துயரங்களினூடாகக் கற்றல்

Abdul Haq Lareena

ஏ.பி.எம். இத்ரீஸ்

மிலேனிய யுகத்தின் தொடக்கத்தில் இருந்தே லறீனா அப்துல் ஹக்கின் எழுத்துச் செயற்பாடு பற்றிய கவனம் என்னை வந்தடைகிறது. கணேசலிங்கனின் நாவல்கள் பற்றிய ஆய்வும், ‘எருமைமாடும் துளசிச்செடியும்’ என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுதியுமே முதலில் எனக்கு அவரைப் பற்றிய புரிதலை உருவாக்கிய எழுத்துக்களாகும். பின்பு சமூக வலைதளங்கள், இலக்கியச் சந்திப்புகள் என்பனவும், பொருள்வெளி, நீட்சி பெறும் சொற்கள் போன்ற கனதியான ஆய்வெழுத்துக்களும் அவரைப் பற்றிய கூடுதல் புரிதலை உருவாக்கின. அண்மையில் அவர் வெளியிட்ட ‘சுயமி’ மெல்லிசைப் பாடல் இறுவட்டு அவரது இசை ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறது. கவிதை, சிறுகதை, பத்தி எழுத்துக்கள், ஆய்வு, மொழியாக்கம், இசை என பன்முக ஆளுமைகொண்ட லறீனாவின் வருகையானது, இலங்கை முஸ்லிம் சமூகப் பண்பாட்டில் எத்தகைய பதிற்குறிகளைப் பெற்றுள்ளது என்பது தனியாக ஆராயப்பட வேண்டியது.
இலங்கையில் பெண்ணிலைவாதச் செயற்பாடுகள் ஆரம்பமாகி மூன்று நான்கு கட்ட பரிமாணங்களைப் பெற்றிருந்தாலும் பெண்கள் மற்றும் சிறு சமூகங்கள் மீதான வன்கொடுமையானது இன்னும் முடிவுறாத சவாலாகவே தொடர்கின்றது. போர் முடிவுற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட, நல்லாட்சி பற்றிய உரையாடல்கள் – வாதவிவாதங்கள் தொடர்கின்ற, பால்நிலை, இனவிருத்தி, சுகாதார உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கப்படுகின்ற ஒரு தருணத்திலேதான் லறீனாவின் “தஜ்ஜாலின் சொர்க்கம்” வெளிவருகிறது என்பது கவனத்திற்குரியது.
மேற்கத்தேய சிந்தனை மரபு பெரும்பாலும் புறவயத்தன்மை கொண்டது; கீழைத்தேய மரபு அகவயத்தன்மை கொண்டது என மெய்யியலாளர்கள் கூறுகின்றனர். இதனால் மேற்குலகம் புற உலகை ஆதிக்கம் செய்வதிலும் காலனியாக்கம் செய்வதிலும் நாடுகளைக் கைப்பற்றுவதிலும் அவற்றைச் சுரண்டுவதிலும் ஈடுபட்டமை வரலாறு. கீழைத்தேய உலகம் அகத்துக்குள் மட்டுமே சுருங்கியது. சக மனிதனையே சுரண்டுகின்ற, அவனை அடிமைப்படுத்துகின்ற நிலைக்கு அது இட்டுச்சென்றது. இந்தவகையிலேயே நாம் “தஜ்ஜாலின் சொர்க்க”த்தைப் பார்க்கின்றோம்.
தஜ்ஜால் என்பது முஸ்லிம் பண்பாட்டில் இன்றுவரை நின்றுநிலவுகின்ற தொன்ம நம்பிக்கையாகும். முஸ்லிம் சமூக அமைப்புக்கு வெளியே ஏற்படக்கூடிய கலிகால நிகழ்ச்சிகளைச் சித்திரிப்பதற்கான இந்த நம்பிக்கைக்கான ஆதாரங்களை நபிமொழித் தொகுப்புக்களிலேயே தேடமுடிகின்றது. அல்குர்ஆனின் ‘குகை’ என்ற பெயரிலுள்ள அத்தியாயத்தின் சிறப்புக்களை விளக்கிய முஸ்லிம் உரையாசிரியர்களும் தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகளை ஆதாரபூர்வமாகத் தந்துள்ளனர். இது தொடர்பில், நபிகளாரின் ஆழ்தள அறிதல்கள் ஒரு குறிப்பிட்ட வகையான படிம உருவக முறைப்படி முன்வைக்க முயல்வதாகக்கொண்டு நவீனகால இஸ்லாமிய அறிஞர்கள் மொழியியல் மற்றும் குறியீட்டு விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். தஜல என்பது உருட்டுதல், பொய்யை உண்மைபோல சொல்லுதல் என்ற மொழியியல் அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அந்தவகையில், . தஜ்ஜால் என்ற அரபுச் சொல்லுக்குப் பொய்யன், பொய்யை உண்மைபோல் சொல்பவன், ஆக்கிரமிப்பாளன் என்ற அர்த்தங்கள் உண்டு.
தஜ்ஜாலை ஒரு மானுடப் பிரதிமையாக வைத்தும், அதை ஒரு சமூக இயங்கியலின் குறியீடாக்கியும் விளக்கமளிக்கும் முஸ்லிம் அறிஞர்கள் பலர் உள்ளனர். தஜ்ஜாலின் பண்பியற் கூறுகள் உட்செறிந்ததாக இந்த விளக்கம் அமைகின்றது. உடற்கூறு அம்சங்களைப் பொறுத்தவரையில், தஜ்ஜாலுக்கு ஒற்றைக் கண் இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. இந்த ஒற்றைக்கண் என்பதை, ‘மேற்கத்தைய சிந்தனைகள் ஒற்றைக்கண் தன்மை கொண்டவை; உலகத்தை ஒற்றை நோக்கிலேயே அவை பார்க்கின்றன; அதன் பன்முகப் பரிமாணங்களைப் பார்க்கவில்லை’ என்று நவீன மேலைத்தேயச் சிந்தனைகளையும் தஜ்ஜாலாகவே நவீன இஸ்லாமிய அறிஞர்கள் உருவகிப்பதைக் காணமுடியும்.
குறிப்பாக, இந்திய இஸ்லாமிய அறிஞர் அபுல் ஹஸன் அலி நத்வி நவீன மேற்குலகச் சிந்தனைகளை தஜ்ஜால் என்றழைக்கின்றார். மனிதன் – பிரபஞ்சம் – வாழ்க்கை பற்றிய அவற்றின் உலகப் பார்வை ஒற்றைக்கண் பார்வையாகவே இருக்கின்றன என்கிறார்.
பொதுவாக, பல்வேறு ஐதீகங்கள், தொன்மங்கள், நம்பிக்கைகள் என்ற பண்பாட்டு நீர்ப்பரப்பில்தான் மனித மனம் நீந்திக்கொண்டிருக்கிறது. பல்வேறு கிளையாறுகளும் பருவகாலப் பெருக்குகளும் உள்ள பெருநதியாக அது ஓடிக்கொண்டிருக்கிறது. காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பெண்கள், கையறுநிலையில் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கிடைக்கும் கொழுகொம்பாக அல்லது பற்றுக்கோடாகத் திகழும் இந்த நம்பிக்கைகளாலேயே உயிர்த்திருக்க வேண்டியுள்ளது.
வழிவழியாக இலங்கை முஸ்லிம்களால் நம்பப்பட்டுவரும் தஜ்ஜாலின் கதையை பெச்சிம்மாவிடம் கேட்டு வளரும் கதைசொல்லிப் பாத்திரங்கள் லறீனாவின் கதையில் வருகின்றன. அக்கதையைப் பெச்சிம்மாவிடமிருந்து கேட்கும் முனீரா, தனது கணவனை அதனோடு பொருத்திப் பார்க்கின்றாள். அதற்கு முன்னர் ஊர்ந்து செல்லும் கொடுக்குகள் கொண்ட தேளின் காட்சியும் அவளுக்குள் அந்த ஒப்பிடலை உருவாக்கி விடுகின்றது. மேலான வாக்குறுதிகள், பசப்பு வார்த்தைகளை அள்ளிவீசி அனைத்தையும் பெற்று வாழும் சொர்க்கம் தன் கையில் இருக்கிறது என அழைப்புவிடுக்கும் கணவன் பாத்திரம், தஜ்ஜாலின் ஞாபகத்தையே அவளுக்குத் தருவதில் வியப்பில்லை. ஆதாம் – ஏவாள் தொன்மத்திலிருந்து சொர்க்க இழப்பு என்பது மானுட மனத்தின் மிகப்பெரும் துக்கமாகவே எஞ்சியிருக்கிறது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது தஜ்ஜாலின் சொர்க்கமாக ஆகிவிட்டது, அவ்வளவுதான்!
உலகின் தொன்மை வாய்ந்த நிறுவனங்களில் இன்றுவரை எஞ்சியிருக்கும் ஒன்றுதான் குடும்ப நிறுவனமாகும். இனக்குழுக்களாக ஒன்றுகூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக குடும்பம் என்ற நிறுவனத்தை நாம் காணலாம். காலந்தோறும் ஏற்பட்டுவந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு குடும்பம் என்ற அமைப்பு இன்றளவும் நீடிக்கிறது. பாலினக் கவர்ச்சியினால் உந்தப்பட்டு மனிதர்கள் ஒன்றாக உறைவதற்குரிய ஏற்பாடாகவே குடும்பம் தோன்றி இருந்தாலும், மானிட நிலைபேற்றுக்கு அடிப்படையான சக மனிதனோடு உறவுகொள்ளுதல், சக மனிதனின் ஆசைகளைப் புரிந்துகொள்ளுதல், அன்புகாட்டுதல், விட்டுக்கொடுத்தல், ஒத்துழைத்தல் முதலான பண்புகள் குடும்பத்தின் மூலமே ஊட்டப்படுகின்றன. ஆனால், இன்று குடும்பம் என்ற நிறுவனம் இன்றைய உலகமய யுகத்தில் முன்னெப்போதையும் விட பாரிய நெருக்கடிக்குள்ளாகி வருகின்றது. யாரும் உள்நுழைய முடியாமல் இருந்த ‘தனிப்பட்ட வெளி’களுக்குள் இலத்திரனியல் சாதனங்கள் நுழைந்துவிட்டன.
லறீனாவின் கதை சொல்லிகள் சமூகத்தின் எந்தப் பிரிவினர் என அறிந்துகொள்வது முக்கியமானதாகும். கதைசொல்லியின் நீட்சியாகவே லறீனா என்ற படைப்பாளி வருகிறார். அவர் பழங்குடிச் சமூகங்களின் கதைசொல்லியோ பழங்குடிச் சமூகங்களின் இலக்கியவாதியோ அல்ல. நாகரிகச் சமூகங்களில் உருவாகிய இன்றைய பெண் படைப்பாளி. பாரம்பரியச் சமூகங்களின் நம்பிக்கைகள், மரபுகள் போன்ற அகவயமான அமைப்புகளில் இருந்து வளர்ந்து புறவயமான, தர்க்கம் கொண்ட கருத்தியல் அமைப்புக்களை உருவாக்கிக்கொண்ட இன்றைய சமூகத்தின் பிரதிநிதி. எனவே, தற்காலக் கருத்தியல்கள் அவரது படைப்புக்களில் உட்செறிந்ததாகவே காணப்படுகிnறna.
பொதுவாக கதைசொல்லி வாய்மொழிப் பாரம்பரியத்தைச் சார்ந்தவர். அவரே அச்சமூகத்தின் கதைகளைத் தொகுத்துச் சொல்கிறார். இக்கதைசொல்லிகள் கதைகளை உருவாக்கினாலும் அச்சமூகத்தின் கதைகளை மறு ஆக்கம் செய்பவர்களாகவே உள்ளனர். இலக்கியவாதிக்கு முன்னோடியாக கதைசொல்லி இருக்கிறார். கதைசொல்லி கூட்டு ஆளுமையாகவும் கணிக்கப்படுகிறார். பாடினிகளின் கதையே சங்கப் பாடல்கள் என்று கூறுகிறார்கள். சூதாட்டக்காரர்களின் கதையே மகாபாரதம் ஆகியது. செய்தி வாசிக்கும் பெண் அறிவிப்பாளர் ‘வணக்கம் கூறி செய்தியை வாசிக்கத் தொடங்கினார்’ என்பது நவீன கதைகூறுமுறை. ‘ஒரே ஒரு ஊரிலே ஒரு ராசா இருந்தார்; கதையாம் கதையாம் காரணமாம்’ என்பது எமது பாரம்பரிய கதை உத்தி. இப்பாரம்பரியக் கதை மரபை லறீனா தன் தஜ்ஜாலின் சொர்க்கம், ஆத்தா ஆகிய இரு கதைகளிலும் கையாண்டுள்ளார்.
லறீனாவின் கதைசொல்லிகள், பெண்களாகவே உள்ளனர். குடும்பத்தில், பாடசாலையில், பொதுவெளியில் விளிம்புக்குத் தள்ளப்பட்ட பெண்களின் குரலாகவே இவரின் கதைகளெங்கும் சேர்ந்தொலிக்கின்றன. ‘எழுதப்படாத கவிதை’யில் மட்டும் ஆணின் உட்குரல் வந்துபோகிறது. ஆனால், ‘ஒரே ஒரு கனவுகூட மிஞ்சவில்லை’, ‘எழுதப்படாத கவிதை’யும் போக மற்ற எட்டுக் கதைகளும் படர்க்கையிலேயே எழுதப்பட்டுள்ளன.
லறீனாவின் கதைகள் துக்கத்தையும் காதலையும் கொப்பளிக்கின்றன. பெண்களின் அகவாழ்க்கையின் நெருக்கடிகளையும் உள்ளெழுச்சிகளையும் நுட்பமாகவும் கவித்துவமாகவும் சொல்லும் கதைமரபைச் சேர்ந்தவராக லறீனா விளங்குகிறார். இந்தக் கவித்துவமான மொழியில் ஈர்ப்புக்கொண்டு கதையைப் படித்துமுடிக்கிறபோது கதை என்பது மறந்து கவிதை என்ற உணர்வே எஞ்சுகிறது. மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைப் படிமங்களாகப் பெண்களின் அக உலகச் சித்திரிப்பு உருக்கொள்ளும்போது கதை அழுத்தம் பெறுகிறது. அவரது கதையுலகம் கவித்துவமானதைப் போலவே உணர்ச்சிகரமானதும்கூட. சாதாரணமாக அடித்தட்டுப் பெண்கள், நடுத்தர வர்க்கப் பெண்கள், வாழ்வின் உணர்ச்சிகரமான தருணங்களை வெளிப்படுத்தும் நேரடியான எளிய மொழியிலும் அக்கதைகள் அமைந்துள்ளன. உண்மையான உரையாடல்கள் அவற்றுக்குத் துணை சேர்க்கின்றன. மன உணர்வுகளைக் கூறும்போது அவை நேரடியான உணர்ச்சி வேகங்களாகவே பதிவுசெய்யப்படுவதைப் போல கவித்துவமாகவும் அமைந்துவிடுகின்றன. மொழியின் நுட்பங்கள் மூலமும் சமூகக் குறியீடுகள், படிமங்கள் மூலமும் விரிவான அர்த்தப்பாடுகளை உருவாக்கி வாசக மனதை அவை மேலெழச் செய்கின்றன.
“ஆழ்ந்த துயரால் மனக்கிண்ணம் நிரம்பிவழிகின்ற பொழுதுகளில் அவை வார்த்தையின் வடிவெடுத்துத்தான் வழிந்தோடுகின்றனவோ?” என்று கேட்கிறார், எழுதப்படாத கவிதையில் வரும் கதைசொல்லி. “எல்லாக் கழிவுகளும் வந்தடையும் கடல்போல… எல்லா வகையான வலிகளும் வந்து நிறைந்து நிரம்பிவழிகிறது மனக்கடல்” என்று மற்றோர் இடத்தில் கூறுகிறார். ‘பங்காளியாய் இருக்கும் வாழ்க்கையில் எப்படி வழிப்போக்கனைப் போலவோ பார்வையாளனைப் போலவோ இருந்துவிட முடியும்?’ என்றும் கேட்கிறார். பற்றற்று வாழ்வைத் துறக்கவும் முடியவில்லை. எனவே துயரங்களும் வலிகளும் வந்து நிறையும்போது வாழ்க்கை ஆடித்தான் போகிறது. அப்போது, மனம் நலிவடைகிறது என்று குமுறுகிறார். “இந்தளவு படித்ததும், நிறையச் சிந்தித்து இது இன்னதுதான் என்று விளங்கும் திறனை வளர்த்துக் கொண்டதும்தான் பிழையாகிப் போய்விட்டதா?” என்று அங்கலாய்க்கிறார். “ஒரு பத்தாம் பசலியாய்… ஒரு பொத்தாம் பொதுவான வாழ்க்கையைத் தெரிவு செய்திருந்தால், இந்தளவு வலித்திருக்காதோ?” என்றும் கேட்கிறார்.
இவ்வாறாக, பெண்களின் அக வலிகளை அவர் சித்திரித்துச் செல்கையில், திரண்டுவரும் வெண்ணெய்போல் தத்துவ தரிசனங்களாகவ்வும் விரிவும் ஆழமும் கொண்ட வரிகளாகவும் இவரது கதைகள் விரிகின்றன. எவ்வளவு தட்டியும் திறக்கப்படாமலேயே இறுக மூடப்பட்டுக் கிடக்கும் சாளரங்களில் பட்டுத் தெறிக்கும் மின்னல் கீற்றுக்களாக வார்த்தைகள் வந்து நிறைகின்றன.
இத்தொகுதியிலே, எட்டுமாத வயிற்றுப் பிள்ளையோடு தூக்கிட்டு இறந்துபோன செய்னம்பு நிஸா மாமியாக இருந்தாலும் சரி, கணவனின் இறப்புக்குப்பின் அவனது தொழிலை, பாடசாலை சிறாருக்கான வாகன சேவையைத் தொடர முன்வரும் சித்திம்மாவாக இருந்தாலும் சரி, பாடசாலை வட்டாரத்தில் ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டுப் பின்னர் பாராட்டப்படும் கறுப்பு நிறம் கொண்ட நளீராவாக இருந்தாலும் சரி, ‘எனக்கான வெளி’யில் பெண்ணுக்கு மாதாந்தம் ஏற்படும் உடல்ரீதியான வலியைப் புரிந்துகொள்ளாத கணவனோடு வாழும் கண்மணியாக இருந்தாலும் சரி, ‘எழுதப்படாத கவிதை’யில் கணவனின் குற்றவுணர்ச்சியாக விரியும் கதையாக இருந்தாலும் சரி, ‘மனச்சருகு’ கதையில் மத்தியகிழக்கு நாடொன்றில் தனிமையில் வாடும் பெண்ணின் கதையாக இருந்தாலும் சரி, ஸெய்னம்பு நாச்சியில் வரும் நளீரா, மைமூனாத்தா என்ற பாத்திரங்களினூடாக விபரிக்கப்படும் வீட்டில் வேலைபார்க்கும் சிறுமியின் கதையாக இருந்தாலும் சரி, தஜ்ஜாலின் சொர்க்கத்தில் வருகின்ற முனீராவாக இருந்தாலும் சரி, பெண்களின் பன்முகப்பட்ட துயரங்களும் வலிகளுமே இக்கதைகளில் குவிமையப்படுத்தப்பட்டுள்ளன.
கதையை சாதாரண நிலையில் இருந்து அறிவுத்தளத்துக்குப் தளமாற்றம் செய்து பார்க்கும்போது, வாழ்வு எதற்காகவும் இழக்கப்பட வேண்டியதில்லை. வாழ்க்கையின் நுட்பமான நுகர்வுகளுக்கு முன் மற்றவை அனைத்தும் சாதாரணமானவைதான். மிக அரிதான மனித வாழ்க்கையை மிகச் சாதாரணமான அற்பமான காரணங்களுக்காக இழந்துபோவது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்; தற்கொலைக்குக் காரணம் பிடிவாதம்தான் என்ற அந்த முதல் கதையின் தொனியில் நாம் பெண்படும் துயரங்களைப் புரிந்துகொள்கிறோம். சந்தோஷமாக வாழ நினைக்கும் ஒரு பெண்ணின் உரிமை தட்டிப்பறிக்கப்படும்பொழுது அவள் வாய்மூடி மௌனியாக இருப்பது பிரச்சினையைத் தீர்க்க வழிவகுக்க மாட்டாது. தனது உரிமைகளை, ஆசைகளை, அபிலாஷைகளை பெண் எடுத்துக் கூறவேண்டும்; தட்டிக்கேட்க வேண்டும்; திருந்தாத கணவனை விட்டு விலகி புதுவாழ்வு தொடங்க வேண்டும். பரிபூரண சுதந்திரம் அவளுக்கு இருக்கவேண்டும் அதற்கேற்ற சூழ்நிலைகளை சமூகம் அமைத்துக்கொடுக்க வேண்டும். பிரச்சினைகள் எங்கோ இருக்க நாம் விடையை வேறு எங்கோ தேடுவது தவறு; பிரச்சினைகளை மையமாக வைத்துத் தீர்வுகாண முயலவேண்டும் என்பதெல்லாம், மாமியை தூசுதட்டி எடுக்கும் ஒரு மருமகளின் குரலாக அந்த முதல் கதையில் வெளிப்படுவதைப் பார்க்கிறோம்.
இவரது கதைகளில் வரும் பெண்பாத்திரங்கள் சுதந்திர உணர்வும் இலட்சிய வேட்கையும் கொண்டவர்கள். அதேவேளை, தமது கணவன், ஆண் சகோதரர்கள் தம்மை வெறுக்கிறார்கள் என்பதைக் கற்பனைகூட பண்ண முடியாதவர்களாகவே அவர்கள் உள்ளனர். அவர்கள் தமது அன்புக்கு உரியவர்களால் தாம் உடல்ரீதியாக அல்லது உணர்வுரீதியாகக் கைவிடப்படுவதையோ காயப்படுத்தப்படுவதையோ உணரும்போது அதிர்ச்சியடைகிறார்கள். உடல் மற்றும் உணர்வுரீதியான கைவிடல் என்பது அவர்களுக்கு நம்ப முடியாத மனத்துயரத்தை அளிக்கிறது. உணர்வு ரீதியான கைவிடலுக்கு அல்லது நிராகரிப்புக்கு பல முகங்கள் உண்டு. இது தொடர்ச்சியான நச்சரிப்பு, திருத்தமான வேலைக்கான வற்புறுத்தல், அக்கறையின்மை, பிரிந்திருத்தல் என்பவற்றாலும் வெளிப்படுகிறது. அத்துடன், மட்டுமீறிய அக்கறை, ஆகக்கூடிய பராமரிப்பு என்பவற்றை மறுப்பதாலும் இது ஏற்படக்கூடும்.
விசித்திரமான பார்வை அல்லது உப்புச்சப்பற்ற கேள்வி, ஆசைகளைக் கேலிசெய்தல் அல்லது மட்டந்தட்டுதல், பைத்தியக்காரி என்ற நக்கல், இயந்திரத்தனமான உரையாடல், எதிலும் குற்றங்காணுதல், எதைச் சொன்னாலும் நம்பாமல் கேள்விகேட்டல், பிறரோடு ஒப்பிட்டு மட்டந்தட்டுதல் இவையே இக்கதைகளில் வரும் பெண்கள் ஆண்வர்க்கத்தினால் இம்சிக்கப்படுகின்ற நிலைமைகளாகச் சுட்டப்படுகின்றன. ஆனால், தூக்கி வீசப்படும் இத்தருணங்களில் சிறகுகள் விரிப்பதற்கான வாய்ப்புக்களை இப்பெண்கள் பெறுகிறார்கள். அப்போது ஜன்னலைத் திறந்து வெளியுலகத்தைப் பார்க்கின்றபோது பரந்து விரிந்த உலகத்தின் தரிசனமும் அதில் வாழவேண்டும் என்பதற்கான மீள் எண்ணங்களும் அவர்களுக்கு வந்துபோகின்றன. பக்கத்தில் இருந்து ஆசுவாசப்படுத்த, கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துவிட அடுத்த தலைமுறைச் சின்னஞ் சிறுசுகளும் ஆதரவுக்கரம் நீட்டுவதையும் இக்கதைகளில் பார்க்கலாம்.
பண்பாட்டுப் பரப்பில் பெண்களை, பெண்பிள்ளைகளைத் தனிமைப்படுத்துவதில் இருந்து பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிரான பாரபட்சம் வெளிப்படுத்தப்படுகின்றது. தீவிரமான தருணங்களில் பெண்களை அடைத்துவைப்பதிலும் ஒதுக்கி வைப்பதிலும் இருந்தும் இது வெளிப்படுத்தப்படுகின்றது. பெண்களுக்கு எதிராக, அவர்களின் உரிமைகளும் சுதந்திரங்களும் மறுக்கப்படுவதிலும் குறைந்த அளவிலான வளங்களும் வருமானங்களும் சந்தர்ப்பங்களும் கொடுக்கப்படுவதிலிருந்தும் அந்தப் பாரபட்சம் தெரியவருகின்றது. பெண்கள் திட்டமிட்டு ஒதுக்கப்படுவது இன்று இயல்பு போலாகிவிட்டது. பெண்கள் மீதான வன்புணர்வுகளையும்கூட இந்த நடத்தைக் கோலத்தின் தொடர்ச்சியாகவே நாம் ஊடகங்களின் வழியே கேள்விப்படுகிறோம்.
பெண்கள் தமது வாழ்க்கையின் பல கட்டங்களைலும் பரந்த அளவில் பாரபட்சங்களுக்கும் சமத்துவமின்மைக்கும் உள்ளாகிறார்கள். இது அவர்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதிக்கின்ற பாரபட்சமான பாதகமான நிலைமைகளையே ஏற்படுத்திவருகின்றது. இத்தகைய பாரபட்சங்களுக்கு எந்தவொரு அறிவார்ந்த அடிப்படையும் கிடையாது. இப்பாரபட்சங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ள பண்பாட்டு வார்ப்புகளுக்கு எதிராகக் கேள்வி எழுப்ப வேண்டியது அவசியமாகும். அத்தகைய அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமத்துவம் இயற்கையானதே; சமத்துவமின்மை நிரந்தரமானதல்ல என்பதை உணரச் செய்வதற்காக இலங்கையில் பெண்களுக்கான வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கு மேலாகின்றன. என்றாலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இன்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. உடல்ரீதியான வலிகள், வெளி உலகத்துக்குத் தெரிய வருவதற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்த போதிலும், வார்த்தைகளால் ஏற்படுத்தப்படும் வலிகள் நான்கு சுவர்களுக்குள் அடங்கி தற்கொலை எண்ணங்களுக்கு அடிக்கடி இட்டுச் செல்வதாக அண்மைய உளவள ஆற்றுப்படுத்துநர்களின் அனுபவங்கள் மூலமாக அறியமுடிகின்றது.
லறீனாவின் கதைமாந்தர்களின் அக உலக வலிகள் மிக மிக வலிமையானவை. ஆண்மயமான உலகத்தைத் தகர்ப்புச் செய்யும் படையணிகளைப் போலவும், மலையகத்தின் அருவி போலவும் அவ்வலிகளை வெளிக்கொணரும் வார்த்தைகள் வந்தவண்ணமே இருக்கின்றன. அவை, துயரங்களின் ஊடாகக் கற்பதை ஊக்குவிப்பவையாக இருக்கின்றன. துயரங்கள் எப்படி வலிமையானதோ அதைவிட வலிமையானது நாம் வாழும் வாழ்க்கை; எதிர்கொள்ளும் அத்துயரங்களில் இருந்து நீங்குவதற்கான வலிமையையும் அத்துயரங்களிலிருந்தே நாம் பெறமுடியும் என்பதையும் தனது கதாபாத்திரங்கள் வழியே உணர்த்துகிறார், லறீனா. பெண்ணுரிமை, பெண்விடுதலை என்ற ‘மெகா’ விடயப் பொருளில் பெண் படும் துயரங்களின் அக வலிகள் சார்ந்த ஆழ்ந்த அவதானிப்புகளை உருவாக்குவது இக்கதைகளின் நோக்கமாக இருக்கலாம்.
மனைவியைப் புரிந்துகொள்ள விழையும் கணவன், தன் காலத்தை அறிந்துகொள்ள விழையும் அழைப்பாளன், ஆணாதிக்கத்தின் எண்ணற்ற முகங்களைப் புரிந்துகொள்ள முயலும் பெண்ணிலைவாதி போன்றோர் லறீனாவின் கதையுலகத்தைப் படிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. பாரபட்சங்கள் அற்று பெண்ணைச் சக மனுஷியாகப் பார்க்கும் சமூகத்தை, குடும்பத்தை, ஆண்வர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் லறீனாவின் பெரிய கனவாக இருக்கிறது. இதில் வரும் பத்துக் கதைகளும் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் அதை நிஜமாக்கவே விரும்புவதாகத் தெரிகிறது. அதனால்தான் பெண் அகவாழ்வின் எதிர்பார்ப்புக்கள், அதிலுள்ள வலிகளையும் ஆணின் பார்வை இன்று வரையிலும் படாத பெண்ணின் நுட்பமான உணர்வுகளைத் தனது மொழியில் அவர் பதிவுசெய்கிறார். வலிகளின் பாரத்தை சுமந்திருக்கும் கதைமாந்தர்களின் துயரங்களைப் புறவயமாகப் பார்ப்பதற்கு இக்கதைகள் உதவுகின்றன. துயரங்களை அகவயமாகப் புரிந்துகொள்ளும் எல்லோராலும் அவற்றை முழுமையாக வெளிப்படுத்த முடிவதில்லை. சிறந்த கதைஞர்களே அவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர். அத்தகைய சிறந்த கதைஞர்களில் ஒருவராகவே நான் லறீனாவைக் காண்கிறேன்.
லறீனாவின் கதைகள் வாசகர்களின் கூட்டுப் பங்களிப்பிலேயே விரியவேண்டி உள்ளது. வாசகரிடம் எல்லாவற்றையும் முழுமையாக உரையாடுவதற்குப் பதிலாக அவர்களுக்கு நுண்ணிய அனுபவத்தை வழங்குவதை மட்டுமே இக்கதைகள் கருத்திற்கொண்டுள்ளன. வாழ்வை எந்த ஊடகத்தாலும் அப்படியே பதிவுசெய்ய முடியாது. அப்படிப் பதியப்பட்டிருந்தால் இலக்கிய உற்பத்தி ஒரு காலகட்டத்தோடு நின்றிருக்கவேண்டும். அது தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. காரணம் இலக்கியம் கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறைகள், உரையாடல்களைப் பதிவுசெய்வதில்லை. மாறாக, அவற்றை மறு ஆக்கம் செய்கின்றது; செம்மைப்படுத்துகின்றது. இந்த மாற்றியமைக்கும் மறு அமைப்புத்தான் கலைச்செயற்பாடு ஆகும்.
இவரது கதைகளில் இடம்பெறும் சிறுவர் கதாபாத்திரங்களும் அவர்களின் வாழ்வனுபவங்கள், அவை வெளிப்படுத்தப்படும் விதம் என்பவையும் தனியாக ஆராயப்பட வேண்டியவை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இத்தொகுதியில் வரும் ‘புளியமரத்துப் பேய்கள்’ முழுக்க முழுக்க ஒரு பெண் குழந்தையின் வேடிக்கை பார்க்கும் கண்களின் உலகமாக இருக்கிறது. ஓடுதல், பாய்தல், ஏறுதல் என குழந்தைகளின் குதூகலமான உளவியற் செயற்பாடுகளின் காரணமாக, கண்களின் கோணத்தில் சூழலைப் பார்ப்பது மாறி மரங்களில் ஏறி பறவைக் கோணத்தில் பார்க்க விழைகிறது. ஞானம் தேடுவதற்காக மகான்களும் ரிஷிகளும் மரங்களையும் மலைகளையும் நோக்கிச் சென்றதைப்போல் குழந்தைகளும் தமது சுதந்திரத்தையும் குதூகலத்தையும் கொண்டாடுவதற்காக மரங்களையும் மலைகளையும் சுற்றிவருகின்றனரா? இக்கதையில் வரும் குழந்தைக்கு இத்தகைய ஆவல்களும் கொள்ளை ஆசைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவளது பெச்சிம்மா பெண் குழந்தைகள் மரங்களில் ஏறக்கூடாது என்றும் உரும நேரங்களில் பேய்கள் உலாவருவதாகவும் கூறியும் அவள் கேட்கவில்லை. அதன் அபத்தத்தை அவள் பரிசோதித்தும் காட்டி விடுகிறாள். காய்ச்சலில் படுத்திருக்கும்போது பாரம்பரியப் பண்பாட்டு மருத்துவமும் அவளுக்குச் செய்யப்படுகிறது. காட்டுவெளியில் இருந்து குடியிருப்பு என்னும் வீட்டுவெளிக்குள் குடியேறிய மனிதனிடம் அந்நம்பிக்கைகளின் எச்சங்கள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. காரணம், மனிதன் வெளிகளுக்குள் வாழப்பழக்கப்பட்டவன். அவள் பெச்சிம்மாவிடம் பேய்க்கதைகள் கேட்டு வளர்ந்து, பிறகு பருவமடைந்தபின் சாச்சாவின் பசிக்கு இரையாகப் பார்த்து, அதிலிருந்து தப்பிப்பிழைப்பது வரையாக இக்கதை ஒரு குறுநாவலுக்குரிய அடர்த்தியைக் கொண்டுள்ளது.
குடும்ப உடைவின் கசப்புக்கும் தடுமாற்றத்துக்கும் மத்தியில் மறுமணம் செய்துவாழும் தாயுடன் இருக்கும் குழந்தை தாயின் கணவனால் இம்சைப்படுத்தப்படுவதும் அதைச் சொல்லியழ இருக்கும் ஒரேயொரு பற்றுக்கோடான தாயும் அதை உதாசீனப்படுத்தும்போது வரும் வலியிலிருந்து தப்பித் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளக் கிடைக்கும் தருணமாகவே மரமேறிக் களிக்கும் விளையாட்டை அவள் தொடர்கிறாள். அதில் மரமும் அவளும் கொள்ளும் களிப்பு இக்கதையில் கவித்துவமாகவே வெளிப்படுகிறது.
“மெல்ல மெல்ல அவளுடல் நெகிழ்ந்து உருகத் தொடங்கிவிட்டது. திரி பற்றியெரியும்போது மெழுகு உருகியுருகித் துளிகளாய் வழிவதுபோல அவள் உடலின் அங்கங்கள் ஒவ்வொன்றாய் கரைந்து கிளைகளினூடே வழியத் தொடங்கிவிட்டன. ‘இப்படியே முழு உடலும் கரைந்து தான் அழிந்துவிடுவேனா’ என்று அவள் அஞ்சத் தொடங்கியதும், புளிய மரத்தின் கிளைகள் நீண்டுவந்து அவளது அங்கங்களைத் தம்மோடு பிணைத்துக் கொள்ளத் தொடங்கின. சதையும் கிளையும் கலந்து அவள் மரமா, மனுஷியா என்று பிரித்துணர முடியாத ஓர் அபூர்வ உயிரியாகிவிட்டாள். குறிப்பிட்ட ஒரு கணத்தில் எல்லாக் கிளைகளின் கண்களும் விழித்துக்கொண்டு விட்டன. அவை அந்த அடர் இருளில் ஒளிர்ந்து மின்னத் தொடங்கிவிட்டன. ஓஹோ! அங்கே தன்னைப்போலவே வேறு பலரும் புளிய மரத்தோடு ஐக்கியமாகி இருக்கிறார்கள் போலும் என்ற எண்ணம் அவளுக்குள் முகிழ்த்தது. அவர்கள் அவளோடு ரகசியக் குரலில் பேசத் தொடங்கிவிட்டார்கள். அக்குரல்கள் ஒரே நேரத்தில் எழுந்தாலும் இரைச்சலாகவோ சகிக்க முடியாத பெருங்கூச்சலாகவோ இருக்கவில்லை. அவர்களின் மொழி அவளுக்குப் புரியவே இல்லை. என்றாலும், அக்குரல்களில் இருந்த மென்மையையும் பரிவையும் கருணையையும் அவளால் உணர முடிந்தது” என்ற வரிகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
குடித்துவிட்டு வரும் அண்ணாச்சியைக் கலாய்ப்பதற்கு அவள் செய்யும் குறும்புத்தனங்கள், அந்தச் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமாக அவள் பாடும் சிங்களக் கிராமியப்பாடல், நமது குழந்தைகள் எவ்வளவு விவேகமும் திறனும் கொண்ட ஆளுமைகள் என்பதை உணர்த்துகின்றன. ஆனால், நாம்தான் அவர்களை நம்ப மறுக்கின்றோம்.
மணவாழ்க்கை தரும் துக்கங்களின் சுமையைப் படைப்பாகவும் உரையாடலாகவும் இதில் வரும் கதைசொல்லிப் பெண்கள் பகிர்ந்துகொள்ளும்போது, மன இறுக்கம் தளர்ந்து, சூழலின் இறுக்கமும் தளர்ந்துவிடுகிறது. லறீனாவின் கதைமாந்தர்கள் அடித்தள மற்றும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களே. அவர்களின் வாழ்க்கை தந்துகொண்டிருக்கும் துயரங்களே இங்கு கதைகளாகியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. பிரச்சினைகளை எதிர்கொண்டு விடைகாணும் பெண்ணியச் செயற்பாடுகளின் முதற்படியாகப் பெண்களின் அகவலிகள் பற்றிய இந்தக் கூர்மையான அவதானிப்புகள் அவசியமாகின்றன. ஒப்பீட்டு ரீதியில் மிக அரிதாகவே காணப்படும் முஸ்லிம் பெண் எழுத்துச் செயற்பாட்டுத் தளத்தில் லறீனாவின் ஆய்வுகள் முக்கியம் பெறுவதைப்போல அவரது சிறுகதைகளும் புனைகதைப் பரப்புக்குள் காத்திரமான வருகை எனக்கருதுகிறேன். முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் இந்த இரண்டாவது தொகுதியைப் பெரும் பாய்ச்சலாகவே கருதமுடியும். அந்த வகையில், இலங்கையின் இலக்கியப் பரப்பில், குறிப்பாக முஸ்லிம் புனைகதை உலகில் “தஜ்ஜாலின் சொர்க்கம்” காத்திரமானதோர் அதிர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. லறீனாவுக்கு எனது வாழ்த்துக்கள்!

பின்னூட்டமொன்றை இடுக