K.A. அப்பாஸ் ( குவாஜா அஹ்மத் அப்பாஸ் )

Jawad Maraikar 

வட இந்திய எழுத்தாளரான K.A. அப்பாஸ் ( குவாஜா அஹ்மத் அப்பாஸ் ) இலக்கியம் , பத்திரிகைத் துறை , சினிமா …… எனப் பல்வேறு துறைகளில் பிரகாசித்தவர் ; உர்து , ஹிந்தி , ஆங்கில மொழிகளில் அவர் எழுதினார்.

1935 ஆம் ஆண்டு ” The Bombay Chronicle ” என்ற பத்திரிகையில் ‘ Last Page ’ என்ற பத்தியை எழுதத் தொடங்கியவர் , பின்னர் ‘ Blitz ‘ செய்திப் பத்திரிகையில் அதே பத்தியை எழுதினார் . 1987 ஆம் ஆண்டு அவர் மரணிக்கும்வரை Blitz பத்திரிகையில் ‘ Last Page ’ தொடர்ந்தது. இந்திய வரலாற்றில் நீண்ட காலம் வெளிவந்த
பத்தி ( Column ) எழுத்தாக K.A. அப்பாஸின் ‘ Last Page ’ ( 1935 – 1987 ) சிலாகிக்கப்படுகின்றது.

சினிமாத் துறையில் இயக்குநராகவும் கதை வசனகர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி பல விருதுகளைப் பெற்றவர் இவர் .
நயா சன்சார் , ஆவாரா , மேரே நாம் ஜோக்கர் , பொபி , ஸ்ரீ 420 போன்ற திரைப்படங்கள் அப்பாஸின் திரைக் கதைகளே .

ஏழு இந்தியர்கள் ( சாத் இந்துஸ்தானி ) , இரு துளி நீர் ( ( தோ பூந்த் பானி ) ஆகிய நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டு ‘ தேசிய ஒருமைப்பாட்டு விருது ‘ பெற்றன. ஷெஹர் அவுர் ஷப்னா என்ற படம் ஜனாதிபதி விருது பெற்றது . வேறுபல உண்ணாட்டு , வெளிநாட்டு விருதுகளும் அவருக்குக் கிடைத்தன.

அப்பாஸ் தனது நாவல்கள் , சிறுகதைகள் , நாடகங்கள் , பயணக்கட்டுரைகள் முதலியவற்றைப் பெரும்பாலும் உர்து மொழியில் எழுதினார் . இந்திய மொழிகள் பலவற்றிலும் ஆங்கிலம் , ஜெர்மனி , பிரெஞ்சு , ரஷ்யா போன்ற உலக மொழிகளிலும் அப்பாஸின் நூல்கள் பெயர்க்கப்பட்டுள்ளன .

‘ இன்கிலாப் ‘ ( Inqilab ) என்ற நாவல் இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட முதலாவது நாவலெனக் கூறப்படுகின்றது. கே.ஏ. அப்பாஸைப் புகழேணியில் ஏற்றிவைத்த இந்த நாவல் ஆங்கிலத்தில் பெயர்க்கப்படும் முன்னரே ஜெர்மனி , ரஷ்ய மொழிகளில் வெளிவந்தது.
தமிழில் எம்.ஏ.அப்பாஸ் இந்நாவலை மொழிபெயர்த்துள்ளார் .

கே.ஏ. அப்பாஸ் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களில் தமிழில் பெயர்க்கப்பட்டவற்றின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை .
அவற்றுள் சிலவற்றை இங்கு தந்துள்ளேன் .

அத்துடன் ‘ இன்கிலாப் ‘ நாவல் ஆங்கில மொழிபெயர்ப்பின் முதற்பதிப்பும் ( 1955 ) இங்கு காட்டப்பட்டுள்ளது.

எனது சேகரிப்பிலுள்ளவற்றை மாத்திரம் இங்கு காட்சிப்படுத்தியுள்ளேன்.

இவற்றுள் ‘ குங்குமப்பூ ‘ என்ற சிறுகதைத் தொகுப்பு இலங்கை எழுத்தாளர் கே. கணேஷ் மொழிபெயர்ப்பில் தி.ஜ .ர ( தி. ஜ .ரங்கநாதன் ) முன்னுரையுடன் 1956 ஜனவரியில் வெளிவந்தது. அப்பாஸின் ‘ அஜந்தா ‘ குறுநாவலையும் கே.கணேஷே தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.அதன் முதற் பதிப்பு 1964 ஆம் ஆண்டு வெளிவந்தது என்பவை மேலதிகத் தகவல்கள் .

கே ஏ அப்பாஸ்

பின்னூட்டமொன்றை இடுக