ஏ. நஸ்புள்ளாஹ் கவிதைகள்

மலைகள்

01.
கடல் மீன்கள்.

கடல் குளிக்கச் சென்றிருந்தேன்
அது நகரத் தொடங்கியது.
பின் மீன்கள் பாடின
அந்த இசை
எனது முன்னோர் பாடியதைப் போல இருந்தது.
மீன்கள் என்னை அணைத்து முத்தமிட்டன.
நீ எங்களது பரம்பரையென்றன
உனது தந்தை எங்களின் ஒருவரின்
வயிற்றில் வாழ்ந்தார் என்றும்
அவைகள் சொன்னது.
நான் மீன்களின் அன்பில்
அசைவற்றுக் கிடந்தேன்
அவை என்னைக் கடல் முழுவதுமாய்
தூக்கி சுமந்தன.
நான் நீந்தப் பழகி விட்டதாகவும்
மீன்களின் சபைக்கு
ஒரு தலைமை வேண்டுமென்றும்
அதற்கு நானே மிகப் பொருத்தமென்றும்
அந்த இடத்தை நான் நிரப்ப வேண்டுமென்றும்
அதற்காகவே நீண்ட நாட்கள் காத்திருப்பதாகவும்
மீன்கள் கூறின.
முதலில் நான் மறுத்தேன்
இப்போதும் மறுக்கின்றேன்.
மீன்களுக்கு சற்று கோபம் வந்திருக்க வேண்டும்
அவைகள் மேலும் முத்தமிட்டன.
ஒரு நாள் கடல் அனைத்தையும்
நீ பிடிப்பாய் என்றன
இங்கு முதலைகள் செய்யும் கொடுமைகளை நீ அறிய மாட்டாய்
நீ எங்களோடு இரு
உனது உடல்
உனது ஆயுள்
உனது மரணம் எங்களுக்காக
இருந்தால் வரலாறு உன்னை
உலகம் அழியும் வரை சுமக்குமென்றன
விநோதங்கள் அப்படியே இருக்க
நான் அசைவிற்கு திரும்பினேன்.

02.
சிறுமியின் ஓவியம்.

நாற்காலியொன்றிலிருந்தே
அந்த சிறு இலை
பறக்க ஆறம்பித்தது
அதில் சருகின் வாசனை நிறைந்திருந்தது.
அது ஒரு சிறுமியின் கோட்டோவியம்
அந்த இலை
அங்கும் இங்கும் அசைவதை
சிறுமி நீண்ட நேரமாக
பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
திடிரென ஆகாயத்தில்
அழு குரல் கேட்கிறது
இலை அழுவதாகவே சிறுமி உணர்கிறாள்
ஒரு நட்சத்திரம்
அல்லது நிலவு வந்து
வயலின் வாசித்தால்
இலை தூங்கிவிடும் என நினைத்து
சில பட்டாம் பூச்சிகளிடம் முறையிடுகிறாள்
பட்டாம் பூச்சிகள் கடவுளைப் பிரார்த்திக்கின்றன
அதிசயம் சிறுமியின் மடியில் வந்து
இலை விழுகிறது.
இனி என் கற்பனை
ஒரு புல்லாங்குழலை இசைத்தபடி
அடுத்த அடுத்த சொற்களுக்குள்
முன்னோக்கி நகர்கின்றது.

03.
ஹயா குட்டி தூக்கத்திலிருந்தாள்.

நேற்று ஜமீலின் வீட்டுக்கு
போயிருந்தேன்
வண்ணத்துப் பூச்சிகள்
பொம்மைகள்
ஹயா குட்டி மற்றும்
கடற்கரையில் கச்சான் விற்கும்
பக்கத்து வீட்டுப் பையன்
எல்லோரும்
நள்ளிரவு என்பதால் தூக்கத்திலிருந்தார்கள்
காவலுக்கு இரவு விழித்திருந்தது.
சன்னல் திறந்தே இருந்தது
ஜமீல் சொற்களுடன்
மாநாடு நடத்துவதைக் கண்டதும்
அவரை குழப்பாமல்
ஒரு புல்லாங்குழலை இசைத்தபடி
வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.

04.
தேநீர் கோப்பை உலகம்.

தேநீர் கோப்பையிலிருந்து
நுரை தள்ளியபடி
முதன் முதலில்
இரவு வழியத் தொடங்கியது.
பிறகு நிலவு நட்சத்திரங்கள் என
வழியத் தொடங்கின.
பின்னர்
கோத்திரம் கோத்திரமாகவும்
சாதி சாதியாவும்
எனது மூதாதையர்கள்
வழியத் தொடங்கினார்கள்.
பின்னர் நாகரிகம்
வழியத் தொடங்கியது
நான் கவனிக்க கவனிக்க
சைத்தான்
நிர்வாண தேவதைகள்
உயர்தர மதுக் கோப்பைகள் எனவும்
வழியத் தொடங்கின.
கால நீட்சி
எனது மூதாதையர்களை
சைத்தான்
மதுவிற்காகவும் மங்கையர்களுக்காகவும்
மோதவிட்டு பெரும் குழப்பத்தின் பிரதியில்
ரத்தம் ரத்தமாய் பருகினான்.
தேநீர் கோப்பையிலிருந்து
இறுதியாய் நான் வழிந்தேன்
எனக்கு கோபம் பீறிட்டு பாய்ந்தது
என்னைப் பார்த்ததும்
சைத்தான் பரிசுத்த பாவங்களின்
தடயங்களை அழிக்கத் தொடங்கினான்.

05.
பரிசுத்த ஒப்பனை.

நான் நினைப்பது சரி
எப்போதும்
பறவைகள் வானத்தை
முதுகில் தூக்கிச் செல்வதாகவே நினைக்கின்றன.
இந்த பிரபஞ்ச
வழிப்போக்கர்களும் அப்படிதான்
பூமியை
அவர்கள்தான் வழி நடத்துவதாக
நினைக்கின்றனர்.
மிருகங்களும் அப்படிதான்
வனங்களை வழி நடத்துவது
அவைகள்தான்
என நினைக்கின்றன.
மீன்களும் அப்படிதான்
கடல்களை
அவைகள்தான்
வழி நடத்துவதாக நினைக்கின்றன.
எல்லோருக்குமாக தெரியும்
தாம் நினைப்பது
பரிசுத்த ஒப்பனை என்பதும்
பெரும் பொய் என்பதும்
எனினும்
அதீத கற்பனையில் வாழ்வது
அவர்களுக்கு ஆதியாகிவிட்டது.

பின்னூட்டமொன்றை இடுக