இலங்கையில் இடம்பெறுகின்ற எழுத்து முயற்சிகள்

Mihad Mihad 

தமிழில், அதிலும் இலங்கையில் இடம்பெறுகின்ற எழுத்து முயற்சிகள் யாவும், குறிப்பாக கவிதைப் புனைவு, புனை கதைகள், விமர்சனத்துறை போன்ற எதுவும் தற்கால உலக நிலவரங்களுக்கு அண்மித்ததாக இல்லாமல் போனதற்கான காரணம் எதுவென ஆராய்ந்தால், இங்குள்ள படைப்பாளிகள் மீதான கருத்தியல் வறுமையே என கண்டுபிடித்து விடலாம். இங்கு படைப்பிலக்கியம் என்பதை எதுவிதமான உழைப்புமற்ற பின்பற்றுதலாக பழகி முன்பிருந்தவைகளைப் “போல” செய்பவர்களே இருக்கிறார்கள். மொழியின் மீதான புதிய கருத்தியல் ஆழங்களைப் புரிந்து புதிய எழுத்துகளூடாக உழைப்பை நிலைநாட்டுபவர்கள் அரிது. மொழியை எப்போதும் தட்டையாக புரிந்தபடி செயல்படும் போது படைப்பிலக்கியங்களில் புதிய வகைகளை உருவாக்கி விட முடியாது. அதனால்தான் இங்கிருந்து வெளிவரும் கவிதைகள், கதைகள், விமர்சனங்கள் அனைத்தும் இறந்து போன சிதைவுப் படிமங்கள் போல தோற்றமளிக்கின்றன. மேலும் ஒரு காலத்தில் பெரும் கதை பிரம்மாக்கள் எனவும், விமர்சன ஜாம்பவான்கள் என புகழப்பட்டவர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியான கருத்துப் பரிமாறல்களை மேற்கொள்வதே எமது செயல்பாடாகும். அதனை முன்னிறுத்தும் ஒரு பதிவே இது.

மொழி என்பது, மனிதர்களோடும் இயற்கையோடும் தொடர்பு கொள்ள மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட ஒரு கண்டுபிடிப்புத்தான்.

மொழி என்னும் கருத்தியலை எல்லாவற்றையும் விட விசேடமாக மனிதர்கள் சார்ந்ததாகவே பயன்படுத்திப் பழகி விட்டோம். மனிதர்கள் தங்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்தவும் அதன் மூலமாக புதிய மாற்றங்களை உருவாக்கவும் மொழி பயன்படுகிறது.

ஆரம்பத்தில் மொழியானது பேச்சு என்பதாகவே இருந்தது. பேச்சு என்பதாக நாம் காண்பது ஓசைகளின் கட்டமைப்பைத்தான் என்பதனை அறிவோம். அப்படியானால் நாம் அவதானிக்கின்ற பொருட்களுக்கோ அல்லது சிந்திக்கின்ற கருத்துக்களுக்கோ சத்தங்கள் எவ்வாறு துணையாகின்றன என்று யோசிக்காமல் இருந்து விட முடியாது.

பேச்சு என்னும் நிலை எழுத்து என்னும் வடிவத்தையும் உருவாக்கிக் கொண்டபோது மொழியின் எல்லை விரிவுபடத் தொடங்கியது. மொழி பற்றிய பல்வேறு விடயங்கள் பல அறிஞர்களால் அறிவியல் ரீதியாக அணுகப்பட்டு அதன் மீதான பார்வைகள் செழுமைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

மொழி சம்பந்தமான ஆய்வில் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த Course in general linguistics எனும் நூல் பிரபலமானது. இந்நூல் வெளிவந்த போது இதனை எழுதியிருந்த Swiss நாட்டு ஆய்வாளரான Ferdinand Saussure இறந்து சில மாதங்களாகியிருந்தது. இந்த நூலில் கூறப்பட்டிருந்த ஆய்வுத் திரட்டுகள் பிந்திய கால அறிவுத் துறையினருக்கு ஒரு கையேடாகவே மாறியது.

மொழி என்பதனை பேச்சு சார்பான கண்ணோட்டத்தில் சசூர் ஆராய்ந்திருந்தார். பேச்சொலிகளுக்கும் அவை சுட்டுகின்ற பொருள்களுக்கும் இடையிலான தொடர்புகளை அவர் ஆய்வு செய்தார். அதன் பயனாக உருவாக்கப்பட்ட விபரங்கள் மொழி சம்பந்தமாக வேறாகச் சிந்திப்பதற்கான பாதையை உருவாக்கியது.

சசூரின் கருத்துப்படி மொழி என்பது அதற்குள்ளாகவே நேரடியான அர்த்தங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வெவ்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு ஓசைகள் என்ற அடிப்படையில் வேறுபடுத்திப் பார்ப்பதினூடாகத்தான் அர்த்தங்கள் உருவாவதாக அவர் நிறுவ முயன்றார். ஆக ஓசைகளுக்கிடையிலான வித்தியாசங்களை நம்பிய நிலையில்தான் அர்த்தங்கள் செயல்படுவதாக நாம் எண்ணிக் கொள்ளலாம். இந்த அர்த்தப்படுத்தலை sign எனும் சொல்லின் மூலம் குறிப்பிடுகிறார்கள். தமிழில் இதனை நாம் குறி என்று புரிந்து கொள்ளலாம்.

இந்த sign அல்லது குறி என்பதனை சசூர் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்.
ஒன்று : signifier அல்லது குறிப்பான்.
மற்றையது : signified அல்லது குறிப்பீடு.

இங்கு குறிப்பான் அல்லது signifier என்பதனை நமது புலன்களினால் உணரக் கூடிய ஓசை அல்லது சொல் அல்லது வசனத் தொடர் அல்லது பேச்சு வடிவத்தின் அரூபமான கருத்தாக எடுத்துக் கொள்ள முடியும்.

அதேவேளை signified அல்லது குறிப்பீடு என்பதனை பேச்சு ஆனது சிந்திக்கும் செயலில் உணர்த்துகின்ற அர்த்தமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆக பேச்சின் ஒலியும் அதன்போது சிந்திப்பதில் உருவாக்கப்படும் அர்த்தமும் சேர்ந்துதான் sign அல்லது குறி என்பதாக இருக்கிறது. அதாவது ஒரு பரிசீலிப்பு அடிப்படையில் அர்த்தப்படுத்தும் செயல்தான் இது. இதனை ஒரு பொதுவான பழக்கத்தின் அடிப்படையிலான பயன்பாடாக அனுசரித்துக் கொள்ளும் போது எமக்குள் ஒரு பரஸ்பரம் தோற்றுவிக்கப்படுகிறது.

ஏனென்றால் நமக்குத் தெரியாத மொழியினை வெறும் சத்தங்களின் கோர்வையாகவே நாம் உணருவோம். மனிதர்கள் குறிப்பான்கள் பற்றிய தேடலை விஸ்தரிக்கும் போது மொழியின் விசாலமும் பெருகுகிறது என்பதான பார்வைதான் சசூர் மூலமாக நவீன உலகிற்கு மொழியியல் ஆய்வுச் சாரமாகக் கிடைத்தது.

ஆனால் பேச்சு என்பதனை மட்டுமே மொழியின் தனித்துவமான பகுதி என்பது போன்ற முக்கியத்துவம் கொடுத்து சசூர் மேற்கொண்ட ஆய்வுகள் ஒரு கட்டத்திற்கு அப்பால் நகர முடியாமல் தடுமாறுவதாக பிந்திய கால சிந்தனையாளர்கள் கருதினார்கள். ஏனெனில் அறிவியல் வளர்ச்சி மிக்க வரலாற்றின் நீண்ட காலத்தில் இருந்து எழுத்து என்பது மொழியின் தவிர்க்க முடியாத புலப்பாட்டு விளைவாக உருவாகி வந்திருக்கிறது. அதனால் பேச்சு சார்பான சசூரின் விளக்கங்களை எழுத்தினுள் வைத்து ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவை எழுந்தது.

இந்தப் புதிய பார்வையினை பிரெஞ்சு சிந்தனையாளரான Jacques Derrida தொடங்கினார். பேச்சு என்பது மொழியின் முக்கியமான செயல்பாடு ஆன போதும் பேச்சும் எழுத்தும் வெவ்வேறான செயல் நகர்வுகளைக் கொண்டிருப்பதாக Derrida விபரித்தார்.

பேச்சு என்பது அதனை நிகழ்த்துபவனின் நேரடியான கருத்து பிரதிபலிப்பு போல இருக்கிறது. அதனுடன் பெரும்பாலான தருணங்களில் கேட்பவன் நேரடியான தொடர்புகளூடாக அர்த்தங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் எழுத்துக்கள் அப்படியானதல்ல. அதனை எழுதியவனின் இருத்தல் இல்லாமல் கூட அவனது எழுத்துக்களை வாசித்து விடலாம். இதன்போது வாசிப்பவன் வேறு விதமாக அர்த்தங்களை உருவாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த அர்த்தங்களை உருவாக்குவதற்கான குறிப்பீடு என்பது குறிப்பிட்ட எழுத்தைத் தாண்டியதாக அல்லது அதன் ஆழத்தில் செயல்படுவதாக Derrida வலியுறுத்தினார். இதற்கு அவர் இட்ட பெயர் transcendental signified என்பதாகும். இந்த மீறி நிற்கும் குறிப்பீடு எனும் கருத்துருவாக்கம் தான் deconstruction எனப்படுகின்ற சிதைவுருவாக்க முறைமைக்கும் ; death of the author எனப்படுகின்ற ஆசிரியனின் மரணம் எனும் இலக்கிய சிந்தனைக்கும் முக்கிய தொடக்கமாக அமைகிறது.

இன்றைய நவீன தொழில்நுட்ப மேலாண்மைத் தொடர்பாடல் காலத்தில் நேரடியான பேச்சுகள் கூட பதிவுகளாக்கப்படுகின்ற சூழலில் அவை கூட நிழலுருப் பிரதிகளாகவே கருதப்படுவதனால் அங்கு கூட வேறு வகையான அர்த்தங்களைக் கண்டுபிடித்து விட முடியும்.

இதனை இலகுவாகப் புரிந்து கொள்ள பதினொரு வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை ஒன்றின் சில பகுதிகளை குறிப்பிடலாம்,

அதாவது –

# நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் #

என்னும் சொல்லினை மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கும் போது அதன் அர்த்தம் எதுவாக இருக்க முடியும்?

இங்கு பொதுப்புத்தி சார்ந்த அர்த்தம் ஒன்று இருக்கிறது. அது ஒற்றுமை, சகோதரத்துவம், ஐக்கியம் என்னும் வகையாக வெளிப்படக் கூடும். அது எது போன்றதென்றால் சிம் காட் அல்லது pen drive போன்ற இன்னும் எண்ணற்ற உதிரிப் பாகங்கள் எந்த brand ஆக இருந்த போதும் அதன் பரிமாணமும் அளவும் அது சார்ந்த எல்லா விதமான சாதனங்களிலும் பொருத்துவதற்கும் பொருந்துவதற்கும் தோதாக இருக்கும். இது ஒரு பொதுவான சமரசத்தினால் உண்டாவது. இது போன்ற சமரச நிலைகள் மொழி சார்ந்த புரிதலுக்குள்ளும் இருக்கிறது.

இங்கு
# நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் #

என்னும் பேச்சினை சமரசத்திற்கு உட்படுத்தாது அதற்குள் மீறிச் செயல்படும் குறிப்பீடாக நோக்க எத்தனித்தால்

* பெரும்பான்மை வாத அத்துமீறல்

* சிறுபான்மை அடையாள அழிப்பு

* எமது பிரத்தியேக வாழ்வுரிமைக்கு எதிரான அடக்குமுறை
போன்றவையாக தென்படும்.

ஒரு சராசரியான அறிக்கையே இது போன்ற எண்ணற்ற மீறும் குறிப்பீடுகளால் நிரம்பியிருக்கும் போது மொழிக்குள் நிலவுகின்ற அர்த்தங்களை மேம்போக்காக அணுக முடியாது.

அதேவேளை மானுட அறிவையும் பிரக்ஞையையும் வடிவமைப்பதிலும் முறைமைப்படுத்துவதிலும் மொழி முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுவதை புறநடையாக நோக்க வேண்டிய தேவையுமிருக்கிறது. மனிதர்கள் மொழியினால் சிந்திக்கிறார்கள்தான். எல்லோரும் ஒலிகளையும் உருவங்களையும் சிந்திக்கக் கூடியவர்கள்தான். ஆனால் உருவங்களற்ற சிக்கலான கருத்தம்சங்ளான காதல், நீதி, அறம் போன்றவை மொழியாகவும் சொற்களாகவும் உள்ள நிலையில் காதல் என்றால் என்ன என்று ஒரு கேள்வியைத் தொடுத்தால் அதற்கான பதில்கள் சொற்களினால் முறைப்படுத்தப்பட்டதாகவே எதிரொலிக்கும். காதல் என்பதனை உள்ளூறும் பிரவாக அனுபவ நிகழ்வுகளாக உணர்கின்ற போதும் அந்த idea வார்த்தைகளாகவே உருவாக்கப்படுகிறது.

இப்போது நாம் ஒரு புரிதலை நோக்கி நகர்ந்திருக்கிறோம். அது என்னவென்றால் மொழியானது இயல்பாகவே குளறுபடி மிக்கது என்பதுதான். அங்கு குறிப்பான், குறிப்பீடு என்பவற்றுக்குள் தன்னிச்சையான ஒப்புதல் இருக்குமாறு நெகிழ்வும் தவறும் தொடர்ச்சியாக மாறுபடும் உறவாக உள்ளன.

வார்த்தைகள் வெவ்வேறு வரலாற்றுக் காலகட்டங்களையும் வித்தியாசமான பண்பாடுகளையும் கடந்து ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் வெவ்வேறு அர்த்தப் புரிதலாகவே இருக்கிறது. மொழிக்குள் இயல்பாகவே பல அர்த்தங்களை விளம்பக் கூடிய தெளிவின்மை செயல்படுகிறது.

மொழியானது பண்பாடுகளுடன் உறவுச் சாய்வு கொண்டதாகவும் இருக்கிறது. எல்லா குறிகளும், ஒலிகளும், வார்த்தைகளும் ஒரு போதும் பிரத்தியேக நோக்குடையவை யல்ல. பல்வேறு பிரிவினர் கலாசார அடிப்படையிலோ அல்லது கல்வித்துறை சார்பான அடிப்படையிலோ அல்லது நாடுகள் அடிப்படையிலோ அன்றியும் வேறு பேதங்களின் அடிப்படைகளிலோ வேறுபட்டவாறு குறிப்பிட்ட பொருளைச் சுட்ட வித்தியாசமான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.அதாவது மொழிகள் அது சார்ந்த பண்பாட்டடுத் தொற்றுகளால் பீடிக்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு முன்பு குறிப்பிட்டது போல காதல் என்ற உணர்வுக்கான கருத்து வெளிப்பாடு என்பது அவகாசமற்ற திடீர் அர்த்தங்கள் கொண்டதல்ல. அது வெவ்வேறு வரலாற்றுக் காலகட்டங்களையும் வித்தியாசமான பண்பாடுகளையும் உட்செரித்து ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் முடிந்து விடாத அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கிறது. அந்தச் சொல்லுக்கான வரைவிலக்கணம் எதுவான போதும் குறிப்பிட்ட பண்பாட்டினால் வடிவமைக்கப்பட்டதாகவே இருக்கும்.

மனிதர்கள் சிந்திக்கின்ற மொழி என்பது நிஜமான பரிவர்த்தனைத் தன்மை கொண்டதாக அறுதியிட்டுக் கூற முடியாதளவு ஐயங்கள் நிறைந்தது. இந்த விதமான theoretical awareness உள்ள படியாக மொழியை அணுகும் போது உருவாகும் படைப்பாற்றல் என்பது வித்தியாசமானது. இந்த வகைச் சிந்தனையூடாக முன்வைக்கப்படும் எழுத்து முயற்சிகள் தமிழில் மிகக் குறைவு.

பின்னூட்டமொன்றை இடுக