நோபல் பரிசு எழுத்தாளர்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0rWGfHM3ofeDrUkX7Ud2PVbV53g9MKwFmm91YWL49L2mnCgNkBQLbA81Pm6zWn5mhl&id=100006993854491

திட்டமிட்டுப் படித்தால் அனி எர்னோவின் உளவியல் அலசல் புனைவு மொழியில் எழுதப்பட்ட அவரது முழு படைப்புகளையும் மூன்று வாரத்தில் தினம் இரண்டு மணிநேரங்கள் ஒதுக்கிப் படித்துவிடலாம். இருபது நூல்களில் மொத்தமாக 2,000 பக்கங்கள் வரை வரும். இதுவே இதுவரையிலான அவரது படைப்புகள்.

சிடுக்குகள் இல்லாத அழகிய-எளிய ஆங்கிலத்தில் இவரது நூல்கள் இருக்கின்றன. அவர் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நூல்களும் கிடைக்கின்றன.

சேகுவேராவின் தொகுதி நூல்களை வெளியிட்ட அமெரிக்க இடதுசாரிப் பதிப்பகமான செவன் ஸ்டோரீஸ் பிரஸ் சில நாட்களின் முன்பு அனியின் கெட்டிங் லாஸ்ட்/Getting Lost நூலின் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது. 108 பக்கங்கள் கொண்ட இந்த நூல் அவர் முன்பாக சிம்பிள் பேஷன் நூலில் எழுதிய விஷயங்களின் ஆதாரமான மூலச் சம்பவங்கள் குறித்த நாட்குறிப்புகள்.

எந்தவிதமான புனைவுமொழியும் சாராத நேரடியிலான உரைநடை-நாட்குறிப்பு நூல் அது.75 நிமிடத்தில் படித்து முடித்து விடலாம். அவரது முன்னைய நூலான சிம்பிள் பேஷன்/ Simple Passion நூலுடன் இந்த நாட்குறிப்பையும் உட்கொண்டுதான் 2020 இல் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

கல்லூரியில் பிரெஞ்சு இலக்கியம் கற்பிக்கும் மத்தியதரவயதுப் பெண் தன்னை விட இருபது வயது குறைந்த ரஸ்யத் தூதரக அதிகாரி ஒருவருடன் கொண்டிருந்த உடலுறவு அனுபவங்களை விளக்கும் படைப்பே சிம்பிள் பேஷன்.

இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த உறவின்போது பேராசிரியை மணவிலக்குப் பெற்றுத் தனியே வாழ்ந்து வந்தார். அவருக்கு பள்ளி செல்லும் ஒரு மகனும் இருந்தார். தனது மகனே தனது இனியான வாழ்வு என்று கருதிய அவர் தனது காதலனைச் சந்திப்பது என்று வருகிறபோது அவரது மகனையும் இரண்டாம் இடத்திற்குக் கொண்டு செல்கிறார்.

பெண்ணிலைவாதம் பேசும் சுயாதீன ஆளுமை, வேட்கை பெருகும் அறவியல்பு கடந்த உடலின்பம், காதல் என்பது உடலின் வழிதான் உச்சமடைகிறது எனும் அனுபவம் என இப்பிரச்சினைகளைப் பேசுகிறது சிம்பிள் பேஷன்.

இத்தகைய நோக்குக்கு பிரெஞ்சுத் தத்துவத்திலும் இலக்கியத்திலும் முன்னோடிகள் உண்டு. சார்த்தர்-தி பூவா உறவு இத்தகையது. இவர்கள் உறவுக்குள் வரும்போதே சில புரிதல்களுடன் வருகிறார்கள். இருவரும் பரஸ்பரம் பிற உறவுகளைத் தேர்வு செய்யலாம். யாரும் எவரையும் கட்டுப்படுத்தக் கூடாது. ஆனால், இத்தகைய உறவுகளை பரஸ்பரம் இருவரும் அறிவித்துவிட வேண்டும்.

காதல், உடமையுணர்வு அற்றிருத்தல், உடலின் சுயாதீனம் போன்றவற்றை இவ்வாறு அவர்கள் நடைமுறைப்படுத்த விரும்பினார்கள். என்றாலும் உடமை உணர்வும் பிற உறவுகளால் பொறாமையும் தமக்கிடையில் தோன்றியது என திபூவா தனது நினைவுகளில் எழுதியிருக்கிறார்.

பிரெஞ்சுத் திரைப்படத்தில் இத்தகைய வேட்கையையும் இன்ப நாட்;டத்தையும்;, பொறாமை, ஆற்றாமை போன்றவற்றையும் வெளிப்படுத்திய திரைப்படமாக பெண் சமப்பாலுறவுப் படமான ப்ளு ஈஸ் த வார்மஸ்ட் கலர் இருக்கிறது.

பாலுறவு வேட்கையின் உச்சம் என்பது ஆர்கஷமும் விதவிதமான நிலையில் நிகழும் கலவியும் எனில் அதுவே உன்மத்தநிலைக் காதல் என்கிறது படம். இந்தக் காரணத்தினால் படத்தின் மூன்றிலொரு பகுதிக் காட்சிகள் விஸ்தாரமான கலவிக் காட்சிகளாக இருக்கின்றன.

கலவிக் காட்சிகளில் இருக்கிற விவரணைகள் இருவரதும் வாழ்வு-வரலாறு குறித்த விவரங்களில் இருப்பதில்லை. படத்திலும் முதல்புனைவிலும் இல்லாத இவையே அனியின் பின்னைய நாட்குறிப்பில் இடம்பெறுகிறது.

வேட்கையும் அது தரும் உடலின்பமும் அறவியல்பு கடந்த பைத்தியநிலைக்குத் தள்ளும் எனும் நீதி பற்றிப் பேசாமல் அதனை விவரிக்கவே நான் விரும்பினேன் என்கிறார் அனி.

அவரது எழுதுமுறையும் அவரது கலாச்சார அரசியலும் குறித்து பிறிதொரு பதிவு போடுகிறேன்..

பின்னூட்டமொன்றை இடுக