புராதன நினைவின் கையெழுத்து-பிரம்மராஜன் கவிதையாக்கம் பற்றி…

mubeen sadhika

‘ஒரு பிரதி முதல் பார்வையிலிருந்தும் முதல் கோணத்திலிருந்தும் அதன் உருவாக்கத்திலிருந்தும் அது விளையாடும் விதிகளிலிருந்தும் மறைந்து போவதாக அல்லாமல் இருந்தால் அது பிரதியே அல்ல[1]

‘கவிதை வருவதல்ல, வந்து சேர்வதல்ல, நிகழ்வதல்ல, அதன் மறைவை(விதியை) அறிவிப்பது(செய்தி). கவிதையின் பெயரிடலும் பொருளாக்கமும் அதன் மறைவைக் குறிப்பவை’[2].

மறைவின் பிரதியாய் மறைவின் செய்தியை மறைவின் விதியை மொழி போன்ற பரிமாற்றத்தில் கொண்டு செயல்பட்டவை பிரம்மராஜனின் கவிதைகள். ‘வா இரு போ என்ற கவிதைக்குள் இருக்கும் போ இரு வா’ என்ற சொற்களுக்கு அறிந்த பொருளாக அல்லது அறியாத பொருளாக வருதல், செல்லுதல், இருத்தல் என்பதை ஒத்திப் போட்டு அழைப்பு விளிகளாக இருக்கும் இவற்றை மாற்றியும் கலந்தும் பிரித்தும் நேராக்கியும் நெகிழியின் விளிம்புகளில் ஒட்டியிருக்கும் ஈர்ப்பாக மாற்றி கோர்க்கிறது கவிதைப் புள்ளி. இந்தக் கவிதைகளை அணுகுவது பொருளைக் கட்டுடைப்பதோ அல்லது மறுகோர்வையாக்குவதோ அல்ல. சொல்லிலிருந்து பொருளையோ அல்லது பொருளிலிருந்து சொல்லையோ மீண்டும் ஒரு முறை படைப்பாக்கம் செய்து பார்ப்பதும் அல்ல. சொல் போன்ற ஒன்றைத் திக்கிப் பார்ப்பது. பொருள் போன்ற ஒன்றை இணை வைத்துப் பார்ப்பது. இந்தப் பார்த்தல் என்பது புகைப்படத்தை அல்லது ஓவியத்தைப் பார்க்கும் பார்வையிலிருந்து கடன் வாங்கி அதில் இழந்த ஒன்றைக் கவிதையில் ஒட்டி வைத்துக் கொள்வது. அல்லது இசையின் சேர்க்கையைக் கேட்பதிலிருந்து சேகரித்து கவிதையை நோக்கித் தருவித்துக் கொள்வது. பிரம்மராஜனின் கவிதைகளை உள்வாங்குவதற்கு இங்கு சில செயல்வகைகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பிரம்மராஜனின் கவிதைத் தொகுப்புகளில் ‘ஞாபகச் சிற்பம்’ ‘புராதன இதயம்’, மஹாவாக்கியம்’ மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றை வாசிப்பதற்கும் இன்னும் பல செயல்வகைகள் தேவைப்படுகின்றன. இயன்றவரை முயன்றுபார்த்து பெற்ற கருத்துகள் இங்கு தொகுக்கப்படுகின்றன:

-ஓவியக் கித்தான் மீது சொற்களை மடித்தல்

-மௌனத்தின் உருவகமாகும் கவிதை உருவம்

-பாதிக்கும் கவிதை தாக்கும் படைப்பு

-பிரதியின் இசை பதியும் கேளாச் செவி

-அகம், மாற்றகம், எதிர் அகம், பேரகம் ஒலிக்கும் கவிதை

…………..

1.ஓவியக் கித்தான் மீது சொற்களை மடித்தல்

‘ஓவியர் வெற்று கித்தானின் மீது வரைவதில்லை அதே போல் ஓர் எழுத்தாளரும் வெற்றுக் காகிதத்தின் மீது எழுதுவதில்லை; ஆனால் வெற்றுக் கித்தானும் வெற்றுப் பக்கமும் முன்பே இருக்கும் முன்பே நிலைபெற்ற வழமைகளால் நிரம்பியிருப்பதை அழிக்கவேண்டிய, தூய்மைப்படுத்தவேண்டிய, தட்டையாக்கவேண்டிய, தூள்தூளாக்கக்கூடிய அவசியம் ஏற்படுகிறது, நம் பார்வையைத் தரும் ஒழுங்கற்றத் தன்மையில் கட்டுப்பட்டிருக்கும் காற்றை அது விடுபடவைக்கிறது.’[3]

கவிதையின் சொற்கள் உண்மையின், மொழியின் சொற்களா? அவற்றுக்குள் உருவாகும் பொருளும் ஏற்புடைய பொருளா? இந்தக் கேள்விகளின் அடிப்படையில் கவிதை என்பது என்ன என்ற விடையும் எடுத்துக் கொண்ட பிரம்மராஜனின் கவிதை என்பது என்ன என்ற விடையும் சேர்த்துக் காணமுடியும். கவிதைக்குள் திக்கித் திணறி ஊசலாடும் சொற்கள் இதுவரையிலான மொழி அமைப்புக்குள் நிழலாடியவை என்ற கற்பிதம் ஒன்று உருவாகிறது. குறிப்பாக, பிரம்மராஜனின் சொற்கள் அந்த மொழி அமைப்பைத் தாண்டி செல்லும் தளம் நீர்மையின் தகவுறாத வடிவத்திற்குள் இழைந்திருப்பவையாக உள்ளது. ஸ்லைம் போன்ற ஒரு திடமும் திரவமும் அற்ற நிலையில் இருக்கும் இடைப்பட்ட வடிவம். அதில் பொருள் என்று கட்டுப்படுத்த முடியாத தன்மை அதன் ஒட்டாத பண்பைக் காட்டுவது போல் இருக்கிறது.

தமிழில் இருக்கும் தமிழுக்கு அப்பாலையான ஒரு மொழி இந்தக் கவிதைகளுக்குள் செயல்படுகிறது. அதில் பொருள் ஒளி போல் ஊடுருவலாம். ஆனால் அதுவாகவே ஆகிவிடாது. அறிந்த சொற்கள் அறிந்த பொருள் என்பதான முன் ஏற்பாடுகளுடன் பிரம்மராஜனின் கவிதைகளை அணுகமுடியாது. அறிந்த சொற்கள் அறியாத பொருள் என்பதாக அணுகினால் வேறு ஒரு திசை தெரியும். ஆனால் அறியாத சொற்கள் அந்தக் கவிதை பக்கத்தில் ஓர் அதிர்வை உருவாக்கிக் கொண்டிருக்கும் உருவங்களாக அணுகினால் கவிதையின் வாசித்தல் செயல்பாட்டைச் செய்யமுடியும்.

கவிதைக்குள் சொற்கள் அவற்றிற்குப் புறத்தில் இருக்கும் பொருட்களால் ஆளப்படுவதாக ஒரு நம்பிக்கையிலிருந்து கவிதை வாசிப்பு நிகழ்கிறது. கவிதை ஒரு பொருளைக் கொண்டிருப்பது ஒரு மடிப்பாகவும் மடிப்புக்குப் புறத்தில் இருப்பது அதை ஆட்டுவிப்பதாக இந்தப் பிம்பம் உருவாகிறது. கவிதைக்குள்ளான சிந்தனையும் வெளியும் அகத்தையும் புறத்தையும் ஒரு கோடு போல் பிரித்து மடிப்பில் கலக்கிறது. கவிதை உருவாக்கும் இந்த மடிப்புப் பொருளுக்கு அருகாமையையும் தூரத்தையும் ஒரே புள்ளியில் அல்லது கோட்டில் நிகழ்த்துகிறது.

பிரம்மராஜனின் ‘புராதன இதயம்’ கவிதைத் தொகுப்பில் இருக்கும் ‘புதிய உபாசனையில் ஒன்பது வரையறை’ என்ற ஓர் கவிதை:

காகித ஓலம் கற்பனைக் கடல் மடை

கன்னிமையின் விபரீத ஜ்வாலை

நெருப்பு உமிழும் தீராத சாம்பல் புகை

காலை:நிமிட நெருடலற்ற எம்பாவாய்

மாலை:நிகழ் உறைந்த நிழற்படம்

நாளை:காமிரா இமையாத 35மிமீ ஓவியம்

நீ:தோணியோடு மற்றோர் உடல்

  பட்டுச்செல்லும் உலர் களைப்பு

நாம்:அறியப்பட்டதின் அறியா ஆம்கள்

     நானின்

நீ: நற்றிணைப் பாடல் தலைவி

துல்லியமான இல்லையின் எல்லை

பார்த்ததின் கேட்டதின் கேளாமை

நினைவு மீட்பில் சொற்சாட்டை

கடல்:ஓவியன்

மணல்:மரங்கள் மலைகள் மாற்றுப் பாதைகள்

       புனைந்து புனைந்தழியும் நித்தியக் கித்தான்

முதற்காதலுக் கிணையாகும் இக்கணத்திலும்

இதயம் பதைக்கும் அக் க்ஷணத்தின் இதழ்கள் பதிந்து

மிதந்து வரும் முதலும் முற்றும் ஓவியம்

மழை: நிகழ்ந்தவற்றின் நினைவின் கோடை

      அகழ்ந்து விரியும் வனம்

எல்லாமே பார்த்ததின் எங்கோ

இந்தக் கவிதையின் ஓட்டத்தை இப்படி வாசிக்கலாம்:

காகித ஓலம்

சொற்களின் ஒரு குறிப்பிட்ட இரைச்சல்

சொற்களின் ஓசை

மொழியுடன் இயைபற்ற பொருள் குறித்த ஒலி

…….

காகிதம் என்பதாக இருக்கும் கவிதை எழுதப்பட்ட இடம். அதன் மீதான சொற்கள் அல்லது உருவகங்கள் அல்லது ஒலித் துணுக்குகள் அல்லது கவிதையின் லிபி அது எழுப்பும் ஓலம்.

காலை, மாலை, நாளை, நீ, நாம், (நீ) கடல், மணல், மழை என்ற ஒன்பது சொற்களும் இயல் வாழ்வின் பேச்சில் புழங்குபவை. ஆனால் கவிதைக்குள் இவை அதே இயைபுடன் புழங்கவில்லை. இந்த ஒன்பது சொற்களும் வரையறைகளாக உள்ள மறைவை உள்ளிணைத்து உபாசனைக்கான செய்தியைச் சொல்கின்றன. ‘பார்த்ததின் கேட்டதின் கேளாமை நினைவு மீட்டல் சொற்சாட்டை’ என்று பார்க்கும் கேட்கும் மடிப்பு வெளியே மடிக்கப்பட்டு உள் இருப்பது நினைவு மீட்டலாகக் கவிதை சொல்கிறது.

பிரம்மராஜனின் கவிதைகளில் சொல் என்பது பொருளின் பெயரிடல். இதுவரை அறிந்த மொழியின் செயற்பாடான பெயரிடலை போலச் செய்து, ஸ்தூல பொருளுக்குப் பெயரிடுகிறது கவிதை. அந்தப் பெயரிடல் கவிதையின் மொழியாகிவிடுகிறது. பெயரிடல் மூலம் கவிதையை அணுகும் மொழியும் மற்றொரு பெயரிடலைக் கோருகிறது.

2.மௌனத்தின் உருவகமாகும் கவிதை உருவம்

‘மொழி வாழ்வல்ல; வாழ்க்கை மீது ஆணையிடுகிறது. வாழ்வு பேசுவதில்லை; அது கவனிக்கிறது காத்திருக்கிறது.[4]

‘கதையாடல் என்பது தகவல் தொடர்பில் இருப்பதல்ல, பார்த்ததைச் சொல்வதில் அல்ல அதைக் கேட்டதைப் பரவலாக்குவதில்தான் கதையாடல் இருக்கிறது.’[5]

மௌனம் உருவகமாய் கவிதையின் ஆக்கத்தில் கட்டப்படுகிறது. பௌதீக மௌனத்தின் தேடலாய் அது இருந்தாலும் கவிதையின் ஓசை, மௌனத்தைக் கேட்க வைப்பதற்கான எத்தனிப்பைச் செய்கிறது. இந்த ஓசைக்கும் மொழியின் உறுப்புகளுக்கும் இடையேயான ஊடாட்டம்தான் பொருளாம்சம் என்பதாகப் படிகிறது. மௌனம் படியும் துறை. தர்க்கத்தின் நிகழியல்பை ஒதுக்கிவிட்டு விலக்கிவிட்டு கவனமாய் கவிதையின் சாத்தியத்தை மொழியில் உருவாக்கிப் பார்ப்பதுதான் படைப்பாக்கம்.

உருவகம் என்பது ஒன்றைச் சொல்வதற்காக வந்து நிற்கும் மற்றொன்று. இரண்டும் சொற்களாக இருந்தாலும் நேரடி பொருள் விளக்க அகராதியின் துணுக்குகள் அல்ல அவை. குறிப்பாக, கவிதைக்குள் அவற்றின் செயல்பாடு மௌனத்தைத் தூரப்படுத்துவதும் மொழியை அடுக்காக மாற்றுவதுமாக இருக்கிறது. இந்த உருவகங்கள் மொழியை உரு மாற்றுகின்றன. வேற்று வடிவத்தைப் பூணவைக்கின்றன. கவிதைக்குள் ஒரு தொடர் செயல்பாடாக இது நடக்கிறது.

மௌனம் ஒலிக்கும் ஓசைக்கும் எதிரானது என்று கொண்டால் சொல்லுக்கும் பொருளுக்கும் இடையிலுள்ள பொருள் மௌனத்தைத் தாண்டியதாகவும் மொழியின் எல்லையைத் தொட்டுவிடுவதாகவும் ஆகிவிடும். மௌனத்தை உருவகித்தல் என்பதுதான் கவிதையாக்கம் என்று கற்பித்தால் அரூப மொழியைக் கைக்கொண்டு பொருள் உற்பத்தியை மட்டுப்படுத்திவிடலாம். இயைபான சொல்லுக்குள் மொழியையும் மொழியைக் கடந்த மௌனமும் ஒருங்கே இருப்பதாகச் சொல்வதன் மூலம் பொருளின் நிராசையை ஓரளவு மீட்க முடியும். ஏனெனில் அரூப மொழி என்பது இயல் மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அதன் வடிவம் இதுவரையில் தீர்மானிக்கபட்ட வடிவமாக இல்லாதது. உருவகத்திற்கு அருகில் இருப்பது. மற்றமையின் மொழி அது. அது தொடர் குறிகளை உருவாக்கி தொடர் குறித்தலாக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். இத்தகைய மௌனச் சித்திர மாய உருவகங்களை பிரம்மராஜனின் கவிதை வரிகளில் காணமுடியும்.

உதாரணமாக ‘ஞாபகச் சிற்பம்,’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒரு கவிதை ‘போதந்தேடி/போதத்தேடி’ என்ற கவிதை:

ஆளின்றி விரைகிறது குதிரை

விருஷம் வளர்ந்து பிளக்கிறது

பிணத்தின் அறையை

ஆல விருஷம்

கால விருஷம்.

*

நீருக்கடியில் முதலை

உமிழ்கிறது உலகின் முதல் ஐ

கொடியோடி பூ விரிந்து

பறவைகள் பெருகி

புணர்ந்து புறப்பாட்டான ஜீவன்

வீழ்கிறது மீண்டும்

மண்ணில் ஒரு செல் உயிரியாய்

மீண்டும் புறப்பாடு

போதம் புலப்படாது.

*

உள் சுழல் வட்டங்கள்

மையமே மெய்

மற்றெல்லாம் மாய் ஐ.

*

பறவையாய் மிருகமாய்

மனிதாய்

நீ போதம் தேடிப் போன பின்

இங்கொரு மரம்

மண் பிளந்து பேதம் அறுத்து

போதமென்றது

மரத்தடியில் எவருமில்லை.

*

திகைத்துப் பீதிக் கனவுகண்டு

கனவேயில்லாத

உறக்கம் தேடித் திரிகிறான்

இந்த நூற்றாண்டின்

போதத்தேடி.

…….

ஐ என்ற ஒற்றை ஒலி அ,இ என்ற இரு ஒலிகளின் சேர்க்கை. ஒலியைக் கேட்டு ஒலியற்ற மௌனத்தின் உருவகமாக இந்தக் கவிதைக்குள் மொழியின் அடியில் பயணிப்பதை உணர முடிகிறது. போதம் என்பது ஞானமாக இருக்கலாம், புரிதலாக இருக்கலாம், நனவிலியாக இருக்கலாம். இதெல்லாம் மௌனத்தை ஒத்திவைத்தல்தான். ஆனால் இதில் ஐ என்ற ஒலியின் செயல்பாடுதான் கவனத்தைக் குவிக்க வைக்கிறது.

உலகின் முதல் ஐ(முதலை), மாயை(மாய் ஐ), இல்லை(இன்மை) இந்தச் சொற்களில் ஒட்டியிருக்கும் ஐ-யைத் தேடுவதுதான் போதத்தேடியின் பணி. வாசகரின் பணியும் கூட. இன்மை போல் (நீரின்) உள் சுழல் வட்டங்களின் மையத்தில் இருப்பது போல் கவிதையின் முதலில் பிளந்த மரம் பின்பு மண்ணைப் பிளந்த மரம் என்று போதம் என்று எதையும் தேடிப் போகமுடியாததாகிவிடுகிறது. தன்(ஐ) என்ற பிளவாகவும் இது ஊகம் கொடுக்கிறது. ஐ என்ற உருவகம் மௌனத்தின் உருவமாக மொழியைத் தூரப்படுத்தி அரூபத்தை முன்வைக்கிறது. போதம் அறிந்த கணம் வியப்பு(ஐ) மேலிடும்.

தேடல்(புத்தனின் தேடல், சுயத்தின் தேடல்) என்ற ஒற்றை செயல் என்பதைப் பின் தொடர்வது மட்டுமே இந்தக் கவிதைக்குள் முடிகிறது. அரூப ஐயின் புலன் செயல்பாடு பார்த்தலாகவும் கேட்டலாகவும் பரவலாகவும் எல்லைப்படுத்தப்படாததாகவும் வடிவமற்றதாகவும் புனைந்து கொள்ளப்படுகிறது.

பாதிக்கும் கவிதை தாக்கும் படைப்பு

‘படைப்பு என்பது உணர்வின் மொழி’[6].

‘அனுபவம் கலையின் அனுபவமாக மாறலாம் ஏனெனில் இயல் வாழ்வின் உள்ளுறையானது அப்பாலை நிலையாக செயல்பாடுகளில் தொனிக்கிறது. அது பொதுவாக அனுபவத்தைத் தீர்மானிப்பதாக இருப்பதோடல்லாமல் இயல்வாழ்வை இங்குமங்குமாகத் தொடர்ந்து கடந்து செல்கிறது. மேலும் அது இயல் வாழ்வின் உணர்வுகளால் கட்டப்பட்டும் இருக்கிறது’[7].

உணர்வுகளைக் கொண்டு படைப்பாக்கம் நிகழ்கிறது. உணர்வுகள் படைப்பாகின்றன. படைப்பில் சேமித்து வைக்கப்படுவது உணர்வுகளின் கூட்டுத் தொகுப்பான புலனுணர்வு எண்ணமும் தாக்கமும்தான். புலனுணர்வு எண்ணம் என்பது உணர்வு ரீதியாகப் பொதுமையாக்கப்படும் ஒன்றல்ல. இது தனிப்பட்ட நபர்களுக்குத் தக்கபடி மாறும். தாக்கம் என்பது உணர்வுகளோ அல்லது பாதிப்போ அல்ல. அதை அனுபவிப்பவரைத் தாண்டி செல்லக்கூடிய ஒன்று. படைப்பு என்பது உணர்வின் இருப்பு. படைப்பு தனிப்பட்ட ரீதியில் புலன்களைத் தூண்டி தாக்கமும் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

படைப்பு பிரதிபலிப்பதாகத் தெரிவதற்குக் காரணம் படைப்பில் வரும் எந்த ஒன்றும் பொருளின் ஸ்தூல நிலையோடு உணர்வு கொண்டிருக்கும் உறவினால்தான். படைப்பில் பயன்பட்டிருக்கும் பொருளும் அதைப் பற்றிய உணர்வும் ஒன்றல்ல. படைப்புக்குள் சேமித்து வைக்கப்பட்டிருப்பது புலனுணர்வின் எண்ணமும் அது கொடுக்கும் தாக்கமும்தான். படைப்பில் இருக்கும் பொருளின் நிலைபெற்ற செல்வாக்கு உணர்வைத் தக்கவைக்கிறது. பாதிப்பையும் தாக்கத்தையும் தொடரவைக்கிறது.

பாதிப்பும் தாக்கமும் உருவாகுதலுக்கு இட்டுச் செல்கிறது. வான்கோவின் படைப்பில் ஒரு பூ, சூரியகாந்தி ஆவது போல் இந்த உருவாகுதல் படைப்பாளியின் அனுபவத்தைப் புலனுணர்வின் எண்ணமாகவும் அதனால் ஏற்படும் இயல் வாழ்வு பாதிப்புகள் பொதுவான தாக்கமாகவும் உருவாகின்றன. இயல்வாழ்வின் அனுபவங்கள் படைப்புக்குள் சுழலும் அலை போல மாறிவிடுகின்றன. அவற்றை இயல்வாழ்வின் கூறுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு அவற்றின் பாணி படைப்புக்குள் உருமாறிவிடுகிறது.

பாதிப்பும் தாக்கமும் ஏற்படுத்தும் உருமாற்றம் அமனித நிலையில் உருவாகுதலாக இருப்பதாகும். உருமாறுதல் என்பது பிரதிபலிப்பு அல்ல. படைப்பின் காரணமாக ஒரு நிலை அல்லது ஸ்திதியிலிருந்து மற்றொன்றாகுதல். உணர்வுக்குள் நிகழும் ரசாயன மாற்றம்.

எழுத்தாளர் மொழியைத் திரித்து அதிர வைத்து விடுபட வைத்து உணர்வுகளின் தாக்கத்திலிருந்து வெறும் புலனுணர்வு எண்ணமாக வெளிப்படுத்தவும் தாக்கங்களிலிருந்து வெறும் பாதிப்பாகவும் உணர்வு நிலையை வெறும் கருத்திலிருந்தும் மாற்றி வெளிப்படுத்துகிறார். பிரம்மராஜனின் படைப்புகளில் உணர்வுநிலைகள் இதுவரை அறியாத ஒரு புனைவின் உணர்வெல்லைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அந்த எல்லையின் ஸ்திதியிலிருந்து பொருளின் உணர்வும் வாசிப்பின் உணர்வும் உருமாற்றம் அடைவதைக் காணமுடிகிறது.

‘புதிய கில்லட்டீன்’, ‘பறவை ஒன்றின் பால்யம்,’ ‘விரல்களின் இறப்புக்குப் பின் ஒரு தாவரம்’ போன்ற கவிதைகளில் இது போன்ற உணர்வுநிலைகளின் உருமாற்றமும் அது ஏற்படுத்தும் பாதிப்பும் தாக்கமும் பொதுமையான உருவாகுதலாக இருப்பதைக் காணமுடியும்.

உதாரணமாக, ‘கவிதை எழுதும் ரோபாட்’ என்ற கவிதையை வாசிக்கலாம்.

மண்டையின் உட்சுவர் தூரிகை நினையா

வர்ணங்கள் தீராத ராகங்கள் காதுகள்

எட்டாத் தொலைவரிசையில்

முற்பகலே இருட்டாகும்படி

பட்டாம்பூச்சிகள் மிதந்து

பாதங்கள் விண்ணில் பதிய

குரலே ஆகாசம் மனதிற்கருகில் கட்டுப்படும்

பூவின் நீலநிறம் துருப்பிடித்து

யான் ஒரு ரோபாட்

தொழில் நுணுக்க மணல்சில்லு

என்பினும்

தராசு முள் தாழ்வது

எப்புறம் இவ்வமைப்பு

என்றாவது சொல்லித் தயாராகவே

மனிதர் விளையாட

விரும்புவதாகும் விளையாட்டு

வெளித்திரையில்

நிறம் பிரித்துச் சொல்லும்

ஓநாய்க் குரல்

நிஜ நானின் ஒளிப்பரல்

நாயாய் தலைகீழாய் பேயாய்

எழுதிக் கொண்டிருப்பது

நீதான் எனும் நான்

……….

இந்தக் கவிதையில் ரோபாட்டின் கவிதை என்ற எதிர்பார்ப்பு அமனித புனைவுக்கான முயற்சி என்பதைச் சுட்டுகிறது. ரோபாட்டின் கவிதை எழுதும் சக்தி பற்றிய கற்பனைக்குள்ளிருந்து அந்த ஸ்தூலப் பொருளின் வெளிப்பாட்டிலிருந்து மொழிக்குள் பிரவேசம் நடக்கிறது. ரோபாட்டின் உணர்நிலை மனித உணர்நிலைக்கு நிகராக்க எந்திரத்தின் தன்னிலை கட்டமைக்கப்பட்டிருப்பது பற்றி ஒரு விளக்கம் கிடைக்கிறது.

நான் என்பது ரோபாட். நீ என்பது மனிதன். நான் என்பது மீண்டும் ரோபாட். மனிதாம்சத்திலிருந்து கடன் பெற்ற தன்னிலை ரோபாட்டாக உருமாறியிருக்கிறது. இனி எந்திரங்களின் மொழியாக்கம் படைப்பில் நிலைபெறப் போவதாக இந்தக் கவிதை முன்வைக்கிறது. மேலும் எந்திரமாவது இங்கு மனிதம். மனிதமாவது எந்திரம். இந்த உருமாற்றம் உணர்நிலைக்குள் நடக்கிறது. ஸ்தூலப் பொருட்களின் உருமாற்றம் அல்ல.

எந்திரம் என்ற ஸ்தூலப் பொருளுடன் மனித உணர்வுக் கொண்டிருக்கும் உறவு, அமனித உணர்வுக்குள் இருப்பதாகக் கவிதை தலைகீழாக்குகிறது. எந்திரத்தின் வர்ணனை மனிதம் போன்ற பல குணாம்சங்களைக் கொண்டதாகத்தான் இருக்கிறது. மனித ரத்தத்திற்குப் பதிலாக நிறங்கள், குரல் ஓநாய் போல் ஒளியற்ற இருளிலும் உயிர் பெறும் இயக்கம்.

மொழியை விளையாட்டாக எழுதும் எந்திரம் இது. மேலும் இதில் குறிப்பிடத்தக்க ஒன்று மனித சிந்தனை மறைந்து அல்லது மறந்து மொழியைத் திரிக்கும் விளையாட்டு மட்டுமே நடக்கிறது. எழுதும் இயக்கம் பாதிப்பைத் தரும். ஏனெனில் எழுத்தின் மூலம் அல்லது தன்னிலைக்கான சந்தேகம் சங்கேதமாகிறது. அதனால்தான் நானும் நீயும் கலந்து நான் என்பதாக உருமாறுகிறது.

பிரதியின் இசை பதியும் கேளாச் செவி

‘ஒலிக்கும் பிம்பத்திற்கும் உள்ள வேறுபாடு அவைகளின் எல்லைநீக்கத்தோடு தொடர்புடையது’[8].

‘ஒலி முப்பட்டையான தளத்தில் நிகழ்கிறது. இரு பரிணாம தளத்தில் அல்ல. அது இடம் சார்ந்தது காலம் சார்ந்ததல்ல, கிளைபரப்புவது ஒரே மாதிரியானதல்ல, அது நகல் போலி அல்ல. அது அறிவியல் பாற்பட்டது. மீ ஒலி வகையானது[9]‘.

பிரதியில் ஒலிக்கும் இசை சொல்லின் வழியில் சமமான இசைவை உருவாக்குகிறது. சொல் பயன்பாட்டில் அது இடைவெளியுடன் கூட இருக்கலாம். இசையை ஒலியாய் அறிதல் என்பதை விட மொழியாய் அறிதலாக இங்குக் காணவேண்டியிருக்கிறது. இசையின் தொனிப்பாக அது இருப்பதைவிட மொழியின் ஒலிப்பாகத்தான் அதை உணர முடிகிறது. இசையின் கற்பனையும் மொழியில் இசையாய் பரிணமிக்கப்பட்ட வாசகமும் இணைவதாக ஏற்கும் தன்மையே பிரதியின் இசையைக் கேட்டலாகிறது. ஆனால் பிரதியின் இசை பெரும்பாலும் கேளாததாகவே நின்றுவிடுகிறது. கேட்கும் புலனில் திறனின்மையும் நினைவுகோர வேண்டிய கோரிக்கையும் பிரதியின் இசையை மௌனிக்கச் செய்துவிடுகின்றன.

‘அச்சம்’ என்ற சொல் அல்லது எழுத்து அச்சம் என்ற பொருளின் குவிமைய கற்றையாகப் பிரதியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அதன் பாதிப்பு உணரப்படுகிறது. ஆனால் இசையின் ஒழுங்கமைவு தனித்தன்மை கொண்டதாக இருப்பதால் பிரதிக்குள் நிகழும் இசை கேளாச் செவியின் புலனுணர்வைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. இசை கிடைக்கோட்டுத் தளத்திலும் குத்துக்கோட்டுத் தளத்திலும் நிகழ்வது. அது காலவெளி சார்ந்தது. இசை கிளைத்துப் பரவும் குணாம்சம் கொண்டது. அதன் ஒருங்கமைவுக்குள் பயணிப்பது பிரதிக்குள் பயணிப்பதிலிருந்து வேறுபட்டது.

இசையின் கணக்கு ஒழுங்கமைவின் நகலாக இருக்கிறது. ஆனால் பிரதிக்குள் ஒலிக்கும் போது அதன் கணக்கையும் ஒழுங்கமைவையும் கண்டடைவது பிரதிக்கு வெளியே நிகழும் இசையின் ஒத்திசைவோடு தொடர்புடையதாகிவிடுகிறது. இசை சரிசமமான ஒலிப்பில் நிகழ்கிறது பிரதிக்குள் அது விடுபட்டு இடைவெளியுடன் கேட்கிறது.

இசையின் எல்லையாக்கம் பிரதிக்கு வெளியே இருக்கிறது. பிரதிக்குள் கேட்கும் இசை மொழியை மறு எல்லையாக்கம் செய்கிறது. மொழியின் ஒலிப்பையும் இசையின் ஒலிப்பையும் பிரிக்க இந்த எல்லையாக்கம் முதன்மையான செயற்பாடாக இருக்கிறது. மறுஎல்லையாக்கம் மூலம் இசை மீண்டும் மொழியிலிருந்து தனித்து ஒலிக்கவும் செய்கிறது.

பிரம்மராஜனின் கவிதைகள் பல இசையை உள்ளிணைத்த கவிதைகளாக இருக்கின்றன. இந்தக் கவிதைகளில் ஒலிக்கும் இசை, நிறத்தின் குணாம்சத்தையும் விலங்கின் பண்பையும் காலத்தின் ருசியையும் காட்டுகின்றன. இசையை ஒலிக்கச் செய்ய-கேளாத செவியின் புலனுணர்வுக்கு எட்டச் செய்ய நிறத்தின் உதவியும் விலங்கின் பரிணாமும் கால-வெளியின் தொடர் மாற்றமும் நாடப்படுகிறது. கவிதையின் இசை மொழியின் லயத்தைக் கூட்டினாலும் அது தனிப்பட்ட வாழ்வை கவிதைக்குள் கோரி நிற்கிறது. பிரம்மராஜனின் கவிதையின் இசை மற்றொரு கவிதையாக ஒலிக்கிறது.

உதாரணமாக, ‘ஒருவன் ஒரு உயிர் 5 36 16 12’, ‘இறந்த மனிதனின் இசைத்தட்டுகள்’ ‘சொல்லோலங்கள்’, ‘ஏப்ரலில் இசை,’ ‘தூசு படிந்த இசைத்தட்டு,’ தீ தரும் இசை,’ ‘புராதன இதயம்’ போன்ற பல கவிதைகள் பாடும் இசை கேட்காத செவிக்குள் அதிரும் ஒலிச்சேர்க்கையாக இருக்கிறது.

பிரம்மராஜனின் கவிதைக்குள் ஒலிக்கும் இசையைக் கேட்க இயல் வாழ்வின் இசை குறித்த ஆழமான அறிமுகம் தேவை. உதாரணமாக ஞாபகச் சிற்பம் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற ‘ஒருவன்/ஒரு/உயிர்/5/36/16/12 என்ற கவிதையின் இசையைக் கேட்கலாம்.

செங்கல் சுவற்றில் பச்சைநிற ஆப்பிள்

ஒன்று முழிக்கிறது செல்லுமிடம் குறித்து

திசைகாட்டிகளின் முன்னால் திகைக்கிறது ஒரு கார்

டாக்ஸி என்ஜினைப் போல் துடிக்கும் மனிதர்கள்

லிப்ஃடின் 5வது பித்தானை அழுத்துகின்றனர்

தானாக மூடிக்கொள்ளும் விருப்பம் கொண்ட

கதவுகளுக்குப் பின்னால் தன் மூளையை

இசைத்தட்டு இயக்கும் இயந்திரத்திடம்

கழற்றிக் கொடுத்துவிட்டு ஒருவன்

அமர்ந்திருக்கிறான் கருணாம்ருத சாகரத்தில்

மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன 36 வயலின்கள்

16 வயலோக்கள் 12 செல்லோக்கள் மற்றும் பியானோக்கள்

இவ்விசை எங்கே எட்டப்போகிறது

காதற்ற மனிதர் மனங்களை அப்போதுதானே

இப்பிரபஞ்சம் கடந்து வெளிமண்டல சஞ்சாரம்

வலி வயோதிகம் வறுமை எதனையும் அறியாத

நட்சத்திரங்கள் இறந்தபின் இரண்டரை வருடம்

கழித்து ஒரு செய்தி உனக்கு ஒளியால் உமிழப்படுகிறது

நாம் செத்துக் கொண்டிருக்க

ஒரு வாழ்நாளைச் செலவழித்து

சில்லறை மிஞ்சாமல் பார்த்துக் கொள்கிறோம்.

……

கேளாச் செவியின் இசையை இந்தக் கவிதையில் கேட்கமுடிகிறது. 36 வயலின்கள் 16 வயோலாக்கள் 12 செல்லோக்கள் பியோனோக்கள் இசைத்தால் மோசார்ட், பீத்தோவன் போன்ற அறிஞர்கள் அமைத்த சிம்பொனி ஒலிக்கும். பியானோ குவார்ட்ரட் என்ற இசைக் கோர்வையை இப்படி அழைக்கிறார்கள். இந்த இசை இந்தக் கவிதையில் ஒலித்திருக்க காதை கழற்றிக் கொடுத்த ஒருவருக்கு மட்டும் இது கேட்கவில்லை. அல்லது காதை கழற்றிக் கொடுப்பவர்கள் யாருக்கும் இது கேட்காது.

இசை என்பது அனுபவித்துக் கேட்க வேண்டியது, காதின் புலனுணர்வைத் தீட்ட. ஆனால் அதற்குப் பதில் அதில் வேறு ஒலிகள் நிறைந்திருக்கின்றன. அந்த ஒலிகளைத் தவிர்த்து அல்லது மீறி இசை கேட்க எத்தனிக்க முடியாது. அதனால்தான் காது கழற்றிக் கொடுக்கப்பட்டு வேறு கவலைகள், வாழ்வின் அனுபவங்கள் நிறைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. கவிதை இசைக்கும் சிம்பொனி அந்த இயல்வாழ்வின் கொடூரமான ஓசையில் அமிழ்ந்து போகும். நட்சத்திரங்கள் அழிந்த செய்தி வந்த சேர்ந்தாலும் இயல்வாழ்வின் மற்ற சிறிய சிக்கல்கள் தீராமல் இருக்கும். இசையை ஒழித்து பேரண்டச் செய்தியை மறுத்து மற்ற பிரச்னைகள் பெரிதாகும். இசையைக் கேட்காத காதுக்கு சிம்பொனி இசைப்பது மற்றொரு கவிதையாக இக்கவிதைக்குள் ஓடுகிறது.

அகம், மாற்றகம், எதிர் அகம், பேரகம் ஒலிக்கும் கவிதை

தன்னிலை என்பது ஒரு குழப்பமான இடம் அங்குதான் அறிந்தநிலையில் உடல்கள் பற்றிய தெளிவு பிறக்கும்[10]

தன்னிலை என்பது முதலாவது முதன்மையான பிரதேசத்தின் வடிவத்தைப் பிரதிநிதித்துவம் செய்வது[11]

தன்னிலை உருவாக்கம் எப்படி நடக்கிறது என்றால் ஒரு குழந்தை தன் தாயின் சேவையைப் பெற்றுக் கொண்டிருக்கையில் அது தனது தாயின் தனினலையைத்தான் தனதாகக் கருதிக் கொள்கிறது. பிறர் அந்தக் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ பிற உயிராகவோ பார்ப்பதில் தனது பிரித்தறிய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறது. தனது தானை பிறரின் மற்றமையால் வடிவமைத்துக் கொள்கிறது. இந்தக் குழப்பநிலைதான் தன்னிலையாக்கத்தின் முதல் நிலை. அங்குதான் தான்/பிற என்ற பிளவும் உடைப்பும், தான் என்ற ஒரு பிரதேசம் பிற என்பது எல்லை என்பதான கருத்தாக்கங்களும் தோற்றம் கொள்கின்றன.

தமிழின் கவிதைப் புலத்தில் உருவாகியிருக்கும் அகம் பற்றிய விரிவான ஆய்வுத் தேவைப்படுகிறது. பிரம்மராஜனின் கவிதைகளில் தன்னிலை உருவாக்கியிருக்கும் அகம் பல வகைமைகளில் வெளிப்படுகிறது. வெற்று அகமாக, மாற்றகமாக, எதிர் அகமாக, பேரகமாக பல முகங்களைக் கொண்டதாக அது உள்ளது.

குறியியல் கோட்பாடு குறிப்பான்களின் குறித்தலாக்கத்தை கிடைக்கோட்டு தளத்திலும் குத்துக்கோட்டுத் தளத்திலும் விளக்கமடையச் செய்கிறது. இந்தக் கிடைக்கோட்டு, குத்துக்கோடு குறித்தலாக்கத் தளங்கள் தான் மற்றும் பிற என்ற எல்லைகளுக்குள் நிகழ்த்தும் ஆய்வாக கவிதைக்குள் செயல்படும் தன்னிலை ஆய்வு இருக்கும்.

தன்னிலையாக்கத்தில் குறி அமைப்பு உருவாக்கும் தர்க்க ரீதியான எல்லைகளைக் குறித்தலும் அதனால் இணைப்பும்/விடுத்தலும் நிகழ்வதும் நடக்கிறது. தன்னிலைதான் பிரதேசத்தை வரையறுக்கிறது. எல்லையாக்கம் செய்கிறது. அந்தப் பிரதேசத்திற்குள் அதன் அடையாளம் வெளிப்படுகிறது. அந்தப் பிரதேசத்திற்குள் அதன் ஆளுகை இருக்கிறது. தன்னிலையின் அதிகாரம் பிற தன்னிலைகளை ஏற்கவோ மறுக்கவோ செய்கிறது.

தன்னிலை தனது எல்லையை விட்டுக் கொடுக்காமல் நடத்தும் போராட்டமும் எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியும் அதிகார அனுபவத்திற்கான ஒன்றாக மாறிவிடுகின்றன. இலக்கியத்திற்குள் இந்த அதிகாரம், எல்லைநீக்கம், எல்லையாக்கம் செயல்படுவது பற்றி ஆய்ந்தறிந்தால் தன்னிலை பற்றிய விளக்கத்தைத் தெளிய முடியும்.

பிரம்மராஜனின் கவிதைகளில் செயல்படும் தன்னிலையை சில கவிதைகள் மூலம் அறியலாம்:

நான் துழாவுகிறது தன்னைப் புதைக்க

ஏற்ற புதை மணல் கனவை

மேலதீத நான் துழாவுகிறது

அடிமனச் சங்கிலியில் விரும்பித் தொலைத்த அகதிக் கடவுளை

பிரதிமையின் போலிகளே நானிடம்

வந்து கொண்டிருக்கின்றன

பிரதிமையின் போலிகள் என்ற கவிதையில் வந்த வரிகள் நான் என்ற தன்னிலையாக்கத்தின் உருவாக்கலை மத, பாலின அடையாளத்தில் எல்லையாக்கம் செய்கிறது. தான்/பிற என்பதில் தன்னை உருவாக்க பிறன்மையை வடிவாக்கம் செய்கிறது கவிதை. இது அகத்தின் உருவாக்கம்.

சிலரால் நான் என்ற கவிதையில்

நீயோ நீங்களோ நீவிரோ

இழையும் பிழை

எமக்குள் எங்களுக்குள்

உம் நம்மில் ‘தான்’ கள் சுழல் ‘நான்’ கள்

…..

மனம் எனும் பெற்று என்றும்

என் கனவு மலர்

உன் காதல் பட்டுப் புழு

இந்தக் கவிதையில் முன்னிலையில் பட்டுத் தெறிக்கும் தன்னிலையை உருவாக்க முனைகிறது கவிதை. ஓர் எதிர் அகமாக அது உருவகமாகிறது. என் கனவு மலர் என்றும் உன் காதல் பட்டுப் புழு என்றும் இணை வைத்து எல்லைகளைத் தெளிவாக வரையறுத்துவிடுகிறது.

‘தெரிதல் புரிதல்’ கவிதையில்

நான் எழுதிக்கொண்டிருப்பதை

எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதிக் கொண்டிருக்கிறேன்

என்பதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எழுதிக் கொண்டிருப்பதாக எழுதுவதை

எழுதுகிறேன்.

எழுதுவதை எழுதுகிறேன் என்று

எழுதிக் கொண்டிருப்பதை எழுதுகிறேன்.

எழுதுவதால் எழுதுகிறேன்.

….

இந்தக் கவிதையில் எழுதும் நான் தனது செயல்பாட்டைப் பேசுகிறது. தன் எல்லைக்கான அடையாளத்தை வரையறுக்கிறது. தன் அதிகாரத்திற்குள் இருப்பனவற்றை அடுக்குகிறது. இந்த அதிகாரம் புறத்தின் பிறன்மையின் வரையறையிலிருந்து உருவானதாக உருக்கொள்கிறது. அது மாற்றகமாக கருக்கொள்கிறது.

இந்த வகையில் வளர்ந்த அகம் பேரகமாக ஒரு வரியில் எழுதிக்காட்டுகிறது ‘அணுவில் நீ; நிகழில் நான்’ என்று. இது தன்னிலையின் எல்லை விரிவடைந்து புற உலகத்தின் விளிம்புவரை வந்து நிற்கிறது. மூலக்கூறாக இருக்கும் முன்னிலையும் பருண்மையான தன்னிலையும் விளக்கப்படும் இடமாக இந்தக் கவிதை வரி உள்ளது.

விளைவு:

பிரம்மராஜனின் கவிதைகளை அறிதல் என்பது அது போன்ற ஒரு இணை கவிதையாக்கத்தை நிகழ்த்துதல் ஆகிறது. அந்தக் கவிதைகளின் மொழியை வாசித்தல் அறிந்த மொழியைத் திக்கிப் பார்த்தலாக உள்ளது. ஏனெனில் பிரம்மராஜனின் கவிதைகளில் சொல் என்பது பொருளின் பெயரிடல். இதுவரை அறிந்த மொழியின் செயற்பாடான பெயரிடலை போலச் செய்து, ஸ்தூல பொருளுக்குப் பெயரிடுகிறது கவிதை. அந்தப் பெயரிடல் கவிதையின் மொழியாகிவிடுகிறது. பிரம்மராஜனின் கவிதைகளில் உள்ள மௌனம் பௌதீக மௌனத்தின் தேடலாய் இருந்தாலும் கவிதையின் ஓசை, மௌனத்தைக் கேட்க வைப்பதற்கான எத்தனிப்பைச் செய்கிறது. பிரம்மராஜனின் படைப்பாக்கம் நிகழ்த்தும் தாக்கம் கவிதை வாசிக்கும் வகைமையை மாற்றி அமைக்கிறது. இந்தக் கவிதைகளில் இசைக்கும் ஓசையை ஒலியாய் அறிதல் என்பதை விட மொழியாய் அறிதலாக இங்குக் காணவேண்டியிருக்கிறது. பிரம்மராஜனின் கவிதைகளுக்குள் நிகழ்த்தப்பட்ட அகம், உருவாக்கிய பிரதேசம் வரையறுக்கும் எல்லையை ஆய்வு செய்வது தமிழ் கவிதை புலத்தின் தன்னிலை ஆய்வுக்கான முதன்மை தரவாக இருக்கும்.

1. Performance stylistics: Deleuze and Guattari, poetry and (corpus) linguistics
KIERAN O’HALLORAN
King’s College London Received: 16 February 2012 / Accepted: 2 July 2012
2.Stretching Language to Its Limit:
Deleuze and the Problem of Poiesis
Frank Stevenson Department of English National Taiwan Normal University, Taiwan Concentric: Literary and Cultural Studies 35.1March 2009: 77-108

3.Territory and Subjectivity: the Philosophical Nomadism of Deleuze and
Canetti-Simone Aurora

4.THE PROBLEMATICS OF HUMAN SUBJECTIVITY:
GILLES DELEUZE AND THE DEWEYAN LEGACY- INNA SEMETSKY

5.Revolution in Poetic Language
]ulia Kristeva
Translated by Margaret Walter
with an Introduction by Leon S. Roudiez
Columbia University Press New York

6. A Thousand Plateaus-capi tal ism and schizophrenia-Deleuze and Guattari
translation and f o r e w o r d by
brian massumi

[1] Jacques Derrida, La dissemination (Paris: Seuil, 1972) 79. ‘A text is not a text unless it hides from the first glance, from the first comer, the law of its composition and the rules of its game.’

[2] Poetry does not come, does not arrive, and does not happen, except by way of the announcement (news) of its disappearance (its law). The poetic, the name and the thing, would be that which remarks its disappearance- The Poetic Thing (On Poetry and Deconstruction) John W. P. Phillips

[3] The painter does not paint on an empty canvas, and neither does the writer write on a blank page; but the page or canvas is already so covered with preexisting, preestablished clichés that it is first necessary to erase, to clean, to flatten, even to shred, so as to let in a breath of air from the chaos that brings us the vision-What is Philosophy, Deleuze, Guattari, (tr) Hugh Tamlinson, Graham Burchell, New York, Columbia University Press(1991), 204

[4] Language is not life; it gives life orders. Life does not speak; it listens and
waits- A Thousand Plateus, Deleuze, Guattari, P.75

[5] We believe that narrative consists not in communicating what one has
seen but in transmitting what one has heard- A Thousan Plateus, Deleuze, Guattari, P.75
[6] Art is the language of perception-Deleuze, What is philosophy? p.176
[7] Phenomenology must become the phenomenology of art because the immanence of the lived to a trancendental subject must be expressed in transcendental functions that not only determine in general but traverse the lived itself here and now, and are embodied in it by constituting living sensations-Deleuze, what is philosophy? p.178
[8] A Thousand Plateaus where Deleuze and Guattari develop a distinction between sound and image on the basis of their respective power of deterritorialisation
[9] As we have stated before, the investigator dog’s relation to sound takes place within a three-dimensional free-floating space rather than in a two-dimensional, vectorial one; it is spatial rather than temporal; rhizomatic rather than identical; simulacral rather than mimetic; towards the ultimate science, a science of the meta-audible. – Deleuze on Sound, Music and Schizo-Incest Zafer Aracagök http://www.rhizomes.net/issue19/aracagok.html

[10] It is a chaotic space that “is and becomes a precondition for creating the first measurable bodies” (translation of Kristeva, 1977, 57).

[11] Subjectivity represents the first and principal form of territory.

பின்னூட்டமொன்றை இடுக