அச்சம் அகக்கிருமி

Thenmozhi Das

இரகசியத்தை வலம்புரிச் சங்கில் வைத்தால்
மூங்கில் உப்பைக் குடித்தால்
பித்தம் கரையாது 
புறங்கான் பூமாலைகள் புரிதல் அரிது
அன்பின் மறைபொருள் நுண்மொழி
பருந்தின் விருந்து சதை
இக்குணம் ஞானியிடம் இருப்பதில்லை
மத்தியஸ்தன் மழைப்பூச்சி
வடக்கும் கிழக்கும் அவனது வந்தனத்தில் சமன்
வீரதரு தேருக்கும் போருக்கும் உதவும்
பிணம்தின்னிக் கழுகின் பார்வை வல்லையைக் குடையும்
சுண்டங்கோழிகளின் நடை புதரில் முடியும்
அதன் உடலின் ஓவியம் சலிக்கயியலாத நிறமணல்கள்
காட்டு மஞ்சள் வரனுக்கு ஏங்காது
வழிக்கொள்ளைக் காரனின் வழியில்
வீரசூலி மறைந்திருப்பாள்
தீது கூடுபாயாது
வெந்தயப்பூ பசும்பொன்னுக்கும் மேலானது
அச்சம் அகக்கிருமி
குணப்பிழை நட்பிற்கு ஆகாது
கைச்சுழி வெள்ளாமை தருமோ
கருங்காலி மரத்தின் ரத்தம் காடுகளுக்குள்
கேவுவதை மனிதன் அறிவானோ
பொழுதுகட்டுதல் மேகத்தின் தொழிலாகுமோ
முறுகுபதம் நீராகுமோ
காடுபடுதிரவியங்களை விலாக்கொடி அணியுமோ
பெரும்பெயல் செயற்கையில் வாய்க்குமோ
பயனுவமை காடறியாது

Composed By – தேன்மொழி தாஸ்
2.9.2017
6 am

பின்னூட்டமொன்றை இடுக