இளம் செவிலியின் முன்னால் கணவன்

இளம் செவிலியின் முன்னாள் கணவன்

எம் எம் நெளஷாத்

செவிலியின் காதல் அறுகம்பை என்றழைக்கப்பட்ட அழகிய கடற்கரையிலிருந்து ஆரம்பித்தது. உலாவல் (Surfing festival) திருவிழா வொன்றின் போது அவள் அவனைச் சந்தித்தாள். நீர்த்திவலைகள் தெறிக்கின்ற திரண்டெழும் கடல் அலைகளாலும் நீல ஆகாயத்தாலும் வியாபித்திருக்கும் வெளியாலும் அங்கொன்றும் இங்கொன்றுமான உலாவுனர்களாலும் அவன் சூழப்பட்டிருந்தான். 

‘உலாவல் விளையாட்டை ஆர்வத்தோடு ரசிக்கின்ற ஓரிளம் பெண் என்று நான் உங்களை அழைக்கலாமா?’ என்று அவன் கேட்டபோது நட்புறவுடன் உரையாடும் அவனுடைய சுபாவம் அவளுக்குப் பிடித்துக் கொண்டது. செவிலி உல்லாசப் பயணியாக அங்கு வந்திருந்தாள்.

 ‘உலாவலை நான் நேசிக்கிறேன். பாடசாலையில் கற்கின்ற காலத்திலிருந்தே உலாவலுக்கு நானொரு ரசிகை என்பதால் உலாவல் விழா எங்கு நடந்தாலும் அங்கு  ஆஜராகிவிடுவேன். அறுகம்பையில் இடம்பெறும் உலாவல் திருவிழா மிகவும் சிறப்பாக இருக்கும் என்றொரு குறிப்பை இணையத்தில் வாசித்து விட்டு இங்கே வந்தேன். உண்மையிலே இந்த விழாவை ஏற்பாட்டாளர்கள் மிகவும் சிறப்பான முறையில் வடிவமைத்திருக்கிறார்கள்.’

 ‘அறுகம்பை என்னைப் பொறுத்தவரை மிகவும் பரிச்சயமான இடம். இந்தப் போட்டியிலே கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு பருவ காலத்திலும் நான் இங்கே வருகிறேன். மேதமையான போட்டியாளர்களுடன் மோதுவது எனக்குக் களிப்பூட்டும் விஷயமாக இருக்கிறது. தோல்வியையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன். ’ என்றான் அவன்.

  ‘கடல் அலைகளுக்கு மேல் பறந்து செல்ல எனக்கும் ஆசைதான் எனினும் காற்றோடு மோதுவது குறித்து நான் அச்சமடைகிறேன்’

 ‘நீங்கள் உலாவல் குறித்து தவறான அர்த்தத்தில் இருக்கிறீர்கள். உலாவல் என்பதன் நுட்பமே காற்றோடும் நீரோடும் ஒத்திசைந்து விளையாடுவதாகும். அதற்குரிய சமநிலை நுணுக்கங்களை கற்றுத் தேறுவதுதான் உலாவினனின் அடிப்படை அஆஇ. மேதமை கொண்ட உலாவினனாக உருமாறுவதென்பது வெறும் விளையாட்டல்ல. பொருத்தமான அலைகளைப் புரிந்து கொண்டு உலாவவும் அலைகள் உடையுமிடங்களைப் உணர்ந்து கொள்ளவும் கூர்மையான அவதானிப்பு அவசியமாகும்.’ என்றான் அவன்.

இவ்வாறான நுட்பங்களை பேரனுபவம் கொண்ட உலாவினன் ஒருத்தனால் மட்டுமே தெள்ளத்தெளிவாக விபரிக்க முடியும் என்று செவிலிக்குப் புரிந்தது. அவன் மேதமையான உலாவினனாக இருக்கிறான். உலாவுபலகையின் மீது உறுதியாக கால்களை ஊன்றி தன்னைத் தானே சுழற்றியவாறே அவன் மிகவும் லாவகமாக காற்றிலே மிதந்து கொண்டிருந்தான். காதலின் முதற் சிறகடிப்பை செவிலி உணர்ந்து கொண்டதும் அவ்வேளையில் தான்.

கடலலைகளின் விளிம்புகளிலிருந்து நுரைத்து வரும்  நுரை கால்களையும் பாதங்களையும் தொட்டுச் செல்லும் தூரத்தில் செவிலியும் அவனும் மணலில் புதைந்து அமர்ந்திருந்தார்கள். ‘கடல் உன்னை முத்தமிடுகிறது’ என்று அவன் சொன்னதும் கிளுக்கென்று சிரித்த செவிலி ‘உங்களைப் போல, என்னைத் தொட்டதும் கடலும் கிளச்சியுறுதாக்கும்’ என்றாள்.

கடல் நீர் தாவித்தாவி உலாவுப் பலகையின் மீது பரவி அவளுடைய உள்ளத்திற்குள் விரிந்து காதலாகிக் கசிந்து ஓடியது. உலாவுப் பலகை அவனென்றால் தழுவும் அலை நானென்று தனக்குள் அவள் சொல்லிக் கொண்டே கிளர்ச்சியுற்றாள்.

உலாவலின் ரசிகையாக இருந்த செவிலி அவனைச் சந்தித்தபின் உலாவலின் மீது பித்துப் பிடித்தலைந்தாள். வெறும் உடல் ஈர்ப்பில் அவளுக்குள் ஆரம்பித்த காதல் காலப்போக்கில் அர்ப்பணிக்கும் காதலாக மாறி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

கூடை போன்ற பிளாற்றின அடித்தளத்தில் ஐந்து கரட் இளநீல நிறமான வைரம் பதிக்கப்பட்டு வாவ் எனறு வியக்கும் வகையில் ஜொலிக்கும் திருமண மோதிரத்தை அவன் அவளுடைய மோதிரவிரல் அணிவித்த போது ‘நான் உங்களை நேசிக்கிறேன்’ என்று செவிலி செல்லக் கொஞ்சலோடு சொன்னாள். அவனுடைய விழிகளோடு அடிக்கடி பேசிய அவன் அந்த குதூகலத்தோடு தன் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

முள்ளந்தண்டு பலகையில் (Spinal Board) பிணைக்கப்பட்ட நிலையில் முப்பது வயது இளைஞன் அதிதீவிர விபத்துச் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டான். அவனது இடது காதிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்ததோடு கண்களை மூடி அவன் ஆழ்ந்த மயக்கத்திலிருந்தான். அவனைப் பரிசோதித்த டாக்டர் உதடுகளைப் பிதுக்கியவாறே ஜிஸிஎஸ் ஒன்பது இந்த நோயாளியை அவசரமாகக் கவனியுங்கள் என்று சொன்னார். (GCS Glasgow Coma Scale)

நோயாளி உடம்பு பூராவும் இரத்தத்தில் தோய்ந்திருந்தான். தலையில் ஏற்பட்ட காயங்களோடு முள்ளந்தண்டும் சிலவேளை உடைந்திருக்கக் கூடும். ஓரிளம் பெண் – அனேகமாக காயப்பட்டவனின் மனைவியாக இருப்பாள்-  அருகில் நின்று கொண்டிருந்தாள். அவள் கத்தி கூச்சல் போடாவிட்டாலும் அவளது மெல்லிய மெல்லிய நடுககத்துடனான பதற்றத்தையும் கண்களில் நீர் முட்டி இருப்பதையும் செவிலி அவதானித்தாள்.

கடவுளே இந்த பெண் என்னிடம் எதுவுமே கேட்கக்கூடாது என்ற பிரார்த்தனையுடன் – என்னுடைய கணவனின் நிலைமை எப்படி இருக்கிறது என்று அவள் தப்பித்தவறிக் கேட்டாளென்றால் உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் மிக மிகக்குறைவு என்று அவள் பதில் சொல்ல வேண்டியிருக்கும் – நார் நாராகக் கிழிந்து போயிருந்த ஆடைகளை கத்தரிக்கோலால் வெட்டியகற்றி விட்டு மெல்லிய gauze துணியை சாதாரண சேலைனில் அமிழ்த்தி மேனியிலே சிறுகாயங்கள் மேல் படிந்திருந்த இரத்தக் கறைகளைத் துடைத்தாள் செவிலி. 

அவள் விரைவாக இயங்கினாள் உதவியாளர்களின் துணையுடன் நோயாளியை அதிதீவிர சிகிச்சை பிரிவுப்படுக்கைக்கு மாற்றி விட்டு சகல மருத்துவக் கருவிகளையும் இணைப்புக்களையும் அவனுடைய உடலிலே பொருத்தினாள்.

‘உங்களோடு ஓரிரு நிமிடங்கள் பேச முடியுமா?’ என்று கேட்டாள் இளம் பெண். இதற்கு மேலும் அவளிடம் மறைப்பதற்குரிய முகாந்திரம் எதுவுமில்லை என்பதால் ‘தாராளமாகப் பேசுவோம் உங்களுக்கு உள்ளேவர அனுமதியில்லை இந்த நோயாளிக்குரிய அத்தியாவசியமான காரியங்களை முடித்துவிட்டு  நான் வெளியே வருகிறேன். எனக்காகக் காத்திருங்கள்’ என்றாள் செவிலி.

இவ்வாறான இக்கட்டான தருணங்களை- உன் கணவன் விரைவில் இறக்கப் போகிறான் என்றோ உன் மகன் மரண விளிம்பில் இருக்கிறான் என்றோ உன் தாய் உன்னை விட்டுப் போகப் போகிறாள் என்றோ அறிவிப்பது – அவள் பல தடவைகள் கடந்திருக்கிறாள். அவ் வேளைகளில் தன்னுடைய உயிருக்குயிரான ஒருத்தரை இழந்தது போல் அவள் ஊமையாகத் துயருருவாள்.

காயமுற்றவனின் மனைவியான அவள் பாலர் வகுப்பு ஆசிரியையாகக் கடமையாற்றுகிறாள். காயமுற்றவன் அழகுப் பொருட்கள் நிறுவனமொன்றில் உதவி விற்பனை முகாமையாளராக இருக்கிறான். இருவரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சிறப்பங்காடியொன்றிற்குப் பயணித்துக் கொண்டிருந்த போது பார ஊர்தி அவர்கள் பயணஞ்செய்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக் இடித்திருக்கிறது. அவள் சிறுகீறல்களோடு தப்பிவிட்டாள்.

அவ்விளம் பெண்ணை செவிலி ஆஸ்பத்திரி சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்றாள். ஒரு குவளை பால் அருந்துவோமா என்று செவிலி அவளிடம் கேட்டாலும் வேண்டாமென்று மறுத்தாள் அவள்.

‘உங்கள் கணவனை Scan ஸ்கேன் எடுப்பதற்காக கதிரியக்கப் பிரிவிற்கு அனுப்பியிருக்கிறோம். எக்ஸ்ரே படங்கள் ஏற்கனவே வந்துவிட்டன. அதிர்ஷ்டவசமாக முள்ளந்தண்டில் முறிவுகள் எதுவுமில்லை. காதிலிருந்து இரத்தம் வடிவது குறைந்திருக்கிறது. நுரையீரல்களும் பாதுகாப்பாக இருப்பதால் இரத்தத்தில் ஒட்சிசன் செறிவு நூறுக்கு அண்மித்தாக இருக்கிறது’ என்றாள் செவிலி.

அதிகப்பிரசங்கித்தனமாக இவ்வாறு பேசுவது குறித்து – அதாவது தெளிவாகப் புலப்படும் மனசுக்கு வருத்ததை உண்டாக்கும் உண்மையை மறைப்பதற்காக உப்புச் சப்பில்லாத தகவல்களை அவளிடம் கட்டவிழ்த்து விடுகிறோமோ – என்று செவிலி தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.

இவ்விளம் பெண் எனக்கு யார்? என்ன உறவுமுறை? சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று அவளை வசதியான ஆசனத்தில் அமரவைத்து அவளிடம் இப்படி நாடகீயத்துடன் உரையாட வேண்டிய அவசியம் என்ன?  இரண்டு வயதுக் குழந்தையொன்றை அவ்விளம் பெண் அழைத்து வந்திருக்கிறாளே  அந்தக் குழந்தையின் முகத்தில் தெரிந்த துயரம் என்னையும் பற்றி கொண்டதா? அல்லது அவ்விளம் பெண்ணை நானாக நினைத்துக் கொள்கிறேனா? அந்தக் குழந்தையின் எதிர்காலமும் குழந்தையின் தாயின் எதிர்காலமும் நோயாளியின் மரணத்திற்குப் பிற்பாடு இருண்டு போய்விடும் என்று நானாகக் கற்பனை செய்து கொள்கிறேனா?

மண்டையோட்டிலும் மண்டையோட்டின் அடிப்புறத்திலும் உடைவுகள் இருந்து உள்கபாலத்தில் தொடர்ச்சியாக இரத்தம் கசிகிறது என்ற மோசமான தகவலோடு Scan அறிக்கை வந்தது.

 ‘சத்திரசிசிச்சை செய்து இரத்தக்கசிவை நிறுத்த முடியுமா?’ என்று இளம் பெண் என்று இளம்பெண் கேட்டதும் ‘அது சாத்தியமில்லை’ என்று செவிலி மிகுந்த தயக்கத்தோடு பதிலளித்தாள்.

எதிர்பார்த்தபடியே  உட்கபால இரத்த அழுத்தம் கூடி இளம் பெண்ணின் கணவன் சரியாக இருபது மணித்தியாலங்களில் இறந்தான்.

இறுதிக் கணங்களில் காயமுற்றவனுக்கு மோசமான வலிப்பு வந்து உடம்பு முழுவதும் தாறுமாறாகத் துடித்ததை இளம்பெண் கையறு நிலையில் அவதானித்துக் கொண்டிருந்தாள். செவிலி அவளைத் தாங்கிப்பிடித்தபடி நின்றிருக்கா விட்டால் இளம்பெண் கீழே விழுந்திருப்பாள்.

‘ஓர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இருப்பதால் நான் இன்றைய தினம் சற்றுப்பிந்தி வருகிறேன்’ என்று கணவனுக்கு அறிவித்தாள் செவிலி.

இளம் பெண்ணின் வீடு இருளில் மூழ்கியிருந்தது. மின்விளக்குகளின் ஆளியைப் போட்டு இளம் பெண்ணை கட்டிலில் ஓய்வு கொள்ள வைத்தபின் ‘கவலைப்படாதீர்கள் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்’ என்றாள் செவிலி. 

குழந்தை தடுமாறிப் போயிருந்தது. அழுவதா வேண்டாமா என்று முடிவு செய்ய முடியாத மனக்குழப்பத்தில் தாயின் முகத்தையும் செவிலியின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்த குழந்தை ஏன் என்னுடைய தந்தையை வெள்ளைப் போர்வையால் போர்த்தியிருக்கிறார்கள் என்று தாயிடம் கேட்க நினைத்தாலும் – தாயின் முகம் என்றுமில்லாதவாறு இருண்டு கிடந்த காரணத்தால் அந்தக் கேள்வியை அது தவிர்த்துக் கொண்டது.

அப்போதுதான் வீடு வந்து களைப்பைப் போக்கிக் கொள்வதற்காக ஒரு குவளை குளிர்ந்த நீரோடு சாய்மனையில் ஆசுவாசத்துடன் அவள் அமர்ந்தவேளை ‘நீ நோயாளிகளைப் பராமரிக்கும் செவிலி என்பதை ஒப்புக் கொள்கிறேன். இறந்தவன் நூறு பேரில் ஒருத்தன். அந்த ஆணின் சடலத்திற்குப் பின்னால் சென்றதையும் ஒரு கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை நீ அவனுக்குச் செய்ததையும் நான் வெறுக்கிறேன். அவனுடைய அடக்கஸ்தலத்தில் நீ அவனுக்காகப் பிரார்த்தித்து இருக்கிறாய். அவனுடைய மனைவிக்காகவும் குழந்தைக்காகவும் சமைத்து அவர்களோடு ஒரே மேசையில் அமர்ந்து சாப்பிட்டும் இருக்கிறாய்’ என்று குற்றஞ்சாட்டினான் செவிலியின் கணவன்.

அருவருப்பாக உரையாடுவதற்கென்றே தயாரானவனாக, வீட்டின் வரவேற்பறை விளக்குகளை அணைத்துவிட்டு ஆடைகளும் தலைமுடியும் கலைந்தவனாக அல்லது வேண்டுமென்றே கலைத்தவனாக சோபாவிலே அஷ்டகோணலாக அவன் சாய்ந்திருந்தான். 

‘இரண்டு வயதுக்குழந்தை யார்? உன்னுடைய குழந்தையா? அவன் யார்?’ (அதாவது உன்னுடைய ஆண் நண்பனா என்று அர்த்தப்பட)  என்றும் அவன் கேட்டான்.

அசிங்கமாகப் பீச்சியடித்த அவனுடைய சொற்களின் முடைநாற்றத்தைச் சட்டென உணர்ந்து கொண்ட செவிலி அவ்வருவருப்பை கசப்புணர்வுடன் விழுங்கி – நான் மனித உளவியலில் டிப்புளோமாத் செய்தவளாக்கும் என்ற தோரணையில் – வசீகரமான புன்னகையாக உருமாற்றி பூப்பூ என்று அவனை அலட்சியம் செய்து ‘என்னை நற்குணங்கள் வாய்க்கப்பெற்ற செவிலியென்று எடுத்துக் கொள்ளுங்களேன்’ என்றாள்.

‘என் அம்மாவும் இப்படித்தான் புளோரன்ஸ் நைற்றிங்கேல் போன்ற ஒரு பெண்ணாக வாழ்ந்தாள்’ என்று செல்லிக்கொண்டே பிரகாசமான வரவேற்பறைச் சரவிளக்குகளை அவள் ஒளிரச் செய்தாள். வரவேற்பறை பிரகாசமடைந்ததும் முகத்தை வெடுக்கெனத் திருப்ப முனைந்த அவனருகில் சென்று இச்சென்று ஒரு முத்தததை அவனுடைய உதடுகளில் பதித்தவாறே ‘நாளை எங்களது திருமண நாள் வருகிறது. கொண்டாடுவோம், தயாராகுங்கள்’ என்றாள்.

கணவன் மிகவும் பிரியத்துடன் உண்ணும் இத்தாலி உணவுப்பாகமான Chicken piccata வை அவளாகவே சமைத்து அவன் ஆஹா  என்று மிகவும் சுவையாக இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் ருசித்துக் கொண்டிருக்கும் போது செவிலி தன் கணவனிடமிருந்து எதிர்பார்த்தது ஒற்றை வார்த்தையில் ஒரு மன்னிப்புக் கோரல் மாத்திரமே. அவள் வெளிக் காட்டிக் கொள்ளாவிடினும் அவனுடைய வார்த்தைகள் அவளை நோகடித்திருந்தன.

தன்னுடைய விரல்களைப் பற்றக்கூடுமென்று செவிலி அவனுடைய முகத்தை நெடு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவளுக்கு ஏமாற்றமளிக்கும் விதத்தில் dessert முடிந்த கையோடு அவன் வெகு வேகமாக எழுந்து வெளியே போனான்.

யார் விசையை முடுக்கி விட்டார்கள் என்று தெரியாத அல்லது காரணமே தெரியாத வாழ்க்கையின் அர்த்தத்தையே மழுங்கடிக்கக் கூடிய இரத்தச் சுற்றோட்டம் ஆரம்பித்து விட்டது என்று செவிலி தனக்குள் சொல்லிக் கொண்டாள். அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் தன்னை விட்டு மெல்லமெல்ல விலகிச் சென்று கொண்டிருக்கும் அவனை கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருந்தாள் செவிலி.

இனிமையற்ற, அன்பு தழுவாத, முரட்டுச் சாயல் கொண்ட, அவளைக் காயப்படுத்தும் உள் நோக்கமுடைய, அவள் மனதால் வெறுக்கின்ற சொற்களால் அவன் பின்வந்த நாட்களில் அவளோடு உரையாடியதால் மனக்கலேசமுற்ற செவிலி – இளம் வயதிலேயே துரதிர்ஷ்டத்தைச் சுமந்து கொண்ட இளம்பெண்ணாக தான் இருப்பதாக ஆறுதல் தேடி தன் தோழியிடம் முறைப்பட்டாள்.

‘நான் நோயாளிகளைத் தொடுவதையும், அவர்களிலிருந்து வெளிப்படும் சளி, வியர்வை, உமிழ்நீர், கண்ணீர், வாயால் வடிதல் இவைகளைத் துடைப்பதையும்,  கூந்தலைச் சீவி ஆடைகளை அணிவித்து விடுவதையும் தான் வெறுப்பதாகவும் நான் அலங்கோலமாக தோற்றமளிப்பதாகவும் என் கணவன் கூறுகிறான்.’ என்றாள் அவள்.

‘ஒரு செவிலியாக என்னிடம் அவன் எதிர்பார்ப்பதெல்லாம் நேர்த்தியான தோற்றத்தோடு குழைமம் பூசப்பட்ட முகஅழகோடு மடிப்புக்குலையாத சீருடை அணிந்து பளிச்சென்ற பார்வையுடன் எப்போதும் சுண்டியிழுக்கும் சிரிப்போடு கூடிய செவிலியின் தோற்றம்.’

‘அடக் கடவுளே,’ என்றாள் தோழி.

‘என்னை வெறுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைத்த நான், நோயாளிகளோடு பெரிதாக நேரடித் தொடர்பு குறைந்த சத்திர சிகிச்சைக் கூடத்திற்கு என்னை இடமாற்றுமாறு தலைமை மருத்துவரிடம் கேட்டுகொண்டேன். சத்திரசிகிச்சைக் கூடத்தில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள் என் வயிற்றில் வளரும் சிசுவுக்கு ஆபத்தை உண்டு பண்ணலாம்  என்று தலைமை மருத்துவர் என்னை எச்சரித்தார். நான் அவர் எச்சரித்ததையும் மீறி, சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு பணிமாற்றம் பெற்றுக் கொண்டேன். சரியாக மூன்று மாதங்களில் நான் கருச்சிதைவுக்குள்ளானேன்.  என்னுடைய கணவன்  அதனை ஒர் அற்பகாரியமாக எடுத்துக் கொண்டு எல்லாப் பெண்களுக்கும் நடை பெறுவதுதானே உன் மனதைத் தேற்றிக்கொள் என்று ஒரு வாக்கியத்தோடு முடித்தான்.’

‘நீ ஒரு முட்டாள், நீ செய்த காரியங்கள் அடிமைத்தனமாகவும் வெகுளித்தனமாகவும் இருக்கிறது.’

‘இல்லை, கண்மூடித்தனமாக தன்னைக் கணவனிடம் ஒப்புவிக்கும் அடிமைத்தனம் என்று நீ நினைக்க வேண்டாம். நான் அன்பில் வளர்ந்தவள். என் இழையங்களினூடாக மெல்லிய இழையாக ஊடுருவிப் பரவியிருக்கும் என் அதீத நேசத்தை பதிலீடாக வெளிப்படுத்துகிறேன்.’ என்று பதிலளித்தாள் செவிலி.

செவிலிக்கும் கணவனுக்கும் இடையிலான இறுதிச் சந்திப்பு சிற்றுண்டியகத்தில் நிகழ்ந்தது. அவர்கள் காதலர்களாக இருந்த சமயத்தில் அங்கே அடிக்கடி சந்தித்து சல்லாபித்துக் கொண்டிருப்பார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு அவன் செவிலியை அங்கு அழைத்திருக்கிறான்.

செவிலி நினைத்து வந்தது வேறு நடந்தது வேறு. தேநீரை ருசித்து ருசித்து அருந்தும் தேநீர் சடங்கிற்குப் பதிலாக- நீண்டநேரம் தங்களுக்குள் சல்லாபிப்பதற்காக அவர்கள் இருவரும் மணித்தியாலக் கணக்கில் நீடிக்கும் வண்ணம் தேநீரை துளித்துளியாக ருசித்து ரசித்து அருந்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். – அவன் இரண்டு நிமிடங்களிற்குள்ளேயே ஒரு குவளை தேநீரை அருந்திவிட்டு செவிலியை பார்த்தவாறே – ஆனால் முகத்தைப் பார்க்காமல் – ‘நாங்களிருவரும் திருமணத்தை முறித்துக் கொள்வோம்’ என்றான்.

செவிலியின் கையிலிருந்த தேநீர்க் குவளை தவறிவீழ்ந்து தேநீர் மேசையெங்கும் சிதறியது. அவள் அந்தச் சொற்களை நம்பாதவளாக நீ சரியாகத்தான் பேசுகிறாயா என்ற தோரணையில் அவனுடைய முகத்தைப் பார்த்தாள். அந்த முகம் வேதாளமொன்று வசீகரமான புன்னகையை வெடுக்கென பிடுங்கிச் சென்றது போல் இறுக்கமாக இருண்டு போய்க் கிடந்தது.

‘நீங்கள் என்னிடத்தில் விகடமாகத்தானே பேசுகிறீர்கள்’

‘இல்லை நான் பொய் சொல்லவில்லை. என்னிடம் விளக்கம் கேட்டாயென்றால் என்னால் விளக்க முடியாது. என்னை மன்னித்துக் கொள். எல்லாம் கனவுபோல் இருக்கிறது. உன்மீது இப்போது எனக்கு அன்பு கிடையாது. அன்பு வற்றி பூச்சியமாகி விட்டது. மூன்று நாட்களுக்கு முன் படுக்கையை விட்டு எழுந்த போது இது நிகழ்ந்தது. நான் இப்போது சுத்த சூனியம். என் மனதிலிருந்து நீ முற்றாக இல்லாமல் போய்விட்டாய். உன் கண்கள் மீது இப்போது எனக்கு காதல் கிடையாது. அழகாக இருந்த உன் கண்களும் உதடுகளும் இப்போது எனக்கு வெறும் மரக்கட்டையாகவே தெரிகின்றன. நானும் நீயும் வெறும் ஜடங்களே’ என்றான் அவன்.

செவிலி என்ன பேசுவாள்? விபத்திலே கணவணை இழந்த அந்த இளம் பெண்ணின் அதிர்ச்சியூட்டும் முகம் அப்போது அவளுக்குள் தோன்றிற்று. அவளுடைய கணவன் இறந்த போது அவள் எப்படி அதிர்ச்சியாகத் தோன்றினாலோ அதைப் போலவே நானும் இப்போது இருக்கிறேன்.

‘இதற்கு மேலும் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு என்னால் போலியாக நடிக்க முடியாது. ஏனென்றால் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை.’ என்று அவன் பேசிக்கொன்டே போனான்.

‘இத்துணைக்கால காதலின் பின் சல்லாபங்களின் பின் முத்தங்களின் பின் என்னில் எது உனக்கு பிடிக்காமல் போயிற்று? என்று ஆதங்கத்துடன் கேட்டாள் செவிலி. ‘உன்னில் உள்ள எல்லாம் தான்’ என்று பதிலளித்தான் அவன்.

இனி தர்க்கிப்பதற்கு ஒன்றுமில்லை என்றாகி விட்டபிறகு செவிலி விவாகரத்திற்கு ஒப்புக் கொண்டாள். விவாகரத்திற்கு விண்ணப்பித்து நீதிமன்றில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே அவளுடைய கணவன் இறந்து போனான்.

ஒருவகை மயக்கம் தன்னை ஆட்கொள்வதாகவும் மூச்சுத் திணறுவதாகவும் நெஞ்சு வலிப்பதாகவும் அவன் சொன்னான். வலது கையால் இடதுமார்பை இறுக்கிப்பிடித்துக் கொண்டான். கீழே விழத்தயாரான அவனை அவள் தாங்கிப்பிடித்துக் கொண்டாள். அவன் இரண்டு வாரங்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தான்.

அவள் அவனைப்பராமரித்தாலும் அது சுரத்தற்றதாக இருந்தது. அவள் கணவனுடைய விஷயத்தில் திக்கித் தடுமாறினாள். அருகில் செல்லும் போதெல்லாம் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று அவன் சொன்னது ஞாபகம் வந்துவிடும். நாளவூடு ஊசிகளைப் போடுவது ஸேலைன் குழாயை மாற்றுவது சிறுநீரைச் சேகரித்து அளவிடுவது உடல் வெப்பநிலையைப்பார்ப்பது குறிப்புகள் எழுதுவது எல்லாம் இயந்திரத்தனமாக அவள் செவிலி என்ற தோரணையில் நிகழ்ந்தன.

அவனுடைய இதயம் மிகவும் பலவீனமாக இருந்தது. துடிப்புகள் ஒழுங்கற்று இருந்தன. காட்டியிலே இரத்தம் அழுத்தம் மோசமாகக் குறையும் போதெல்லாம் அல்லது இதயத்துடிப்பு அபாயகரமான எண்ணிக்கையைக் காட்டும் போதெல்லாம் அவள் கண்களை மூடி – கடவுளே எனக்கு இன்னூமாரு சந்தர்ப்பத்தைத் தந்துவிடு – என்று கண்களை மூடிப் பிரார்த்தனை செய்தாள்.

புன்னகைக்க முடியுமாக இருந்தாலும் ஒருசில வார்தைகள் பேச முடியுமாக இருந்தாலும் அவன் எவ்வித சலனமுமற்று இருந்தான். பாழடைந்த கட்டட மொன்றிற்குள் தலைகீழாகத் தொங்கும் வெளவாலைப் போல் அவள் தன்னை உணர்ந்தாள். கண்கள் குருடாகிவிட்டன. அவள் ஒலியலைகளை அனுப்பிக் கொண்டேயிருந்தாலும் எதிரொலி இல்லை. இலக்கு எதுவுமில்லாமல் வெளவால் பறந்து கொண்டிருக்கிறது.

தினசரி அவனுடைய கல்லறையை அவள் தரிசித்தாள். ஓர் ஒளிவெட்டு தோன்றி மறைவதைப் போல்- காட்டாற்று வெள்ளம் போல் அவர்களுக்கிடையே பிரவாகித்து ஒடிக்கொண்டிருந்த காதல் என்ற நீரூற்று சடுதியாக வற்றிப்போயிற்றே என்ற சஞ்சலம் அவளைத் தொந்தரவு செய்தது.

ஓர் ஆஜானுபாகுவான இளைஞனும் அவனுடைய கல்லறையைத் தரிசித்தான். அவனோர் இயன்மருத்துவன்.  நீண்ட காலமாக அவளை ஒருதலைப் பட்சமாக காதலித்துக் கொண்டிருந்தவன்  செவிலியைத் திருமணம் செய்யும் பிரேரணையோடு அவளைப் பின்தொடர்ந்து சரியான தருணத்தைத் தேடினான்.

செவிலி உடனடியாகவே அவனுடைய முன்மொழிவை நிராகரித்தாள். ‘இதுவோர் அதிர்ச்சியூட்டும் முன்மொழிவாகும். பெண்களின் உள்ளத்தை ஆண்களாகிய நீங்கள் புரிந்து கொள்ளவே மாட்டீர்களா?’ என்று அவள் கோபம் மேலோங்கக் கேட்டாள். மேலும் அவள் பதிலளித்தாள். அவளுடைய பதிலின் சுருக்கம் வருமாறு.

‘என் முன்னாள் கணவன் என் உள்ளத்திலே அழிக்க முடியாத கறையை உன்டாக்கி விட்டான். அந்தக்கறை என்னை வதைத்துக் கொண்டேயிருக்கிறது. அவன் மீது நான் கொண்ட நேசமானது ராஜாளி பறக்கும் உயரமளவிற்கு உசத்தியானது. அவன் அன்பு வற்றிவிட்டது என்று இலகுவாகச் சொல்லிவிட்டு மரணித்துப் போனான். யார் மீதும் நேசம் கொள்ளும் மனநிலையில் நான் இப்போது இல்லை என்னை மன்னித்துவிடுடுங்கள்.’

இயன் மருத்துவன் செவிலியிடம் ஒரு கதை சொல்ல நினைத்தான். அந்தக் கதையைக் கேட்டு செவிலி  நிஜமாகவே அவன் மீது அன்பு செலுத்தும் தன்னை நேசிப்பாள் என்று அவன் நம்பினான். இறந்து போன அவளுடைய கணவனைப் பற்றிய மிகவும் மோசமான உண்மை அது. அந்தக் கதையை புறநகரில் ஒதுக்குப்புறமான ஒரு வீட்டிலே வாழும் மூதாட்டி இயன்மருத்துவனிடம் சொன்னாள்.

‘அவன் குழந்தையாக இருக்கும் போதே அவனுடைய தாயும் தந்தையும் விபத்தென்றில் இறந்த பின் நான் அவனை வளர்த்தேன். தான் உலகப்புகழ் பெற்ற உலாவினனாக வரவேண்டும்மென்று அவனிடம் ஒரு கனவு இருந்தது. நான் அவனுடைய விருப்பத்திற்கே விட்டுவிட்டேன். அவன் அவ்வாறே வளர்ந்தான். துரதிர்ஷ்டவசமாக பத்து வயதாக இருக்கும் போது செவிலியரின் சீருடைகளைத் திருடும் மோசமான பழக்கமொன்று அவனிடம் தொற்றிக் கொண்டது.’

‘ஒருநாள் அவனுடைய அறையை ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தபோது செவிலியின் சீருடை இருப்பதைக கண்டு ஆச்சரியமுற்ற நான் அது யாருடையதென்று கேட்டேன் அவன் மழுப்பலான பதிலொன்றைச் சொன்னான். சந்தேகமுற்ற நான் அவனைக் கண்காணிக்க ஆரம்பித்தேன். அடுக்ககத்தின் மேல்மாடியில் உலரப்போட்டிருந்த செவிலியின் சீருடையை அவன் திருடியிருக்கிறான். இந்தப் பழக்கம் தொடர்ந்தது. என்னுடைய எச்சரிக்கைகளை அவன் அசட்டை பண்ணினான். அவனுடைய அறை பூராவும் செவிலியரின் சீருடைகள் சிதறியிருப்பதைக் கண்ட நான் அதிர்ச்சியிற்று உளநோய்ச் சிகிச்சை நிபுணரிடம் அவனை அழைத்துச் சென்றேன். அப்போது அவனுக்குப் பதினேழு வயது ஆகியிருந்தது பெண்களின் ஆடைகள் மீது மோகம் கொள்ளும் ஒருவகை மனநோய் என்று டாக்டர் என்னிடம் விளக்கினார்.’

செவிலியர்களின் பின்னால் திரிந்த அவன் அவர்களை இரகசியமாகப் புகைப்படமெடுத்து தனது அறையின் சுவர்களிலே தொங்கவிட்டான். அவனுடைய மனக்கற்பிதத்தில் செவிலியர் என்றால் வசீகரமான சீருடை அணிந்த இளம்பெண்கள் என்ற சித்திரம் ஆழமாகப் பதிந்து விட்டது. சீருடை அணிந்த செவிலியொருத்தியைத் தான் நான் திருமணம் முடிப்பேன் என்று அவன் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான். 

சொன்னபடியே ஒருநாள் அழகான சீருடை அணிந்த செவிலியை வீட்டுக்கு அழைத்து வந்த அவன், அவளை எனக்கு அறிமுகப்படுத்தி நான் இவளைத் திருமணம் செய்யப் போகிறேன் என்று சொன்னான். அந்த இளம் பெண் விடயத்தில் நான் மிகுந்த மனவிசாரமுற்றேன். ஏனெனில் அவள்மீது அவன் கொண்டிருந்தது கண்மூடித்தனமான மையல் மாத்திரமே (INFATUATION). அந்த மையலில் அன்பு துளியேனும் கலந்திருக்கவில்லை என்பது எனக்குத் தெரியும்.

‘செவிலியிடம் என்பேரனைப் பற்றிச் சொல்லி அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த நான் எவ்வளவோ முயற்சித்தேன். எனக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றாகி விட்டபிறகு அப்பாவியான அவ்விளம் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிக்க வேண்டாமென்று நான் என் பேரனிடம் கெஞ்சினேன். அவனோ மிகவும் பிடிவாதமாக இருந்தான்.’

செவிலியின் ஆடைமீது மையல் கொண்ட அவன் அவளின் தொழிலை வெறுத்தான். நோயாளிகளைப் பராமரிப்பது அவனுக்கு அருவருப்பைத் தந்தது. எப்போதும் தன்னுடைய மனைவி வசீகரமான சீருடையோடு பளிச்சென்று இருக்க வேண்டுமென அவன் விரும்பினான். அவளைப் பற்றி என்னிடம் அடிக்கடி முறையிட்டான். நோயாளிகள் என்பவர்கள் துர்நாற்றத்தையும் அழுக்கையும் சுமப்பவர்கள் ஆதலால் அவர்களுடன் பழக வேண்டாமென்றும் அவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டாமென்றும் பல தடவைகள் செவிலியை வற்புறுத்தி இருக்கிறான். அவள் மறுத்திருக்கிறாள். அவன் விடவில்லை. அவளைப் பல்வேறு வழிகளில் இம்சித்து தொழிலை விட்டுவிடும்படி மிரட்டியும் இருக்கிறான். அவள் மசியவில்லை. ஒரு நாள் இங்கே வந்த அவன் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக் என்னிடம் சொன்னான். அவள் உன்மீது ஆழமான அன்பு வைத்திருக்கிறாள். அவளைக் கைவிட்டு விடாதே என்று நான் மீண்டும் பல தடவைகள் அவனிடம் கெஞ்சினேன்.’

இயன் மருத்துவன் செவிலியிடம் பின்வருமாறு சொல்ல நினைத்தான்.

‘அன்பு சடுதியாக வற்றிப்போயிற்று என்று உன் கணவன் உன்னிடம் சொன்னதெல்லாம் வெறும் கட்டுக்கதையே. அவன் உன்னோடு வாழ்ந்த உண்டுகழித்த நீர் வீழ்ச்சிகளுக்கும் பூங்காக்களுக்கும் கடற்கரைகளுக்கும் கூட்டிச் சென்ற முயங்கிய மூன்று ஆண்டுகளிலும் சீருடையால் போர்த்தப்பட்ட உன்னுடைய உடல் மீது கண்மூடித்தனமான மையல் கொண்டிருந்தானேயன்றி ஒருதுளி கூட உன்மீது உண்மையான அன்பு கொண்டிருக்க வில்லை.’

எனினும் மூதாட்டி சொன்ன இந்தக் கதையை இயன்மருத்துவன் அவளிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் அவள் தற்கொலை செய்திருப்பாள்.

பின்னூட்டமொன்றை இடுக