போகன் சங்கர்

திருட்டுசாவி

கடந்த ஐந்து வருடங்களில் கவனம் பெற்ற எழுத்தாளர்களில்போகன் சங்கர் ஒரு நட்சத்திரம். பொதுவாக, குழந்தைக்கு சோறூட்டும் அம்மாக்களை போன்றவர்கள் கவிஞர்கள். அப்படியான ஒரு அம்மா என்னிடம் சமீபத்தில் சொன்னார், குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைக்கு ஊட்டி மீதமாகிற உணவை சாப்பிட்டே குண்டாகி விடுகிறார்கள் என்று. பெரும்பாலான நம் கவிஞர்கள் தம் கவிதைகளையும் சுற்றி உள்ளோர் கவிதைகளையும் படித்து படித்தே மூச்சுத்திணறி விடுகிறார்கள். அவர்கள் நாவல், கட்டுரை, தத்துவம், அரசியல், சமூகவியல், வரலாறு என நகர மாட்டார்கள் (விதிவிலக்குகள் உண்டு). போகன் அப்படி அல்ல. அவரது பரவலான தீவிரமான வாசிப்பு வியப்பூட்டுவது. மன அழுத்தம் பற்றின Noonday Demon எனும் தடிமனான நூலை வாசிக்க தொடங்கினேன். எதேச்சையாய் ஒரு நூலகத்தில் கண்டெடுத்த நூல் அது. மிக முக்கியமான அடர்த்தியான பதிவு. தன்வரலாறும் உளவியலும் கோட்பாடுகளுமாய் மன அழுத்தத்தை ஆராயும் ஒரு சாதனை நூல். ஒரு நாள் எதேச்சையாய் போகன் அந்நூலைப் பற்றி முகநூலில் போகிற போக்கில் குறிப்பிட்ட போது ஆச்சரியமானேன். ஆனால் வாசிப்பதை அப்படி முழுங்கி எழுத்தில் மேற்கோள்களாய் துப்ப மாட்டார். சுருக்கி தன் கட்டுரையாக எழுத மாட்டார். அதை ஜீரணித்து தன் கருத்தாக்கி புது பார்வையில் அளிப்பார். போகனின் கவிதைகளில் காணும் ஆழ அகலத்துக்கு இந்த வாசிப்பும் தீராத் தேடலும் ஒரு காரணம்.

முகநூலில் ஒரு விளையாட்டுத்தனமான முகமூடி அணிந்து பகடி பண்ணித் திரிவார். முகநூலில் பல நல்ல கவிதைகளையும், பல அரைகுறை கவிதைகளையும் சமமாக எழுதியிருக்கிறார். எழுதுகிற அனைத்தையும் பிரசுரித்து விடுவார். அவரது கவிதை மனம் அடையும் ஏற்ற இறக்கங்களை முகநூலில் அவரை தொடர்ந்தாலே பட்டவர்த்தமாகி விடும். எந்த மறைவுகளும் அற்ற இன்றைய காலத்துக்கான டிப்பிக்கல் கவிஞர்.

போகனின் மொழியின் அழகு யார் கண்ணிலும் படாத அவரது அற்புதமான உவமைகள். ஒரு கதையில் குழந்தையின் உதட்டைப் பற்றி சொல்லும் போது குளிர்ந்த ஆரஞ்சு சுளை போல என்பார். இப்படி பல எதிர்பாராமல் முதுகைத் தொட்டழைக்கும் உவமைகள் அவரிடம் உண்டு. அவரது impressionable ஆன மனம் எலிகளை பிடிப்பதற்கான பசை அட்டை போல என நினைக்கிறேன். அதில் கோடிக்கணக்கான காட்சிகள் ஒட்டிக் கிடந்து கைகால்களை போட்டடிக்கின்றன. அவை அவர் மொழி வழி இறங்கி வெளியே ஓடுகின்றன. நான் அடிக்கடி படித்து பொறாமைப்படுகிற மொழி போகனுடையது. அந்த மொழி, நாம் நம் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் பலவித நெருக்கடிகளின் உளவியல், அறம் போன்ற அவரது தீவிரமான பேசுபொருட்கள், பகடி ஆகியவை தான் இத்தனை பேரை அவரது எழுத்து நோக்கி கடந்த சில வருடங்களில் இழுத்து வந்துள்ளது.

போகனை ஒருமுறை சென்னையில் இரு கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன். காப்காவின் விசாரணை நாவலில் வரும் நாயகன் போலவே நடந்து கொள்வார். ரொம்ப சிரித்து பேசினால் கைது பண்ணி விடுவார்களோ எனும் பாவனை. கசப்பான ஒரு நகைச்சுவை பேச்சில் தொனிக்கும். முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு சுண்டு விரலால் கண்ணாடியை அடிக்கடி மூக்கின் மேல் அட்ஜஸ்ட் செய்யும் மேனரிசம். குறிப்பாக மனதிற்குள் எதையோ நோண்டியெடுத்து வெளியே சொல்லும் போது அப்படி செய்வாராக இருக்கலாம். பார்த்தவுடன் ஒட்டிக் கொள்கிற மனிதராக தெரியவில்லை. ஒரு சின்ன நுண்ணோக்கியுடன் தனக்குள் ஓடும் கடிகாரத்தை ஆய்வு செய்து நகர்கிற அகவயமான மனிதர்.

ஆனால் அவருக்குத் தான் எத்தனை எத்தனை ரசிகைகள். இரண்டாம் முறையாக அவரை உயிர்மை கூட்டத்தில் சந்தித்த போது “உங்களுக்கு எப்படி இவ்வளவு பெண் விசிறிகள் அமைகிறார்கள்?” என்றேன். “எனக்கே தெரியலீங்க” என்றார். அவரது உணர்ச்சி கொப்புளிக்கும் மொழி, அதன் எளிமை, நாடகீயம், மென்மை, தொட்டாற் சிணுங்கும் குழந்தை போன்ற தொனி ஆகியவை காரணமாய் இருக்கலாம் என என் மூளை சொன்னது. அதே மேடையில் இருந்த மனுஷ்யபுத்திரனிடம் முன்பு பலமுறை இக்கேள்வியை கேட்டிருக்கிறேன். “அதுக்கு நீங்க கவிதை எழுதணுங்க” என்பார். கவிஞர்கள் பேரழகர்களாக இருக்க வேண்டியதில்லை. கவிமொழியில் ஒரு மேஜிக் இருந்தால் போதும்!

 

இந்த பீடிகை எல்லாம் இன்று பிறந்த நாள் காணும் போகன் சங்கருக்கு வாழ்த்து சொல்லத் தான். தமிழ்க் கவிதையில் ஒரு அற்புத நிகழ்வு நீங்கள் நண்பா! தொடர்ந்து பயணியுங்கள்.

பின்னூட்டமொன்றை இடுக