அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்”

அ. யேசுராசாவின் “தொலைவும்

இருப்பும் ஏனைய கதைகளும்”

தொலைவும் இருப்பும்தொலைவும் இருப்பும் ஏனையகதைகளும்” என்கிற அ. யேசுராசவின் சிறுகதைத் தொகுப்பினை சென்ற ஆண்டளவில் வாசித்து இருந்தேன்.  அப்போது அது பற்றி எழுதவேண்டும் என்று நினைத்திருந்த சிறு குறிப்பும், வழமைபோலவே “எழுத நினைத்த விடயங்கள் பட்டியலில்” சென்று புதைந்துவிட்டது.   சில நாட்களின் முன்னர் யேசுராசா அத்தொகுப்புப் பற்றி நினைவுக்குறிப்பு ஒன்றினை முகநூலில் பகிர்ந்திருந்தார்; அதனை வாசித்தவுடன் மீண்டும் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தொகுப்பினை எடுத்து வாசித்தேன்.   அண்மைக்காலத்தில் உணர்வுரீதியாக மிக நெருக்கமாக உணர்ந்த தொகுப்பாக அந்த வாசிப்பு அமைந்திருந்தது.

தொகுப்பின் மிக அருமையான கதையாக “ஓர் இதயம்வறுமை கொண்டிருக்கிறது” என்பதைச் சொல்லவேண்டும்.  எமது தேடல்களும், பார்வையும், மதிப்பீடுகளும் எமது ஆளுமையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.  அவற்றின் வழியாகவே சமூகத்துடனான எமது உறவும் அமைந்துவிடுகின்றது.  நாம் வாழ்ந்த சூழலிலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களிலும் இருக்கும் பெரும்பான்மையினரிடம் இருந்து வேறுபட்ட தளத்திலான பார்வை கொண்டவர்களாக நாம் நம்மை உணரத் தலைப்படுகின்ற கணம் ஒன்றில் நாம் நம்மை அந்நியர்களாக உணரத் தொடங்குகின்றோம்.  சமூகத்துடன் எம்மை இலகுவில் பொருத்திக்கொள்ள முடியாத அந்த நிலை ஒருவிதத்தில் மிகுந்த மன உளைச்சலைத் தரக்கூடியது.  நம்மவர்கள் என்று கருதுபவர்களிடையே கூட தனியனாக உணர்கின்ற இந்த நிலை “அந்நியமாதல்” என்கிற கருத்துரு தருகின்ற விளைவுகளுடன் இணைத்து நோக்கத்தக்கது.

தவிர உளவியல் அடிப்படையிலும் இந்தக் கதையை சற்றே அணுகலாம்.  சில காலங்களின் முன்னர் மனச்சோர்வின் கடுமையான தாக்குதலுக்கு நானும் உள்ளாகியிருந்தேன்.  மனச்சோர்வு மெல்ல மெல்ல ஆட்கொண்டிருக்கலாம் என்றாலும், ஒரு குறித்த நாளிலேயே அது என்னைக் கடுமையாகத் தாக்கி இருந்தது.  என்னைச் சுற்றியிருந்த நடைமுறை உலகுடன் என்னைப் பொறுத்திக்கொள்ள முடியாமல் – அந்நியமாகிப் – போயிருந்த என்னை, என் மன இயக்கங்களை அவற்றின் இயங்கு தளங்களைப் புரிந்துகொண்டவனாக ஒரு நண்பன் இருக்கின்றான்.  எனது அலுவலகத்திலேயே அவனும் பணிபுரிவதால் அவனுடனான உரையாடல்களே எனக்குச் சற்றே இறுக்கம் தணிக்க உதவின எனலாம்.  அவன் விடுமுறைக்காக ஐந்து வாரங்கள் இந்தியா செல்ல இருந்தான்.  அவ்விதம் அவன் பயணித்த அன்று நான் கடுமையான மனச் சோர்வின் தாக்குதலுக்கு உள்ளானேன்.  இன்று வரை அதில் இருந்து முழுமையாக மீள முடியவில்லை.

எனது தனிப்பட்ட இந்த அனுபவம், யேசுராசாவின் “ஓர்இதயம் வறுமை கொண்டிருக்கிறது” கதையுடன் மிக இலகுவாகப் பொருந்திவிடுகின்றது.  “இதென்ன சும்மா நெடுக வீட்டுக்குள்ளேயே, வெளியில போய் நாலு மனிசரோட கதைச்சுப் புழங்கன், சும்மா விசரன் மாதிரி யோசிச்சபடி” என்கிறார் தாய்.  நாலு பேரோட கதைச்சுப் பழகவேண்டும் என்ற அவள் வாதம் சரி, ஆனால் அவனது ஆளுமைக்கு ஒத்த, அதை உணர்ந்த நாலுபேரை அவனால் (இலகுவில்) கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் அவன் பிரச்சனையே.   ஆறே ஆறு பக்கத்தில் அமைந்திருக்கின்றது இந்தச் சிறுகதை.  ஆனால் அது திறந்திருக்கும் உரையாடல் ஒன்றுக்கான வெளி மிகப் பெரிது.

இதே கருத்தியல் பின்னணியுடன் இத்தொகுப்பில் இருக்கின்ற இன்னொரு சிறுகதை தொலைவு”.  இன்னும் சொல்லபோனால், தொலைவு சிறுகதையின் முற்பாதி மேலே குறிப்பிட்ட சிக்கலை இன்னமும் நெருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் காட்சிப்படுத்துகின்றது.  இக்கதையில் “ஒரு செய்தி தருவோனாகத்தான் அவர்களுக்கு நான் இருக்கிறோனோவெனச் சந்தேகம் கொண்டான்” என்கிற வரியை ஒருவன் உணர்கின்ற தருணம் மிகுந்த கழிவிரக்கம் தரவல்லது.  இக்கதையின் பிற்பாதி, முன்னர் சொன்ன மனநிலையுடன் உள்ள ஒருவன், சமூகத்தில் பெரும்பான்மையினரின் மனநிலையின் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களுடன் ஊடாடுவதைக் காட்டுகின்றது.  ஆயினும் இக்கதையின் பிற்பாதி காரணமாக அதனை “ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கின்றது” உடன் வைத்துப் பேசமுடியாது போய்விடுகின்றது.

பிரிவு இன்னொரு அருமையான கதை.  அடுத்தடுத்துப் பலமுறை இக்கதையை வாசித்தேன் (வழமையாக நான் அவ்விதம் கதைகளை வாசிப்பவன் அல்ல).  இக்கதையில் வருகின்ற சுப்பிரமணியம் என்கிற எழுத்தாளர் அழகியலை முன்னிறுத்தி, அது சார்ந்த வெளிப்பாடுகளின் வழியும் உலகை அணுகுபவர்.  ஒருவித கனவு மனநிலையில் சஞ்சரிப்பவர்.  உரையாடல் ஒன்றின்போது கதைசொல்ல அவரிடம் “அழக ரசிக்கத்தான் வேணும், ஆனா வேலையுஞ் செய்யத்தான் வேணும்… புற உலகத்திலயிருந்தும் வாழ்க்கையில இருந்தும் நாங்கள் ஓட ஏலாது!” என்று அறிவுறுத்துகிறார்.

“எங்களுக்கு புற உலகத்தைப் பற்றிக் கவலையில்லை, எங்கட உலகம் எங்களுக்குள்ளயே இருக்கு; அதிலேயே எங்களுக்குத் திருப்தி.  அதிலேயே எங்களுடைய வாழ்க்கை முடிஞ்சுபோகும்” என்கிறார் சுப்பிரமணியன்.

இறுதியில் “அவையளின்ர பாட்டை அவையவையள் பார்த்தாலென்ன? நாங்க ஏன் அவையளின்ர பாட்டை தலையில சுமக்கவேணும்.  நாங்க சுதந்திரமாயிருக்க வேணும், எங்களுக்கு எங்கட மனத் திருப்திதான் முக்கியம்.  இல்லையெண்டு அவையள் ஆரும் வற்புறுத்தினால் …… நான் செத்துப்போவேன்.” என்று முடிக்கின்றார் சுப்பிரமணியன்.

இதற்குப் பிறகு சுப்பிரமணியத்துடன் முழுமையாகப் பேசும் சந்தர்ப்பம் கதைசொல்லிக்கு அமையவில்லை.  ஓரிரு மாதங்களில், சுப்பிரமணியன் அவரது வீட்டுக்கருகில் ட்றெயினுக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்தார் என்பது தகவலாக கதைசொல்லிக்கு தெரியவருகின்றது.  உண்மையில் சுப்பிரமணியம் போன்றவர்களும் இன்னொரு விதத்தில் சமுகத்தில் இருந்து அந்நியமாகிப்போனவர்கள்.  அவர்கள் சஞ்சரிக்கும் கனவு உலகம் எல்லாப் “பொறுப்புகளையும்” நிராகரித்துவிட்டு விட்டுவிடுதலையாகி நிற்பது.  நடுக்கடலில் கண்ணாடியால் வீடு கட்டி வாழ்வது போன்றது, அது.  ஏதோ ஒரு தருணத்தில் “நிஜம்” அவர்களின் சட்டையைப் பிடித்து உலுக்கும்போது, அவர்கள் நடுக்கடலில் வாழுகின்ற கண்ணாடி வீட்டில் உடைசல் ஏற்பட்டது போல மூச்சுமுட்டியவர்களாகி விடுகின்றனர்.

பத்துச் சிறுகதைகளை மாத்திரம் கொண்ட, 57 பக்கங்களை மாத்திரம் கொண்ட இச்சிறுநூல் இந்த மூன்று கதைகளாலேயே மிகக் கனதியாகி விடுகின்றது.  தொகுப்பில் இருக்கின்ற கந்தசாமி வெட்கப்படுகிறான்” கதையும், “வரவேற்புஎன்கிற கதையும் நாம் தினசரி வாழ்வில் பார்க்கின்ற எளிய மனிதர்களின் மெல்லுணர்வுகளைக் காட்டுகின்றது.  குறிப்பாக வரவேற்பு சிறுகதையில் வருகின்ற, வெட்கம் கலந்த சிரிப்புடன் கூடிய மரிய சூசை போன்றவர்களே வாழ்வின் அழகான கணங்கள் சிலவற்றைப் பிரசவித்துத் தருகின்றவர்கள்.

இந்நூலுக்கு எழுதிய “என்னுரையில்” யேசுராசா, தான் எழுதிய 11 சிறுகதைகளில் பத்துக்கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.  தொகுப்பின் முதற்பதிப்பு 1974 டிசம்பரில் வெளியாகியிருக்கின்றது.  அதற்குப்பின்னரான 40 ஆண்டுகளில் யேசுராசா அவர்களின் வேறு எந்தச் சிறுகதைத் தொகுப்பும் வெளியானதாக நான் அறியேன்.  ஆயினும் இப்போது வாசிப்பவர்களுக்கும் புதியதாக (Fresh ஆக) உள்ளது இச்சிறுகதைத் தொகுதி.


குறிப்பு

1. இக்கட்டுரை ஜூன் 2015 ஜீவநதி இதழில் வெளியானது.

2. தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் நூல், நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நூலை வாசிக்க விரும்புபவர்கள்

http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?uselang=en

என்ற இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

பின்னூட்டமொன்றை இடுக