நிலம் நடுங்குகிறது ….!

Athanas Jesurasa 

(லா ரெறா ரிறேமா / 153 நிமிடங்கள் / இத்தாலி / 1948).

ஜியோவன்னி வெர்கா 1881 இல் எழுதிய, ‘மெட்லார் மரத்தருகிலுள்ள வீடு’ என்னும் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டது இத்திரைப்படம். புகழ்மிக்க லூஷினோ விஸ்கொன்ரி இதன் நெறியாளராவார்.

திரைப்படம் தொடங்குகையில் விவரணக் குரல் ஒலிக்கிறது; பிறகும் அவ்வப்போது காட்சிகள் பலவற்றில், இந்த விவரணக் குரல் ஒலித்தடத்தில் ஒலிக்கிறது. திரையில் கடற்புறக் காட்சிகள் தெரிகின்றன. கடற்கரையில் வியாபாரிகள்; கடலில் மீன்பிடி வள்ளங்கள்.
விவரணக் குரல் :
“மனிதனை மனிதன் சுரண்டும் பழைய கதை…. இவைதான் சிசிலியிலுள்ள அகி ரிறெஸ்ஸாவின் வீடுகள், வீதிகள், படகுகள், மக்கள்…. எல்லா நடிக நடிகையரும் ஊரிலுள்ள மக்களிலிருந்து தெரியப்பட்டவர்கள். மீனவர்கள், பண்ணைத் தொழிலாளர், கட்டடத் தொழிலாளர், மீன் வியாபாரிகள் எல்லோருமே, தமது கஷ்டங்களையும் நம்பிக்கைகளையும் தமது பேச்சுமொழியில் வெளிப்படுத்துகின்றனர். சிசிலியில், ஏழை மக்களின் பேச்சுமொழியாக இத்தாலிய மொழி இருக்கவில்லை.

நான்கு நாள்களாக இவை…. படகுகள் மீன்களால் நிரம்பியபடி. இம்முறை கடல் தாராளத்தன்மை யுடன்….
வழமைபோல் காலையில், முதலில் மீன் வியாபாரிகள் கடற்கரையில் காத்திருப்பார்கள். மீன்களைப் பிடிக்குமாறு இருக்கையில், தாத்தாவி லிருந்து தகப்பன் – தகப்பனிலிருந்து மகன் வரை, ரிறெஸ்ஸாவில் வாழ்க்கையை அமைக்க முடியும்…. எப்போதும் அப்படித்தான்….!”
பழைய வீடொன்று காட்டப்படுகிறது.
விவரணக் குரல் :
“ஏனைய பலருடையதைப்போலவே கற்களாலான ஒரு பழைய வீடு…. மீனவரின் தொழிலைப்போலவே பழைமையான சுவர்களுடன். வலஸ்ற்றொஸ் குடும்பத்து வீடு இது. வீட்டில் பெண்கள் வேலைசெய் யும்போதும், தங்கள் குடும்பத்தவர் கடலிலிருந்து திரும்புவதைப்பற்றி நினைத்தபடி இருப்பர். ஏனென்றால், முதலாவது வலஸ்ற்றொஸ்சின் நாள்களிலிருந்து எப்போதும் குடும்பத்தின் படகு, கடலில்…. அவர்கள் தாத்தாவையும் – ஒருநாள் காலையில் கடலிலிருந்து திரும்பிவந்திராத தகப்பனையும் நினைப்பார்கள்…..”

காலையில் எழுந்த மூத்தவளான மாரா, சிம்னி விளக்கை ஏற்றுகிறாள். தங்கை லூசியாவை எழுப்புகிறாள். வீட்டைக் கூட்டுகிறாள். லூசியா துணியினால் பொருள்களைத் துடைக்கிறாள்; சுவரில் தொங்கும் சட்டமிடப்பட்ட பழைய ஒளிப்படத்தைப் பார்க்கிறாள்.
“என்னத்தை நீ பார்க்கிறாய்?” – மாரா.
“எங்கள் சகோதரர்கள். வெளியே அங்கு சென்ற அவர்களை எப்போதும் நான், நினைப்பேன்…. எங்கள் அப்பாவை நினைப்பது போல…. அவர் திரும்பிவந் திராத அந்த நாள்!” – லூசியா.
“இப்போது அவர்கள் கடலில்.” – மாரா.
“கொடுமையான கடல்!”

விவரணக் குரல் :
“ ‘கொடுமையான கடல்’ – லூசியாவின் சொற்களில்; அவர்களின் தொழிலும் கடுமையானது. அவர்களது உழைப்பின் பயனெல்லாம் மீன் வியாபாரிகளுக்கே சென்றது. நாள் கூலித் தொழிலாளருக்குச் சம்பளம் கொடுக்கவேண்டும்…. வலைகளைத் தினமும் தைப்பதற்கும், படகுகளின் பழுதுகளைத் திருத்துவ தற்கும் செலவுண்டு. எந்தக் கஷ்டமும் படாமல் மொத்த வியாபாரிகள் பணம் சேர்க்கும்போது, மீனவர் கள் இந்தச் செலவுகளைத் தாங்கவேண்டியுள்ளது. குறைந்த விலைக்கு மீன்களை வாங்குவது, வியாபாரிகளை வசதியானவர்களாக்குகின்றது.”
* *

கடற்கரையில் வலைகளைச் சீர்செய்கையில், மீனவர்கள் தமக்குள் உரையாடுகின்றனர். தாம் சுரண்டப்படுவதுபற்றியும், வியாபாரிகளைக் கொழுக்கச் செய்வதற்குப் பதிலாகக் கற்றனியாவில் மீன்களை விற்கவேண்டுமெனவும், சிலர் சொல்கின்றனர்; வலஸ்ற்றொஸ் குடும்பத்தைச் சேர்ந்த ரோனி, இதில் முனைப்புக் காட்டுகிறான். இவன், முன்பு நகரத்தில் இராணுவத்திலும் இருந்துள்ளான்.

* *

காலையில், கடலிலிருந்து வலஸ்ற்றொஸ் குடும்பத்தைச் சேர்ந்தோர் – தாத்தா, ரோனி, கோலா, வான்னி, அல்ஃவியோ – திரும்புகின்றனர். வலைகள் நிறைய மீன்கள் இருந்தன. ஆனாலும்….

விவரணக் குரல் :
“பன்னிரண்டு மணித்தியாலங்கள் முதுகு முறியப் பாடுபட்ட பிறகு, வீட்டுக்குத் திரும்புகிறார்கள். வலை நிறைய மீன்கள் இருந்தபோதும், பட்டினியிலிருந்து நீங்கப் போதாத நிலைமை. குடும்பத்திலுள்ள எல்லோருக்கும் போதிய உணவு கொடுக்கப் போதாத வருமானத்தை நினைக்கையில், கடுந்துயர் ஏற்படுகிறது…. அதன் அழுத்தம், அவர்களின் சில மணி நேர ஒய்வினையும் பாழாக்கிவிடுகிறது.”
“தாத்தா…. இன்றைக்கு எவ்வளவு கிடைத்தது?…. 15,500 லீரா?”
“பெரிய மாக்கறல் 22 றாத்தல் எங்களுக்குக் கிடைத்தது; அதற்கு 7,75o லீரா.” – தாத்தா.
“எப்போதுமே ஒரே பழைய கதை!
நாங்கள் இரவு முழுக்க வேலை; ஆனால், அவங்கள் நன்மை அடையுறாங்கள்.” – ரோனி.
“என்ர நினைவுக்கு எட்டியவரை, எப்போதுமே இதுபோல்தான்.” – தாத்தா.
“இப்படியே போக ஏலாது.” – ரோனி.
“நகரத்தில் இராணுவ சேவையில் இருந்தபின்னர், அநீதிகளை ரோனி பொறுப்பதில்லை. ரோனி வித்தியாசமாக நிகழ்வுகளைப் பார்க்கிறான்.” (தம்பி) கோலா.
”எழுபது ஆண்டுகள், ஒரே வழியில்தான் நான் நினைத்தேன். எல்லாம் சரியாகவே கழிந்தன. மூத்தோருக்கு ரோனி செவிசாய்க்கவேணும் – ‘இளமையின் பலமும் முதுமையின் அறிவும்’ என்ற பழைய கூற்றைப் போல.” – தாத்தா.

**

ரோனி நெத்தாவிடம் செல்கிறான்; அவளை அவன் நேசிக்கிறான். அவள் அவனுடன் பழகினாலும், தனது முடிவை வெளிப்படுத்துவதில்லை. ஆயினும் இருவரும் அவ்வப்போது உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கின்றனர்.

**
விவரணக் குரல்:
“நாளை எப்போதும் உறுதிமொழிகளால் நிரம்பியுள்ளது; நம்பிக்கைகள் ஊற்றெடுப்பதும் நித்தியம். ஆனால் அகி ரிறெஸ்ஸாவில் நாளை என்பது வழமையில், நேற்றிலிருந்தும் …. வரும் நாள்களிலும் அதிகம் வித்தியாசப் பட்டிருக்கவில்லை.

மொத்த வியாபாரிகள் விலைகளைக் குறைப்பதற்குச் சதி செய்கிறார்கள். சந்தை எப்போதும் போலவே. உன்னால் ஒரு லீரா கூடுதலாகப் பெற முடியாது. விலை தீர்மானிக்கப்பட்டுவிட்டது. ‘அநீதிகளுடன் வாழ நீ பழக வேண்டும்’ என்பது, ஏழைகளின் பழமொழி. எல்லாமே ஏழைகளின் முதுகின்மீது வீழ்கின்றன. ஆனால் இம்முறை, இளைஞர்கள் துணிந்துவிட்டனர்.”
அவர்கள், தாமே விலையைத் தீர்மானிக்க முயன்றனர்.
“ஆயிரம் லீரா – ஒரு கிலோ!” – ரோனி
“425 லீரா – ஒரு கிலோ!” – லோரென்ஸோ (வியாபாரிகளின் கையாள்).
“லோரென்ஸோ நிற்பாட்டு.” – ரோனி
கோலாவும் வேறு மீனவர்கள் சிலரும் வியாபாரிகளுடன் வாக்குவாதப் படுகின்றனர்.
“இன்னும் என்னத்துக்குக் காத்திருக்கிறோம்? இந்த யூதாஸ் தராசுடன் நான் என்ன செய்கிறேன் என்பதைப் பாருங்கள்!” என்றபடி ஓடும் ரோனி, கடலின் அருகில் உயரமான இடத்திலிருந்து அதனைக் கடலில் வீசுகிறான். வியாபாரிகள் சிலரும் இழுபறிப்பட்டபடி கடலுள் வீழ்கின்றனர். கடற்கரையில் ஒரே குழப்பம்.

ஓடிச்செல்லும் வியாபாரி ஒருவன், அருகிலுள்ள காவல் நிலையத்துக்குச் சென்று அறிவிக்கிறான். காவல்துறையினர் வந்து, ரோனியையும் கோலாவையும் மற்றும் சிலரையும் கைதுசெய்து, நகருக்குக் கொண்டு செல்கின்றனர்.

* *
வீட்டில் லூசியா சிறுவருக்குக் கதை சொல்கிறாள்.
“அரசனின் மகன் என்னை வெள்ளைக் குதிரையிலேற்றிக் கொண்டுசென்று, திருமணம் செய்வான்.”
அவள் இவ்வாறு சொல்லுகையில், சேர்ஜன்ற் டொன் சல்வரோர், யன்னலில் எட்டிப் பார்க்கிறான். பின்னாளில் அவன் லூசியாவைக் கவர்ந்து, களவில் உறவுகொள்வதைச் சூசகமாக அறிவிக்கும் காட்சி இது!
வலஸ்ற்றொஸ் குடும்பத்து வீட்டின் அருகில், கட்டுமான வேலை செய்யும் தொழிலாளி நிக்கோலா, மாராவை விரும்புகிறான்; அவளுக்கும் அவனில் ஈடுபாடு இருக்கிறது. யன்னலின் ஊடாக இருவரும் சில வேளைகளில் கதைத்துக் கொள்கின்றனர்.

* *
“ரோனியும் கூட்டாளிகளும் போன்ற நல்ல உழைப்பாளிகள் வேலைசெய்ய வேண்டும்; அதுதான் நமக்கு நல்லது” என வற்புறுத்தும் பிரதான வியாபாரி, மற்றவர்களையும் ஏற்கச்செய்து, காவல்துறையினருடன் தொடர்புகொண்டு, அவனையும் மற்றவர்களையும் விடுவிக்கிறான்.

வலஸ்ற்றொஸ் வீட்டில் குடும்பத்தவர் மத்தியில், உரையாடல் நடக்கிறது.
“அவர்களுக்கு நாங்கள் தேவை. அதனால்தான் விடுதலை செய்வித்தார் கள். இந்தத் துயரமான வாழ்க்கையை வாழ நாங்கள் பிறக்கவில்லை…. ஏதும் சிறந்த ஒன்றிலும் நம்பிக்கையற்று இருக்கவும்! ஆனால், எங்கள் வாழ்க்கைக்கு நாங்கள் எசமானர்களாக இருக்கவேண்டும்.”- ரோனி.
“உனது தகப்பன் எப்போதும் கடுமையாக உழைத்தான்; ஒருபோதுமே முறைப்பாடு செய்யவில்லை.” – தாத்தா.
“அது சரி…! கடலில் மூழ்கும்வரை, ஒருபோதுமே முறையிடாது அவர் வேலைசெய்தார். மற்றவருக்காய்க் கடினமாக உழைத்த அவர், என்ன நன்றியைப் பெற்றுக்கொண்டார்? அவரை …. அல்லது மற்றவருக்காய் உழைத்துக் கடலில் மூழ்கிய ஏனையோரையும் யார் இன்னும் நினைக்கிறார்கள்? யார்?” – ரோனி.
“ரோனி சொல்வது சரி. அவன் சரியான பக்கத்தில் சிந்திக்கிறான். நாங்கள் எங்களுக்காக உழைத்தால், அது எங்கள் குடும்பத்துக்காக ; அவர்களுக்கல்ல…. எங்கள் தாய்மாருக்கும் சகோதரிகளுக்குமே.
இவற்றை அப்பா நினைக்கவில்லையெனக் கருதவேண்டாம். அவர் ரோனியுடன் உடன்படுவார். தனது மகன்மார், சுமைகளுடன் மிருகங்களாக இருக்கவேண்டுமென அவர் விரும்பமாட்டார்.”- கோலா.
“நீ பார்க்கிறாயா? அது தெளிவானது! இந்த இரத்தம் உறிஞ்சிகளுக்கு எதிராக நாங்கள் இணையவேணும்!” – ரோனி.
“என்ன செய்யவேணுமென எனக்குச் சொல்லு ரோனி.”
“இந்தக் கொள்ளைக்காரக் கயவரிடமிருந்து எம்மை விடுவிக்க விரும்புகிறேன். எங்கள் சுய உடைமையில், எங்களுக்காக உழைப்போம். மீன்களுக்கு – எங்கள் மீன்களுக்கு உப்பிடுவதில் எங்கள் பெண்கள் நமக்கு உதவுவார்கள்! பிறகு கற்றனியாவில் அவற்றை விற்பனை செய்வோம்.” – ரோனி.

* *
வீட்டை அடமானம் வைத்து வங்கியில் கடன் பெறுவதற்குக் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட, ஒருநாள் வலஸ்ற்றொஸ் குடும்பம் ‘தடல்புடலாக’ வெளிக்கிட்டு, பேருந்தில் நகருக்குச் செல்கிறது. பின்னர் ஒருநாள், ரோனி சென்று பணத்தைப் பெற்று வருகிறான். புதிய படகு அவர்களுக்குச் சொந்த மாகிறது.

முதலாம் நாளிலேயே பெரும்தொகை அங்கொவியஸ் மீன்கள் பிடிபடுகின்றன. மகிழ்ச்சியுடன் அயலவரும் சேர்ந்து, எல்லா மீன்களுக்கும் உப்பிட்டு, சிறிய பீப்பாய்களில் அடைக்கின்றனர். அவற்றைக் கற்றனியாவில் விற்பனை செய்யலாம்.

அடுத்து வரும் நாள்களிலும் ஏராளம் அங்கொவியஸ் மீன்களைப் பிடிக்கலாமென, ரோனி கருதுகிறான். ஆனால் கால நிலை மாறுதலாயுள்ளது;
“குடாவில் காற்று எழும்பினால் திரும்பிவிடு. குடாக் காற்று புயல் போன்றது…. கேட்கிறாயா ரோனி?”- ஒருவர் சொல்கிறார்.

ஆனாலும் தற்றுணிபுடன், வழமையானவர்களுடன் ரோனி கடலுக்குச் சென்றுவிடுகிறான்.

கடுமையான காற்று புயலாக வீசுகிறது. அச்சமடைந்த மாரா வெளியே சென்று, ரோனி குழுவினரைப் பார்த்துவருமாறு ஃபண்டியெரா என்னும் மீனவரிடம் கேட்கிறாள்; அழுகிறாள். அவர் அவளை ஆறுதற்படுத்தி, காற்றுத் தணியட்டு மெனச் சொல்கிறார். பின்னர் படகுகளில் மற்றவர்களுடன் சென்று, ரோனி குழுவினரை மீட்டுத் திரும்புகிறார். ஆள்களுக்கு ஒன்றும் பாதகமில்லை; ஆயினும், அவர்களது படகு சேதமடைந்துவிட்டது. வீட்டுக்கு வரும் ரோனியையும் கோலாவையும், “என்ர மகன் … என்ர மகன்” என அணைத்தபடி கலங்குகிறாள் தாய்.
“நாங்கள் வந்துவிட்டோம் அம்மா!” எனச் சொல்கிறான், கோலா.

சேதமடைந்த படகைத் திருத்துவதற்குப் பணமில்லை. வேலை தருவதற்கும் பலர் தயங்குகின்றனர். எனவே, வருமானமற்றுக் கஷ்டப்படுகின்றனர் வலஸ்ற்றொஸ் குடும்பத்தினர். பீப்பாய்களில் எஞ்சியுள்ள உப்பிடப்பட்ட மீன்களை விற்க முனைகையில், குறைந்த விலையையே வியாபாரிகள் கூறுகின்றனர். ரோனி மறுத்துக் கோபிக்கும்போது, லோரென்ஸோவுடன் சண்டையிட நேர்கிறது. கோபத்துடன் அவர்கள் சென்றுவிடு கின்றனர். ஆனாலும் பிறகு, குறைந்த விலைக்கு அவர்களுக்கே கொடுக்க நேர்கிறது.

* *
வேலையற்ற நிலையில் கோலாவும் சலிப்படைகிறான். கடத்தலில் ஈடுபடும் ஓர் அமெரிக்கனை நண்பனொருவன் அறிமுகம் செய்கிறான்; அக்குழுவில் சென்றுசேரக் கோலா முயல்கிறான். ரோனி இதனை அவதானித்து, “அகி ரிறெஸ்ஸாவில்தான் பிறந்தோம்; இங்குதான் மடியவும் வேண்டும். மனதில் வை கோலா…. இங்கிருந்தே நாம் போராடவேண்டும்!” என்று சொல்வதை அவன் கேட்பதில்லை. ஒருநாள் அவன் வீட்டைவிட்டுச் சென்றுவிடுகிறான். நண்பர்களுடன் குடித்து, இரவில் நேரஞ்சென்று வீட்டுக்குவரத் தொடங்குகிறான் ரோனி. டொன் சல்வரோரின் வலையில் வீழ்ந்த லூசியா, இரகசியமாக அவனிடம் தன்னை இழக்கிறாள். இதனை உணரும் மாரா தங்கையைக் கோபத்துடன் ஏசுகிறாள்; “என்னை நீ கட்டுப்படுத்த முடியாது” எனக் கூறி, லூசியாவும் வீட்டைவிட்டு நீங்குகிறாள். நோயுற்ற தாத்தாவும் இறக்கிறார். வங்கிக் கடன் கட்ட இயலாதுபோனதில், வங்கி வீட்டைச் சுவீகரிக்கிறது; காலங்காலமாய் வலஸ்ற்றொஸ் குடும்பத்தினர் வாழ்ந்த அந்தப் பாரம்பரிய வீட்டை விட்டு வெளியேறி, சிதிலமான சிறியதொரு வீட்டில் அவர்கள் வசிக்க நேர்கிறது. வலஸ்ற்றொஸ் குடும்பம் மெல்லமாகச் சிதைகிறது. சிறுவர்களான வான்னியும் அல்ஃவியோவும் சிலவேளை தோட்டத்துக்குச் சென்று பழங்கள் பிடுங்கிச், சிறு ஊதியம் பெறுகின்றனர். மாராவின் திருமண ஆசை கலைந்துவிடுகிறது; வயதுபோன தாய் இருந்தபோதும், குடும்பத்தின் பொறுப்பை அவளே தாங்குகிறாள்.

படகுகள் திருத்தப்படும் இடத்துக்கு ஒருநாள் ரோனி செல்கிறான்; சேதமடைந்த தனது படகைக் கண்டு, அதனைத் தடவிப் பார்க்கிறான். இந்த இடத்தில்தான் தாத்தா…. இதில் வான்னி… அதில் கோலா…. என நினைத்துச் சோர்கிறான். திருத்த வேலைகள் செய்பவரின் மகளான சிறுமி அவனிடம், “இது உன்னுடையதா? உனக்கு என்னால் உதவ முடியும். பிறகு வந்து உனது படகை எடுக்கலாம்.” என, அப்பாவித்தனத்துடன் சொல்கிறாள்.

“உன்னால் எப்படி எனக்கு உதவ முடியும்? எனக்கு உதவக்கூடியவர்கள் தமக்குள் பொறாமையில் உள்ளனர். நான் செய்தது எனக்கு மட்டுமல்ல அவர்களுக்காகவுந்தான் என்பதை, அவர்கள் உணரவில்லை. அதனால் இப்போ, என்னை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள். சிலர் இப்போது எனது சதைக்காக …. சிலர் எனது எலும்புகளுக்காக….” எனக் கசப்புடன் பதில்கூறி நீங்குகிறான்.

* *
வீட்டுக்கு வந்தபோது, விற்பதற்காகச் சில உடைகளை மாரா எடுத்து வைத்திருப்பதைக் காண்கிறான். அவள் புறப்படுவதைத் தடுத்தவன், யோசனையுடன் தனது உடைகள் உள்ள பழைய பெட்டியைத் திறந்து, கடலுக்குச் செல்லுகையில் அணியும் கிழிசலான – பழைய – மேலங்கியை எடுத்து அணிகிறான்; நல்ல உடைகளை ஒரு துணியில் சேர்த்துக் கட்டி, (விற்பதற்காக) மாராவிடம் கொடுக்கிறான். வெளியிலுள்ள கல்லுக் கட்டில் அமர்ந்திருக்கும் அல்ஃவியோவுக்குப் பக்கத்தில் சென்று உட்கார்ந்து, அவனது தலையைப பாசத்துடன் வருடியபடி, யோசனையுடன் வான்னியைப் பார்க்கிறான். பின்னர் இருவரையும் அணைத்தபடி வெளியே கூட்டிச் செல்கிறான். தொழிலாளரைப் பதிவுசெய்யும் மீன் வியாபாரிகளின் அலுவலகத்துக்கு நேரே சென்று, வரிசையில் நிற்கிறான். அவனைக் காணும் வியாபாரிகள் சிலர் ஏளனம் செய்கின்றனர்.
“பசி, ஓநாயைத் தனது குகையிலிருந்து விரட்டிவிட்டது!” என்று ஒருவன் சொல்ல, இன்னொருவன், “காணாமற்போன ஆட்டுக்குட்டி பட்டிக்குத் திரும்பிவிட்டது!” என்று சொல்கிறான்.

அங்கு நிற்கும் லோரென்ஸோ, “எங்களுடன் வேலை செய்வதைவிட பசியில் செத்துப்போவேன் என்று சொன்னாயல்லவா?” என்று குத்தலாகக் கேட்கிறான். ரோனி கோபத்துடன் திரும்பி அவனைப் பார்க்க, லோரென்ஸோ அச்சமடைகிறான். ரோனியின் ஆழ்மனதில் எதிர்ப்புணர்வு இல்லாது மறைய வில்லை என்பதை, அது காட்டிவிடுகிறது! எனினும் பிறகு அவன், மௌனமாகவே இருக்கிறான். மூவரின் பெயர்களும் பதியப்படுகின்றன. “உனக்கு முழுக்கூலி, வான்னிக்கு அரைக்கூலி, அல்ஃவியோவுக்குக் காற்கூலி…. சம்மதமா? கையெழுத்துப் போடு!” எனச் சொல்லப்படுகையிலும், மௌனமாகவே கையெழுத்திடுகிறான்; தனது கையறுநிலையைக் கசப்புடன் அவன் உணர்கிறான்.

* *
மாலையில் கடலுக்கு தொழிலுக்காகச் செல்வதற்கு ஆயத்தம்.
“ தங்கச்சி…. அங்கோவியசுக்கு உகந்த காலநிலை இது!” என, மெல்லச் சிரித்தபடி மாராவிடம் ரோனி சொல்கிறான். பின்னர் தாயருகில் சென்று, “ஆசீர்வதியுங்கள் அம்மா” எனச் சொல்கிறான்.
“ஆசீர்வாதங்கள்….!” என்கிறாள் தாய்.
ரோனி, வீட்டிலிருந்து கடலுக்குச் செல்கிறான்.
அவன் செல்வதை நின்று பார்த்துவிட்டு, வீட்டினுள் மாரா செல்கிறாள் பழைய குடும்பப் படத்தை எடுத்து சுவரில் சாய்த்து வைத்துவைத்துவிட்டு, கையினால் அதனைத் துடைக்கிறாள்.

விவரணக் குரல் :
“ஆக…. வலஸ்ற்றொஸ் திரும்பவும் ஆரம்பிக்கின்றனர்; கடலுக்குத் திரும்புகின்றனர். கடல் கொடுமையானது – இந்தக் கடலில்தான்…. கடலோடிகள் மரணிக்கின்றனர்.”
அடுத்த காட்சியில், ஏனைய படகுகளுடன் இவர்கள் உள்ள படகும் செல்கிறது. ரோனியும் மற்றவர்களும் ஒத்திசைவுடன் அதில் தண்டு வலிக்கும் காட்சியுடன், படம் முடிகிறது!

**
உண்மையான மனிதர்கள், சுரண்டலுக்கு உள்ளாகி வறுமைக்காளாகிய வாழ்வு, சிதிலமான வீடுகள், மாறுதலாக எழுந்த ஒற்றைக் குடும்பத்து மனிதரின் எதிர்ப்புக் குரல், இயற்கையினதும் சக மனிதரின் விழிப்பற்ற – கூட்டுறவில்லாத – சுய நலத்தாலும் கைவிடப்படும் அந்த மனிதரின் அவல நிலை, தனிமனிதரின் அக வாழ்வுச் சிதைவுகள், உரிய செயற்பாடுகள் இல்லாமையால் தொடரும் சுரண்டல் என …. விரிவான சித்திரிப்புகளைத் திரைப்படம் கொண்டுள்ளது. கறுப்பு வெள்ளைக் காட்சிகள் தாக்குவலுக் கொண்டவையாக உள்ளன. விவரணத் தன்மையும் புனைவு வெளிப்பாடும் இணைந்து, புதிய வகையிலான படைப்புத் திறன் கொண்ட கலையாக்க மாக அமையும் படைப்பு இது! இத்திரைப்படத்திலுள்ள விவரணக் குரல், நெறியாளரான லூஷினோ விஸ்கொன்ரினுடையது.

1948 இல், 9 ஆவது வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில், தங்கச் சிங்க விருதை இத்திரைப்படம் வென்றமை குறிக்கத் தக்கது! – 22. 10. 201

– ஜீவநதி
(கார்த்திகை 2016)

பின்னூட்டமொன்றை இடுக