பா என்பவைகளே பல மொழிகளில் தாய் மற்றும் தந்தையைக் குறிக்க பயன்படுவதாக மொழியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தை முலைகளில் பால் அருந்தும் போது உதட்டால் பிரயோகிக்கும் அழுத்தத்தைப் போல் பின்னர் பசி ஏற்படுகிறபோது வெறும் வாயினால் அதே அழுத்த்ததை உண்டாக்கி சமிக்ஞை செய்கிற போது எழுகிற ஒலியிலிருந்து அவ்வார்த்தைகள் பிறந்திருக்கின்றது எனக்கருதுகின்றனர்.
(Campbell and Poser, 2008)

பின்னர் படிப்படியாக குழந்தைகளில் மொழி விருத்தி ஏற்படுகிறபோது குழந்தை தனது சொற்களஞ்சியத்தை இலகு சொற்களைக் கொண்டே வளர்த்துக்கொள்கின்றது. ஆ, ஊ, ஓ, என்று ஆரம்பித்து ம்மா, ப்பா, க்கா, த்தா, மாமா, பாபா, தாதா, என்று படிப்படியாக வளர்த்துக் கொள்கின்றது.

அந்த வகையில் காக்கா (காகா) என்ற சொல்லும் இலகு மொழிதலாக இருப்பதனால் இதுவும் இயல்மொழிகளின் ஆரம்பச் சொல்லாக இருப்பதைப் பறைசாற்றுகிறது.

எனவே காக்கா எனபது அடிப்படைகளற்ற ஒரு சொல் என்கிற குற்றச்சாட்டு அர்த்தமற்றது.

இலங்கையின் பலபாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் பெயரின் பின்னொட்டாகவும் ‘காக்கா’ என்ற சொல் நெடுங்காலமாகப் பயன்பட்டுள்ளது கடந்த தசாப்தத்திற்கு முன்னர் வரை இவ்வாறான பல பெயர்கள் பெரிதும் புழக்கத்தில் இருந்தன. எ.கா ஆதங்காக்கா, உதுமான்காக்கா, அலிக்காக்கா,…..

அதே வேளை இலங்கையின வடமேற்கு கரையோரப்பகுதிகளில் காக்கா என்பது சுருங்கமாக ‘கா’ என்கிற பின்னொட்டாக பயன்படுகிறது. எ.கா. றமீஸ்கா (றமீஸ் காக்கா) றியாஸ்கா (றியாஸ் காக்கா)

இவ்வாறு தொன்றுதொட்டு இலங்கை முஸ்லிம்களின் மொழிவழக்கில் இச்சொல் பெரிதும் புழங்கி வருகின்றது. உதாரணமாக காக்கா என்ற சொல் இடம்பெற்றுள்ள நாட்டார் கவிகள் சில

‘தெருவால போகவொண்ணா
தேன்போல மணக்கிறது
கனியிருந்தா நான் வரவன் – உண்ட
காக்காமார் காவலுகா’

‘ஆக்காட்டி கத்துதுகா
ஆளரவம் கே;ககுதுகா
காக்கை கரவுதுகா – நம்மட
காக்காபொண்டி வாசலிலே’

‘காக்கா’ சோனக மொழியின் தனித்துவக் கூறு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

…………………………………………………..’

………………………………………………….

இவற்றோடு ஆபில் – காபில் சகோதரர்களின் சச்சரவும், அதனோடு தொடர்புபட்ட காகத்தின் சம்பவம தொடர்பான தொன்மமும் மீள்வாசிக்கப்பட்டு ஆதிமொழியியலின் அத்திவாரங்கள் அறியப்படவேண்டும்

Reference.

Ahmad, A. (1977) ‘Muslim Kinship Terminology in Urdu’, Source Journal of the Economic and Social History of the Orient Journal of the Economic and Social History of the Orient, 20(3), pp. 344–350.

Campbell, L. and Poser, W. J. (2008) ‘How to show languages are related: the methods’, Language classification: History and method, (January 2003), pp. 162–223.

Rechenbach, C. W., Gesuga, A. W., Josiah, H. M. O., Leinone, L. R. and Kuipers, F. G. (1967) Swahili – English Dictionary.

Turner.R.L (2008) A Comparative Dictionary of the Indo-Aryan Languages

றமீஸ் அப்துல்லாஹ். கிழக்கிலங்கைக்கிராமியம்

பின்னூட்டமொன்றை இடுக