பாலியல் அரசியல், வெறுப்பரசியல், உதாசீன அரசியல்!

பெருந்தேவி

“அர்த்தங்களைக் களைந்துவிடு. உன் மனம்தான் உன்னைத் தின்று தீர்க்கும் துர்க்கனவு. உன் மனதை நீ தின்றுவிடு” (கேத்தி ஏக்கர்)

கிட்டத்தட்டப் பித்துப்பிடிக்கும் நிலையில் இதை எழுதுகிறேன். தொடர்ந்து சில நாள்களாக முகநூலைத் திறக்கவோ, பத்திரிகைகளின் இணையதளங்களைச் சென்று பார்க்கவோகூட அஞ்சுகிறேன். என் மனத்தை எவ்வாறு நான் தின்று முடிக்க? எண்ணிப்பார்க்கவே முடியாத வகையில் பாலியல் வன்புணர்வுக்கும் சித்ரவதைக்கும் ஆளாகிக் கொல்லப்பட்ட கத்துவாவின் அந்த எட்டு வயதுப் பெண் குழந்தை, உன்னோவில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான அந்தப் பதினேழு வயது மாணவி, சூரத் நகரில் எண்பத்தாறு காயங்களோடு கண்டெடுக்கப்பட்ட நாள்கணக்காகப் பாலியல் சித்ரவதைக்கு ஆளாகி, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட பதினோரு வயதுப் பெண் குழந்தை, அறுபடாத இந்த ‘மரபில்’ இந்த நொடியில் வன்புணர்வுக்கும் வன்முறைக்கும் ஆளாகிக்கொண்டிருப்பவர்கள்…

இன்றைக்கு ஊடகத்தில் தலைப்புச் செய்தியாகியிருக்கும் கத்துவா, உன்னோவ், சூரத் ஆகிய இடங்களில் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்ட பெண் குழந்தைகள். தொழில்நுட்பத்தால் மறைக்கப்பட்ட, மறைக்கப்படாத, அவர்களின் முகங்கள்; அக்கறையற்றோ அடையாளத்தை நீக்கியோ இக்குழந்தைகளுக்கு ஊடகத்தில் வைக்கப்பட்ட, இடப்பட்ட பெயர்கள், அந்த முகங்களின், பெயர்களின் அவல ஊடகக் காட்சிகளின் பின்னணியில் மெதுவாக நம் நினைவின் அரங்கத்திலிருந்து நழுவிவிட்ட வேறு பெண் முகங்கள், பெயர்கள். இனிமேலும் இத்தகைய பாலியல் சித்ரவதை அரங்கத்துக்குள் வரப்போகிற முகங்கள், பெயர்கள். வரப்போகிறவர்கள், முன் நிற்பவர்கள், கடந்துவிட்டவர்கள்.

பிறப்புறுப்புக்குள் கம்பி, பிறப்புறுப்புக்குள் மரக்கட்டை, பிறப்புறுப்புக்குள் விதவிதமான உள்ளூர், வெளியூர் ஆண்குறிகள், வாயில் திணிக்கப்பட்ட துணி… ஓட்டைகளாக மட்டுமே உணரப்படும், அடையாளப்படும் பெண். பெண் என்ன, பெண் குரங்குகூட இங்கே விட்டுவைக்கப்படுவதில்லை. தேவை முடிந்தபின் கல்லால் அடித்துக் கொல்லுதல். கழுத்தை நெரித்துக் கொல்லுதல். கிணற்றில், வனாந்தரத்தில், முட்புதரில், மைதானத்தில் தூக்கி எறிதல்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் காதலித்தவன் உள்ளிட்ட ஒரு கிராதகக் கும்பலால் பாலியல் கொடுமைக்குள்ளாகி வன்புணரப்பட்டு நிர்வாணமாகக் கிணற்றில் மிதக்க வைக்கப்பட்ட சிறுகடம்பூரைச் சார்ந்த தலித் பெண்… உயிரோடிருந்தால் இன்றைக்கு அவர் வயது பதினெட்டு, பத்தொன்பது இருக்குமா? அவர் எப்படி சித்ரவதைக்கு ஆளானார் என்பது நினைவிருக்கிறதா? வாழும்போது மட்டுமின்றி பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்திலும்கூட சாதிப் பாராமுகத்தைச் சந்தித்த அந்த தலித் பெண்ணைப் போலன்றி, நாடே கொந்தளிப்புக்குள்ளான, குரூர வன்முறைச் சம்பவத்தின் பாத்திரமான ‘உயர்த்தப்பட்ட’சாதியைச் சேர்ந்த டெல்லிப் பெண்? பேருந்தில் கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, யோனிக்குள் இரும்புக் கம்பியைச் செருகி… பெரிதும் விவாதிக்கப்பட்ட அந்த அவலமும்கூட மங்கித்தானே போயிருக்கிறது நினைவில்?

இயல்பாக்கம் செய்யப்படும் பாலியல் வன்முறைகள்

ஒருபுறம் கடந்த கால நினைவுகளுக்கே உரிய மங்கிப்போகும் தன்மையால் பாலியல் வன்முறை நிகழ்வுகள், அந்தந்த நேரத்துக்கான பேச்சுப் பொருட்களாகத் தேங்கி நின்றுவிடுகின்றன. அதனால் பொதுச் சமூகத்தின் தொடர் விசாரணை அவற்றை நோக்கி நகர்வதில்லை. இன்னொருபுறம் நிகழ்காலத்தில் நாம் பார்க்கும்போதே நடக்கும் பாலியல் வன்முறைகள் இயல்பாக்கம் செய்யப்படுகின்றன.

இயல்பாக்கம் பலவகைகளில் செயல்படுவதைக் குறிப்பிட வேண்டும். ஒன்று, “இவையெல்லாம் காலம் காலமாக நடக்கின்றன, இப்போது ஊடகப் பெருக்கத்தால் பெரிதுபடுத்தப்படுகின்றன” என்று பாலியல் வன்முறையின் மீது காலத் திரை போர்த்தி மூடப்படுகிறது. அல்லது, ஒரு பெண் / பெண் குழந்தை பாலியல் வன்முறையைச் சந்திக்கும்போது, அது பொதுச் சமூகத்தில் கவனம் பெறும்போது உடனடியாக ஒப்பீட்டில் பலர் இறங்கிவிடுகிறார்கள். இந்தியாவில் மட்டுமா நடக்கிறது, பிற நாடுகளில் நடக்கவில்லையா என்று இந்தப் பண்பாட்டுப் புவியியல் வெளியிலிருந்து பொது சமூகத்தின் கவனத்தைத் திசை திருப்புதல் நடக்கிறது. அல்லது பெண்கள் மட்டுமா இதையெல்லாம் சந்திக்கிறார்கள், ஆண்களுக்கும்தான் இதெல்லாம் நடக்கிறது என்று சில புள்ளிவிவரங்களை, கதைகளைத் தருதல்.

பொருளாதார, அரசியல் அதிகார நெருக்கடிகளால் பாலியல் தொந்தரவுகளைச் சில ஆண்களும் சந்திக்கிறார்கள்தாம். ஆனால், ஒரு பெண்ணோ, பெண் குழந்தையோ சந்திக்கும் இத்தகைய வன்முறை சமூகச் செயற்பாட்டின் (social practice) அங்கமாகவே இங்கே சூழலில் பொதிந்திருக்கிறது. சில ஆண்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களை அகழ்ந்தெடுத்து இந்தத் தருணத்தில் நீங்கள் பேசும்போது, பெண் / பெண் குழந்தை எதிர்கொள்ளும் பாலியல் வன்முறையின் சமூகச் செயற்பாட்டுத் தருணத்தை, தளத்தைப் புறக்கணிக்கிறீர்கள்; அவற்றைக் கேள்விக்குள்ளாக்கத் தவறிவிடுகிறீர்கள். முக்கியமாக, பாலியல் அரசியல் உங்கள் பார்வைக்கே வருவதில்லை.

பொது வன்முறைகளில் ஒன்றல்ல

சமூகச் செயற்பாடு என்று நான் கூறும்போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறையை மனிதர்கள் எதிர்கொள்ளும் பொதுப்படை வன்முறை நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்க மறுக்கிறேன். ஏனெனில் பெண்ணுக்கும் பெண் குழந்தைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள இந்தச் செயற்பாடு வெற்றிடத்தில் நிகழ்வது அல்ல. அதன் பின்னணியில் தீவிரமான பாலியல் அரசியல் (sexual politics) இருக்கிறது. அதை மையப்படுத்தியே பண்பாடு அல்லது கலாசாரம் இயங்குகிறது. பெண்ணை, குழந்தையை தனித்த மனித இருப்புகளாக அன்றி (கவனிக்கவும், தனிநபர் என்கிற நவீன, தாராளவாத சுயத்தை நான் குறிப்பிடவில்லை) பாகுபடுத்தி, ஆணுக்கு அடுத்த படிநிலைகளில், குறைபட்டவையாகத் தொடர்ந்து வைத்திருப்பது பாலியல் அரசியல். அத்தகைய அரசியலை அடிப்படையாகக்கொண்ட பாலியல் அதிகாரத்தின் வழியாகத்தானே ஓர் ஆணுக்கு அல்லது ஆண்மையைச் சமூகத்துக்கு உடைமை நிலையில் என வைத்து பெண்களின், குழந்தைகளின் தன்னிலைகள் (subjectivities) இங்கே கட்டமைக்கப்படுகின்றன. திருமணம் என்பதில் தொடங்கி பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தல் வரை, சமூகச் செயற்பாட்டில் ஆண் என்றும் பெண் என்றும் வித்தியாசப்படுத்தப்பட்டு இருபாலின வகைமைகள் (gender categories) இடையறாது கட்டப்படுகின்றன. இந்த வகைமைகள் ஆணுக்குக் கீழே பெண் என்கிற அதிகாரப் படிநிலையை மீள்செய்பவையும் உறுதி செய்பவையும்தாமே?

கத்துவா பயங்கரத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். குஜ்ஜர் பக்கர்வால் என்றறியப்படுகிற, மேய்ச்சலை வாழ்வாதாரமாகக் கொண்ட சன்னி இஸ்லாமிய நாடோடிக் குடிகளை கத்துவாவின் ரஸனா பகுதியிலிருந்து துரத்திவிடத் திட்டம் போடப்படுகிறது. இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது பக்கர்வால் குடிகளிலேயே, ஆக ஊறுபடத்தக்க விதத்தில் (most vulnerable) கட்டப்பட்டிருக்கும் பாலினத் தன்னிலை (gendered subject). ‘பெண்’, அத்தோடு அவள் ‘குழந்தை’. ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள வகைகளில் ஊறுக்கு இலக்காகக்கூடியவள். ‘உடைமை’ என்பதால் பொருள்தன்மை மிகுந்து மனிதத்திலிருந்து (human) குறைத்து உணரப்படுபவள். ஆகவே கையகப்படுத்தக்கூடியவள், சேதப்படுத்தக்கூடியவள். கையகப்படுத்தியதும் சேதப்படுத்தியதும்தாம் அங்கே நடந்திருக்கின்றன.

வெறுப்பரசியலின் களம்

பக்கர்வால்கள் இஸ்லாமியர்கள் என்பதால் இஸ்லாமியர்கள் மீது இந்துத்துவம் இடையறாது கட்டியமைக்கிற, நிலைநிறுத்தியிருக்கிற மதம் என்ற பெயரிலான வெறுப்பரசியலுக்கு ஒரு களம் அங்கே உருவாகிறது. சில வரலாற்றுத் தகவல்கள் இங்கே முக்கியம்… 1965இல் இந்தியா -பாகிஸ்தான் போருக்கு முன் பாகிஸ்தானின் Operation Gibralter-ஐக் குறித்து இந்திய ராணுவத்துக்குத் துப்பு கொடுத்து அந்த முயற்சியில் பாகிஸ்தானைத் தோல்வியுறச் செய்தது பக்கர்வால் குடியைச் சார்ந்த ஒருவர்தான். இதற்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர் அவர். 1990களில் முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார். ஆனால் இந்தத் தகவல்களெல்லாம் புறந்தள்ளப்படுகின்றன. ‘பசுவதை செய்பவர்கள்’, ‘போதைப் பொருள்களைக் கொண்டுவருபவர்கள்’ என்றெல்லாம் அந்த மக்களைக் குறித்த பரப்புரைகள் வெறுப்பரசியலின் களத்தைத் தயார் செய்கின்றன.

மதம் சார்ந்த வெறுப்பரசியலைக் கையிலெடுத்து குற்றம்சாட்டப்பட்டு இன்று நிற்பவர்களில் முதன்மையானவர் வருவாய்த் துறை அதிகாரியாக இருந்தவர். அவரால் காவல் துறையினரோடு எளிதாக உறவாட முடிகிறது, குற்றத்தை மறைக்க லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் போட முடிகிறது. பாலியல் வன்முறையில் காவல் துறையைச் சார்ந்தவர்களின் கூட்டுப் பங்கேற்பும் உடந்தையும் வெட்ட வெளிச்சமாகியிருக்கின்றன. இந்தக் கூட்டுப் பங்கேற்பில் ஏதிலிகளின் மீதான அரசாங்க நிறுவனங்களின் உதாசீன அரசியல் தன்னை வெளிப்படையாக அரங்கேற்றிக்கொள்கிறது. இந்துத்துவ மேலாண்மை வெறுப்பரசியலோடு, ஏதிலிகள், அடிமட்டத்தில் இருப்பவர்கள் மீது சிறிதும் அக்கறையற்ற அரசாங்க நிறுவன அரசியல் இணை சேருகிறது. குற்றம்சாட்டப்பட்ட காவல் துறை சிறப்பு அதிகாரியான தீபக் கஜுரியாவை விடுவிக்க, இந்து ஏக்தா மஞ்ச் பிப்ரவரி மாதம் நடத்திய போராட்ட ஊர்வலத்தில் பாஜகவின் மாநிலச் செயலாளர் மற்றும் மந்திரிகள் பங்கேற்பில் வெறுப்பரசியல், உதாசீன அரசியல்களின் இணைவு மீண்டும் வெளிக்காட்டப்படுகிறது. அந்தப் போராட்ட ஊர்வலத்தில் தேசிய இறையாண்மையின் குறியீடான தேசிய கொடியைப் பயன்படுத்துகிறார்கள். யார் இறையாண்மைக்கு உகந்த குடிமகன்கள், யார் அந்த அந்தஸ்திலிருந்து குறைந்தவர்கள் அல்லது தள்ளிவைக்கப்பட வேண்டியவர்கள் என்பது அதன் மூலம் சுட்டப்படுகிறது.

வெறுப்பரசியலும் உதாசீன அரசியலும், சமூகப் பண்பாட்டின் அடியோட்டமான பாலியல் அரசியலை மேலெடுக்கின்றன. பிணைந்து செயல்பட்ட இந்த மூவகை அரசியல்களின் அதிகாரத்தின் இலக்காகிறது பெண் குழந்தையின் உடல். பாலியல் வன்புணர்வு மற்றும் வன்முறையின் மூலம் அதிகாரம் ‘ஊறுபடத்தக்க’ பெண் / பெண் குழந்தை என்கிற தன்னிலையைப் பொதுச் சமூகத்தின் முன் பிறிதொரு முறை நிகழ்த்திக்காட்டுகிறது.

இப்போது நமக்கு முன் இருக்கும் கேள்வி… வன்முறையைக் கைக்கொள்ளும் இத்தகைய அதிகாரத்தை எப்படித் தடுக்கப்போகிறோம் என்பதே. சமூகப் பண்பாட்டுக்குப் பாலியல் அரசியலே அடிப்படையாக இருப்பதால், பெண்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட ‘குறைபட்ட நிலையை’, ‘உடைமை நிலையை’ மறுதலிப்பதே, அத்தகைய மறுதலிப்புக்கான சாத்தியங்களை நோக்கி நகர்வதே நீண்டகால நோக்கில் சரியான, பலன் தரத்தக்க செயல்பாடாக இருக்கும். பண்பாட்டிலிருந்து பெண் குழந்தைகளை ஈடேற்றுகிற வழியும் அது. மற்றபடி சட்டங்கள், நீதி பரிபாலனம் ஆகியவற்றின் மூலம் குற்றவாளிகளுக்குத் தண்டனை கோருதல் அல்லது வாங்கித் தருதல் போன்றவை எல்லாம் போதாமை கொண்ட தற்காலிகத் தீர்வுகளே.

பின்னூட்டமொன்றை இடுக