யதார்த்தனின் பதினொரு புறாக்கள்

பிரக்ஞை

யதார்த்தனின் யதார்த்தம்

யதார்த்தன் போருக்குள் பிறந்து தனது பதின்மங்களின் ஆரம்பத்தில் இறுதி19875317_833562900140031_6047439227392655618_nப் போரில் சிக்குண்டு அலைந்து திரிந்து வாழ்ந்த சிறுவன். இப்பொழுது தனது  இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கின்ற இளைஞன். தனது அனுபவங்களை வாழ்க்கை தொடர்பான கேள்விகளை படைப்புகளாக படைத்திருக்கின்றார். அல்லது அவரினுடாக ஊற்றெடுக்கின்றது. அவரின் ஒன்றிரண்டு கதைகளை ஏற்கனவே வாசித்திருக்கின்றேன். வாசிக்கத் தூண்டும் மொழிநடை. இலக்கியச் சந்திப்பில் யதார்த்தனின் “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்” நூல் அறிமுகம் சிறியளவில் நடைபெற்றது. இதன்பின் அனோஜனின் இந்த நூல் தொடர்பான பதிவை வாசித்த பின்பு உடனடியாக நூலை வாங்கி வாசிக்க வேண்டும் என முடிவு செய்தேன். இதற்கு யதார்த்தனின் மேற்குறிப்பிட்ட பின்னனி முக்கியமான காரணம். இதுவரை சிறிலங்கா அரசின் இனப் படுகொலை மற்றும் இயக்கத்தின் போராட்ட செயற்பாடுகள் தொடர்பாக இயக்கங்களுடன் தொடர்புபட்ட முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் எழுதிய நூல்களையே அதிகம் படித்திருந்தேன். முதன் முறையாக போரின் போது தனது பதின்மங்களின் ஆரம்பத்தில் வாழ்ந்த ஒருவரின் படைப்புகளை வாசிக்கின்றேன்.  இப் படைப்புகளில் வரும் காலம்  2006 தொடக்கம் 2010 வரையான இறுதிப் போர்க்காலங்களும் அதற்குப் பின்பான முகாம் வாழ்க்கையும் எனலாம். ஆனால் இப் படைப்புகள் உருவான அல்லது உருவாக்கப்பட்ட காலங்கள் அண்மைய காலங்கள் எனலாம். பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவரிடம் இவ்வளவு பார்வைகள் குவிந்திருக்ககின்றனவா? இதற்குக் காரணம் இவரது வாசிப்பா? அனுபவமா? சூழலலா? அல்லது ஆற்றலா? எதுவெனத் தெரியவில்லை. மொழித்துறையில் சிறப்பு பட்டம் படிக்கும் இவரது தகமைகள் இதில் வெளிப்படுகின்றன. வாசிக்க ஆரம்பித்தபின் என்னால் நூலை வைக்க முடியவில்லை. நாவல் இல்லை. சிறுகதைகளின் தொகுப்புதான். இருப்பினும் அடுத்த கதையை எப்படி எழுதியிருப்பார் என வாசிக்கும் ஆவலைத் துண்டியது அவரது எழுத்தா அல்லது அதிலிருந்த காமமா என்பதை உணரவோ புரியவோ முடியவில்லை.

17190650_756306524532336_920147962082307980_nபடைப்பாளர்கள் அனைவருக்கும் (சிலர் இல்லையென்றபோதும்) ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கும். அது படைப்புகளிலும்  (அவர்களை அறிந்தோ அறியாமலோ) வெளிப்படும்.  படைப்பிக்கும் ஒரு அரசியல் உண்டு.  இந்த இரு அரசியல்களும் ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தைச் செலுத்தும். ஆனால் யாருடைய நலன்களின் அடிப்படையிலிருந்து படைப்பாளர் உருவாக்குகின்றார் அல்லது ஒரு படைப்பு உருவாகின்றது என்பதைப் பொறுத்து சமூகத்தில் அதன் நிலை மற்றும் காத்திரமான பங்களிப்பு வெளிப்படும். இதுவும் ஒருவகையான அரசியல் செயற்பாடுதான். இந்தடிப்படையில் இந்த நூலுக்கும் ஒரு அரசியல் உண்டு. படைப்பாளர் யதார்த்தனுக்கும் ஒரு அரசியல் உண்டு. அது இலக்கிய சந்திப்பில் ஆணித்தரமாக வெளிப்பட்டது.  இவற்றைக் கவனத்தில் கொண்டு அரசியல் செயற்பாடுகளின் அக்கறையுள்ளவன் என்றடிப்படையில் படைப்புகளில் முன்வைக்கப்படும் அரசியலிலும் அக்கறை கொள்கின்றேன். மேலும் இப் படைப்புகள் மனிதர்களின் பல்வேறுவிதமான உளவியல்களையும் பேசுகின்றது. ஆகவே பல்வேறு மனிதர்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் பழக்கவழக்கங்களையும் புரிந்து கொள்வதற்கான ஒன்றாகவும் இப் படைப்புகள் இருக்கின்றன. குறிப்பாக பதின்மங்களில் இருக்கின்ற இளைஞர்களை அறிந்து புரிந்து கொள்வதற்கு வழிவகுக்கின்றன. அந்தவகையில் இந்த நூல் முக்கியமானது. இப்பொழுது  இத் தொகுப்பில் வெளிவந்து பதினொரு கதைகள் என்ன என்பதை சிறு குறிப்புகளாகப் பார்ப்போம்.

20799177_10155636975298288_834921257712400842_nஇலங்கைப்பூச்சி  என்ற கதை யார் போராடப்போவது? யாரைப் பிடிப்பது? யாருக்கு யார் தண்டனை வழங்குவது? இவை எல்லாமே ஒரு வகையில் இயக்கத்திற்கு எதிரானதா? அல்லது உண்மையானதா?  யார் நேர்மையானவர்கள்? எது நேர்மை? என்பவற்றைக் கேள்விக்குட்படுத்துகின்றதா? நாம் ஏன் தோற்றுப் போனோம்? இப்படி பல கேள்விகளை எழுப்புகின்றது இப் படைப்பு. அதேவேளை இயக்கம் கட்டாயப்படுத்திப் பிடித்த சம்பவங்கள், துரோகி பட்டங்கள் என இயக்கத்தின் செயற்பாடுகளை ஒரு பக்கமும் இதற்கு எதிராக மக்கள் எப்படி செயற்பாட்டார்கள் என்பதை மறுபக்கமும் எழுதுகின்றார். இக் கதையிலையே நம் சமூகத்தைப் பற்றி பல விடயங்களை கூறிவிடுகின்றார். முதல் கதையின் முதல் பந்தியிலையே இயக்கத்தினதும் இயக்க உறுப்பினர்களின் குடும்பத்தின் செயற்பாடுகளையும் வெளிப்படுத்திவிடுகின்றார். கதையின் இறுதியில் எப்படியானவர்கள் எல்லாம் இயக்கத்தில் இருந்தார்கள் என்பதையும் அழுத்தமாக கூறுகின்றார். இவைதான் நமது போராட்டம் தோற்றமைக்கு காரணமோ என சுயவிமர்சனப் பார்வையுடன் தேட வேண்டியுள்ளது.

கோழிக்கால் பட்டியின் கடைசிப் பசு மாடு என்ன கதையடாப்பா? இந்த வயதில் இப்படி ஒரு கதையா? பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதுடன் பின்நவீனத்துவ அதாவது இன்றைய காலத்து காதல் கதைகளின் முரண்பாடான உரையாடல்களை யதார்த்தமாக எழுதிச் செல்கின்றார். ஒரு வகையான அதிர்ச்சி வைத்தியம் செய்கின்றார். அதற்குள்ளும் போர் வருகின்றது. இக் கதையில் வரும் பாத்திரங்கள் இருவரும் கொஞ்சம் படித்தவர்களாக ஆகக் குறைந்தது மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இது நம்மூர் பெண்களின் கதையா என்பது சந்தேகமா உள்ளது. ஏனெனில் பெரும்பாலான நம்மூர் அதுவும் கிளிநொச்சிப் பெண்கள் இப்பொழுதும் பெரும்பாலும் குளியலறைக்குள்ளும் ஆடைகளுடன் தான் குளிப்பார்கள். நிர்வாணமாகக் குளிப்பது அரிது. சில நேரம் இது படைப்பாளரின் ஆழ்மன விருப்பமாகவும் இருக்கலாம். அல்லது வேறு பெண்களின் அனுபவங்களை தமிழ் பிரதேசத்திற்குள் வலிந்து புகுத்துகின்றாரா என்ற கேள்வியும் எழுகின்றது. ஆகவே விதிவிலக்குகள் இல்லையெனின் இவை யதார்த்தத்திற்கு முரணானவையே எனக் கொள்ளலாம். மற்றது பெண்களின் மாதவிடாய் பாட்டில் (pad) சிகப்பு அல்லது கருப்பு நிறங்கள்தான் இருக்கதான் வாய்ப்பு உள்ளது. அங்கு எப்படி மஞ்சள் வந்தது?. படைப்பாளர் ஒரு இளம் கன்று என்று தேற்றிக் கொள்ளலாம். ஆனால் ஆண்கள் பெண்களை வெறுக்கத் தொடங்கினால் எவ்வாறு மோசமாக வன்மமாகக் கதைப்பார்கள் என்பதை யதார்த்தமாகவும் அழகாகவும் (இதில் என்ன அழகு உள்ளது? கோவம் தான் வருகின்றது.) கொண்டுவந்துள்ளார்.

தீட்டுத்துணி  இன்னுமொரு சிறந்த கதை. இதுவும் மீண்டும் இயக்கத்தின் பிள்ளைப்பிடியின் விளைவுகளால் உருவான அவசரத் திருமணங்களின் கதை ஒன்று. இழப்புகளை ஆர்ப்பரிப்பில்லாமல் பதிந்து கடந்து செல்கின்றார். ஆனால் அதுவும் நம்மைப் பாதிக்கின்றது. இன்றைய தலைமுறைக்கு இழப்புகளும் சாதாரண நாளந்த சம்பவங்களாயிற்றா என எண்ணத்தோன்றியது. ஆண் துணையில்லாத ஒரு பெண்ணை  சமூகம் எப்படிப் பார்க்கின்றது?அவளது தெரிவுகளை எப்படி மதிப்பிடுகின்றது? என்பவற்றைச் சொல்கின்ற கதை. படைப்பாளரின் பார்வையில் பெண்களின் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்துகின்றமை வரவேற்க வேண்டியதே.  இக் கதையை வாசித்தபோது இரண்டு நினைவுகள் வந்தன.

ஒன்று இந்தக் கதையிலும் ஒரு கடையில் பாட் (pad) வாங்கும் சம்பவம் வருகின்றது. நாம் போதிகாயாவில் நின்றபோது பாட் வாங்க வேண்டி வந்தது. ஒரு கடைக்குச் சென்றோம். காசுப் பட்டறையில் பத்து வயதுக்குட்பட்ட சிறுவன் நின்றிருந்தான். கடை முதலாளியின் மகனாக இருக்க வேண்டும். பிரகாசமான முகம். வேலைக்கு வயதுபோனவர் ஒருவர் நின்றிருந்தார். நாம் பாட் இருக்கா எனக் கேட்க சிறுவன் தான் கிழவருக்கு காட்டச் சொன்னான். நாம் அதில் ஒன்றைக் காட்டி எடுக்கச் சொன்னோம். கிழவர் அதை வெளித் தெரியும் டிசு பாக் ஒன்றில் போட்டுத் தந்தார். சிறுவன் நம்மிடம் அந்த பாக்கை வாங்கி பாட் பக்கட்டை வெளியே எடுத்து கருப்பு பாக்கால் சுற்றி வெளியே தெரியாதவாறு தந்தான். நமக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். இந்த சின்ன வயதில் இப்படி ஒரு பக்குவமா? புரிதலா?

இரண்டாவது சம்பவம் நாம் 90களின் ஆரம்பத்தில் யாழை விட்டு வெளியேறி கொழும்பில் ஒரு வீட்டில் நான்கு குடும்பங்கள் இருந்தோம். இரண்டு அறை ஒரு ஹோல். ஒரு சமையலறை. புதிதாகப் பிறந்த குழந்தை. அக் காலங்களில் எங்களில் பலருக்கு அம்மை நோய்வந்தது. பிறந்த குழந்தைக்குத் தொற்றிவிடக் கூடாது என்பதற்காக எம்மை அங்கொட வைத்தியசாலையில் கொண்டுபோய் மனநல குறைப்பாடுடையவர்கள் இருக்கின்ற கட்டில்களில் போட்டது நினைவு வந்தது. இக் கதை அந்த ஒரு கிழமை வாழ்வை நினைத்துப் பார்க்கத் தூண்டியது.

கோலியாத் என்ற கதை ஒருவர் ஏன் இயக்கத்திற்குப் போகின்றார். அதற்கான புறச் சூழல்கள் என்ன என்பதைக் கூறுகின்றது. அதேநேரம் ஒரு வேவுப் புலிப் போராளியினதும் வேவு இராணுவத்தினதும் மன உள உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார். அது உறவுகள் என வரும் பொழுது அனைவரும் ஒரே மாதிரியே சிந்திக்கின்றனர் என்ற உண்மையை அழகாகக் கூறுகின்றது. தமிழினியின் கூர்வாளின் நிழலிலும் இக் கதையில் வருவது போன்ற ஒரு காட்சிப்படிமம் வருகின்றது. அதேவேளை போராளிகளின் தலைவரையும் மெச்சத் தவறவில்லை. நக்கலோ தெரியாது. ஆனால் இந்தப் போராளிக்கு இக் கதையின் இறுதியில் என்ன நடந்திருக்கும் என்பது கேள்விதான். தலைவர்கள் எது செய்தாலும் அது இராஜதந்திரம். சாதாரண போராளிகள் செய்தால் துரோகம் அல்லவா நமது தேசத்தில்.

லெப்டினட் கேணல் இயற்கை போராட்டம் என்பது எப்படி மக்களிலிருந்து அந்தியமாக  இருந்தது என்பதைக் கூறுவது. நமது பிள்ளைகள் சாகக் கூடாது ஆனால் ஊரா வீட்டுப் பிள்ளைகள் போராட வேண்டும். அவர்கள் சாகலாம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கின்றார். இருப்பினும்இயற்கையைப் போல விதிவிலக்கானவர்கள் இருந்தமையினால்தான் இவ்வளவு காலம் போராட்டம் தொடர்ந்தது எனலாம். இதற்கு மக்களை மட்டும் குற்றம் சாட்டிப் பயனில்லை. மக்களை சரியா அரசியல் பாதையில் வழிநடாத்தியிருக்க வேண்டியது தலைமைகளின் பொறுப்பு என்றால் மிகையல்ல.

மிளகாய்ச் செடி புனர்வாழ்வின் பின்பு முன்னால் போராளிகள் படும்பாட்டை மிக மிக அழகாக கூறுகின்றது. இவர்களின் குழந்தைகளின் வாழ்வையும் சொல்கின்றது. போர் முடிந்தபோதும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்பும் முன்னால் போராளிகளின் ்வாழ்க்கை கேள்விக்குரியாகவே இருக்கின்றது என்பதை ஆணித்தரமாக கூறியிருக்கின்றார். ஒரு புறம் சமூக அரசியல் சூழல் இவர்களைப் பலி தீர்க்க சில நேரங்களில் இயற்கையும் இவர்களை வஞ்சிப்பது தான் பொறுக்க முடியாதது. இக் கதைகள் எல்லாம் வெறுமனே புனைவுகள் அல்ல. ஈழத் தமிழ் அரசியல் வாதிகள் வாசிக்க வேண்டிய இலக்கியங்கள். மக்களின் வாழ்வைப் புரிந்து கொள்ள நேரடியாகச் செல்ல முடியாதபோது அறிய வேண்டிய வழிகள் இவை. இரண்டு போராளிகளும் பத்து மாடுகளும் என எழுதிய எனது பதிவில் வந்த நேசனை வசந்தியைப் போன்ற சில முன்னால் போராளிகள் கஸ்டப்பட்டு நலமாக வாழ்கின்றார்கள்தான். ஆனால் இக் கதையில் வருவதைப்போல பல போராளிகள் பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் பல முயற்சிகள் செய்தபோதும் அவர்களது வாழ்வில் வெளிச்சம் முன்னேற்றம் ஏற்படுவதே இல்லை. இதற்கு அவர்கள் காரணம் அல்ல. நம்மைச் சுற்றியிருக்கும் சூழலும் நமது அரசியல்வாதிகளுமே என்றால் மிகையல்ல. மேலும் போரின் போது மட்டுமல்ல போர் முடிந்த பின்பும் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளே என்பதை உணர்வுபூர்வமாக சொல்கின்றார்.

12109198_512355302260794_7858928893723288032_nமக்ரலினின் அறுபதாயிரம் புறாக்கள்ஆண் மனதின் கதை. ஆண்கள் பெண்களை எப்படிப் பார்க்கின்றோம்? எப்படி மதிப்பீடு செய்கின்றோம்? ஆண்கள் எப்படி அவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றார்கள்?  எப்படி பெண்களின் நம்பிக்கையை சிதறடிக்கின்றார்கள்? என்பதையெல்லாம் சிறிய கதைக்குள் அழகாக அடக்கிவிட்டார்.  அதேநேரம் பெண்களின் மனதையும் அவர்களின் வேதனைகளையும் வெளிப்படுத்துகின்றார்.

மரநாய் சிறுகதையில் பிஞ்சில் பழுத்த படிக்காத ஆனால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவனின் கதை. ஆசிரியர்களை பாலியல் நோக்கில் பார்க்கும் மாணவனின் இளைஞனின் கதை. நாம் அனைவரும் மாணவர்களாக இருந்தபோது செய்தவைதான். புதிதில்லை. ஆனால் இவ்வளவு குரூரமாக வக்கிரமாக இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்பதைப் பதிவுசெய்துள்ளமை ஆச்சரியப்பட வைத்தது. இளைஞர்களினது எனக் குறுக்கத் தேவையில்லை ஆண்களின் மனம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை ஏற்பதற்கு கஸ்டமாக இருந்தபோதும் உண்மை இதுதானே. மேலும் இயக்கம் செய்த நியாயமற்றக் கொலைகளையும் இயக்கம் என்று சொல்லித் திரிந்தவர்களின் செயற்பாடுகளை இயக்கம் கவனியாமல் விட்டதையும் படைப்பினுடாக விமர்சிக்கின்றார் எனலாம்.

எல்லாக் கதைகளிலும் அதிபர், பாதிரியர், விதானையார் என எல்லோரையும் மட்டுமல்ல சிங்கள இனவாத தேரோவையும் கூட படைப்பாளர் மரியாதையாக அவர் என்று பல இடங்களில் “ர்” போட்டு குறிப்பிட்டிருப்பார். ஆனால் மேற்குறிப்பிட்ட இரு கதைகளில் மட்டும் ஆசிரியையை அவள் என்றும் பல இடங்களில் “ள்” போட்டும் குறிப்பிடுகின்றார். இக் கதைகளில் வரும் இளைஞன் இக் கதையைக் கூறுவதாக இல்லை. படைப்பாளரே கதை கூறுகின்றார். ஆகவே இது படைப்பாளருக்கும் குறிப்பிட்ட  அவரது ஆசிரியைக்கும் இருந்த தனிப்பட்ட  கோவத்தின் பகையின் வெளிப்பாடோ? இது படைப்பாளரை அறியாமலே அவரது ஆழ்மனதிலிருந்து பிரக்ஞையற்று  வெளிவந்திருக்கலாமா? என்ற கேள்விகளை எழுப்புகின்றது.அல்லது இந்த வேறு பாட்டுக்கான காரணம் என்ன என்பதை படைப்பாளர் தான் விளக்க வேண்டும்.

மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் ஒரு அபத்த வகைக் கதை. இதில் எவ்வாறு சிங்கள புத்திசீவிகள், ஆய்வாளர்கள், பௌத்த குருமார்கள் தமிழ் நிலத்தில் சிங்கள பௌத்த அடையாளங்களைத் தேடுகின்றார்கள் என்பது தொடர்பானது ஒரு புறம். மறுபுறம் இது தொடர்பான எதிர் அல்லது மறுப்பு ஆய்வுகளை வெளியிடும் பத்தரிகையாளர் கொல்லப்படுகின்றார்கள். இந்த யதார்த்ததங்களை யதார்த்தன் யதார்த்தமாக சொல்கின்றமையே அவரது படைப்பின் வெற்றி எனலாம்.

இறைச்சி கதை இறைச்சி சாப்பாட்டுக்காய் ஏங்கு முகாமில் அடைக்கப்பட்ட சிறுவனின் கதை. இருப்பினும் அவனது அக்கா அம்மா ஆகியோருடனான உறவையும் அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவையும் எளிமையாக மனதில் பதியக்கூடியவாறு சொல்கின்றார். அம்மாக்கள் எவ்வளவும் பாவம் என்பதை இவரது கதைகள் கூறுகின்றன. போரின் பின்னர் உருவான நலன் புரி நிலையங்கள் என்ற மக்களை அடைத்துவைத்த இடங்களை எழுத்தினுடாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார். இராணுவம் அல்லது தொண்டர் சேவை செய்பவர்கள் எப்படி பெண்களைத் துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் என்பதையும் கூறுகின்றார். இவை எவ்வாறு பெண்களை வேதனைப் படுத்துகின்றது என்பதையும் இவர்கள் இருதலைகொள்ளியாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தையும் வெளிப்படுத்துகின்றார்.

வோண்டர் கோன். எல்லாக் கதைகளையும் போல மிகவும் பாதித்த கதை. வளர்ந்தபின் அம்மாவிடம் அடிவாங்கும் அவமானத்தை உணர்ந்தவன் நான். அந்த அவமானதை நன்றாகவே பதிவு செய்துள்ளார். அதேவேளை போர் ஒவ்வொருவரையும் எப்படிப் பாதித்திருக்கின்றது என்பதை அறிவது கூட கடினமாகிவிட்ட காலம் இது. இதுவே இக் கதையின் அடிநாதம் அல்ல அடிவலி. யாருக்கு மனவருத்தம் என எப்படிக் கண்டுபிடிப்பது? இது போரின் பின் தமிழ் சமூகம் முகம் கொடுக்கும் மிகப் பெரிய சவால்.

தமிழர்களுக்குப் பொதுவான ஒரு பண்பாடு கலாசாரம் இருக்கின்றது. இது தூய்மையானதல்ல. அதற்குள் பல பிற்போக்குத்தனங்கள் பொய்மைகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை கட்டுடைப்பு செய்வதாகவும் இப் படைப்புகள் இருக்கின்றன. இது எந்தவகையிலும் தமிழர்களின் பண்பாட்டுக்குள் காணப்படுகின்ற ஆரோக்கியமான முற்போக்கான அம்சங்களை சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அழிவிலிருந்தும் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை மறுப்பதாகாது.

19553842_825593904270264_7318055999202654802_nஇக் கதைகள் பலவற்றில் பெண்களின் பார்வையிலும் அவர்களின் கஸ்டங்களை வேதனைகளை முன்வைக்க முயற்சிக்கின்றமை வரவேற்க வேண்டியதே. அதேவேளை இளம் ஆண்களின் பாலியல் மற்றும் காமத்தின் கோளாறுகளையும் பிரச்சனைகளையும் கஸ்டங்களையும் கூறுகின்றது.  எல்லாமே முரண் நகையான படைப்புகள். மனித வாழ்க்கையும் அப்படித்தானே. இருப்பினும் மேற்குறிப்பிட்ட இரு கதைகளில் வரும் இளைஞன் ஆசிரியையுடன் சிறுமியுடன் மிகச் சாதாரணமாக உடலுறவு கொள்கின்றான்.  சமூகங்களில் இவை சதாரண நிகழ்வுகள். ஆனால் வெளித் தெரிவதில்லை என்பது உண்மைதான். ஆனால் ருசி கண்ட பூனை மீண்டும் தேடிப் போகுமல்லவா ஆனால் இக் கதைகளில் அந்த ஊந்துதலைக் காணமுடியவில்லை. அல்லது தவிர்க்கப்பட்டுள்ளதா அல்லது விதிவிலக்கானவர்களா என்பது ஆய்வுக்குரிய விடயம். மேலும் பெரும்பாலான கதைகளில் பெண்களின் மார்பைப் பற்றி அதிகம் வர்ணிப்பதுடன் அது முக்கிய இடம் பிடிக்கின்றது. இளம் படைப்பாளர் தானே. புரிந்து கொள்வோமாக. ஆனால் இப் படைப்பாளரின் நண்பர்கள் வெளியிடும் சஞ்சிகைகளிலும் காமம் தூக்கலாக இருக்கின்றது. சக நண்பர்களின் படைப்புகளிலும் இது காணப்படுகின்றது. இவ்வாறு காமம் தொடர்பான படைப்புகள் வெளிவருது ஆரோக்கியமானதே. ஆனால் அது பாலியல் வன்மமாக இருக்கக் கூடாது. இந்த இளைஞர்களிடம் இளம் பருவத்தின் கோளாறுகள் இருக்கலாம். காமம் தொடர்பான உரையாடல் அல்லது படைப்பு என்பது வன்மமானதாக வசையானதாக மாறுவதற்கும் மாறாமல் இருப்பதற்குமான கோடு மிக நூண்ணியதே. இந்த செயற்பாட்டை அழகாக்குவது மட்டுமல்ல அதற்குரிய தாக்கத்தையும் ஏற்படுத்துவதுதான் இலக்கியம். அதை இந்த இளைஞர்கள் உணரவில்லையே என எண்ணத் தோன்றுகின்றது. சுதந்திரம் அவசியமானது. ஆனால் அது பொறுப்புணர்வுடன் சேர்ந்து செயற்படும் பொழுதே ஆரோக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தடிப்படைகளில் இந்த நூல் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே.

20597416_846522935510694_8401566820857399254_nஇக் கதைகளின் கருக்கள் இவரின் அனுபவங்களா என்றால் அது கேள்விக்குறிதான். ஏனெனில் பெரும்பாலானவற்றில் பாலியல் காமம் சார்ந்த கதைகள் முனைப்பாகவும் சிலவற்றில் சிறியளவிலும் வந்து செல்கின்றன. இத் தொகுப்பில் படைப்பாளர் பதின்மங்களின் ஆரம்பங்களில் இருந்த காலங்களே கதைக் களங்களாக இருக்கின்றன. அதுவும் போர்க் காலத்திலும் அகதி முகாம்களிலும் இருந்த காலங்கள் அவை. அப்பொழுது இவர் சிறுவனாக இருந்திருக்க வேண்டும். ஆகவே இக் கதைகள் மற்றவர்களின் அனுபவங்களை உள்வாங்கி படைப்பாக்கியிருக்க வேண்டும். அல்லது தனது போரின் பின்பான பருவகால புதிய அனுபவங்களையும் கடந்த கால அனுபவங்களையும் இணைத்துப் படைத்திருக்க வேண்டும். ஏனெனில் உரையாடும் விடையங்களோ பதின்மங்களின் இறுதியிலுள்ள இளைஞரின் பார்வைகளாகவே இருக்கின்றன. அந்தவகையில் நான் எதிர்பார்த்த சிறுவனின் பார்வையில் போர்க்கால அனுபவங்கள் இதில் ஆழமாக வெளிப்படவில்லை என்றே உணர்கின்றேன். அது வெளிவரவில்லை என்பது ஏமாற்றமும் கவலையும்தான். ஏனேனில் இவ்வாறான குழந்தைகள் போரினால் பாதிக்கப்படக் கூடாது என்பதே போர்கள் ஆரம்பிக்கும் பொழுது அதை எதிர்க்கும் எனது செயற்பாட்டுக்கு காரணமாக இருந்தது. ஒருவகையில் இப் போர்களினால் இளம் வயதில் பாதிக்கப்பட்டவன். அதன் வலி புரிந்தவன்.  இருப்பினும் போர்க் காலத்தில் வாழ்ந்து தப்பித்த ஒரு குழந்தை வளர்ந்தபின் படைத்த படைப்புகளை வாசிப்பது மனதிற்கு ஒரு ஆறுதல்தான். அந்தவகையில் ஒரு சிறுவனினதும் இளைஞனினதும் கலப்பாக இப் படைப்புகளைப் பார்க்கலாம். ஆகவே முக்கியமான படைப்புகள் கொண்ட ஒரு நூல். சில புறாக்களைப் படைத்து பல்லாயிரம் புறாக்களை யதார்த்தமாகப் பறக்கவிட்டுள்ளார் யதார்த்தன்.

மீராபாரதி

13.07.2017

படங்கள் நன்றி யதார்த்தனி்ன் முகநூல்

 

பின்னூட்டமொன்றை இடுக