லார்க் பாஸ்கரன் கவிதைகள்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid07rzNLmCvioFdBSjr99HFPhNX69XvMSM4G9eeLFXhCi3TGgoz6HPJLzC6F5yTg5uSl&id=100001966885751

உள்ளே வர மறுக்கிறது காற்று

————————————————

காற்றின் ஒரு பக்கத்தை

இன்று நெருக்கமாக சந்தித்தேன்

இடது கை விரலில்

அடிபட்டு

புண்களில்

வேர்த்துக்கொண்டிருந்த போது

காற்று அதன் வலியையும்

சேர்த்து காய வைத்தது

எப்போதும் உப்பு காற்றோடு தான்

அதிகமாக

நனைந்திருக்கிறேன்

சமீபமாக 

எனக்கான காற்றாக

கதவிடுக்கில்

சில்லென்று வீச

தொடங்கியது

நெடு நேரம் 

இருமிக் கொண்டிருந்தபோது

நூரையீரலில்

வெட்கையை

நகர்த்திவிட்டு

மூச்சை சிரமமில்லாமல்

விடத் தொடங்க வைத்த

காற்று

துக்க வீட்டில்

அமர்ந்திருந்த போது

சாவை உணர வைத்தது

ஜன்னலிடமிருந்து

சுவாசப் பாதைக்கு

வந்த போது

மூச்சு திணறல்

தொடங்கியது

விருட்டென எழுந்து

ஆக்ஸிசனிடம்

சந்தேகத்தை

எழுப்பினேன்

தற்போது

மாநகரம் முழுதும்

சாக்கடை காற்றை இழுத்தபடி

நொருங்கிப் போனது

மூளைச் செல்

தற்காலிகமாக

சுவாசிக்க

உள்ளே வர மறுக்கிறது

காற்று

-லார்க் பாஸ்கரன்-

சுழற்சி

—————–

மாயாவிலாசப் போக்காய்

நாட்கள்

சூர் காட்டிக்கொண்டிருக்கின்றது

அவன்

எதார்த்தங்களின் புள்ளியில்

பிசகாமல்

நடக்கிறான்

மனச்சோம்பல்களற்றவனாய்

காலத்தின் சுய குறிப்போடு ஒத்துப்போகிறான்

ஒரு சுழற்சிமுறை பயணமாக

வாழ்வை ரசித்திருக்கிறான்

பரவலான கேள்விகளுக்கு

விடைகளுக்கும் நடுவே

இயங்குகின்றான்

தனித்துவிடப்பட்ட ஒருவன் 

யாசிக்கும் இசையென

ஓடுகிறான்

கால்கள் தவ்விக் குதித்து

ஜனரஞ்சக புத்திக்குள்

புகுந்து கொண்டு

அனுபவங்களை

ரசிக்கிறான்

ஒளியின் வட்டத்தில்

நீயுட்டனின் விதியையும்

சேர்த்துக்கொள்கிறான்

பூலோக ரீதியான 

அமைப்பில்

சர்வங்களையும்

சச்சரவுகளையும்

அடைக்காக்கிறான்

ஏவிவிடப்பட்ட

அம்பொன்றை

கண்களின் காந்த விசையால்

தடுத்திருந்தான்

சூரிய சக்கரமாய்

அவ்விடம் சுற்றிக்கொண்டிருந்தன

பிரிவுகளுக்கு அப்பால்

சேர்ப்பிக்க வேண்டியதையும்

உள்ளுர பாயும்

மெய்களையும்

காப்பாற்றிக்கொண்டிருந்தான்

நிறைவான பொழுதுகளோடு

வாளேந்தி களத்தில் 

மெளனமாய்

கத்திக்கொண்டிருந்தான்

நாட்கள் மாறி மாறி

காயங்களையும்

அழுகைகளையும்

விரிக்கிறது

தேம்பிய மனம்

நூறாவது சுற்றில்

நின்றது

இயல்பின் சுவாரஸ்யங்கள்

மாய அனுபவத்தையும்

நிறங்களற்ற நாட்களையும்

கடத்திக்கொண்டிருக்க

புள்ளி சற்று

பறக்கத் தொடங்கியது.

-லார்க் பாஸ்கரன்,-

பின்னூட்டமொன்றை இடுக