வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள்

இலக்கணம்

 

சின்ன குதிரை, சின்னக் குதிரை: இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

நடுவில் வருகிற ஒரு ‘க்’தான் வித்தியாசம். ஆனால் அதனால் இவற்றின் பொருளே மாறிவிடுகிறது:

சின்ன குதிரை என்றால், சின்ன + குதிரை, சிறிய, small குதிரை

சின்னக் குதிரை என்றால், சின்னம் + குதிரை, அதாவது, ஓர் அரசியல் கட்சியின் தேர்தல் சின்னமாகவோ, ஒரு நிறுவனத்தின் வணிக இலச்சினை(logo)வாகவோ பயன்படுத்தப்படும் குதிரையை இப்படி அழைக்கலாம்

இதேபோல் இன்னும் சில உதாரணங்கள், இவற்றில் வரும் இரு சொற்களிடையே அர்த்தத்தில் என்ன மாற்றங்கள் வரக்கூடும், ஏன் சிலவற்றில் ‘க்’, ‘ச்’, ‘ப்’, ‘த்’ வருகிறது, சிலவற்றில் வரவில்லை என்று கொஞ்சம் யோசியுங்கள் (இவற்றுக்கான விளக்கங்களை இதே அத்தியாயத்தின் பின் பகுதியில் பார்ப்போம்).

* தங்க குடிசை Vs தங்கக் குடிசை
* வேர்ச் சொல் Vs வேர் சொல்
* ஊக்கப் பரிசு Vs ஊக்க பரிசு
* தந்தத் தட்டு Vs தந்த தட்டு

‘க்’, ‘ச்’, ‘ப்’, ‘த்’ போன்ற எழுத்துகளைச் சேர்ப்பது அல்லது நீக்குவது இப்படி ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடுமா என்றால், ஆமாம். கொஞ்சம் கவனமாகவே யோசித்து எழுதவேண்டிய தமிழ்ப் பகுதி இது.

நல்லவேளையாக, இந்த விஷயத்தைத் தமிழ் இலக்கண நூல்கள் மிக விரிவாகப் பேசியிருக்கின்றன. மேற்கண்ட நான்கு எழுத்துகளை எப்போது சேர்க்கவேண்டும், எப்போது சேர்க்கக்கூடாது என்பதுபற்றிய தெளிவான நெறிமுறைகள் உள்ளன. அடுத்த சில அத்தியாயங்களில் இவற்றை விளக்கமாகப் பார்க்கவிருக்கிறோம்.

இலக்கணப் புத்தகங்களில் இந்தப் பகுதியை ‘வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள்’ என்று அழைப்பார்கள். அதாவது, ‘க்’, ‘ச்’, ‘த்’, ‘ப்’ ஆகிய நான்கு வல்லின எழுத்துகள் எங்கே வரவேண்டும் (வலி மிகும்), எங்கே வரக்கூடாது (வலி மிகாது) என்று விவரிக்கும் நெறிமுறைகள் இவை.

உதாரணமாக, ‘கையைப் பிடித்தான்’ என்று எழுதும்போது, இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் ‘பி’ என்ற பகர வர்க்க எழுத்து வருகிறது. ஆகவே, முதல் சொல்லின் நிறைவில் அதே குடும்பத்தைச் சேர்ந்த ‘ப்’ என்ற வல்லின மெய் தோன்றுகிறது, இதைதான் ‘வலி மிகும்’ என்று அழைக்கிறோம்.

இன்னோர் உதாரணம், ‘கையில் புறா’. இங்கே இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் ‘பு’ என்ற பகர வர்க்க எழுத்து வந்திருந்தாலும், முதல் சொல்லின் நிறைவில் அதே குடும்பத்தைச் சேர்ந்த ‘ப்’ என்ற வல்லின மெய் தோன்றவில்லை. ‘கையில்ப் புறா’ என்று நாம் எழுதுவதில்லை. இதைதான் ‘வலி மிகாது’ என்கிறோம்.

எப்போது வலி மிகும், எப்போது மிகாது என்று படிப்படியாகப் பார்ப்போம். அதற்குமுன்னால் ஒரு சந்தேகம், வல்லினம் என்றால் மொத்தம் ஆறு எழுத்துகளாச்சே, ஆனால் இங்கே நான்குதானே வருகிறது. மீதமுள்ள இரண்டு?

‘ட்’, ‘ற்’ ஆகிய வல்லின எழுத்துகள் இங்கே விடுபட்டிருப்பது உண்மைதான். ஆனால், அவைபற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. ஏனெனில், ‘ட’, ‘ற’ ஆகிய எழுத்துகளோ அவற்றின் குடும்பத்தைச் சேர்ந்த டா, றா, டி, றி போன்ற எழுத்துகளோ சொல்லின் தொடக்கத்தில் வராது. ஆகவே, ‘ட்’, ‘ற்’ என்ற வல்லின எழுத்துகள் முந்தைய சொல்லின் இறுதியில் வருவதற்கு (அதாவது வலி மிக) வாய்ப்பே இல்லை!

முதலில், வேற்றுமை உருபுகள் ஒவ்வொன்றிலும் வலி மிகுமா, மிகாதா என்பதை உதாரணங்களுடன் பார்த்துவிடலாம்.

* முதல் வேற்றுமை உருபு: பெயர் : வலி மிகாது

உதாரணம்: கண்ணன் பிடித்தான்

* இரண்டாம் வேற்றுமை உருபு: ஐ : வலி மிகும்

உதாரணம்: கண்ணனைப் பிடித்தேன்

* மூன்றாம் வேற்றுமை உருபு: ஆல் : வலி மிகாது

உதாரணம்: கண்ணனால் பிடிக்கப்பட்டேன்

* நான்காம் வேற்றுமை உருபு: கு : வலி மிகும்

உதாரணம்: கண்ணனுக்குப் பிடித்தது

* ஐந்தாம் வேற்றுமை உருபு: இன் : வலி மிகாது

உதாரணம்: கண்ணனின் சிறந்தது

* ஆறாம் வேற்றுமை உருபு: அது : வலி மிகாது

உதாரணம்: கண்ணனது சிந்தனை

* ஏழாம் வேற்றுமை உருபு: கண் : வலி மிகாது

உதாரணம்: கண்ணனின்கண் சென்றேன்

* எட்டாம் வேற்றுமை உருபு: விளி : வலி மிகாது

உதாரணம்: கண்ணா, பாடு

‘ஹையா, பாடம் ஓவர்’ என்று கிளம்பிவிடாதீர்கள். இதில் இன்னொரு சிக்கல் பாக்கியிருக்கிறது.

வேற்றுமை உருபுகள் நேரடியாக அன்றி, மறைமுகமாகவும் வரும் (வேற்றுமைத் தொகை) என்று பார்த்தோம். உதாரணமாக, ‘தண்ணீர் கொட்டினான்’ என்றால், அதன் அர்த்தம், ‘தண்ணீரைக் கொட்டினான்’ என்பதுதான். இங்கே ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு ஒளிந்திருக்கிறது.

இப்படி வேற்றுமை உருபுகள் நேரடியாக வராமல் ஒளிந்து வந்தால், வலி மிகுமா? வலி மிகாதா? அதற்கான நெறிமுறைகள் இவை:

* முதல் வேற்றுமைத் தொகை: பெயர் : மறைந்து வராது

* இரண்டாம் வேற்றுமைத் தொகை: ஐ : மறைந்து வந்தால் வலி மிகாது

* மூன்றாம் வேற்றுமைத் தொகை: ஆல் : மறைந்து வந்தால் வலி மிகாது

* நான்காம் வேற்றுமைத் தொகை: கு : மறைந்து வந்தால் வலி மிகாது

* ஐந்தாம் வேற்றுமைத் தொகை: இன் : மறைந்து வந்தால் வலி மிகாது

* ஆறாம் வேற்றுமைத் தொகை: அது : மறைந்து வந்தால் வலி மிகாது

* ஏழாம் வேற்றுமைத் தொகை: கண் : மறைந்து வந்தால் வலி மிகாது

* எட்டாம் வேற்றுமைத் தொகை: விளி : மறைந்து வராது

என்ன? தலை சுற்ற ஆரம்பித்துவிட்டதா? இது அத்துணை சிரமம் இல்லை. 8 + 8 = 16 விஷயங்களைப் படித்துச் சிரமப்படாமல், எளிதில் நினைவில் வைத்துக்கொள்வதற்கான சூத்திரம் இங்கே:

* வேற்றுமை உருபுகள் நேரடியாக வந்தால்: 2(ஐ), 4(கு) ஆகியவற்றில்மட்டும் வலி மிகும் (‘ஐஸ்க்ரீமுக்கு ஆசைப்பட்டுப் பல் வலி வந்தது’ என்று மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்!)
* வேற்றுமை உருபுகள் ஒளிந்து வந்தால் (வேற்றுமைத் தொகை): எப்போதும் வலி மிகாது (”கையில் தொகை (ரூபாய், டாலர், துட்டு, மனி) இருந்தால் வாழ்க்கையில் வலியே இருக்காது” என்று மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்!)

இப்போது, ஓர் எளிய பயிற்சி. இந்த வாக்கியங்களில் எங்கெல்லாம் வலி மிகும் எங்கெல்லாம் வலி மிகாது என்று யோசித்துத் திருத்தி எழுதுங்கள்:

* மீரா பாடினாள்
* மீராவின் பாடலை படித்தேன்
* மீராவுக்குப் பிடித்த தெய்வம் கண்ணன்
* ‘கண்ணா, காப்பாற்று” என்று பாடினாள் மீரா
* கண்ணனை கும்பிட்டாள்
* கண்ணனால் காப்பாற்றப்பட்டாள்
* மீராவது கண்ணன் இனிமையானவன்
* மீராவின்கண் பக்தி நிறைந்திருந்தது
* பக்தி இலக்கியத்துக்கு பல சிறந்த பாடல்களை தந்தவள் மீரா

வலி மிகும், வலி மிகா இலக்கணத்தில் வேற்றுமை உருபுகள், வேற்றுமைத் தொகைகள் அடிப்படையிலான இந்தப் பாடம் ஓர் ஆரம்பம்தான். இன்னும் பல விஷயங்கள் உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அ, இ என்ற சுட்டெழுத்துகளைப்பற்றியும், ‘எ’ என்ற வினா எழுத்தைப்பற்றியும் ஏற்கெனவே பேசியிருக்கிறோம். இவையே ‘அந்த’, ‘இந்த’, ‘எந்த’ என்றும் நீளும்.

இந்தச் சொற்கள் அனைத்துக்குப்பிறகும் க, ச, த, ப என்ற வல்லின வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்துகள் வருமானால், அங்கே வலி மிகும். உதாரணமாக:

அச்சிறுவன்
இச்சிறுமி
அந்தச் சிறுவன்
இந்தச் சிறுமி
எந்தச் சிறுவன்?
எந்தச் சிறுமி?

அடுத்து, பெயரெச்சம். இதைப்பற்றியும் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம், ஒரு சொல்லுக்குப் பின்னால் பெயர்ச்சொல் வரும்படி எஞ்சி நிற்பது பெயரெச்சம். உதாரணமாக, ‘அடுத்த மாணவன்’, ‘ஓடிய குதிரை’…

பெயரெச்சங்களுக்கு எப்போதும் வலி மிகாது. ‘ஓடிய குதிரை’தான், ‘ஓடியக் குதிரை’ என்று எழுதக்கூடாது. மேலும் சில உதாரணங்கள்:

* படித்த பாடம்
* குதித்த தவளை
* சிறந்த கணவன்
* இனிக்கும் சாதம்
* தைத்த சட்டை

‘இனிக்கும் சாதம்’ என்று எழுதினால் அங்கே வலி மிகாது. ஆனால் ‘இனிப்புச் சாதம்’ என்று எழுதினால் வலி மிகும். இது ஏன் என்று ஊகிக்கமுடிகிறதா?

முதல் வாக்கியத்தில் ‘இனிக்கும்’ என்பது பெயரெச்சம், ஏனெனில், ‘சாதம்’ என்ற இரண்டாவது சொல்லைச் சேர்க்காமல் அது நிறைவு பெறாது. ஆகவே, வலி மிகாது, ‘இனிக்கும் சாதம்’ என்று எழுத வேண்டும்.

அதையே ‘இனிப்பு’ என்று எழுதினால், அது தனித்து பொருளைத் தருகிறது, எஞ்சியுள்ள ‘சாதம்’ என்பது வேறு சொல். ஆகவே, பெயரெச்சத்துக்கான ‘வலி மிகாது’ என்ற சூத்திரம் இங்கே பொருந்தாது. இது ஏன் ‘இனிப்புச் சாதம்’ என்று மாறுகிறது என்பதற்கான புணர்ச்சி இலக்கணத்தைப் பின்னர் தனியாகப் பேசுவோம்.

இதேபோல், மேலே நாம் பார்த்த ‘சின்ன குதிரை’ என்பதில் ‘சின்ன’ பெயரெச்சம், ஆகவே வலி மிகாது, அதையே ‘சின்னம் + குதிரை’ என்று மாற்றும்போது வலி மிகுந்து ‘சின்னக் குதிரை’ என்று மாறுகிறது. ‘தங்க குடிசை’ என்பதில் ‘தங்க’ பெயரெச்சம், வலி மிகாது, தங்கம் + குடிசை என்றால் வலி மிகும். ‘ஊக்க பரிசு’ என்பதில் ‘ஊக்க’ பெயரெச்சம், வலி மிகாது, ஊக்கம் + பரிசு என்றால் வலி மிகும்…

பெயரெச்சத்தில் இரு வகை உண்டு. நேர்ப் பெயரெச்சம் (ஓடிய குதிரை), எதிர்மறைப் பெயரெச்சம் (ஓடாத குதிரை). இந்த இரண்டிலும் வலி மிகாது.

ஆனால், ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என்ற ஒரு வகையில்மட்டும் வலி மிகும். உதாரணமாக:

* ஓடிய குதிரை : நேர்ப் பெயரெச்சம் : வலி மிகாது
* ஓடாத குதிரை : எதிர்மறைப் பெயரெச்சம் : வலி மிகாது
* ’ஓடாத’ என்பதில் ஈறு, அதாவது நிறைவு எழுத்து ‘த’ என்பதை நீக்கிவிட்டால், ‘ஓடாக் குதிரை’, இங்கே ‘க்’ வரும், அதாவது வலி மிகும்!

இதேபோல் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலி மிகும் உதாரணங்கள் இன்னும் சில: பொருந்தாக் காதல், அருந்தாத் தாகம், பறக்காக் கிளி, பாடாக் கவிதை (ஆனால் ‘பாடாவதிக் கவிதை’ என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அல்ல!)

அடுத்து, வினையெச்சம். இதுவும் பெயரெச்சத்தைப்போலவேதான். ஆனால் இரண்டாவதாக வருவது வினைச்சொல்லாக, ஒரு செயலாக இருக்கும். உதாரணமாக, ‘மெதுவாக ஓடினான்’, ‘பாடி ஆடினான்’…

வினையெச்சத்தில் எப்போதும் வலி மிகும். உதாரணமாக:

* என்னைப் பார்த்தான்
* உன்னைக் கேட்டான்
* அருமையாகப் பாடினான்
* அழகாகச் சிரித்தாள்
* வேகமாகத் தாவினான்

இந்த அத்தியாயத்தில் இவ்வளவு வலி போதும். மீதத்தை அடுத்த அத்தியாயத்தில் அனுபவிப்போம்!

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* இரண்டாம் சொல்லின் முதல் எழுத்து வல்லின வர்க்கமாக இருந்தால், முதல் சொல்லின் நிறைவில் வலி மிகலாம், அல்லது மிகாமலும் இருக்கலாம்
* வல்லினத்தில் க், ச், த், ப் சில நேரங்களில் மிகும், ட், ற் எப்போதும் மிகாது
* இரண்டாம் (ஐ) வேற்றுமை உருபு, நான்காம் வேற்றுமை உருபு (கு) ஆகியவற்றில் வலி மிகும், மற்றவற்றில் மிகாது
* வேற்றுமை உருபுகள் மறைந்து வந்தால் (வேற்றுமைத் தொகை) வலி மிகாது
* அ, இ, எ, அந்த, இந்த, எந்த ஆகியவற்றில் வலி மிகும்
* பெயரெச்சத்தில் வலி மிகாது (நேர், எதிர்)
* ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலி மிகும்
* வினையெச்சத்தில் வலி மிகும்

பின்னூட்டமொன்றை இடுக