பள்ளிவாசலில் பெண்கள்

Riyas Qurana – றியாஸ் குரானா

பால்வேற்றுமை பற்றிய வரலாற்றுப் பார்வை. – 01

நெவின் ரேடா

முன்னுரை

தொடக்கக் கால பள்ளிவாசல் தொழுகைக்கான இடம் மட்டுமல்ல; அது வேறு பல செயல்களுக்கான ஒரு மையமும்கூட. அது ஒரு பள்ளியாகச் செயல்பட்டது; அங்கு மக்கள் தங்கள் மார்க்கத்தைக் கற்றனர், மேலும் அது ஒரு பாராளுமன்றமாகச் செயல்பட்டது; அப்போது அந்தச் சமுதாயம், புதிய சட்டங்கள் பற்றியும் அரசு விவகாரங்கள் பற்றியும் விவாதித்தது. அது, தீர்ப்புகள் வழங்கப்படும் நீதிமன்ற வளாகமும்கூட; குடும்பங்கள் தங்கள் நண்பர்களையும் அக்கம் பக்கத்தாரையும் சந்திக்கவும், விழாக்களைக் கொண்டாடவும் கிடைத்த சமுதாய மையக்கூடம் அது. சுருக்கமாக, உருவாகி வருகிற முஸ்லிம் நாட்டிற்கான பொதுவாழ்வின் நட்டநடுப்புள்ளி அல்லது மையம் அதுதான்.’ (பெண்களுக்கு, பள்ளிவாசல் என்றால் பொதுவாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்குமான நுழைவுரிமை என்றே பொருள். அவர்களின் நுழைவுரிமையைத் தடைசெய்வது அல்லது வரம்புக்குட்படுத்துவது என்றால், பொதுவாழ்வில் அவர்களின் பங்கேற்பைக் கட்டுப்படுத்து வது என்றாகும். பால் வேற்றுமை (gender segregation), இன்று பெரும் பாலான பள்ளிவாசல்களில் காணப்படுகிறது; இதுவும் அப்படிப்பட்ட ஒரு வரம்புக்குட்படுத்தல்தான்; காரணம், பொதுவாழ்வில் இது பெண்களின் முழு நுழைவுரிமையையும் வரம்புக்குட்படுத்துகிறது. இது அவர்களின் பங்கேற்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது; அதுமட்டுமல்ல, இது அவர்களை முற்றிலுமாக விலக்கிவைக்கும் சாத்தியத்தையும் ஏற்படுத்துகிறது.

பால் வேற்றுமை, ஒரு திரை அல்லது சுவர் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட முடியும்; அல்லது தூரத்தைப் பயன்படுத்திச் செய்யமுடியும். எடுத்துக்காட்டாக, சிறப்புத் தொழுகைகளின்போது, பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் நிறுத்தப் படுவது போல. இவ்வாய்வுக் கட்டுரை பெண்களின் பள்ளிவாசல் நுழைவு (physical access) மற்றும் பங்கெடுப்பைக் குறித்து ஒரு
வரலாற்றுப் பகுப்பாய்வை மேற்கொள்கிறது.
இஸ்லாத்தில் பெண்களின் அந்தஸ்து முக்கியமாகத் திருமணம், சொத்துரிமை, பர்தா மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் போன்ற பிரச்சனைகள் நிறைய அறிஞர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. எனினும் பள்ளி வாசலில் பால் வேற்றுமை பற்றி எழுதப்பட்டிருப்பது சொற்பமே.

எடுத்துக்காட்டாக, நிஃமத் ஹபீஸ் பரஸங்கி, தனது,
‘முஸ்லிம் பெண்களின் இஸ்லாமிய உயர் கல்வி, ஒரு மனித உரிமை: செயல் திட்ட ம்’ (Muslim Women’s Islamic Higher Learning as a Human Right: The Action Plan) என்ற கட்டுரையில், பெண்கள் அடிக்கடி பள்ளிக்குச் செல்லவேண்டிய தேவையை சுட்டிக்காட்டுகிறார். ஆனால் பால் வேற்றுமை பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இதுபற்றிய மற்ற நூல்/கட்டுரைகளுள் ஒன்றான நாபியா அப்பாட்டின், ‘தொடக்ககால இஸ்லாத்தில் பெண்க ளும் அரசும்’ (Women and the State in Early Islam) என்ற ஆக்கம் இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் இவ்விஷயம் குறித்து பயனுள்ள வரலாற்று நோக்கை வழங்குகிறது.’
மேலும், இரு இஸ்லாமிய அறிஞர்களின் படைப்புப் பணிகளும் குறிப்பிடத்தக்கவை. முதல் அறிஞர், முஹம்மத் அல்-கஸ்ஸாலி. இவர் ஒரு மரபு-சார்பு அறிஞர். எனினும், தற்போது நிலவுவதைவிட சிறந்தவொரு அந்தஸ்தைப் பெண்களுக்கு வழங்கவேண்டுமென வாதிட்டவர். அவர், பள்ளியிலிருந்து பெண்களை ஒதுக்கிவைத்தல் பரவலாக நிலவுவதைத் தீவிரமாக விமர்சனம் செய்து, அவர்களது பங் கெடுப்பு உரிமையைத் தற்காத்தார்.

எனினும், பெண்கள் ஆண்களுக்குப் பின்னால், அதுவும் வீட்டு வேலைகளை நிறைவேற்றி விட்ட பிறகே, பள்ளியில் பங்கெடுக்கலாமெனக் கருதினார். இரண்டாவது அறிஞர், அஹ்மத் ஷங்கி அல்-ஃபன்ஜாரி. இவர், குறிப்பாக பால் வேறுபாட்டைப் பற்றி தனது அல்-இஃக்திலாத் ஃபி அத்தின் ஃபி அத்-தாரீஃக் ஃபில் இல்ம் அல்-இஜ்திமா எனும் நூலில் திட்டவட்டமாகப் பேசினார். இவர் பால் வேறுபாட்டை எதிர்த்ததோடு, பள்ளிவாசல் உட்பட பொதுவாழ்வு முழுவதிலும் பெண்களின் பங்கெடுப்பை முன்னிறுத்துகிறார்.” பே எனது வரலாற்றுப் பொதுப் பார்வையில், 610இல் முஹம்மத் (ஸல்) நபித்துவ வாழ்வைத் துவங்கியதிலிருந்து ஏறத்தாழ 925 வரை அலசுகிறேன். அதாவது பல முதல் மூலாதார நூல்கள் பதியப்பட்ட காலம் வரை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளேன். மேலும், இக்கால கட்டத்தை இரு துணைகட்டங்களாகப் பிரித்துள்ளேன். முதல் காலப்பிரிவு, 610-32வரை. முஹம்மத் (ஸல்) மக்காவிலும் மதீனா விலும் தீவிரமாகச் செயல்பட்ட காலம்; இஸ்லாமிய நம்பிக்கையின் அஸ்திவாரமான குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலம்; இக்கால கட்டத்தில் மார்க்கம் ஒரே நபரின் கைகளிலிருந்தது; அவரே முதன்மை – அதிகாரப்பூர்வ சமய வழிகாட்டியாக முஸ்லிம்களால் கருதப்பட்டார். இது சமய-அதிகார யுகமாகப் பார்க்கப்படலாம்.

ஏனெனில், நபிகளாரின் வாயிலாக இறைவன் தங்களை வழிநடத்திக் கொண்டிருப்பதாக மக்கள் நம்பினர். இது, தூதுத்துவ அல்லது’இலட்சிய’ காலகட்டமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அபூ பக்கரின் ஆட்சிக் காலத்தை (632-34), ஏறத்தாழ இக்காலகட்டத்தின் தொடர்ச்சியாகவே எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், ஒன்று அது மிகச் சிறிய காலஅளவாக இருந்தது. இரண்டு, அவருக்கு நபியின் மீது இருந்த பெரும் விசுவாசத்தால், அவர் பெண்களின் நிலைமை யில் எவ்வித மாற்றத்தையும் அனுமதிக்கவில்லை.”

– பெண்களது பள்ளிப் பங்கெடுப்பில், முதல் பெரிய மாற்றங்கள் உமர் இப்னு அல்-கத்தாபின் ஆட்சிக் காலத்திலேயே (634-44) நிகழ்ந்தன. இவைதான் இரண்டாம் துணைகாலகட்டத்தைத் துவக்கி வைத்தன. இவ்வாய்வில் ஆராயப்படும் அநேக முதன்மை மூலாதார நூல்கள் அக்காலப்பிரிவின் முடிவிற்குள் (925) பதியப்பட்டுவிட்டன. மேலும் இக்காலம் வெற்றிப் படையெடுப்பின் காலமாகும்.
இதில் தான் இஸ்லாம் புதிய பூமிகளுக்குள் பரவி, முஸ்லிம்கள் பல் வேறு சமூக மக்களோடு உறவு கொள்ள ஆரம்பித்தனர். இப்பொழுது, காலப்போக்கில் உருவான ஒரு அறிஞர் சமூகத்தின் கைகளில் மார்க்கமிருந்தது. அத்துடன், இக்காலகட்டம் பல்வேறு இஸ்லாமிய மதச் சட்டங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் தீர்மான வடிவம் கொடுக்கப்பட்ட ஒரு வடிவமைவு காலமாகவும் திகழ்ந்தது. இக்காலத்தை ‘பரிமாற்ற’ காலம் எனவும் வகைப்படுத்தலாம். ஏனெனில், இதில் பல்வேறு விவாதங்கள் முஸ்லிம் சமூகத்தினுள் நடந்தன. இக்காலப் பிரிவு தொடர்பான முதன்மை மற்றும் இடைநிலை மூலாதாரங்களைக் கொண்டு, நான் பெண்களின் பள்ளிப் பிரவேசம் மற்றும் பயன்பாட்டை மதிப்பீடும், ஒப்பீடும் செய்யவுள்ளேன்.
இதற்கு, தொடக்கநிலை ஸ்தூல ஆதாரங்களையும் நூல் ஆவணங் களையும் நுணுக்கமாக ஆராய வேண்டும். முக்கிய ஸ்தூல – பதிவுகளாய்த் திகழ்வது பள்ளிவாசல்களின் கட்டிட அமைப்பே ஆகும். என்றாலும், அநேக பண்டைய பள்ளிவாசல்கள் மறு கட்டமைக்கப்பட்டு மாற்றப்பட்டுவிட்டதினால், அவற்றின் அசல் தோற்ற-வடிவை ஸ்தூல-பதிவுகளிலிருந்து மட்டும் யூகிக்க இயலாது. எனவே நூல் ஆவணங்களையும் பயன்படுத்துவதின் மூலமே அவற்றின் கட்டிட மற்றும் இடம்சார்ந்த அம்சங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

அம்மூலங்களைக் கொண்டே ஆண்-பெண் பிரிப்பிற்கான சுவர்களோ மற்ற தடுப்புகளோ இருந்தனவா? மற்றும் தனித்தனி நுழைவாயில்கள் இருந்தனவா? என்று தீர்மானிப்பது சாத்தியமாகும்.

இக்கட்டிட அமைப்பு அம்சங்களிலிருந்து தொடக்ககால பள்ளிகளில் பெண்களது
பங்கெடுப்பின் தன்மையைக் குறித்த முக்கிய ஆதாரங்களைத் திரட்டவியலும்.
அதேபோல், முதன்மை மூலாதாரங்கள் முக்கியமாக குர்ஆன், ஹதீஸ் தொகுப்புகள் – ஒரு வரலாற்றுச் சூழலை உருவகப்படுத்த உதவுகின்றன. நமக்கு ஆரம்பகாலத்திற்கான முக்கிய பதிப்பாதார மாக விளங்குவது குர்ஆனேயாகும். அதில், பெரிய அளவில் வரலாற்றுத் தகவல்கள் இல்லையெனினும், அது நபிகளாரின் வாழ்க்கை மற்றும் வழக்கத்தைப் பற்றிய ஒரு பயனுள்ள தகவல் மூலமென மேற்கத்திய அறிஞர்களும், இஸ்லாமிய அறிஞர்களும் கருதுகின்றனர். இந்த ஆய்வில், குர்ஆன், முதல் காலப்பிரிவின் சமூக கலாச்சார நிலைமைகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், நபிமொழிகளைக் கண்டறிவதற்காகவும் பயன்படுத்தப்படும்.

ஹதீஸ் தொகுப்புகள் இறைத்தூதரின் கட்டளைகள் மற்றும் முன்மாதிரி நடத்தைக்குரிய ஒரு முதல்நிலை ஆதாரமாக அடிக்கடிப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், முதல் தொகுப்புகள் தோன்றியது 9ஆம் நூற்றாண்டில்தான்; இவை, அசலானவையா என்று அறிய தொடக்ககால அறிஞர்களால் ஊன்றி ஆராயப்பட்டன. இது, நம்மை அறியாமலேயே, நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பு கிறது, நம் நோக்கம் அதுவல்ல என்றாலும். மேற்கத்திய அறிஞர்கள் இடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன, மரபு சார்ந்த இலக்கியத் திரட்டு முழுவதையும் நிராகரிப்பது முதல், அதற்கு முக்கியமான அசல் பகுதி என்ற அந்தஸ்து வழங்குவது வரை. மற்றொரு பக்கம் முஸ்லிம் அறிஞர்களின் கருத்திலோ அவை முழுவதையும் ‘கட்டளைத் தொகுப்பாக ஏற்றுக்கொள்வதிலிருந்து தீவிர விமர்சனத்திற்கு உட்படுத்தும்வரை. இந்த அறிஞர்கள் ஹதீஸ் களிலுள்ள பிரச்சனைகளின் பக்கம் நமது கவனத்தை ஈர்த்துள்ளனர்.* அதனை சட்ட / கட்டளைத் தொகுப்பென வாதிடுபவர்களில் முதன்மையானவர்கள்கூட மேற்கூறப்பட்ட பிரச்சனைகளுள் சிலவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றுக்குத் தீர்வுகாண ‘உரிய இடத்தில் பொருத்தி ஆய்தல்/சூழல் படுத்துதல் மற்றும் ‘பொருள் விளக்கம் தரும் முறைகளைக் கையாண்டுள்ளனர்.10

இந்தக் கட்டுரை நுணுகி ஆராய முனைவது, பல்வேறு வகைப் பட்ட அறிவிப்புகள் குறித்த அசல்தன்மையை அல்ல; அவற்றைப் பாதுகாப்பதற்கு அல்லது இயற்றுவதற்குப் பின்னால் இருந்த அந்தத் தனிப்பட்டச் செயல் நோக்கங்களையும் அல்ல. அதைவிட இந்த விஷயம், ஹதீஸ் தொகுப்புகளைக் கவனமாகப் பதிவுசெய்து அறிவித்தவர்களின் (transmit) மனப்போக்குகள் மற்றும் மனச்
சார்புகளின் பிரதிபலிப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு இந்த ஹதீஸ் தொகுப்புகள் நுணுகி ஆராயப்படுகிற அந்த இரண்டாம் காலகட்டத்திற்கான ஒரு முதல் நிலை நூல் ஆதாரமே தவிர, முதல் காலகட்டத்திற்கானது அல்ல என்ற வரம்புடனே. இந்த அணுகு முறை, நம்பகத் தன்மை பற்றிய எந்தச் சச்சரவையும் தவிர்த்துவிடும்; அதே சமயத்தில் தொகுப்புகளின் பெரும்பகுதி நம்பத்தகுந்ததாகவும் இறைத்தூதர் பற்றிய சரியான வரலாற்றுத் தகவல் கொண்டதாகவும் இருக்கலாம் எனும் உண்மையை மறுக்கவில்லை.

இந்த ஆய்வில் பயன்படுத்தப்படும் மற்றொரு நூல் ஆதாரம், இப்னு ஸஅத் (Ibn Sa’d) இயற்றிய வாழ்க்கை வரலாற்று அகராதி (Biographical Dictionary); இதில் உமர் மற்றும் உஸ்மான் (ஆட்சி) காலத்தைப் பற்றிய முக்கியமான வரலாற்றுத் தகவல் உள்ளது. இப்னு ஸஅத் (ம.845), ஆராயப்படுகிற இரண்டாம் கால கட்டத்தைச் சேர்ந்தவர்; அவர் பதிவு செய்துள்ள நிகழ்ச்சிகளும் நாம் ஆராயும் இரண்டாம் காலப்பிரிவைச் சேர்ந்தவையே.11 மேலும் இதே காலகட்டத்தைச் சேர்ந்த அல்அஸ்ரகீ(Al-Azragi)யும்கூட ஒருவேளை குறிப்பிடப்பட வேண்டியிருக்கலாம். அவரது நூலான அஃக்பர் மக்கா, இந்நூல் மக்காவில் உள்ள புனித இடம் பற்றிய முக்கிய தகவலை அளிக்கிறது.

Pallivasalil pengal: Palvetrumai Patria Oru Varalaatrup Paarvai (Tamil) Women in the Mosque: Historical Perspectives on Segregation
by Nevin Reta

Translated by Bunyameen

நுாலாக்கம் – மெல்லினம் பதிப்பகம்.

அனைவருக்கும் நன்றிகள். இது அனுமதி இல்லாமலே பதிவிடப்படுகிறது. அவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் நீக்கப்படும்.

பின்னூட்டமொன்றை இடுக