கருத்தியல் – பரிசோதனை – புனைவு / எம்.ஜி.சுரேஷ் நேர்காணல் / சிபிச்செல்வன்

மலைகள் 

Oct. 18 2017அக்லைகள் டோபர்இதழ் 132எம்.ஜி. சுரேஷ் நினைவு சிறப்பிதழ்கடந்த இதழ்கள்முதன்மை 3முதன்மை 5 no comments

உங்களுக்கு இலக்கியம் எப்படி பரிச்சயம் ஆனது என்பதைப் பற்றி சொல்லுங்கள்.

முதலில் எனக்கு எழுத்துக்கள் பரிச்சயம் ஆனது. ஸ்கூலில் போய்ப் படித்த பிறகு போர்டுகளைப் படித்தல் சரியாகப் படித்துவிட்டால் ஆனந்தமாக இருக்கும். அப்போது எங்கள் வீட்டில் குமுதம், ஆனந்த விகடன் வாங்கினார்கள். அதையெல்லாம் படிக்க ஆரம்பித்தேன். பல வார்த்தைகள் புரியாது. இருந்தாலும் தொடர்ந்து படித்துக்கொண்டேயிருந்தேன். பிறகு புரிய ஆரம்பித்தது. பலருடைய கதைகள் படித்த பிறகு ஜெயகாந்தன் கதைகள் படிக்க ஆரம்பித்தேன். வெகுஜன பத்திரிக்கைகளில் முதலில் என்னைக் கவர்ந்தது ஜெயகாந்தன் கதைகள். இதற்குப் பிறகுதான் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற வேறுவகையான எழுத்துக்கள் அறிமுகமாயின. சோவியத் இலக்கியமும் அப்போது வெகுவாகக் கவர்ந்தது.

இவையெல்லாம் எந்த வயதில் நடந்தவை?

நான் ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த்தபோது. ஸ்கூல் முடித்த பிறகு வேலையில்லாமல் இருந்தேன். அப்பா இறந்துவிட்டார். அப்போது நான் ஏதாவது ஒரு வேலைக்குப் போய்த்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்; இரண்டு தம்பிகளைப் படிக்க வைக்க வேண்டும். இந்தச் சூழலில்தான் நூலகத்திற்குப் போய்ப் படிக்கும் பழக்கம் வந்தது. சோவியத் இலக்கியங்களை முதலில் தமிழில் படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு ஆங்கிலத்திலும் படிக்க ஆரம்பித்தேன். எதைக் கண்டாலும் படுப்பதுதான் என் இலக்கிய ஆரம்பத்திற்கு அடிப்படை. எல்லாவற்றையும் படித்தபோதுதான் எது நல்லது, எது கெட்டது என்று இனங்காண முடிந்தது. அப்படித்தான் புதுமைப்பித்தனைச் சென்றடைந்தேன்.

இது எப்போது நடந்தது?

பின்னாட்களில்தான் புதுமைப்பித்தனைப் படித்தேன். அதற்கு முன்னால் ஜெயகாந்தனைத்தான் படித்தேன். ஜெயகாந்தனிடம் நேரிடையாகப் பேசிப் பழகிய பிறகு அவர் பல நூல்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். இதனால் எனக்கு கம்யூனிஸத்தின் தாக்கம் வந்தது. ஒரு கம்யூனிஸ சிந்தனையாளனாக இருந்தேன். செம்மலர் முத்தையா, தி.க.சி. இவர்களையெல்லாம் பார்த்தேன். ஷோல்ஷெனிட்ஸின் போன்ற ஆன்டி-கம்யூனிஸ எழுத்தாளர்களையும் படித்தேன். எப்போதும் ஒரு தேடலோடுதான் நான் இருந்திருக்கிறேன். கம்யூனிஸ்டுகளோடு பழகினாலும், ஆதரவாக இருந்தாலும், எனக்குள் ஒரு சந்தேகம். அது நான் கம்யூனிஸ்டுதானா என்பதுதான். அது ஒரு ஐடியலிஸம் என்று எனக்குத் தோன்றியதனால்தான். இது போஸ்டு மாடர்னிஸ கான்செப்ட். ஆனால் என்னிடம் இது முதலிலேயே இருந்தது. அதாவது போஸ்ட் மாடர்னிஸம் படிப்பதற்கு முன்பே. கோட்பாடுகள் எல்லாவற்றின் மீதும் ஒரு சந்தேகம் உண்டு எனக்கு. இது ‘குட்டி பூர்ஷ்வா’ மனோபாவமாக இருக்கலாம். சார்த்தர் சொல்கிறார் எந்த ஒரு தத்துவமும் நிறுவனமயமாகும்போது அது corrupt ஆகிவிடுகிறது என்கிறார்.

எந்த ஒரு சிறந்த கொள்கையும் நான்கைந்து பேர் சேர்ந்து நிறுவனமாகும்போது, அது நீர்த்துப்போய் விடுகிறது. ஒரு தனிப்பட்ட முறையில் மாரிக்சியம் சரியாக உள்ளது. அதுவே ஒரு நிறுவனமாகும்போது ஆன்டி-மார்க்சியமாகி விடுகிறது. அதுவே அதற்கு எதிராக மாறிவிடுகிறது. இதைதான் நாம் காலம் முழுவதும் பார்த்து வருகிறோம். இன்னமும் மார்க்ஸீயத்தின்பால் எனக்கு நம்பிக்கை இருக்கவே செய்கிறது. மார்க்ஸியம் தன்னை hypermarxism என்றோ meta-marxism என்றோ வேறு ஒரு பெயரில் வேறு ஒரு காலத்தில் தன்னை மீட்டுருவக்கம் செய்யும் என்று நம்புகிறேன். எனது கோட்பாடு இலக்கியம் சார்ந்து அரசியல்; அரசியல் சார்ந்து இலக்கியம் என்கிற மாதிரி இருக்கிறது.

நீங்கள் எப்போது எழுத ஆரம்பிதீர்கள்? பொதுவாகக் கவிதை எழுதுவதில்தான் பலர் தங்கள் எழுத்துலக வாழ்வைத் தொடங்குகிறார்கள். நீங்கள் எப்படி?

முதலில் நானும் புதுக்கவிதைதான் எழுத ஆரம்பித்தேன். 1970களில் கணையாழி, தீபம், கசடதபற பத்திரிகைகள் வந்துகொண்டிருந்த நேரம். ‘எழுத்து இதழ்களை கன்னிமாரா நூலகத்தில் அப்போது பார்க்கலாம். மணிக்கொடி, எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம் போன்ற இதழ்களையும் அங்கே வாசிக்க முடிந்தது. அப்போது எனக்குப் புதுக்கவிதை மீது கொஞ்சம் பிரியமாக இருந்தது. எழுதுவதும் சுலபமாக இருந்தது. பிரச்சினைகளும் இருந்தன. நான் எழுதிய கவிதைகள் தீபம், கணையாழி, போன்ற பத்திரிகைகளிலும் அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து சிறுபத்திரிக்கைகளிலும் வெளிவந்திருக்கின்றன. அப்போது இளவேனில் ’கார்க்கி’ என்று ஒரு பத்திரிக்கை நடத்தினார். அவர் ஒரு சிறுகதை கொடுங்கள் என்று கேட்டார். அது வரை எனக்குச் சிறுகதை எழுதுகிற யோசனை இல்லை. கவிதை எழுதுவேன். வாசகனாக இருந்தேன் . அவர் கேட்டதற்காக அவநம்பிக்கையுடன் ஒரு சிறுகதை எழுதிக் கொடுத்தேன்.

உங்கள் கவிதைகளைத் தொகுப்பாகப் போட்டிருக்கிறீகளா?

என்னுடைய கவிதைகளை நானே disown செய்துவிட்டேன். அவை எனக்குத் திருத்திகரமாக இல்லை. மற்றவர்கள் நன்றகாக இருப்பதாகச் சொன்னார்கள். என்னுடைய ஸ்டேண்டர்டின்படி அவை திருப்திகரமாக இல்லை. என்னுடைய தனித்தன்மைகளோடு இல்லை. அதாவது என்னுடைய பெயர் இல்லையென்றால் கூட என்னுடைய கவிதைகள் என்று அடையாளம் கண்டுபிடிக்கிற அளவிற்குத் தனித்தன்மைகளோடு இவை இல்லை. பல சாயல்கள் அதில் இருந்தன. ஞானகூத்தன், பிரமிள் போன்றவர்களின் சாயல்கள் இருந்தன.

அசோகமித்திரன்

அசோகமித்திரன்

முன்னோடிகளின் சாயல்கள் இருப்பது ஒன்றும் தவறான விஷயமில்லையே?

அது இப்போது தான் தெரிகிறது. ஒன்றிலிருந்து ஒன்று பெறப்படுகிறது. எனவே அவற்றை நான் disown செய்திருக்க வேண்டியதில்லையோ என்றும் தோன்றுகிறது. எழுதப் பழகிய கவிதைகளாக இவற்ரை நினைத்துக்கொண்டேன். இப்போது அந்த கவிதைகள் எல்லாம் தொலைந்து போய்விட்டன.

அப்போது எழுதிய பத்திரிக்கைகளில் தேடத் தொடங்கினால் கிடைத்துவிடுமே?

அவற்றைத் தான் என் நாவல்களிலும் சிறுகதைகளிலும் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். அது நன்றாக இருக்கிறது. தொகுப்பாகப் போடுங்கள் என்று சொல்கிறார்கள். நாம் அப்படித்தான் இருந்தோம் என்று சொல்லிக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? இப்போது எவ்வளவு தூரம் வளர்ந்து வந்திருக்கிறோம் என்பது தான் முக்கியமில்லையா?

மோசமான எழுத்தைக் கூட போட வேண்டும் என்பது நவீன இலக்கியக் கோட்பாடு. எப்படி எல்லாம் வந்தோம் என்பதற்கான பதிவு அது. ஒரு எம்பீரியோவாக (embryo) இருந்தோம். பிறகு தான் இரண்டு செல் மூன்று செல் என்று வருகிறது. எம்பீரியோவாக இருந்ததில் எனக்கு அவமானம் இல்லை. புதுப்புனல் ரவிகூட அந்தக் கவிதைகளைப் போடுவதற்கு எனக்கு நெருக்குதல் கொடுத்தார். நான் தான் வேண்டாம்; வேறு மாதிரியான பயணங்கள் செய்ய வேண்டியிருக்கிறது என்று தவிர்த்துவிட்டேன். அந்தக் காலகட்டத்தில் பத்திரிக்கைகளில் என்ன மாதிரியான கவிதைகள் வந்ததோ அதைப் போன்றே என் கவிதைகளும் இருந்தன. ஞானகூத்தனுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. ஒரு ஹ்யூமர், சட்டையரிக்கல் தன்மை உண்டு. அப்படி ஒவ்வொரு கவிஞனுக்கும் தனித்த அடையாளங்கள் உண்டு. பிரமிள், தேவதேவன் என்று அனைவருக்கும் உண்டு. அந்த மாதிரி எனக்கு இல்லை. இப்போது மறுபடியும் கவிதை எழுதும் ஆசை இருக்கிறது. அதைத் தொகுப்பாகவும் வெளியிட ஆசை உண்டு. இப்போது வேறு மாதிரி எழுத முடியும்.

’கார்க்கி’யில் சிறுகதை எழுதிய பிறகு தொடர்ந்து சிறுகதைகள் எழுத அரம்பித்தேன். பிறகு நாவல்களும் எழுத ஆரம்பித்தேன். தாஜ்மகாலுக்குள் சில எலும்புக்கூடுகள், கான்கிரீட் வனம் போன்ற நாவல்களை எழுதத் தொடங்கினேன். என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பும் நாவல்களும் அப்போது பேசப்பட்டன. கணையாழியில் அசோகமித்திரன் கவனப்படுத்தியிருந்தார். க.நா.சு. முன்னுரை எழுதியிருந்தார். பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

இப்போது தமிழ்ச் சூழலில் கவிதைகளுக்கும் கவிதை எழுதுபவர்களுக்கும் மரியதையே கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் திரும்பவும் ஏன் கவிதை எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நான் போஸ்ட்-மாடர்னிஸக் கூறுகள் உள்ள கவிதைகள் எழுத விரும்புகிறேன். நடுவில் கொஞ்சம் பிலாசபி படித்தேன். எப்போதும் நான் ஒரு தீவரமான வாசகன்…………. கவிதைகள் எழுத ஆரம்பித்த பிறகு நாவல் எழுதுவதை விட்டுவிட மாட்டேன். நாடகம் எழுதவும் ஆசை உண்டு. இந்திரா பார்த்தசாரதி என்னிடம் ஒருமுறை கேட்டார். நீங்கள் சினிமாத் துறையில் ஆர்வமாக வேலை செய்கிறீர்கள். எப்படி நாடகம் எழுதாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டார். நாடகத்தின் நீட்சி தான் சினிமா என்பதும் உண்மை. எழுத்தின் பல்வேறு சத்தியங்களையும் முயற்சித்துப் பார்க்க வேண்டும்.


முதலில் வந்த உங்கள் சிறுகதைத் தொகுப்புகளைப் பார்த்தால் உங்களின் evolution நன்றாகத் தெரிகிறது. கம்யூனிசம், தத்துவங்கள், வேலையற்ற இளைஞனின் பிரச்சினைகள் எல்லாம் இருக்கின்றன. இவற்றைப் பற்றி…?

தகப்பனாரால் கைவிடப்பட்ட குடும்பம் என்னுடையது. எங்கள் அம்மாவோடு நானும் சகோதரர்களும் மதுரையிலிருந்து சென்னைக்குத் தனியாக வந்துவிட்டோம். மாமா வீட்டில் இருந்தோம். நான் மேற்படிப்பு படிக்க முடியவில்லை. குடும்பத்திலும் வறுமை. இந்தச் சூழ்நிலையில் இருக்கக்கூடிய இளைஞர்கள் இந்தியாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ப்ரன்ஸிஸ்கீஸோப்ரனியா என்று ஒரு மனநோய் வருகிறது. விரக்தியினால் நிகழும் அவநம்பிக்கை, நம்பிக்கை வறட்சி, கோபம், எவனையாவது உதைக்கலாமா என்பது போன்ற வன்முறை எண்ணங்கள் எல்லாம் இதனால் வருகின்றன. இந்த மனநிலையில் நான் இருந்தேன். இதை வைத்து ஒரு குறுநாவல் எழுதினேன். ’விரலிடுக்கில் தப்பிய புகை’. அதை நல்ல நாவல் என்று பலர் சொன்னார்கள். தாஸ்தாவெஸ்கி மாதிரி எழுதியிருப்பதாக க.நா.சு. சொன்னார். உளவியலைத் தாஸ்தாவெஸ்கிதான் நன்றாக எழுதுபவர். தமிழில் யாருக்கும் சரியாக எழுதவரவில்லை. உங்களுக்குச் சரியாக வருகிறது என்றார். இந்தக் குறுநாவல் தி.ஜனாகிராமனுக்கும் பிடித்தது. அந்த நேரத்தில் இதை work of art என்று சொன்னார்கள்.

அப்போது துணிக்கடை நகைகடை என்று நிறைய வேலைகள் செய்தேன். சர்வீஸ் கமிஷன் பாஸ் செய்து ஹெல்த் டிபார்ட்மெண்டில் பணியில் சேர்ந்தேன். மார்க்சியம் அப்போது நடைமுறை அரசியலில் காலாவதியாகிவிட்டது. சோவியத்திலும் அது மறுபரிசீலனைக்கு உள்ளாகிவிட்டது. ஒரு விஷயம் பலவிதமாக மாறுபட்டுக் கொண்டிருக்கிறது. பிரபஞமே முரண்பாடுகளால் ஆனது. இருள் × வெளிச்சம், குளிர்ச்சி × வெப்பம்….

ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன்

பைனரி (0,1) லாஜிக்கைச் சொல்கிறீர்கள். இல்லையா?

ஆமாம். பைனரி இல்லையென்றால் கம்பூட்டர் இயங்காது. 0,1 இதுதான பைனரி. 0,1 இருந்தால் தான் கணினி இயங்கும். 0 தனியாகவோ 1 தனியாகவோ இயங்காது. இரட்டைத் தன்மைகளும் முரண்பாடுகளும் இருந்துகொண்டேயிருக்கும். பூமியே இந்த அடிப்படையில்தானே சுழல்கிறது.

எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தில் ஈடுபாடு வந்து சார்த்தர் எல்லாம் படித்தேன். பிறகு டெரிடா, லக்கான், ஃபூக்கோ இவையெல்லாம் போஸ்ட் மாடர்னிசத்தில் ஈடுபாடு வந்தபிறகு படித்தேன். வேறு ஒரு தெளிவு கிடைத்தது. மாடர்னிசத்தையே கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று நினைத்தேன். நிறைய நீதி நூல்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். திருடாதே, பொய்சொல்லாதே என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நாம் அதைச் செய்துகொண்டா இருக்கிறோம். நீதி நூல்கள் எல்லாம் வேஸ்ட். அதன் பிறகு மனதை நெகிழ வைக்கும் நூல்கள் வந்தன. நீ திருடினால் இவ்வளவு கஷ்டப்படுவாய், நீ குடித்துவிட்டு அடித்தால் அந்தப் பெண் இவ்வளவு துன்பப்படுகிறாள் என நெகிழ வைக்கிற எழுத்துக்கள் வந்தன. உணர்ச்சிகளைத் தூண்டும் எழுத்துக்கள் ரொமாண்டிசம். அதிலேயும் மனிதனுக்குத் திருப்தி வரவில்லை. நெகிழ்ந்தாலும் திரும்பவும் பழையபடித் திரும்பிவிடுகிறான். அடுத்ததாக கேள்விக்குள்ளாவது வருகிறது. ஒருவர் உங்களைக் கிண்டல் செய்தால் அவமானம் வருகிறது. உடனே பரிசீலிக்கிறோம். போஸ்ட் மாடர்னிசம் எதையும் கேள்விக்குள்ளாக்குகிறது. கிண்டல் செய்கிறது. மீண்டும் வேறு மாதிரி வாசித்துப் பார்க்கச் சொல்கிறது. இது ஒரு method of analysis. இதனால் எனக்கு போஸ்ட் மாடர்னிசம் பிடித்திருக்கிறது.

ரியலிஸம், ரொமண்டிசிசம், மாடர்னிசம், ஸ்ட்ரக்சுரலிசம், போஸ்ட் மாடர்னிசம் என்று அந்த அந்தக் காலகட்டத்தில் என்ன ‘இஸம்’ இருக்கிறதோ அவற்றிற்கேற்ப நம்மையும் நம் எழுத்தையும் மாற்றிக்கொள்வது…?

நம்மை நாம் மாற்றிக் கொள்கிறோம் என்பதை விட இதை evalution என்று சொல்லலாம். ஒரு கருத்திலிருந்து இன்னொரு கருத்துக்கு மாறுவது பரிணாம வளர்ச்சி. காலத்தில் நாம் தேங்கிவிடக்கூடாது என்பதற்காக நிகழ்த்தும் பயணம். உலகமே பயணம் சம்பந்தப்பட்டது. ஹெராக்ளிட்டஸ் சொன்னதுபோல, “ நீ வலது காலை வைத்து இறங்கிய ஆறு வேறு; இடது காலை வைத்து இறங்கும் ஆறு வேறு”. ஏனெனில் ஆறு ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஆறு தேங்குவதில்லை. ’எரியும் தீ ஒரே தீயா அல்லது பல தீக்களா?’ என்று புத்தரும் இதைதான் சொன்னார். இது dialectics இயங்கியல். அப்போது நான் மட்டும் எப்படி தேங்கிப் போக முடியும். ஒரே கருத்தை வைத்துக் கொண்டு எப்படி மாறாமல் இருக்க முடியும். போச்ட் மாடர்னிசம் போய் வேறு ஒரு ‘இஸம்’ வந்தால் அதையும் எடுத்துக்கொள்வேன். போஸ்ட் போஸ்ட் மாடர்னிசம் என்று வரலாம். அதாவது பின் நவீனத்துவம் போய் பின்னைய பின்நவீனத்துவம் வரலாம். இதை ஒரு ஹேஷ்யமாகச் சொல்கிறேன்.

தமிழ்ச்சூலில் புதிதாக ஒரு விஷயம் வந்தால் அதை எதிர்க்கிறார்கள். ஆனால் அதைத் தெரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும். புதுக்கவிதையைக்கூட அப்படித்தான் எதிர்த்தார்கள். ஆனால் இன்று புதுக்கவிதை தன்னை ஸ்தாபித்துக்கொண்டுவிட்டது.

உங்கள் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு அலுவலகம் சார்ந்த பிரச்சினைகள், உறவுகள் சார்ந்ததாக இருக்கிறது. இதைப் பற்றி…?

எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளுக்குள்ளும் சுயசரிதைக் கூறுகள் இருக்கும். அது தவிர்க்க முடியாதது. அது எனக்கும் பொருந்தும். ஒரு சூழலில் ஒரு மாதிரியும் வேறு சூழலில் வேறு மாதிரியான பிரச்சினைகளையும் எழுதினேன். என் முதல் சிறுகதை வெளிவந்தபோது ’கதையிலிருந்து கதையை நீக்குதல்’ என்ற உத்தி அப்போது இருந்தது. வண்ண நிலவன், வண்ணதாசன் போன்றவர்கள் அந்த நேரத்தில் அப்படி எழுதினார்கள். நானும் எழுதினேன். பொதுவாக ஒரு கதைக்கு ஆரம்பம், நடு, முடிவு என்று இருக்கும். அப்படியில்லாமல் நான் எழுதினேன். அதாவது ஒரு கதை திடீரென்று தொடங்கும். திடீரென்று முடிந்துவிடும். இதை அந்த காலகட்டத்தில் அவர்கள் எழுதினார்கள். முன்பெல்லாம் தீவிர எழுத்து தனி வெகுஜன எழுத்து தனி என்று இருந்தது. இந்தச் சிறுபத்திரிக்கையின் கோட்டை மீறிப் பலர் வெகுஜனப் பத்திரிகைகளுக்குப் போனார்கள். ஜெயகாந்தன், லா.ச.ரா., மாலன், பாலகுமாரன் ஆகியோர் இந்தக் கோட்டைத் தாண்டிப் போய்விட்டார்கள். எனக்குள் ஒரு ஊசலாட்டம் இருந்தது. என்னுடைய ஆரம்பகாலக் கதைகளில் இந்தத் தன்மைகள் இருந்தன. அதாவது சிறுபத்திரிகைக்கு ஏற்ற கதையாகவும் இருக்கும், வெகுஜனப் பத்திரிகைக்கு ஏற்ற கதையாகவும் இருக்கும். சிறுபத்திரிகையின் உயரமும் வெகுஜனப் பத்திரிகையின் உயரமும் மீட் பண்ணுகிற இடம் அது. கல்கி போன்ற இதழ்களில் வந்த கதைகளும் என் தொகுப்பில் உள்ளன.

நோபல் பரிசு பெற்ற சால்பெல்லோ ஒரு மோசமான பத்திரிகையான ப்ளே பாய் இதழில் எழுதியிருக்கிறார். அது மாதிரி நாமும் எழுதலாம். மார்க்குவெஸ், ஜான் அப்டைக் போன்றவர்கள் பத்திரிகையாளர்களாகவும் இருந்தவர்கள்.

அந்தக் கதைகளைத் தானே சுஜாதா பாராட்டி இருக்கிறார். உங்களுடைய இந்தக் கதைகளில் சுஜாதாவின் தாக்கம் கூட இருக்கிறது. உதாரணமாக, ஸாப்ட்வேர் இல்லாத கம்யூட்டர் நீங்கள் சொல்வது போல வெகுஜன பத்திரிக்கைகளுக்கும் சிறுபத்திரிகைகளுக்கும் இடையில் இயங்கிக் கொண்டிருந்தவர் சுஜாதா. ஒரு வேளை உங்களுடைய இந்த ஆசைகூட சுஜாதாவின் தொடர்ச்சியாகக்கூட இருக்கலாம். சுஜாதாவைப் போல ஆகணும் என்று நினைத்தீர்களா?

சுஜாதா மாதிரி ஆக நினைக்கவில்லை. இன்றுவரை நான் என்ன ஆகணும் என்று நினைக்கவில்லை. அதுதான் உண்மை. ஆழமான எழுத்துக்களை எழுத வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. சல்மான் ருஷ்டியைப்போல எழுத வேண்டும். Midnight children என்ற போஸ்ட் மாடர்னிச நாவலை எழுதியிருக்கிறார். அது ஒரு பெஸ்ட் செல்லர். உலகப் புகழ்பெற்றிருக்கிறார். இடாலோ கால்வினோ எழுதியது போன்ற கதைகளை எழுத வேண்டும். என்னுடைய கதை சோப்பு, ஷாம்பு போல நுகர்வுப் பொருளாக இருக்கக்கூடாது. சுஜாதாவை எனக்குப் பிடிக்கும் தமிழில் புதிய prose கொண்டு வந்தார். அந்தப் பாதிப்பு என்னிடமும் உண்டு. அதில் தப்பில்லை என்று நினைக்கிறேன்.

சுஜாதாவிடம் புதுமைப்பித்தனின் பாதிப்பு இருக்கிறதே?

ஆமாம். அது கை மாறி கை மாறி வருவது. சுஜாதா விஞ்ஞானக் கதைகளின் பாதிப்பு என்னிடமும் உண்டு. அந்த வாசனை என்னிடமும் உண்டு. பெருங்காய டப்பா மாதிரி. ரேபிராட்பரி, ஆர்தர் சி கிளார்க், ஜார்ஜ் ஆர்வெல் போன்றவர்களின் சயன்ஸ் ஃபிக்‌ஷன் படித்திருக்கிறேன். தமிழில் அந்த அளவிற்கு சுஜாதா ஒருவர்தான் எழுதுகிறார். அடுத்தது இப்போது நான் எழுதுகிற நாவல் சைன்ஸ் ஃபிக்ஸன், ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸை வைத்து நாவல் எழுதுகிறேன். நான் பின்னால் சயன்ஸ் ஃபிக்‌ஷன் எழுதுவதற்கான முன்னோட்டமாக ’சாப்ட்வேர் இல்லாத கம்யூட்டர்’ சிறுகதையை எழுதிப் பார்த்தேன்.

அந்தக் கதைக்குப் பிறகு அது போன்ற சயின்ஸ் ஃபிக்‌ஷன்களை நீங்கள் எழுதவில்லையே, என்ன காரணம்?

கோப்பர் நிக்கஸ்ஸின் கதைத் தொகுப்பு என்று ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். சயன்ஸ் ஃபிக்‌ஷனை வெறும் பொழுதுபோக்காக எழுதவிரும்பவில்லை. சுஜாதா எழுதிய கதைகளில் பொழுது போக்குத் தன்மை தூக்கலாக இருக்கும். நான் பிலாசபிக்கலாக சயன்ஸ் ஃபிக்‌ஷனை எழுத நினைத்துள்ளேன்.

பல இலக்கியங்கள் படித்தபோது அதில் சயன்ஸ் ஃபிக்‌ஷனும் அடக்கம். பலருடைய சயன்ஸ் கதைகள் படித்தபோதும் எழுதத் தோன்றவில்லை. காரணம் தமிழுக்கு அது அன்னியமாகத் தோன்றியது. சுஜாதாவின் கதைகள் வந்தபோது நம்பிக்கை வந்தது. தமிழிலும் எழுத முடியும் என்று. நான் எழுதிய இரண்டு சிறுகதைகளைப் பலரும் பாராட்டினார்கள்.

நான் இதற்கு முன் எழுதிய எல்லாவற்றிலுமே வணிகத் தன்மையிலான விஷயங்களை இலக்கியமாக மாற்றியிருக்கிறேன். துப்பறியும் வணிகக் கதையை ‘சிலந்தி’ நாவலாக எழுதியுள்ளேன். அதேபோல விஞ்ஞான நாவலையும் எழுத உள்ளேன். அடுத்த நாவல் அப்படித் தான் வரும். இதில் மூன்று விஷயங்களை இணைக்கிறேன். மனித குலத்தை இணைக்கத்தக்கதாக இருப்பவை கலை இலக்கியம், விஞ்ஞானம். அதுதான் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுபோவது. ஆதியில் ஒன்றாக இருந்த இந்த மூன்றும் பிரிந்திருக்கின்றன. அவற்றை ஒரு புள்ளியில் சந்திக வைப்பதே இந்த நாவல்.

கவிதையிலிருந்து சிறுகதைக்கு வந்தீர்கள். சிறுகதையிலிருந்து நாவலுக்கு வந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்?

சிறுகதை எழுதிக்கொண்டிருந்தபோது நாவல் எழுதும் ஆசை வந்தது. முதலில் குறுநாவல் எழுதிப் பார்த்தேன். விரலிடுக்கில் தப்பிய புகை தான் அந்தக் குறுநாவல். அதன் பிறகுதான் என் முதல் நாவல் வந்தது.

வடிவங்களில் ஏற்பட்ட மாற்றம் பற்றி கேட்கிறேன். அந்த வடிவத்திலிருந்து (சிறுகதை) வேறு வடிவத்திற்கு (நாவல்) மாறுவதில் என்ன செளகரியங்கள் அல்லது அசெளகரியங்கள் என்று கேட்கிறேன்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு சில வருடங்கள் நான் எழுதாமல் இருந்தேன். உலக இலக்கியங்கள் படித்தேன். ஆங்கில மொழிபெயர்ப்பில். அவர்கள் சிறுகதையையும் நாவலையும் வேறு தளத்திற்கு நகர்த்திச் சென்று இருக்கிறார்கள். இவையெல்லாம் வேறு மாதிரி இருக்கிறது. அடுத்து நாம் எழுதும் போது இது மாதிரி எழுத வேண்டும் எனத் தீர்மானித்தேன். உம்பர்ட்டோ ஈக்கோ, இடாலா கால்வினோ பொன்றவர்கள் மாதிரி. பெயர்களைப்போல ‘கதை மீறும் கதை’ எழுத விரும்பினேன்.

ஒரு பிரதியில் இன்னொரு ஊடிழைப் பிரதி (inter text) என்பது போல எழுதுகிறார்கள். இது மாதிரி நானும் எழுத நினைத்தேன். அந்த மாதிரி தான் வடிவப் பரிசோதனை செய்யும் ஆசை வந்தது. அதே சமயத்தில் இது சர்க்கஸ் மாதிரியோ, கழைக்கூத்தாடியின் வித்தை மாதிரியோ ஆகிவிடக்கூடாது. இன்றைய நவீன மனிதன் போஸ்ட் மாடர்னிச மனிதன் என்பதை அட்லாண்டிஸ் மனிதனில் சொல்கிறேன்.

உங்கள் முதல் இரண்டு நாவல்களில் இஸங்களின் தாக்கம் பெரிதாக இருக்கவில்லையே?

அப்போது மார்க்சியத்தில் இருந்தேன். அவை எழுத்தில் வரவில்லை. நீங்கள் ஒரு விஷயத்தை நேரிடையாகச் சொல்லிவிட்டால் அது கோஷம், பிரச்சாரமாகிவிடும். சொல்லாமல் உணர்த்த வேண்டும். அந்த நேரத்தில் ஒரு கருத்து இருந்தது. அரசியல்வாதிகள் எல்லாருமே அயோக்கியர்கள். கம்யூனிஸ்டுகள் மட்டும் கொஞ்சம் நேர்மையானவர்கள் என்று. பதினைந்து வருடங்களுக்கு முன்பு கம்யூனிஸ்டு யூனியன்கூட கொஞ்சம் கரப்ட் ஆகிவிட்டது. அவர்களும் மற்ற அரசியல்வாதிகளைப்போல ஆகிவிட்டார்கள் என்று எழுதியதற்குத் தோழர்கள் கோபப்பட்டார்கள். எதிர்த்தார்கள்.

எம் ஜி சுரேஷ்

எம் ஜி சுரேஷ்

முதல் இரண்டு நாவல்கல் பெறாத கவனத்தை அட்லாண்டிஸ் மனிதன் பெற்றது. அது க்யூபிஸ நாவல் என்று சொன்னதாலா?

’க்யூபிஸம்’ பிகாசோவின் ஓவியப் பாணி. அதற்கு முன்னிருந்த ஓவியங்கள் எல்லாம் யதார்த்தத்தை நகலெடுக்கிற பாணி. க்யூபிஸமோ சிந்தனையிலிருந்து ஓவியத்தை எழுதும் பாணி. ஒரு பொருளை ஒரு கோணத்தில் பார்ப்பதுதான் அதுவரையிலான முறை. ஒரு பொருளை ஏக காலத்தில் பல கோணங்களில் பார்க்கும் முறை வந்தது. மலை மேலிருந்து பார்ப்பவர்களுக்கு எல்லா பாதைகளும் தெரியும் என்று நம்முடைய ஒஷோ சொல்கிறார். சமண ஓவியங்கள் இத்தன்மையுடையன. ஏக காலத்தில் பார்ப்பதை பிக்‌ஷனில் கொண்டுவர வேண்டும். ஐரோப்பாவில் ஒரு கதைக்கு இரண்டு மூன்று முடிவுகளை வைத்து எழுதி இருக்கிறார்கள். சார்த்தரிடமிருந்து ஒரு க்யூபிஸ்ட் நாவல் வந்திருக்கிறது. ரன் லோலா ரன் என்ற ஜெர்மன் படம் மூன்று முடிவுகளைக் கொண்டது. இந்தப் படம்தான் தமிழில் 12-பி என்ற படமாக வந்தது. அது க்யூபிஸக் கதை. தத்துவமாக என்ன சொல்கிறேன் என்றால் நவீன மனிதன் பல நான்களால் ஆனவன். கிராமத்திற்குப் போனீர்கள் என்றால் அங்குள்ள மனிதன் ஓடிவந்து உங்களைக் கட்டிப்பிடித்துக்கொள்வான். அல்லது உதைப்பான். அது ஒற்றை நான். ஆனால் நவீன மனிதன் பல நான்களாய் உடைத்துவிட்டான். பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஓர் அதிகாரத்தைக் கைப்பற்றுதல்… ஓர் எதிரியை நடித்து ஏமாற்றி ஜெயிக்க வேண்டியிருத்தல்…. இதுபோன்ற பல்வேறு சமயங்களில் பல நான்கள் தேவையாயிருக்கின்றன. மனிதனின் உடைந்த நான்களைப் பற்றி எழுதுவதற்கு நேரான கதை வடிவம் தேவைப்படாது. நான் – லீனியராக எழுதுவது சரியாக இருக்கும். ஒழுங்கற்ற ஒழுங்காக எழுதுவது. இது புதுப்பாணி என்பதால் நாவல் வெற்றி பெற்றது.

‘க்யூபிஸம்’ என்ற அடைமொழியில்லாமலே அந்த நாவல் தன்னளவிலேயே ஒரு சிறப்பான நாவலாகத்தானே இருக்கிறது.

வாசகர்களின் கவனத்தைக் கவர்வதற்காக அப்படிப் பெயர் கொடுத்தேன். அப்படி வைக்காமல் இருந்தாலும் அது சிறந்த நாவல்தான். அந்தக் காலத்தில் பிளாக் & ஒயிட் படங்கள் வந்துகொண்டு இருந்தபோது கலர்ப் படத்துக்கு ஈஸ்ட்மென் கலர் படம் என்று போடுவார்கள். இப்போது யாரும் போடுவதில்லை. அதுமாதிரி காரியத்தைத் தான் செய்தேன். மற்றபடி க்ளைம் வைப்பதற்காக அல்ல.

இந்த நாவல் நன்றாக இருப்பதால் வரவேற்பு கிடைத்ததா? அல்லது ‘க்யூபிஸ’ கவன ஈர்ப்பினால் வந்ததா?

படைப்பு நன்றாக இருப்பதால் வந்ததுதான். சொல்லப்போனால் ‘க்யூபிஸம்’ என்ற அடைமொழியில் எரிச்சலும் எதிர்ப்பும்தான் வந்தன. அசோகமித்ரன், இ.பா. போன்றவர்கள். இதுபோன்ற நல்ல நாவலுக்கு ‘க்யூபிஸ’ கவசம் தேவையில்லை என்றார்கள். பலர் அப்படியென்ன ‘க்யூபிஸத்தில்’ இவன் செய்திருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே படித்தார்கள். இந்த அடையாள மொழி கொடுக்காமல் இருந்திருந்தாலும் இவர்கள் படித்திருப்பார்கள். ஆனால் கொஞ்சம் தாமதமாகப் படித்திருப்பார்கள்.

பல்வேறு இஸங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதினாலும் உங்கள் மொழியில் சரளம் இருக்கிறது. ‘இஸம்’ பேசுகிற, எழுதுகிற பல தமிழ் எழுத்தாளர்களின் மொழி கடுமையாக, சிக்கலாக இருக்கிறது. ஆனால் உங்கள் மொழி எளிமையாகவும் சரளமாகவும் இருக்கிறது எப்படி?

இறுக்கமான பூடகமான மொழி ஒரு காலகட்டத்தில் இருந்தது. போஸ்ட் மாடர்னிசம் அதை நிராகரித்தது. நிறைய பேர் உலிஸிஸ் போல புரியாமல் எழுத வேண்டும் என்றே எழுத வருகிறார்கள். மேற்கே அவன் மொழியைப் பூடகமாக எழுதினால் நானும் எழுதுவேன் என்று அடம் பிடிக்கிறார்கள். அதுபோலவே லத்தின் அமெரிக்கச் சிறுகதை – லத்தின் அமெரிக்க நாடுகள் எப்போதுமே சர்வாதிகார நாடுகளாகவே இருந்து வந்துள்ளன. எப்போதுமே அடக்குமுறைகள் மிகுந்த நாடுகள் அவை. அவர்கள் பூடகமாகத் தான் எதையும் சொல்ல முடியும். யூலியோ கொர்த்தஸாரின் சிறுகதையில் ஒரு வீடு. அந்த வீட்டில் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். என்ன குரல் என்று தெரியாது. அது நேரிடையாக டாமினேட் செய்துகொண்டே இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் புழங்கும் பகுதியைக் குறைத்துக் கொண்டே போவார்கள். ஆனாலும் குரல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். வேறு வழி இல்லாமல் சகித்துக்கொள்வார்கள். அது அமெரிக்காவின் குரல். இதைப் பூடகமாகச் சொல்வார் கொர்த்தஸார். இந்தியாவில் எதையும் நேரிடையாகவே சொல்லலாம். வாஜ்பாயி பற்றி நீங்கள் நேரடியாக எழுதலாம். பூடகம் தேவையில்லை.

ஆனால் கலை வடிவம் என்ற வகையில் பூடகத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம். போஸ்ட் மடர்னிசம் பல விதமான வகைகளில் எழுதலாம் என்கிறது. புரிவது போல எழுதலாம். குழப்பமாக எழுதலாம். இரண்டும் கெட்டானாக எழுதலாம். Prose போல fiction எழுதலாம். Fiction போல prose எழுதலாம். இப்படி உங்களுக்குப் பலவிதமான வாய்ப்புகளைக் கொடுக்கின்றன. நவீன வாழ்க்கையின் பிரச்சினைகளில் ஒன்று பெருக்கம். மக்கள் பெருக்கம், நிறைய பிரதிகளின் பெருக்கம் இப்படி… எழுத்திலும் பலவிதமான பிரதிகளைப் பெருக்கலாம். தப்பேயில்லை. ஆனால் இருத்தலுக்கான தர்க்கம் வேண்டும். ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு தர்க்கம், ஒரு நியாயம் இருக்கிறது. நீங்கள் சொல்கிற புரியாத, விளங்காத எழுத்துகளில் தர்க்க நியாயம் இல்லையென்று நினைக்கிறேன். மொழியின் மீதும், வாசகனின் மீதும் வைக்கப்படும் வன்முறை என்று நினைக்கிறேன். ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தின் மீதும் எனக்கு இந்தக் குற்றக் குற்றச்சாட்டு இருக்கிறது. அவர் இன்னும் கொஞ்சம் எளிமையாக எழுதியிருக்கலாம். அவர் ஏன் அப்படி எழுதுகிறார் என்றால் அது ஒரு வன்முறை. அறிவுஜீவி பயங்கரவாதம் (intellectual terrorism). முன்னுரையிலேயே ரொம்பத் திமிராக வேறு பேசுகிறார். ரொம்ப கவனமாகப் படியுங்கள் என்று சொல்வது வாசகனை அவமதித்தல். இது போன்ற விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. பிரட்ரிக் நீயட்ஷே ‘மேதை தன்னை எளிமையாக வெளிப்படுத்திக்கொள்வான்; மேதை போல நடிப்பவன் தன்னை சிக்கலாக வெளிப்படுத்தவே விரும்புவான்’ என்கிறார்.

‘அட்லாண்டிஸ் மனிதன்’ எழுதுவதற்கு முன்பே பத்து வருடங்களாக எழுதிக்கொண்டிருந்தீர்கள். அப்போது கிடைக்காத பிரபலமும் அங்கீகாரமும் இந்த நாவலை எழுதிய பிறகு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதை எப்படி நீங்கள் எதிர்கொண்டீர்கள்?

இது எதிர்பாராததுதான். அட்லாண்டிஸ் மனிதன் எழுதி முடித்த பிறகு இதைப் புத்தகமாகப் போடலாமா என்ற தயக்கம் எனக்கு இருந்தது. இந்த நாவல் எதிர்ப்புக்குள்ளாகும். ஒரு நாவலுக்கு ஒரு முடிவு வைத்து எழுதினாலே எதிர்ப்பு வரும். மூன்று முடிவுகள் வைத்து எழுதினால் என்ன சொல்வார்களோ என்று தயங்கினேன். ஆனால் அசோகமித்ரன், இ.பா., கோவை ஞானி ஆகியோர் பாராட்டினார்கள். அந்தப் பாரட்டுக்கள் அந்த நாவலுக்குக் கிடைக்காது என்று நினைத்தேன். இந்த நாவல் நிராகரிக்கப்படும் என்று கூட நினைத்தேன். பப்ளிஷரிடம் ஒரு குற்ற உணர்வோடுதான் பிரதியைக் கொடுத்தேன். வழக்கமான பதிப்பாளர்தான். வேறு பதிப்பாளர் என்றால் இந்நாவலைப் போடமாட்டார்கள். இதில் உள்ள அத்தியாயங்களைச் சிறுகதைகளாகவும் படிக்கலாம். தனி அத்தியாங்களாகவும் படிக்கலாம். ஸ்போர்தா (sporta) என்றொரு சமஸ்கிருத மரபு இருக்கிறது. அதைத் தமிழில் நான் தான் முதலில் இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறேன். மூன்று பேர் கதை சொல்லும் மரபு அது. ஒருவன் கதையை ஆரம்பிப்பான். வேறொருவன் கதையைத் தொடர்ந்து சொல்வான். மூன்றாவது ஆள் கதையை முடிப்பான். இப்படியொரு முறையை அந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறேன். இதில் கிழக்கு – மேற்கு இரண்டையும் இணைத்திருக்கிறேன். மற்ற பின் நவீனத்துவ எழுத்தாளர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றால் அவர்கள் மேல்நாட்டு நாவல்களை அப்படியே நகல் எடுத்துவிடுவார்கள். The name of a rose என்ற நாவலைத் தமிழில் அப்படியே நகல் எடுத்திருக்கிறார்கள். நான் எதையும் அப்படியே நகல் எடுக்கவில்லை. சில கான்செப்ட்களை வைத்துக்கொண்டு, இந்திய மரபுக்கேற்பவும் நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்பவும் செய்கிறேன். ஒரு செடியை அப்படியே பிடுங்கி இங்கே வைத்துவிட்டால் இங்கே அது செத்துவிடும். சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு விதையை இங்கே நம் மண்ணில் போட்டால் அது முளைக்காது. நம்முடைய மண் காற்று தட்பவெப்பம் வேறு.

இந்த நாவல் வந்து முதல் ஆறு மாதம் பேசப்படவில்லை. அப்போது என் பப்ளிஷரைப் பார்க்கும் போதெல்லாம் வருத்தமாக இருக்கும். குற்ற உணர்வு இருக்கும். பின்பு நாவல் படிப்படியாகக் கவனம் பெற்றது. இந்த நாவல் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நாவல் விற்ற பணத்தில்தான் ’பன்முகம்’ பத்திரிகை தொடங்கினோம். ஒரே பதிப்பில் இரண்டாயிரம் பிரதிகள் இரண்டு வருடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன. இது தமிழ்ச் சூழலில் (250 விலையுள்ள நூல்) பெரிய வெற்றி. இது நான் எதிர்பாராதது. எல்லா இலக்கியவாதிகளும் இந்த நாவலை ஏற்றுக் கொண்டார்கள். கோணங்கி வேறு ஸ்கூல், எஸ்.ராமகிருஷ்ணன், சு.ரா., ஜெயகாந்தன் இவர்கள் எல்லாம் வேறு வேறு ஸ்கூல். எல்லோரும் இதில் ஒன்றுபட்டார்கள். இது ஒரு break through என்று ஒப்புக்கொண்டார்கள். இது நான் எதிர்பார்க்காதது. இது லாட்டரியில் பரிசு விழுந்ததுபோல அதிர்ஷ்டம்தான்.

அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்-நாவலை auto fiction என்று அடைமொழி கொடுத்துள்ளீர்கள், ஏன் கியூபிஸம், ஆட்டோ பிக்‌ஷன், வெர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற அடைமொழிகள் கொடுத்துக்கொண்டேயிருக்கிறீர்கள்?

இவையெல்லாம் ’இஸம்’ கிடையாது. இவையெல்லாம் வகைமைகள். சிறுகதை, நாவல் என்று சொல்வதைப் போன்றது. இது போஸ்ட் மாடர்னிசம் என்பதில் மேல் நாட்டு எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தியது. ஜெர்சி கோஸின்ஸ்கி எழுதிய the hermit on 69th street நாவலின் auto fiction கோட்பாடு. அவரின் கோட்பாட்டை முன்னிறுத்தி தமிழில் நான் எழுதினேன்.

Ego, alter Ego, என்று இரண்டு தன்மைகள் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கின்றன. ஆயிரம் ரூபாய் சட்டை வாங்க வேண்டும் என்று மனதில் நினைப்போம். ஆனால் 200 ரூபாய் சட்டையை வாங்கிவந்துவிடுவோம். இது மனதுக்குக்கூட பிடிக்காதுதான். ஆனால் செய்துவிடுவோம். இது போன்ற தன்மை ஒட்டிய மனப்போராட்டம். Ego – வைப் பிரிப்பதே ego, Alter ego ஆகும். இந்த ego – கள் மனதிற்குள் யுத்தம் நடத்துகின்றன. இவற்றைப் பற்றி தான் எழுதியிருக்கிறேன். கண்ணில் பட்ட எல்லாவற்றையும் ஜெயிக்க வேண்டும் என்ற அலெக்ஸாண்டரின் கதை இதற்குப் பொருந்தமானது என்று நினைத்தேன்.

ஒரு கோப்பை தேநீர் ஒரு ஜென் கதை. ஒரு சீடன் முக்தியடைய என்ன வழி என்று குருவிடம் கேட்பான். அப்போது தேநீர் சாப்பிடும் நேரம். எனக்குத் தேநீர் ஊற்று என்பார் குரு. அவன் ஊற்றிக் கொண்டேயிருப்பான். தேநீர் நிரம்பி வழிந்துபோகும், குரு போதும் என்று சொல்லாமல் பார்த்துக் கொண்டேயிருப்பார். இந்தக் கோப்பையில் நீ எவ்வளவுதான் ஊற்றினாலும் கொள்வதுதான் கொள்ளும். ஞானமும் அப்படித்தான். அலெக்ஸாண்டருக்கும் இது பொருந்தும். எவ்வளவோ அடையத் துடித்தான். கடைசியில் ஒரு கொசு கடித்துச் செத்துவிட்டான். அவன் செத்த பிறகு அவன் ஜெயித்த நாடுகள் எல்லாமே திரும்ப உலகத்திற்கே சொந்தமாகிவிட்டன. அதுதான் ஒரு கோப்பைத் தேநீர். அவனுடைய மாசிடோனியாதான் அவனுக்கு மிச்சமாச்சு.

இதில் நவீன வாழ்க்கையைப் பற்றிய கிண்டல் இருக்கிறது. அந்தக் காலத்தில் உங்கள் ஊருக்கு யாரவது உங்களைப் பார்க்க வந்தால் சிபிச்செல்வன் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டால் இந்த ஊரில் இரண்டு சிபிச்செல்வன்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி இரண்டு பேரின் அடையாளங்களை எளிதாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால் இன்று நான் ஒரு சிபிச்செல்வனைத் தேடவேண்டும் என்றால் டெலிபோன் டைரக்டரில் எளிதில் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. ஓராயிரம் பேர் அதில் இருக்கிறது. அலெக்ஸாண்டருக்கும் இப்படித்தான். நான் விரும்பாத பல அலெக்ஸாண்டர்களின் பெயர்களைப் படிக்க வேண்டியிருக்கிறது.அதனால் இது ஒரு அலெக்சாண்டரின் கதை சொல்லப்போய் பல அலெக்ஸாண்டர்களின் கதையாக மாறிவிடுகிறது. இது நவீன வாழ்க்கையின் பெருக்கத்தால் விளைந்தது. இதைக் கிண்டல் செய்கிறேன்.

அதே சமயத்தில் வேறு காலகட்டத்தில் உள்ள அலெக்ஸாண்டர்களின் வரலாறாகவும் இதைக் கொள்ள முடியும் அல்லவா?

இது பெரிய கேன்வாஸ். Ego, alter Egoவைச் சொல்லப் பல பேர் வேண்டும். ஒரு அலெக்ஸாண்டருக்குள் Ego – alter Ego இருக்கிறது. அதேபோல் ஒரு காலகட்டத்தில் அலெக்ஸாண்டருக்கு இன்னொரு காலகட்ட அலெக்ஸாண்டர் alter Ego. அலெக்ஸாண்டரின் வரலாற்றை அப்படியே படித்து எழுதினேன். அவன் பாலைவனத்தில் போகும்போது தண்ணீரே கிடைக்காது. ஒரே ஒரு தோல் பையில் இருந்த தண்ணீரைக் கொடுப்பார்கள். கொடுத்தால் குடிக்காமல் கொட்டிவிடுவான். எல்லோரும் தாகமாக இருக்கும்போது நான் மட்டும் எப்படிக் குடிப்பது என்பான். இதை ஒரு பொலிட்டிக்கல் ஸ்டேண்டாகவும் எடுத்துக் கொள்ளலாம். அவன் குடித்தாலும் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. அவன் ஊற்றி விட்டால் போர்வீரர்களுக்கு வெறி வரும் இல்லையா? இது மாதிரி விஷயங்கள் எல்லாம் உண்மையில் நடந்தன. இந்த நிகழ்ச்சியின் போது அவனது Ego – Alter Ego நடத்தும் விவாதம் வரலாற்றில் விடுபட்டிருக்கிறது. நான் எழுதியிருக்கிறேன்.

இந்த நாவலில் ஒரு மேப் இருக்கிறது. இது டால்ஸ்டாய் காலத்திலிருந்து செய்யப்படுகிறது. இப்போது போஸ்ட் மாடர்னிச நாவல் உலகிலும் ஒரு நம்பகதன்மையைக் கொண்டு வருவதற்காகத் தமிழிலும் செய்கிறார்கள். அந்த முறையில்தான் இந்த நாவலுக்கு ஒரு மேப் கொடுத்திருக்கிறார்களா?

நான் மேப் போட்டத்தற்குக் காரணம் ஞானகூத்தன். முதலில் வடிவமைப்பில் இந்த மேப் இல்லை. ஞானகூத்தனின் விசிறி நான். அவருக்கும் என்னுடைய படைப்புகள் பிடிக்கும். என்னுடைய படைப்புகளை அசோகமித்ரன், இ.பா., கா.நா.சு., ஞானகூத்தன் போன்றவர்களிடம் படிக்கக் கொடுப்பேன். அவர்கள் படித்துவிட்டு சில ஆலோசனைகளைச் சொல்வார்கள். ஞானகூத்தன் படித்துவிட்டு இந்த நாவலில் நிறைய வரலாற்றுத் தகவல்கள் வருவதால் இந்த மேப் போட்டால் படிக்கிறவர்களுக்கு ஒரு ஆத்தன்டிசிட்டியாக இருக்கும் என்றார். அவர் ஆலோசனையின் விளைவுதான் இந்த மேப். மற்றபடி தமிழ்ச் சூழலில் இருக்கும் போக்குகளின் தன்மையைப் பிரதிபலிப்பதற்காக வலிந்து சேர்க்கப்பட்டதல்ல.

Virtual Reality என்ற வகையில் ‘சிலந்தி’ நாவலை எழுதியுள்ளீர்களே?

இந்த நாவல் துப்பறியும் நாவல். 15 வருடங்களுக்கு முன்பு சென்னையில் க.நா.சுவை அடிக்கடி பார்ப்பேன். அப்போது ஒரு சமயம் துப்பறியும் கதைகளைப் பற்றிப் பேச்சு வந்தது. தாஸ்தாவ்ஸ்கியின் crime and punishment ஒரு துப்பறியும் நாவல் தானே என்று சொல்லி என்னைத் திடுக்கிட வைத்தார். கா.நா.சு. அப்போது தான் ஒரு துப்பறியும் நாவல் எழுதவேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. துப்பறியும் நாவல் எழுத வேண்டும்; ஆனால் எந்த மாதிரி பாணியில் எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. Virtual Reality என்ற பாணியை நான் தேர்ந்தெடுப்பதற்கு 15 வருடங்கள் ஆகி இருந்தன.

‘நான்’ ‘நான்’ என்று ஒரு டெக்ஸ்ட். ‘நீங்கள்’ நீங்கள்’ என்று ஒரு inter டெக்ஸ்ட். பிறகு நீங்கள் வருகிறீர்கள். நீங்கள் பிணத்தைப் பார்க்கிறீர்கள் என்று வரும். அதை parady பண்ணியிருப்பேன். ஆண் பிரதி, பெண் பிரதியென்று சொல்லி இருப்பேன். இன்று எழுதப்படுபவை எல்லாம் பெரும்பாலும் ஆண் பிரதிதான். அதைப் பெண் எப்படி வாசிப்பாள் . இதனால் பெண் வாசகிகளும் படிப்பது போல எழுதியிருப்பேன் – பெண் பிரதியென்று. தவிரவும் வாசகனும் ஆசிரியரும் கதாபாத்திரங்களாக மாறுவது இந்த நாவலில் ஒரு கூறு. இதுதான் virtual reality என்பது. virtual reality என்பது quantum physics-ல் வருகிறது. Computer science-லும் வருகிறது. உண்மை போன்ற உண்மை என்கிறது புத்த மதம்.

நீங்கள் இந்த நாவலில் ஆரம்பிக்கிற ஸ்டைல் இடாலோ கால்வினோவினுடையது இல்லையா?

ஆமாம். இடாலோ கால்வினோ இந்த ஸ்டைலில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். என் நாவலிலும் ஆரம்பத்தில் அப்படி ஒரு ஸ்டைல் இருக்கும். அதன் பிறகு மாறிவிடும். அவர் ஆரம்பத்தில் நீங்கள் நீங்கள் என்று சொல்லிக் கொண்டிருபார். வாசகரின் பார்வையில் இருக்கும். கால்வினோ மட்டுமல்ல பல எழுத்தாளர்களும் இப்படி எழுதியிருக்கிறார்கள். பிரெஞ்ச், ஜெர்மனியிலும் இப்படிப் பலர் எழுதியுள்ளார்கள்.

‘சிலந்தி’ நாவல் எந்த அளவிற்கு வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது?

தமிழில் இந்த நாவலின் இடம் மிக முக்கியமானது என்று பலர் சொல்கிறார்கள். அட்லாண்டிஸ் மனிதன், அலெக்சாண்டர் நாவலைப் படித்தவர்களுக்கு இந்த நாவல் கொஞ்சம் சிடுக்குகளுடன் இருப்பதாகப்படுகிறது.

பொதுவாக உங்கள் படைப்புகள் சரளமாக இருக்கின்றன.

சிலர் மற்ற நாவல்களை விட இது முக்கியமான நாவல் என்கிறார்கள். போஸ்ட் மாடர்னிச நாவல் என்கிறார்கள். நோயல், கோவை ஞானி ஆகியோர் பாராட்டினார்கள். கோவை ஞானி சிலந்தி நாவலை எதிர்ப்பார் என்று நினைத்தேன். அவர் பாராட்டியது ஆச்சர்யமாக இருந்தது. யாரும் துப்பறியும் நாவலாகப் பார்க்கவில்லை. துப்பறியும் நாவல் என்பதும் ஒரு வடிவம் தான். எல்லாமே வடிவம் தான். கூடுதலாக ஒரு அடர்த்தியும் ஆழமும் வேண்டும். வார்த்தைகளுக்குப் பின் நிலவும் மெளனம் தான் இலக்கியம். படித்து முடித்த பிறகு உங்கள் சமநிலையைக் குலைக்கவேண்டும் அல்லது வாசகனை முன்பைவிட மேன்மையடையச் செய்ய வேண்டும். அல்லது பிரமிக்க வைக்கவும் அதிசயிக்க வைக்கவும் வேண்டும். களிப்படைய வக்க வேண்டும். இந்த நாவல் இப்படிச் செய்கிறது.

துப்பறியும் நாவலுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் துப்பறியும் நாவலைப் படித்த உடன் தூக்கியெறிந்து விடுவோம். மீண்டும் படிக்கமாட்டோம். ஆனால் சிலந்தி நாவலைப் படித்தவுடன் மீண்டும் படிக்க விரும்புவோம். சிலந்தி நாவலை மீண்டும் மீண்டும் படிக்கலாம். படிக்கிறார்கள். துப்பறியும் நாவல்கள் light reading வகைச் சேர்ந்தவை. போர்ஹேஸின் ஒரு கதை எனக்கு இன்ஸ்பிரேஷன். குறுக்கு வெட்டுப் பாதைகளால் ஆன தோட்டம். மிகப் பெரிய இலக்கியம் அது. ஒரு ஒற்றன் வெளி நாட்டில் இருக்கிறான். அடுத்து அவன் நாட்டில் குண்டு போடப் போகிறார்கள். அது எந்த நகரத்தின் மீது என்பது தெரிய வேண்டும். அது அவனுக்குத் தெரிந்துவிடும். அவனுக்குத் தெரிந்துவிட்டதால் அவனைக் கொல்ல எதிரிகள் துரத்துகிறார்கள். அவனைக் கொல்வதற்குள் தன் நாட்டிற்குத் தகவலைச் சொல்லிவிட வேண்டும். என்ன செய்வது? டெலிபோன் டைரக்டரியை எடுத்துப் புரட்டிப் பார்ப்பான். பக்கத்தில் ஆல்பர்ட்னு யாராவது இருக்கிறார்களா என்று பார்ப்பான். ஒருவன் இருப்பான், அதை நோட் செய்துகொண்டு ஒரு ட்ரெயின் ஏறி விடுவான். எதிரியும் அவனைத் தேடி வருவான். குறிப்பிட்ட இடம் வந்ததும் இறங்கி நடந்து போவான் ஒற்றன். அங்கே மரவீடு ஒன்று இருக்கும். அதில் ஆல்பர்ட் என்று ஒருவன் இருப்பான். அவனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பின்னடைவு நேரும். அவனை கொல்வதற்காகத்தான் போனான். அவன் தாத்தா ஒரு இலக்கியவாதி. அதனால் ஆல்பர்டைக் கொல்ல முடியவில்லை. இவன் தாத்தாவின் ரசிகன்.

தாத்தாவினுடைய புத்தகத்தைப் பதிப்பிக்கிற முயற்சியில் ஆல்பர்ட் இருப்பான். அவனை எப்படிக் கொல்வது? இருந்தாலும் அவனைச் சுட்டு விடுவான். இவனைப் பின்தொடர்ந்து வந்தவன் ஒற்றனை அரெஸ்ட் செய்து விடுவான். இதுதான் கதை. இவன் ஏன் ஆல்பர்டைக் கொன்றான் என்றால் எதிரி நாடு குண்டுபோடப் போகிற விஷயத்தை தெரியப்படுத்துவதற்காக. ஆல்பர்ட் என்பனைக் கொன்றுவிட்டான் ஒற்றன் என்ற செய்தி வரும். உடனே ஆல்பர்ட் என்ற நகரத்தின் மீது படையெடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வார்கள் என்பது இதனுள் இருக்கிற விஷயம். எவ்வளவு நுட்பமாக சொல்கிறார் பாருங்கள். அவனுடைய ego கொல்ல மறுக்கிறது. Alter ego கொன்றுவிடுகிறது. இது துப்பறியும் கதை. நான் 100 முறை படித்து விட்டேன். அவ்வளவு தத்துவம் ,அவ்வளவு சாகஸம்.

போர்ஹேக்கு ஃபிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்பு இருந்தது அல்லவா?

ஆமாம். அதனால் அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உண்டு. ஆசியாவின் மிகப் பெரிய சேரியாக தாராவி இருப்பது போல் உலகின் மிகப்பெரிய சேரி பியூனஸ் அயர்ஸில் இருக்கிறது. பியூனல் அயர்ஸ் சேரி பற்றி அவர் எழுதவில்லை. சர்வாதிகாரி பெரோன் பற்றி ஒரு மூச்சு விடவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டு உண்டு. அவர் ஒரு கலைஞர். தாகூர்மீது கூட ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இல்லையா? அவர் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. பிரபுகளுடன் குலாவினார் என்றும் குற்றச்சாட்டுகள் உண்டு. அதற்காக அவர் கலைஞன் இல்லையென்று நிராகரிக்க முடியாது.

உங்கள் புது நாவல் ‘யுரேகா என்றொரு நகரம்’ நியோ ரியலிசம் என்ற வகையில் வந்திருக்கிறதே… அதைப் பற்றி?

நான் அந்த நாவலை நியோ ரியலிசம் என்று சொல்லவில்லை. ஒரு பேச்சுக்காகச் சொன்னேன். Written claim வைக்கவில்லை. அதனால் விட்டுவிடலாம். மூன்று நாவல்களையும் நல்ல போஸ்ட் மாடர்னிச நாவல்கள் என்று சொல்கிறார்கள். இப்போது ரியலிசம் என்பது செத்துவிட்டதாக போஸ்ட் மாடர்னிஸ்டுகள் ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ரியலிஸத்திலும் சொல்லவேண்டிய விஷயங்கள் இருக்கிறது என்பதற்காகத்தான் நான் ஒரு ரியலிஸ நாவலை எழுதினேன். அது போச்ட் மாடர்னிச நாவலும் கூட. ஏனெனில் பழைய விஷயங்களைக் கொட்டிக் கவிழ்த்தல், கேள்விக்குள்ளாக்குதல் இதெல்லாம் போஸ்ட் மாடர்னிசக் கூறுகள். இதில் வரலாற்றைக் கொட்டிக் கவிழ்த்தல் நடக்கிறது. வரலாற்றின் மீது நான் சந்தேகம் கிளப்பியிருக்கிரேன். ஆகையால் இது போஸ்ட் மாடர்னிச நாவல்தான்.

வரலாறு என்பதே புனைவு என்கிறேன். மொழி எவ்வளவு சிக்கலானது. மொழி நம்மை அடிமையாக வைத்திருக்கிறது. மொழிக்கு நாம் அடிமையாகிறோம். எல்லாம் புனைவு என்று பொருள் சொல்கிறேன்.

எழுதுகிற எழுத்தாளன் வேறு; கதைச்சொல்லி வேறு என்று எழுதியிருக்கிறீர்கள். எழுதுகிற எழுத்தளனின் வழியாகத்தான் கதைசொல்லி பேசுகிறான். அதே சமயம் கதைசொல்லியின் குரலுக்கு எழுத்தாளன் பொறுப்பாக மாட்டானா?

அட்லாண்டிஸ் மனிதனில் ‘நான், நான்’ என்று எழுதியிருப்பேன். அந்த ’நான்’ கதாபாத்திரம். அந்த ‘நான்’ எம். ஜி. சுரேஷ் என்று நினைத்துவிட்டார்கள். அதில் வரும் நான் கதைச்சொல்லி. எழுத்தாளன் எதை எழுதினாலும் அதில் ஒரு சுய சரிதைக் கூறு இருக்கும். அசோகமித்திரன் 18-வது அட்சகோடு எழுதினால், அதில் அவரின் ஹைதராபாத் வாழ்வும் இருக்கத்தான் செய்யும். கதைசொல்லியின் குரல் ஆசிரியருடைய குரலாகவும் இருக்கும். அதை நான் மறுக்கவில்லை. அதே சமயத்தில் ஆசிரியன் (author) வேறு கதைசொல்லி (narrator) வேறு என்பதும் உண்மையே.


நீங்கள் கவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர் என்று பன்முகங்களைக் கொண்டவர். இப்போது ‘பன்முகம்’ என்ற சிறுபத்திரிக்கையையும் தொடங்கியிருக்கிறீர்கள். இப்போது ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களுக்குக்கென்று ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் தான் நீங்களும் ஆரம்பித்தீர்களா?

போஸ்ட் மாடர்னிசத்திற்காக ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம். ஏற்கனவே ‘நிறப்பிரிகை’ இருந்தது. ஆனால் எனக்கு அந்தப் போஸ்ட் மாடர்னிசத்தில் நம்பிக்கை இல்லை. அ. மார்க்ஸ் தலித் இயக்கம் என்பதற்கான அரசியல் இயக்கமாக அதை மாற்றிவிட்டார். போஸ்ட் மாடர்னிசம் பொலிட்டிகல் மூவ்மெண்ட் இல்லை. அது method of analysis. கலை இலக்கியத்தில், ஒவ்வொரு கட்டமாக மாறி வரும் போக்குகளைப் பிரிக்கிறோம். இல்லையா? இந்த மாதிரி சோவியத் யூனியன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஒரு கட்டம். வரலாற்று அறிஞர்கள் அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், பிறகு கேபிட்டலிஸம், சோஷலிஸம் என்று பிரிக்கிறார்கள். அடுத்தக் கட்டம் கம்யூனிஸத்திற்குப் போய்விடும் என்றார்கள். ஆனால் உண்மையில் சோசலிஸம் வீழ்ந்து மீண்டும் கேபிட்டலிஸம் வந்துவிட்டது.

பிரான்சிஸ் புக்குயமா என்பவர் end of history என்ற நூல் எழுதினார். History has come to an end. வரலாறு தேங்கிவிட்டது என்று எழுதினார். இதைப் போஸ்ட் மாடர்னிசத்தின் ஆரம்ப நூல்களில் ஒன்றாகச் சொல்லலாம். பூக்கோ, லகான் கட்டுரைகள் மாதிரி ஆழமான நூல் இல்லையென்றாலும் ஒரு அடையாளக் கல்லாக இந்த நூலையும் சொல்லலாம். மாடர்னிசம் எழுதி எழுதி கெட்டித்தட்டிப் போய்விட்டது. நவீன யுகத்தில் வாழும் மனிதன் போஸ்ட் மாடர்னிச மனிதன் என்று சொல்வதைப் போல. மாடர்னிசம் என்பது ஒரு லட்சிய வாதத்திற்காக உயிரைக் கொடுப்பதை முன் வைத்தது. இப்போது அதெல்லாம் வீணாகப்போய்விட்டது. காந்தியின் உழைப்பு எல்லாம் வீணாகப் போய்விட்டதே. இந்த ஐரனியைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா? வ.ஊ.சி., சிவா போன்றவர்களின் உழைப்பிற்கு என்ன அர்த்தம் இப்போது இருக்கிறது. இந்த மாடர்னிட்டி இவ்வளவு கேவலமாக இருக்கிறது. இவ்வளவு விரோத பாவத்துடன் இருக்கிறது. சக மனிதனை வெறுக்கிறார்கள். சக மனிதனை நேசி என்று ஜீஸஸ் சொன்னது வேடிக்கையாக இருக்கிறது. கோட்பாடுகளின் வீழ்ச்சியைக் கிண்டல் செய்கிறோம்.

போஸ்ட் மாடர்னிசம் மையம் கூடாது. விளிம்பு நிலையும் வேண்டாம் என்று சொல்கிறது. டெமாக்ரசி வேண்டும் என்கிறார்கள். அ. மார்க்ஸ் போன்றவர்கள் ஒரு மையத்தைத் தகர்த்துவிட்டு தன்னைச் சுற்றி இன்னொரு மையத்தை உருவாக்குகிறார்கள். ஜெயமோகனைக் கடுமையாகச் சாடும் அ. மார்க்ஸ் ஜெயமோகனுக்கு எதிராக முன்னிறுத்தப்படவேண்டிய என் எழுத்துக்கள் பற்றி மூச்சுவிடவில்லை. ஏனெனில் அவரது மையத்தில் எனக்கு இடம் இல்லை. இந்த மாதிரியான சூழலில் ஒரு சரியான பின் நவீனத்துவத்திற்கான பத்திரிகை வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது 100 சதவிகித பின் நாவீனப் பத்திக்கை அல்ல. ஏனெனில் நானும் முன்பே சொன்னதுபோல எல்லாவற்றின் மீதும் சந்தேகம் கொண்டவன் என்பதால் எந்த இலக்கிலாவது மாட்டிக் கொண்டால் நான் ஒரு கலைஞனாக இருக்க முடியாது. ஒரு கலைஞன் எந்தக் கோட்பாடினுள்ளும் சிக்கிக்கொள்ள முடியாது. இது ஓர் இயல்பான விஷயம் என்றே தோன்றுகிறது. அதில் மாட்டிக்கொண்டால் அதனுடைய பிரச்சார பீரங்கிகள் ஆகி விடுவோம். நம்மைச் சுற்றிலும் கதவுகள் அடைத்துக்கொள்வோம்.

போஸ்ட் மாடர்னிசத்திற்கு எதிரான படைப்புகள் கூட பன்முகத்தில் வரும் – டெமாக்ரசியின் விளைவு இது. அதற்கு எதிரானதும் கூட வரும். பன்முகம் என்று ஏன் சொல்கிறோம் என்றால் எல்லாருமே ஒவ்வொரு பம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் பன்முகம் என்பது ‘க்யூபிஸம்’ என்பதையும் குறிக்கும். இது பரிசோதனை முயற்சிகளுக்கான பத்திரிக்கை.

ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கிற போக்கு ஒன்று இருந்ததால்தான் நீங்கள் பத்திரிகை ஆரம்பித்தீர்களா என்று கேட்கிறேன்.

சுந்தரராமசாமி

சுந்தரராமசாமி

வேறு யாரும் ஆரம்பிக்கவில்லை என்றால்கூட நான் ஆரம்பித்திருப்பேன். சு.ரா. காலச்சுவடு ஆரம்பித்தபோது சிறுபத்திரிக்கைகளுக்கும், வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கும் ஒரு முரண் இருந்தது. அந்த முக்கியத்துவம் பன்முகத்திற்கும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். மற்றவர்கள் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்காகவும் ஒரு எடிட்டராக இருக்க வேண்டும் புகழ் சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் பத்திரிக்கை ஆரம்பிக்கிறார்கள். நோயல் கட்டுரையை நான் போடுகிறேன் என்றால் அவர் ஒரு சரியான போஸ்ட் மாடர்னிஸ்ட் என்பதால் தான்.

தமிழில் விமர்சனத்துறை எப்படி இருக்கிறது?

தமிழில் கா.நா.சு. ஆரம்பித்துவைத்தார். அவருக்கு முன்பு விமர்சனம் என்பது தமிழில் துதிபாடுவதாகத்தான் இருந்தது. ஏதாவது ஒரு புத்தகம் வந்தால் வேப்பிலை அடிப்பதுதான் நடந்து கொண்டிருந்தது. இவர்தான் மு.வ. இலக்கியவாதி இல்லை என்று சொன்னார். திருக்குறள் இலக்கியம் இல்லை என்று சொன்னார். அவருக்குப் பிறகு இலக்கிய விமர்சனம் வளர்த்தெடுக்கப்படவில்லை. ஓரிரு விமர்சகர்கள் இப்போதும் இருக்கலாம். ஆனால் பெரியளவிற்கு விமர்சகர் வரவில்லை. இங்கே விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாகவும், இருட்டடிப்பு நடவடிக்கையாகவும் இருக்கிறது. விமர்சனங்கள் உள்நோக்கங்களோடு செய்யப்படுகின்றன. அரசியலாக இருக்கின்றன.

ஒரு நாவலில் அதிருப்தி ஏற்படுவதால்தானே இன்னொரு நாவல் எழுதுகிறேன். பிரபஞ்சம் குறை உடையது. பிரபஞ்சத்தின் கூறு நாம். எனவே, காதல் என்பதே குறைபாடு உடையது. I MISS YOU என்று சொல்கிறோமே. நீ இருந்தால்தான் நான் முழுமையடைகிறேன் என்பதுதான். அதுபோல் ஒரு இலக்கியப் பிரதி குறையற்றதாக இருக்க முடியாது. குறை சொல்வது creative ஆக இருக்க வேண்டும். எழுத்தாளனுக்கு உதவுகிறதுபோல விமர்சனம் இருக்க வேண்டும். பிரதியின் மீதான வன்முறையாக இருக்கக்கூடாது.

ப. சிங்காரம் ‘புயலிலே ஒரு தோணி’ எழுதினார். அது 20 வருடங்களாகப் பேசப்படவில்லை. இன்று பேசுகிறார்கள். திருத்தக்கதேவரை உ.வே.சா. கண்டுபிடித்துப் போடுகிறார். ஒரு நல்ல பிரதி என்பது வீணாகப் போகாது. இப்போது விமர்சிப்பது நம்மை மேம்படுத்திக்கொள்ளத்தான். விமர்சனம் தமிழில் முறையாக, நியாயமானதாக இல்லை.

பொதுவான தமிழ் இலக்கியச் சூழல் எப்படியிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பொதுவாக மோசமானதாக இருக்கிறது. இலக்கியச் சூழலில் அரசியல் நிறைய இருக்கிறது. ப்ரெஞ்ச்சில் சார்த்தர்க்கும் காம்யுக்கும் ஆகாது. ஒளவையார்க்கும், ஒட்டக்கூத்தருக்கும் ஆகாது. போர்ஹேக்கும், நெரூடாவுக்கும் ஆகாது. இது அனைவருக்கும் தெரியும். நம்மவர்கள் இப்போதோ பின்னால் திட்டுகிறார்கள். ஆனால் நேரில் பார்க்கும்போது கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள். விரோதம், கோபம், அரசியல், நயவஞ்சகம் இரண்டு குழுவிலும் சேர்ந்து ஏமாற்றுதல் ஆகியவையும் இங்கே நடக்கிறது.

உங்களின் மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பற்றி?

’நான் – பிக்‌ஷன்’ தான் மொழிபெயர்த்திருக்கிறேன். ரோலான் பார்த் கட்டுரைகள் செய்திருக்கிறேன். முழு புத்தகம் செய்ததில்லை. அவகாசம் கிடைக்கும் போது செய்யவேண்டும். மொழிபெயர்ப்புகள் மூலமாகத்தான் பல விஷயங்களை நானே தெரிந்துகொண்டேன். உலக இலக்கியங்கள் எல்லாமே நான் இப்படித்தான் தெரிந்துகொண்டேன். பலர் என்னிடம் டெரிடா, பூக்கோ ஆகியோரை மொழிபெயர்க்கும்படி கேட்கிறார்கள். அதிலும் நான் கவனம் செலுத்த வேண்டும். மொழிபெயர்ப்பு, நவீன நாடகம், கவிதை, இதையெல்லாம் செய்ய வேண்டும். குறைந்த அளவிற்குத்தான் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். நிறையச் செய்ய ஆசை.

கட்டுரைகள் எழுதுவதில் உங்கள் அனுபவம் எப்படி? எம். ஜி. சுரேஷின் கட்டுரைகள் என்ற நூல் சமீபத்தில் வந்திருக்கிறதே?

ஜவகர் என்பவர் வசந்தம் என்று ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தார். அவர் கேட்டதற்காக ஒரு கட்டுரை எழுதினேன். சினிமா சம்பந்தப்பட்டது அது. எல்லா சினிமாக்காரர்களும் ஒரு உத்வேகத்தில் வருகிறார்கள். பின்னால் அவர்களேதான் ஒரு மோசமான சினிமா எடுக்கிறார்கள். முதலில் அவர்கள்தான் ஒரு டிரெண்டை உருவாக்குகிறார்கள். பின்னால் ஏன் அவர்களே அதை உடைக்கிறார்கள் என்று ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அதன் பிறகு பலர் கட்டுரை கேட்க ஆரம்பித்தார்கள். அதனால் தொடர்ந்து எழுதினேன். எழுதிய கட்டுரைகளில் கொஞ்சம்தான் இப்போது நூலாக வந்திருக்கின்றன.

சினிமா துறையில் உங்கள் அனுபவங்கள்?

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்த போதே சினிமாத்துறையின் அறிமுகம் கிடைத்தது. கமல்ஹாசன், சந்தானபாரதி, பாரதிராஜா போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் கதை விவாதத்திற்கு அழைத்தார்கள். பிலிம் சொசைட்டியில் உலகின் சிறந்த பல படங்கள் பர்த்தேன். தமிழில் மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்றவர்கள் அப்போது நன்றாக செய்தார்கள். இவர்களைப்போலவே நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் பணியாற்றுகிறேன். அழகி பொன்ற மிடில் சினிமாவில் என் பங்களிப்பு இருக்கிறது.

ஒரு இலக்கியவாதியை சினிமாக்காரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள். இதில் உங்கள் அனுபவம் என்ன?

சினிமாவிலும் இலக்கியவாதிகளை இப்போது மதிக்கிறார்கள். ஒரு காலத்தில் எழுத்தளான் என்றாலே சினிமாவில் மரியாதை இல்லை. சினிமாவிற்கு சம்பந்தமில்லாதவன்; அவன் நம்மைக் கொன்றுவிடுவான் என்று பயந்தார்கள். இப்போது பாபாவில் எஸ். ராமகிருஷ்ணனைக் கூப்பிட்டார்களே. சினிமாவிலும் எழுதாளனின் பங்களிப்பு தேவை என்று நினைக்கிறார்கள். இலக்கியவாதி சம்பந்தப்பட்டால் ஒரு மேஜிக் நிகழும் என்று நினைகிறார்கள்.

கதை விவாதத்தில் என்னுடைய கருத்துக்களை எடுத்துக் கொள்கிறார்கள். சினிமாவில் எல்லோர்க்கும் பணம் முழுமையாகக் கொடுக்கமாட்டார்கள். இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

உங்கள் படைப்புகள் சினிமாவுக்கு ஒத்துவருமா?

என்னுடைய படைப்புகள் சினிமாவிற்கானதும் இருக்கிறது. இப்போது எழுதுகிறவை போஸ்ட் மாடர்னிசம் சார்ந்தவை என்பதால் இவை சினிமாவுக்கு ஏற்றவை அல்ல. போட்டோகிராபி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நகல் எடுக்கும் வேலை கிடையாது என்று சொன்னார் பிக்காசோ.

ஓவியத்தின் ஒரு வேலையை போட்டோகிராபி செய்துவிட்டது. இதன் பிறகு ஓவியம் தனக்கென்று ஒரு வழியைத் தேட வேண்டியதாகிவிட்டது. அதனால்தான் மாடர்ன் ஆர்ட் வந்தது. அதே மாதிரி பின்நவீன நாவல்கள் சினிமாவாக நகல் எடுக்கமுடியாத தன்மை கொண்டவை. மார்க்வேசின் ‘நூற்றாண்டு தனிமை’ நாவலை சினிமாவாக்குவதற்குக் கேட்டார்கள். வேண்டாம் என்று சொல்லிவிட்டார் மார்க்வேஸ்.

வருடைய படங்கள் சினிமாவாக்கப்பட்டு தோல்வியடைந்தவை இல்லையா?

ஆமாம். அதனால்தான் அவர் சினிமாவாக்கக்கூடாது என்றார். சினிமா துறைக்கான கதை வேறு. படிப்பதற்கான கதை வேறு. படிப்பதற்கான கதையை சினிமாவிற்கான format-இல் அடைக்கக்கூடாது. அதேபோல சினிமா என்பது visual media. அதைப் படிக்கும்படி எழுத வேண்டாம்.

உங்கள் கட்டுரைகளில் உலக சினிமா பற்றி எழுதியிருக்கிறீர்கள்? உலக சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு அல்லது தொடர்பின்மை இது பற்றி உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

ஆரம்ப காலத்திலிருந்தே தமிழில் மேலை நாட்டு சினிமா தாக்கம் இருக்கிறது. வாயில் கத்தியை வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். மலைக்கள்ளனில் தாவியது மேலை நாட்டு சினிமாவின் தாக்கத்தால். சார்லி சாப்ளினின் தமிழ் வடிவம் தான் சந்திரபாபு. நாகேஷ்க்கு ஜெரி லூயிஸ் தாக்கம் உண்டு. பெலினியின் தாக்கம் பாலுமகேந்திராவிடம் உண்டு. பொலான்ஸ்கி மாதிரி சினிமாக்களை செய்கிறார்கள். கமல் தமிழ் சினிமாவை முன்னெடுத்துப் போகிறார். தமிழ் சினிமாவில் ஐரோப்பாவின் தாக்கம் தொடர்ந்து இருந்துகொண்டேயிருக்கிறது. இனியும் ஏற்படுத்தும். மணிக்கொடி எழுத்து எப்படி எல்லா பத்திரிக்கைகளிலும் தாக்கத்தை இப்போது ஏற்படுத்துகிறதோ அப்படி பிலிம் சொசைட்டியின் படங்கள் தமிழ் சினிமா மீதும் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தும். உதிரிப்பூக்கள் போன்றவை அந்த மாதிரி வந்தவைதான். அதன் பிறகு மணிரத்னம், பாலா ஆகியோர் தொடர்ச்சியாக வருகிறார்கள். மணிரத்னம் கமர்சியலையும் ஆர்ட்டையும் இணைத்து செல்கிறார். ரோஜா, பாம்பே எல்லாம் இப்படியான படங்கள்.

எழுத்தில் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

‘நாங்கள் எல்லோரும் கோகோலின் மேற்கோட்டு (overcoat) பாக்கெட்டிலிருந்து வந்தவர்கள்’ என்று தன்னையும் தன் தலை முறை எழுத்தாளர்களையும் பற்றி ஆண்டன் செக்காவ் ஒரு முறை கூறினார். அதேபோல் எண்பதுகளில் தமிழில் எழுதிக்கொண்டிருந்த தீவிர இலக்கியவாதிகளான நாங்கள் எல்லோரும் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் என்ற ஜிப்பா பாக்கெட்டிலிருந்து குதித்தவர்கள் என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கம் ஏதும் இல்லை. ஜே.ஜே. சில குறிப்புகள் என்னை பிரமிக்க வைத்த நாவல். நான் மதுரைக்காரன். மதுரையில் பாண்டிய வெள்ளாளர் தெருவில் குடியிருந்தேன். அங்கிருந்து மேலமாசி வீதிக்கு வரும் போதெல்லாம் அந்த அகன்ற சாலையைப் பார்த்து பிரமிப்பேன். அதன் பிறகு சென்னைக்கு வந்தேன். அண்ணா சாலையைப் பார்த்து பிரமித்தேன். பின்பு மும்பை டெல்லி போன்ற நகரங்களுக்குப் போன போது துரிதச் சாலைகள் இன்னும் வியப்பூட்டின. பின்னர் மீண்டும் மதுரைக்குப் போனபோது மேலமாசி வீதியைப் பார்த்தபோது எனக்குச் சிரிப்பாக இருந்தது. இந்தத் தெருவைப் பார்த்தா பிரமித்தோம் என்று எனக்கு வெட்கமாக இருந்தது. அதே மாதிரி ஆரம்ப நாட்களில் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், போன்றோரின் எழுத்துக்கள் எனக்குள் பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தன. பின்னாளில் போர்ஹே, கால்வினோ, கொர்த்தஸார், மிலன் குந்தேரா போன்றவர்களைப் படித்த பின்னர் மீண்டும் ஜெ.கா., தி.ஜா., போன்றவர்களின் எழுத்துக்களைப் படித்துப் பார்த்தபோது இவற்றைப் பார்த்தா நாம் பிரமித்தோம் என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் சர்வதேச இலக்கியங்களைப் படிப்பதற்கு முன் என்னை வியப்படையவைத்த சு.ராவின் பல சிறுகதைகளும் ஜே.ஜே. சில குறிப்பு நாவலும் இப்போதும் என்னை வியப்பிலாழ்த்தவே செய்கின்றன. என்னைப் பரிசோதனை நாவல் எழுதத் தூண்டியது ஜே.ஜே. சில குறிப்புகள்தான்.

ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு நவீன நாவல் தானே?

அது நவீன நாவலா பின் நவீன நாவலா என்பதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை. அசோகமித்திரனின் பல கதைகள் பின் நவீனத்துக்கு முன்பும் சரி பின்பும் சரி எப்பொதுமே மகத்தான கதைகள் தான் என்பதில் மாற்றுக் கருத்து வைக்க முடியாதவை. அதே மாதிரி ஜே.ஜே. சில குறிப்புகளை முன் – நவீனத்துவம் பின் – நவீனத்துவம் என்ற அளவுகோல்களால் அளக்க வேண்டிய வசியம் இல்லை. அது ஒரு சிறந்த நாவல் அவ்வளவு தான். காம்யூவின் தீர்க்கமான மொழி; மிலன் குந்தேராவின் கிண்டல்; மிலோராட் பவிக்கின் கவித்துவம் இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்தால் கிடைக்கும் அனுபவத்தை ஜே.ஜே. சில குறிப்புகளில் அனுபவித்து உணர முடியும். பின் நவீனத்துவ எழுத்து இல்லை என்பதால் ஷேக்ஸ்பியரையும் செகாவையும் தாஸ்தாயெஸ்கியையும் புறக்கணித்துவிட முடியுமா?

நகுலனின் சோதனை எழுத்துக்கள் உங்களைப் பாதித்ததுண்டா?

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நகுலனை வாசித்தபோது ஏற்பட்ட அனுபவம் இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. மெளனிக்கு வாரிசாக உருவானவர் நகுலன். மெளனியின் மாறுதல் என்ற ஒரே ஒரு சிறுகதையை ஒரு தட்டிலும் நகுலனின் எல்லாக் கதைகளையும் மறு தட்டிலும் வைத்துப் பார்த்தால் மெளனியின் தட்டுதான் தாழும். நகுலனின் சோதனைக் கதைகள் உள்ளீடற்ற நடையில் எழுதப்பட்டவை. பல சிறுகதைகள் வெகுஜனப் பத்திரிகைகளின் தரத்தில் எழுதப்பட்டவை. இபோது வாசிக்கையில் நகுலன் கலாவதியாகிவிட்டார் என்றே தோன்றுகிறது. மெளனியின் மாறுதல் காலாவதியாக முடியாத கதை. மரணம் என்பது மாறுதல் என்கிறார் மெளனி. இது இயங்கியல் (dialectics) சிந்தனை. ஹெராக்ளிடஸ், புத்தர் முதல் இன்றைய அறிவியல் கோட்பாடுகள்வரை காலங்காலாமாக அறிவுறுத்தப்பட்டுவரும் ஒரு உண்மை எப்படி காலாவதியாக முடியும்? அதே போல் தான் ஜே.ஜே. சில குறிப்புகளும். ‘செய்ய விரும்புவதை செய்ய முடியாமல் போகிற கையாலாகாத்தனம் செய்ய விரும்பாததை செய்ய வேண்டிய நிர்பந்தம். இந்த இரண்டு அவஸ்தைகளாலும் நெருக்கப்படும்போது ஏற்படும் வலி என்னுடையது’ என்று மார்லன் ப்ராண்டோ ஒரு சமயம் கண் கலங்கக் கூறினார். இந்த வலி எல்லாக் கலைஞர்களுக்கும் பொதுவானது. கலைஞன் என்பவன் இருக்கும் வரை இதே வலியும் சாசுவதமாக இருக்கும். சசுவதமான இந்த வலியைப் பற்றிப் பேசும் ஜே.ஜே. சில குறிப்புகளும் சாசுவதமாக இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. நகுலனின் கதைகளில் இதுபோன்ற சாசுவதமான அம்சங்கள் ஏதும் இல்லை.

கோணங்கியின் சோதனை எழுத்துக்களைப் பற்றி உங்கள் பார்வை என்ன?

கோணங்கி ஒரு அற்புதமான எழுத்தாற்றல் மிக்க கலைஞன். அவர் தனது திறமைகளை வீணடித்து வருவதாகவே எனக்குப் படுகிறது. அவரால் மார்க்வெஸூக்கு இணையாகத் தமிழில் ஒரு நாவல் எழுத முடியும். அதற்கான மொழியும் தனது மண் மக்கள் சார்ந்த வாழ்க்கை அனுபவம் வாய்க்கப் பெற்றவர் கோணங்கி. ஆனால் அவரது பாணி வாசகனை பயமுறுத்துவதாகவே இருக்கிறது. அவரது எழுத்து முன் நவீனத்துவ (pre modren) எழுத்து என்றே எனக்குப் படுகிறது. 1919 இல் பிரான்ஸில் ஆந்த்ரே பிரதான் (andre breton) ஆரம்பித்து வைத்த சர்ரியலிஸ்ட் இயக்கத்தின் கோட்பாடுகளில் ஒன்று தானியங்கி எழுத்துமுறை (automatic Writing). தர்க்கத்தை எதிர்ப்பது சர்ரியலிஸத்தின் கூறுகளில் ஒன்று. தர்க்கரீதியான சிந்தனை இல்லாமல் ஹம்ப்டி டம்ப்டியைப் போல் வார்த்தைகளைப் பெருக்கிக் கொண்டே போவது; மூளையின் கட்டுப்பாட்டிலிருந்து கைகயை விடுவிப்பது; கை தானாகவே எதையாவது எழுதிச் செல்ல அனுமதிப்பது. ‘Evading to imposed meaning, combining with one another in obedience to no laws of rational discourse or poetic fancy’ என்று சர்ரியலிஸ்டுகள் பிரகடனம் செய்தார்கள். Auto writing என்பது எதிர் கலை எழுச்சி. மரபைக் கேலி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இன்றைய தேதிகளில் அவற்றுக்கு இலக்கிய மதிப்பு ஏதும் இல்லை. இப்போது auto writing காலாவதியாகிவிட்டது. பின் நவீனத்துவம் வாசிப்பு ஜனநாயகத்தைக் கோரும் இன்றைய யுகத்தில் கோணங்கி auto writing – ஐத் தேர்ந்தெடுத்திருப்பது துரதிஷ்டவசமானது. ‘இருண்மை’ (obscurity) என்பது உண்மைதான். அதற்காக வாசகனை இருட்டில் பிடித்துத் தள்ளிவிடக்கூடாது அல்லவா?

இப்போது தமிழில் இயங்கிக்கொண்டிருக்கும் சக படைப்பாளிகள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

இப்போது பலரும் பலவிதமான எழுதுகிறார்கள். பா. வெங்கடேசன், அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி போன்றோரின் எழுத்துக்களை வைத்தே ஒன்றுக்கொன்று மாறுபட்ட தளங்களில் நமது எழுத்தாளர்கள் இயங்கிவருவதை அனுமானிக்க முடியும். ரமேஷ் ப்ரேம் முக்கியமான படைப்பாளிகள். மெளனிக்குப் பின் அகவுலகம் சார்ந்த பிரச்சினைகளை வெற்றிகரமாக எழுதிவருபவர்கள். தமிழவன், தமிழ்ப் பின் நவீன எழுத்துக்கு முன்னோடி. குறிப்பிடத்தக்க படைப்பாளி. பாமா, யூமா வாஸூகி, ஜே.பி.சாணக்யா, அழகிய பெரியவன் போன்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் இளம் படைப்பாளிகள்.

கெளதம சித்தார்த்தன் புதுவகை முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியவை என்ற போதிலும் அவரது புதுவகை எழுத்து என்பது வெறும் மொழிப் பிரயோகத்துடன் நின்றுவிடுவது துரதிருஷ்டவசமானது. சாதாரண கதைகளை வித்தியாசப் படுத்தப்பட்ட மொழியில் எழுதுவது புதுவகை எழுத்து ஆகிவிடாது. இந்த பலவீனம் அவரது கதைகளில் காணப்படுகின்றன. எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் இது பொருந்தும். கலை இலக்கியத்தின் முக்கியமான கோட்பாடு Avoid Cliche என்பது. இதைத் தமிழிலும் கூறியது கூறல் குற்றம் என்பார்கள். சித்தார்த்தனிடம் சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லும் repetition தன்மை இருக்கிறது. மேலும் எதையும் இயல்பாக இல்லாது வலிந்து சொல்லும் போக்கும் அவரிடம் இருக்கிறது. இவற்றையெல்லாம் நீக்கிய நல்ல கதைகளை அவரால் எதிர்காலத்தில் எழுத முடியும் என்று நான் நம்புகிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் ‘நடந்தான்’ என்பதைக் கூட ’கால்களை முன்னசைத்து அலைவுற்றான்’ என்று எழுத விரும்புபவர்கள். இது ஒரு இயல்பான பெண் அதீத மேக்_அப் பூசி, உதட்டில் சிவப்புச் சாயம் தடவிக்கொண்டு சிரிப்பதைப் போல் வாசகனைப் பயமுறுத்துகிறது.

போஸ்ட் மாடர்னிசம் பற்றிச் சொல்லுங்கள்?

டெரிடா, பூக்கோ ஆகியோரை முதலில் படிக்க ஆரம்பித்தேன். போஸ்ட் மாடர்னிஸம் பேசியவர்களில் இடதுசாரிப் பின்னணி உள்ளவர்கள், ஆக்டோவியா பாஸ் போன்றவர்கள் இருந்தார்கள். சாவைக் கொண்டாடுகிறது போஸ்ட் மாடர்னிசம். ஓர் ஆக்கப்பூர்வமான போஸ்ட் மாடர்னிசம் இடதுசாரி சார்புடையதுதான் என்ற கருத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். மீன் சாப்பிடுகிறவர்கள் முள் இருப்பதற்காக மீனை விலக்குவதில்லை.

போஸ்ட் மாடர்னிசம் தமிழில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. லகான், பூக்கோ, டெரிடா ஆகியோரின் கட்டுரைகள் எளிய தமிழில் வரவேண்டும். பூக்கோ ஸாதேயை எதிர்த்தார். அவரின் செக்ஸ் பர்வெர்ஷனை எதிர்த்தார். செக்ஸ் பர்வெர்ஷன் என்பது ஆன்டி – போஸ்ட் மாடர்னிசம். ஆனால் போஸ்ட் மாடர்னிசத்தைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட எழுத்துக்களை எழுதுவது ஒரு முரண்பாடு. பின் – நவீனத்துவத்தை இதற்கு தவறாக தமிழில் புரிந்துகொண்டதுதான் காரணம். சாரு தன்னை ஒரு புத்திஸ்ட் என்று சொல்கிறார். ஆனால் எழுதும்போது பர்வெர்ஷன், சேடிஸம்என்று எழுதுகிறார். புத்தர் அகிம்சையைச் சொல்கிறார். சேடிஸம் பற்றி எழுதுவது ஹிம்சை பற்றி எழுதுவது இரண்டும் நேர் எதிர் துருவங்களைக் கொண்டவை. ஹிம்சையும் அஹிம்சையும் எப்படி ஒரே தட்டில் இருக்க முடியும்? அப்போது இதைப் பற்றி சந்தேகம் வருகிறது. இதைத்தான் முரண்பாடு என்று சொல்கிறேன். இவர்களால் மக்களும் ஏமாந்து போகிறார்கள். குழப்பம் வருகிறது.

எம்.ஜி. சுரேஷ்

எம்.ஜி. சுரேஷ்

ஆனால் இந்த எழுத்தாளர்கள் பூக்கோவையும், டெரிடாவையும் சொல்லிதானே பேசுகிறார்கள்?

இவர்கள் யாரும் பின் நவீனத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அல்லது புரிந்த போதிலும் அக்கறையுடன் நடந்துகொள்லவில்லை.

இப்போது அமெரிக்காவில் போஸ்ட் மாடர்னிசத்திலிருந்து நகர்ந்து நியோ ரியலிசத்திற்குப் போய்விட்டார்கள் என்று சொல்கிறார்களே?

சொல்கிறார்கள். ஆனால் இன்னும் அது ஒரு டிரெண்டாக உருவாகவில்லை. ரியலிசத்திற்குப் பிறகு தான் நியோ ரியலிசம் வந்தது. அதன் பிறகுதான் போஸ்ட் மாடர்னிசம் வந்தது. மீண்டும் பின்னோக்கிப் போக வேண்டியதில்லை. ஆனால் இப்போது அதுதான் அங்கே நடக்கிறது. இந்த முயற்சி பெரிய வெற்றியடையவில்லை.

பன்முகப் பார்வை என்பதை எளிமையாக எப்படிச் சொல்வீர்கள்?

ஜென்னில் நீ ஒரு மரத்தைப் பார்க்கிறாய் என்றால் அதை வெறும் மரமாகப் பார்க்காதே. மரம் என்பது வெறும் ஒருமைத்தன்மை. இந்த மரம் செடியாக இருந்தது அதுவரை அதற்கு இவ்வளவு தண்ணீர் தேவைப்பட்டது. சூரிய வெளிச்சம் தேவைப்பட்டது. இதெல்லாம் சேர்ந்ததுதான் இந்த மரம். ஒரு வீட்டில் ஒரு நாற்காலியைப் பார்த்தேன். இந்த மரத்தின் ஞாபகம் வந்தது. மரத்தைப் பார்க்கும்போது இவ்வளவு விஷயங்களோடு அந்த மரத்தை நீ பார்க்க வேண்டும். அதுதான் முழுமையான பார்வை என்கிறது ஜென். பன்முகப் பார்வை என்பது இதுதான்.

என்னுடைய நாவல்களில் இதைப் பார்க்கலாம். சைக்காலாஜி, ஆந்த்ரபாலஜி, ஆன்தாலஜி போன்றவற்றை இது ஒற்றைத் தன்மையைத் தவிர்க்க உதவும். போர்ஹே கதையில் இப்படி இருக்கும். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு கையை வைத்தால் அங்கே ஒரு அரிய தகவல் இருக்கும். அவர்தான் இதை ஆரம்பித்து வைத்தார். அந்த உத்தியைக் கலைக் களஞ்சிய எழுத்து முறை என்பார்கள். அதை நானும் ஸ்வீகரித்துக் கொண்டேன். கொடி அசைந்ததா காற்றசைந்ததா என்றால் மனம்தான் அசைகிறது என்கிறது ஜென்.

லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா பொன்ற நாடுகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்து இருக்க வேண்டும். தமிழில்தான் எழுத்தாளர்களுக்கு இலக்கியம் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஸ்டீபன் ஹாக்கிங்கை தமிழில் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்கிறார்கள். தமிழில் பிலாசபி படிப்பதில்லை. விஞ்ஞானிகள் அளவிற்கு பிரைமோ லெவி, இடாலோ கால்வினா போன்றவர்கள் கெமிஸ்ட்ரி பற்றியெல்லாம் எழுதுகிறார்கள். தமிழில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழில் தமிழ் நூல்களைக் கூட படிக்க மாட்டேன் என்கிறார்கள். பிரகு எப்படி வெளி நாட்டில் எழுதுபவற்றைப் படிப்பார்கள்.

சமகாலத்தில் வெளிநாட்டில் எழுதுகிற முறைகளை உத்திகளைப் படிப்பதில்லை. இதை யாராவது படித்து விட்டு பரிசோதனை முயற்சியாக எழுதினால் உடனே எதிர்க்கிறார்கள். இது தமிழ்த் தன்மையில்லை என்றோ நம்பகத் தன்மையில்லை என்றோ, போஸ்ட் மாடர்னிசம் 35 வருடங்களுக்கு முன்பே இறந்து போய்விட்டது என்றோ எழுதுகிறார்கள். இந்தப் பொறுப்பற்ற திண்ணைப் பேச்சுத்தான் தமிழனின் பூர்வீக சொத்து.

எம்.ஜி சுரேஷ்

எம்.ஜி சுரேஷ்

போஸ்ட் மாடர்னிசம் வந்த புதிதில் நம்மூர்க்காரர்களைப் போலவே மேற்கேயும் ஈகிள்டன் போன்றவர்கள் எதிர்த்தார்கள். அதையெல்லாம் மீறி போஸ்ட் மாடர்னிசம் இப்போது இங்கே ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது. இப்போது அடுத்த கட்டமாக உலகமயமாக்கல் புலம் பெயர்தல், கலாச்சாரக் குறுக்கீடுகள் போன்ற பல்வேறு தளங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்துவருகிறது. போஸ்ட் மாடர்னிசத்தைச் சுருக்கமாக போ.மோ. என்றழைக்கிறார்கள். இன்றைக்கு எந்த ஒரு பிரச்சினையையும் பின் நவீனத்துவ ரீதியில் மட்டுமே அலச முடியும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

மற்ற மொழிகளில் பேராசிரியர்கள் இலக்கியவாதிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நவீன இலக்கியம் தெரிவதால் வெளியுலகுக்குப் பரவலாகக் கொண்டு போகிறார்கள். தமிழில் இப்படியில்லை. தமிழ்நாட்டில் ஆங்கிலப் பேராசிரியர் ஆங்கிலம் மட்டும் படிப்பார். தமிழ் படிக்க மாட்டார். தமிழ்ப் பேராசிரியர் ஆங்கிலம் படிக்க மாட்டார். இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது. இங்கேயிருந்து யாரையும் முன்வைப்பதில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் அந்தந்த மொழிப் பேராசிரியர்களுக்கு நவீன இலக்கியம் தெரியும். இங்கே அப்படியில்லை. நாமே ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதில்லை. சிலப்பதிகாரமே இப்போதுதான் வெளியில் தெரிந்தது.

சமஸ்கிருதம் தான் இந்திய இலக்கியம் என்ற பார்வைதான் உலகத்தில் இருக்கிறது. தமிழில் நமக்கு முன்வைப்பதற்கு ஆட்கள் இல்லாமல் இல்லை. முன்வைப்பதற்குத்தான் மனம் இல்லை. தமிழில் அரசியல்வாதிகள் அரசியல் வாதிகளைத்தான் முன்வைக்கிறார்கள். குறள் பீடம் விருதை சுந்தரராமசாமி போன்றவர்களுக்குத் தராமல் கலைஞர் அவருக்கே கொடுத்துக் கொண்டார். அரசியல்வாதியும் ஆதரிக்கவில்லை. அகடமிசியென்களும் ஆதரிக்கவில்லையென்றால், வேறு எப்படி நவீனத் தமிழ் வெளியில் போகும்?

பின்னூட்டமொன்றை இடுக