பச்சை நரம்பு – ஜெயமோகனின் மொழியில் கதை சொல்லும் சாருநிவேதிதா

உமையாழ்

சா.கந்தசாமி அவருடைய முதலாவது நாவலான ‘சாயாவனம்’ நாவலை எழுதுகிற போது அவருக்கு வயது இருபத்து மூன்று என்று அறிய ஆச்சரியமாக இருந்தது. 2016யில் அனோஜனுடைய முதலாவது சிறுகதைத்தொகுதி ‘சதைகள்’ வெளிவந்த போதும் அதே அளவு ஆச்சரியம் எனக்குள் இருந்தது. ஏனெனில் அனோஜனுக்கும் 2016யில் வயது 23தான்.

‘பச்சை நரம்பு’ அனோஜனின் இரண்டாவது சிறுகதைத்தொகுதி. பத்து சிறுகதைகள் கொண்ட தொகுதி. இந்தத் தொகுதியில் இருக்கும் சில கதைகளை ஏற்கனவே இதழ்களில் வாசித்ததுதான். இருந்தாலும் முற்றாக ஒருமுறை வாசிக்க வேண்டும் என்பதால், எல்லாக் கதைகளையும் ஒருசேர வாசித்ததேன். அந்த அடிப்படையில், முதலிலேயே இதைச் சொல்லிவிடுகறேன்; அனோஜனுக்கு வாய்த்திருக்கும் இந்த மொழி அசாத்தியமானது. அதை அவர் கையாழும் விதம் மிக அசாதாரனமானது. இந்தப் புத்தகம் நெடுகிலும் மொழி தருகிற லகுவான வாசிப்பனுபவம் அலாதியானது. நுண்ணிய அவதானிப்புகளும், அதற்கான விவரனைகளும், ஒவ்வொரு பந்தியிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் தேர்ந்த சிறப்பான உவமான உவமேயங்களும் அனோஜன் கையாண்டிருக்கும் கதை சொல்லும் மொழியை இன்னும் கெட்டியானதாக்கி இருக்கிறது. வெண்ணெயில் விழுந்த கத்தி போல தங்கு தடை அற்ற வாசிப்பனுபவம் புத்தகம் நெடுகிலும் சாத்தியமாகி இருப்பதை ஒரு கதைசொல்லியாக அனோஜனின் வெற்றியாக கொள்ளலாம். அதற்காகவே ஒருமுறை இந்தப் புத்தகத்தை எல்லோரும் வாசிக்கலாம் என்பது எனது பரிந்துரை. 

8AB1D7B7-57A0-4D20-BDDA-BF0FB8E84267

ஆயினும், இந்தத் தொகுதியின் கதைகளை எல்லாம் ஒருசேர வாசித்ததன் பின்னர் எனக்கிருந்த விமர்சனங்களை முன்னிலைப்படுத்துவதே பிரதானமானது என நினைக்கிறேன். தனித்தனியே ஒவ்வொரு கதை மீதான விமர்சனங்களை முன்வைப்பதும் அவசியமற்றது. ஏனெனில் எல்லாக் கதைகளின் குரலும் ஒரே திசையில் இருப்பதால் பொதுவான ஒரு புள்ளியில் இருந்தே இந்த கதைகளை அனுகலாம் என்பது எனது எண்ணம். இதுவே இந்தத் தொகுதியின் பலகீனம்தான். பத்துக் கதைகளும் ஒரே ஒரு கதைபோல இருப்பதை வேறென்ன சொல்வது! போலவே, நான் முதல் பந்தியில் இந்தத் தொகுதியில் அனோஜனின் பலங்கள் என பட்டியலிட்டவைகளையும் இந்தக் கதைகளை ஒருசேர வாசித்ததால் இந்தக் கதைகளின் பலகீனங்களாகவே கருதுகிறேன். எப்படி? 

முதலில் இந்தத் தொகுதியில் உள்ள கதைகளின் பொதுவான அம்சமாக தனிமனித அகச் சிக்கல்களின் மீதான பரந்த விவரணைகளைச் சொல்லலாம். அது ஒரு ராணுவ வீரனால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான ஒரு பள்ளிச் சிறுவனானாலும் சரி, ஒரு சிறுவனை தன் இச்சைகளுக்காக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் இருபத்தி இரண்டு வயது பெண்ணானாலும் சரி, பள்ளிச் சிறுவனை சோறு போட்டு தன் இச்சைக்கு தீனியாக அழைக்கும் முப்பத்தைந்து வயது விதவையானாலும் சரி, இளமையில் மனைவியை விட்டுவிட்டு காமாட்சி உடன் கூத்தடித்து எழுவது வயதில் தன் மகளின் மீது காமங் கொள்ளும் ராசையா முதியவரானாலும் சரி, 

இப்படியாக யாராக இருந்தாலும் அவர்களுடைய அகமும் அது சார்ந்த சிக்கல்களின் மீதான துல்லியமான விவரணைகளும் மட்டுமே இந்தக் தொகுதி நெடுகிலும் மிகச் சிறப்பாகவே கையாளப்பட்டிருக்கிறது. அனோஜனின் மனதில் யாரோ ‘அகச் சிக்கல்களை’ எழுதுவதுதான் சிறுகதைகளின் பிரதானமானது என தவறாகச் சொல்லி இருக்க வேண்டும். அனோஜன் அதைக் கெட்டியாக பிடித்துத் தொங்குவது போல தெரிகிறது.

அகத்தைப் பாடுவதில் தவறில்லை. ஆனால் அதன் மூலம் தனிமனித உள்ளங்களை நோக்கி ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்தலாமே தவிர, முழு மனிதகுலத்துக்குமான செய்தியை கொண்டு சேர்ப்பதில் புறத்தைப் பாடுவதே முன்னிலை வகிக்கும் என்பது எண்ணம். உலகின் மகத்தான கதை சொல்லிகள், புறத்தை எழுதிய தங்களது உச்சத்தை அடைந்தார்கள். இடாலோ கல்வினோவின் Black Sheep கதை ஞாபகத்திற்கு வருகிறது. 

கெட்டவர்கள் மட்டுமே வாழும் ஒரு ஊரைப் பற்றிய கதை அது. எல்லோரும் திருடர்கள். இரவு வந்துவிட்டால் தங்களுடைய வீட்டை திறந்து போட்டுவிட்டு மற்ற வீடுகளில் திருடப் போகும் திருடர்கள். எல்லோரும் திருடர்கள், எல்லா வீடுகளிலும் திருட்டு நடக்கிறது. ஏதோ ஒரு வகையில் சமநிலை பேணப்படுகிறது. அந்த ஊருக்கு ஒரேஒரு நல்லவன் வருகிறான். ஊர் சமநிலை கெட்டு, சின்னாபின்னமாகிப் போகிறது. ஏழை, பணக்காரர்கள் உருவாகிறார்கள். இப்படியாக அந்தக் கதை ஒரு பெரும் அரசியலை தன்னகத்தே விமர்சிப்பதாக அமைந்த கதை. இதிலே அகத்தைப் பாட எதுவுமில்லை. எல்லாம் புறவயமான சிக்கல்களை நோக்கிய சிந்தனைப் போக்கே மிகைத்திருக்கிறது. போலவே கல்வினோவினுடைய அகச்சிக்கல்களைப் பேசியதாக நம்பப்படுகிற adventure series கதைகளில் கூட அவர் புறத்தே நின்றுதான் கபடி ஆடி இருப்பார். உதாரனமாக, adventure of a wife சிறுகதையைச் சொல்லலாம். ஆக, சிறுகதைகளில் அகச் சிக்கல்களை மட்டுமே போட்டு அரைக்க வேண்டியதில்லை. ஒரு தொகுதியின் எல்லாக் கதைகளின் பிரதான உட்கூறாக, ஒரு பிரச்சினையாக அகச் சிக்கலை பாடுவது மட்டுமே இருந்தால் தேர்ந்த வாசகர்கள் நிச்சயமாக சலிப்படைவர். 

இந்தத் தொகுதியின் அடுத்த பொதுவான அம்சமாக, காமம் இருக்கிறது. பக்கம் பக்கமாக விவரமாக எழுதப்பட்ட காமம். மேலே ஒரு இடத்தில் சொன்னதைப் போல வயது பேதம் இல்லாமல் கதைமாந்தர்களை காமம் ஆட்டுவிக்கிறது. வாசிக்க குஜாலாக இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அசூசையை அடக்க முடியவில்லை. இந்தக் கதைகளில் வருகிற சிறுவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார்கள். குறி வளர்ச்சி இல்லாத குழந்தைகள்கூட தப்பவில்லை. கொஞ்சம் வளர்ந்தவர்கள் கரமைத்துனம் செய்கிறார்கள். பெண்கள் சின்னப் பெடியன்களை குறிவைக்கிறார்கள். 

என்ன இது! 

ஒரு கொடூர யுத்தத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் அதற்குள்ளேயே இருந்து அணுஅணுவாக அனுபவித்த, அதற்கு சாட்சியாக இருந்த ஒரு எழுத்தாளன், பத்துக் கதைகளைக் கொண்ட தன்னுடைய இரண்டாவது தொகுதியில் யுத்தத்தைப்  பிரதானமாகக் கொண்டு ஒரு கதை தானும் எழுதவில்லை என்பதும், காமத்தை மட்டுமே பிரதான பிரச்சினையாக எண்ணி திருப்பத் திரும்ப பக்கத்துக்கு பக்கம் அதை எழுதி இருப்பதும் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக இருப்பது எனக்கு மட்டும்தானா? 

அந்த மனநிலையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. 

ஒப்பிட முடியாதுதான் என்றாலும், இங்கே நான் மீண்டும் இருபத்து மூன்று வயதில் சாயாவனம் எழுதிய சா.கந்தசாமியையும் அனோஜனையும் மீண்டுமொருமுறை அருகருகே கொண்டுவருகிறேன். எனது மதிப்பீடுகளில் இப்போது நிச்சயமான வித்தியாசங்கள் இருப்பதை என்னால் உணரமுடிகிறது.

இந்தத் தொகுதியின் அடுத்த பிரச்சினையாக விவரனைகளிலும், உவமான உவமேயங்களிலும் உள்ள மீள்தன்மை. முள்ளந்தண்டு சில்லிட்டது, காது மடல் சூடானது, உடலில் அமிலம் ஊறியது, தொடையில் ஈரம் பரவியது என அங்கங்கங்கே உபயோகிக்கப்பட்ட சொற்தொடர்களே பலகதைகளிலும் மீண்டும் மீண்டும் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை முதல் முறை வாசித்துக் கடக்கும் போது தந்த பரவசத்தை இரண்டாவது முறையாக இன்னொரு கதையில் கடக்க நேர்கிற போது சலிப்பூட்டுகிறது. 

இந்த இடத்தில் எஸ்ராவின் அண்மைய சிறுகதை தொகுப்பான ‘தனிமையில் நூறு ஜன்னல்கள்’ உள்ள கதைகளை நினைத்துக்கொள்கிறேன். எஸ்ரா தமிழின் கல்வினோ.

அழகியல் மட்டுமே இலக்கியமாகிவிடுவதில்லை. இன்னும் சொல்வதானால், நவீனம் ஒருகட்டத்தில் அழகியலை மறுதலித்து, ஒருங்கீனங்களின் மீது கட்டமைக்கப்பட்டது. ஆக, ஒரு கதையில் இப்படியான சொற்தொடர்கள் அழகியலுக்காக திணிக்கப்படுவது அபத்தமாகப்படுகிறது. தட்டையான மொழியில் மாபெரும் அரசியலை தன்னகத்தே கொண்ட ரேவனின் கதைகளை இந்த இடத்தில் நினைவுகொள்கிறேன்.

ஒரு கதையில் கதை நிகழும் இடத்தை வரையறுப்பது முக்கியமானது. அந்தக் கதைக் களன் கதையில் முன்னிலைப்படுத்தப்படவில்லை எனினும், ஆகக் குறைந்தது கதை சொல்லியின் மனதிலாவது அந்தக் களம் குறித்த தெளிவிருக்க வேண்டும். இந்தத் தொகுதியில் உள்ள ‘நானுறு ரியால்’ கதை மட்டுமே ஆசிரியருக்குப் பரீட்சயமில்லாத அந்நிய நிலத்தை களமாகக் கொண்டதாக இருக்கிறது. தனக்கு பரீட்சயமில்லாத களனில் கதை சொல்ல முதல், குறைந்தபட்சம் அதைப்பற்றிய ஒரு சின்ன ஆய்வாவது செய்வது முக்கியமானது. ஆனால் குறித்த அந்தக் கதையில், சவுதி அரேபியாவின் விமானநிலையம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. பெண்கள் கௌன்டரில் இருந்தார்களாம், பயணிகள் குடும்பம் குடும்பமாக வரிசையில் நின்றார்களாம், கதைச் சொல்லியை அங்கும் இங்கும் கூட்டிக்கு சென்றார்களாம்.. 

ஒருமுறை சவுதி இமிக்ரேஷனை கடந்தவனிடம் இதைச் சொன்னாலும் கொள்ளெனச் சிரித்துவிடுவான். மேலும் அந்தக் கதையில் ஓர் இடத்தில் டுபாய் விமானநிலையம் என்றும் சொல்லப்படுகிறது. ஆக அந்தக் கதை மொத்தமும் குழப்பமாகவே இருக்கிறது. தொகுதியில் கொஞ்சமேனும் காமங்கலக்காது எழுதப்பட்ட இந்தக் கதை இப்படியாக பின்னலடித்து தோற்ற கதையாகிவிடுகிறது.

தொகுதியின் மிக நீளமான கதையாகிய இணைகோடு, கடைசியில் என்ன சொல்ல வருகிறது என்பது புரியவில்லை. கடைசியில் பக்கத்து வீட்டு பவித்ரா அக்கா கதைசொல்லி உடன் ஒரு ‘தொடுப்பை’ ஏற்படுத்தி இருந்தால் ஆவது, ‘ம்ம்’ என்று சொல்லி நகர்ந்திருக்கலாம். அதுவுமில்லை. இது வேறேதோ தொடுப்புப் போல இருக்கிறது. 

பலி கதையில் முதலில் வரும் ரத்னசிங்க ஏன் வருகிறார்? அவர் வரும் பகுதியைத் தூக்கிவிட்டால் கதையில் என்ன மாற்றம் வந்துவிடுமோ தெரியல. மகனுக்கு ‘வெள்ளைத்தாமரை’-அது சமாதானத்திற்கான குறியீடு போல இருந்தாலும் கூட- கொண்டு வருகிறேன் எனச் சொல்ல இரண்டு பக்கம் எழுத வேண்டுமா என்ன! 

இப்படியாக ஒவ்வொரு கதையாக எழுதிவிட முடியும். ஆக எனக்கு புரியாத விடயங்கள் இந்தத் தொகுதியில் குறைவில்லாமல் இருக்கத்தான் செய்கிறது. 

00

24281EC0-908C-4CE8-95FE-5426C73351DE

இரண்டு விடயங்கள் சொல்ல இருக்கிறது. 

அனோஜன் இந்த விடலைத்தனமான காம இச்சைகளை மட்டுமே கதைஆக்குவதில் இருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் வெளிவந்துவிட வேண்டும். புனைவென்பது, புனைந்தெழுதுவது. அபுனைவிற்கும் புனைவிற்கும் இடையிலேயே ஊடாடிக் கொண்டிருப்பது (சம்பவங்களில்) நல்ல புனைவின் அடையாளமில்லை. மெஜிகல் ரியலிசம் போன்ற பின்-நவீனக் கூறுகள் கட்டற்ற கற்பனையின் விளைவுகள்தாம். போலவே, மேற்கில் இருந்துகொண்டு கல்வினோ போன்றவர்கள் முழுக்க முழுக்க புனைவில் ‘ரியலிசத்தில்’ கதை சொல்லி இருக்கிறார்கள். ஆக அதுவும் சாத்தியம்தான். 

இரண்டாவது, ஜெயமோகன் பலரைப்போல எனக்கும் இலக்கிய ஆசான்தான். அதற்காக அவராகவே உருவாவதும், அவர் காட்டுவது மட்டுமே வெளிச்சம் மற்றதெல்லாம் கும்மிருட்டுப் போலவுமான செயற்பாடுகள் வேண்டுமானால் இன்னொரு ஜெயமோகனை உருவாக்கலாம். அதில் பெருமை இல்லை. இலங்கையில் இருந்து அனோஜன் உருவாக வாய்ப்பே இல்லாமல் போகும். இலங்கை இலக்கியத்தைப் பற்றிய அனோஜனின் மதிப்பீடுகளும் ஆசானின் வழி வந்தவைகளாக இருப்பதுவே இங்கே தூரதிஷ்டமானது.

00

இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு;

நான் இந்த பத்தியின் முதல் பந்தியில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். நிச்சயம் இந்தப் புத்தகத்தை வாசியுங்கள். ஆனால், நான் வாசித்தது போல தொடர்ந்து ஒரே இருக்கையில் வாசித்து முடித்துவிடாமல், இரண்டு கதைகளுக்கிடையில் குறைந்தது இரண்டுவாரம் இடைவெளி விட்டு வாசியுங்கள். அப்போதுதான், அனோஜனின் மொழியை தெவிட்டாமல் வாசிக்க முடியுமாக இருக்கும். என்னைப் போல எல்லாக் கதைகளையும்  தொடர்ந்து ஒரே இருப்பில் வாசித்தால், எல்லாக் கதைகளும் மொத்தமாகச் சேர்ந்து ஜெயமோகனின் மொழியில் சாருநிவேதிதாவின் கொச்சை நாவல்களை வாசிப்பதைப் போல இருக்கலாம். 

பின்னூட்டமொன்றை இடுக