ஆங்கில நகைச்சுவை நாடக மேதை பெர்னாட்ஷா

 

பெர்னாட்ஷா

ஆங்கில மொழியில் அதிசிறந்த நாடகங்கள் படைத்த பெர்னாட் ஷா அயர்லாந்துக்காரர்களில் தலைசிறந்தவர் என்றும் கூறலாம். ஷா டப்ளின் நகரில் ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தாறாம் ஆண்டு ஜுலை இருபத்தாறாம் நாள் அவதரித்தார். அவருடைய தந்தை டப்ளின் சட்ட மன்றத்தில் சிற்றூழியராகப் பணியாற்றி சுயவிருப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.

பின்னர் தானிய விற்பனை வணிகராத் தொழிற்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அதில் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது. பெர்னாட்ஷாவிற்கு பதினாறு வயதாக இருக்கும் போது அவரது அன்னை இரு புத்திரிகளுடன் டப்ளினை விட்டு வெளியேறி லண்டனைச் சென்றடைந்தார். அவருக்கு நன்றாகப் பாடக்கூடிய இனிமையான குரலிருந்தமையினால் இசைக் குழுவொன்றில் இணைந்து கொண்டார்.

அதிலிருந்து கிடைக்கும் சிறு வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினார். சிறுவன் ஷ இசைக் கலையை தாயிடமிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது.

பதினைந்து வயது வரை ஷா பாடசாலை சென்று கற்கை நெறிகளை மேற்கொண்டார். அதன் பின்னர் ஒரு பழத் தோட்டத்தில்  (Estate)  கணக்காளராகப் பணியாற்றிவிட்டு லண்டனில் வசித்த அன்னையிடம் வந்து சேர்ந்தார். தாயிடம் பெற்ற இசை அறிவு காரணமாக தலைநகரிலிருந்து வெளியாகும். ‘த ஸ்டார்’ (The Star)  சஞ்சிகையில் சங்கீத விமர்சகராகப் பணியாற்ற உதவியது.

அதேவேளை ‘த சண்டே ரிவ்யூ’ (The Sunday Review) என்ற வார இதழில் நாடகங்கள் பற்றிய விமர்சனங்களையும் எழுதி வந்தார். அவரது விமர்சனங்கள் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட போற்றத்தக்கதாக அமைந்திருந்தது எனலாம். அதனைத் தொடர்ந்து தானே நாடகங்களை எழுத தலைப்பட்டார்.

லண்டன் மாநகரில் அமெரிக்க பொருளாதார  (Economic)  நிபுணரான ஹென்றி ஜோர்ஜ் கலந்துகொண்ட நிகழ்விற்கும் சென்றிருந்தார். அவருடைய கருத்துக்கள் ஷாவை பொதுவுடமைவாதியாக மாற்றியது. இதன் மூலம் முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டுமென விரும்பினார். முதலாளிகளின் ஆதிக்கம் பெற்ற நாடுகளின் மேலுள்ள அவருடைய வெறுப்பு மேலோங்கிக் கொண்டே சென்றது.

ஏலவே பார்புகழ் பாவலரின் தோற்றம், அவருடய நகைச்சுவை, பொன் மொழிகள், மறைவு என்பவை பற்றி விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும்.

இன்று அவரது ஜனன தினம். ஆகவே அவரது குணாதியங்கள் சிவற்றைப் பார்ப்போம். பொதுவுடமைவாதியான இவர் சட்டத்தின் மூலம் பணக்காரர்களுடைய வருமானத்தைக் குறைத்து ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தி சமூகத்தைத் திருத்த முடியும் என பரிபூரணமாக நம்பினார்.

பெர்னாட் ஷ மாதா கோயிலுக்குச் செல்வதைக் குறைத்துக் கொண்டார். அவரது நடவடிக்கைகள் திடமான எண்ணங்கள், ஆஸ்திகவாதியைப் போலவே இருந்தன. ஷாவின் வாழ்க்கையில் புனிதத் தன்மை, தூய்மையான வாழ்வு, மனிதர்களைப் போலவே மிருகங்களிடத்தில் அன்பு செலுத்துதல், புலால் உண்ணாமை, மது அருந்தாமை, புகை பிடிக்காமை போன்றன மதக் கோட்பாடாக விளங்கின எனலாம்.

ஷா தனது இருபத்தைந்தாவது வயதில் மாமிச உணவு உட்கொள்வதை நிறுத்திக் கொண்டார். மிருகங்களும் மனிதனைப் போன்றவைகளே அவைகளை மனிதன் உணவாகக் கொள்வது கூடவே கூடாது என ஷா கருதினார். அவர் நாற்பத்து இரண்டு வயதாக இருக்கும் போது முதன் முதல் மேடையில் அரங்கேற்கக் கூடிய நாடகம் எழுத முயன்று பாதியிலேயே அதை நிறுத்திக் கொண்டார். ஏழு ஆண்டுகளுக்குப் பின் அதை முடித்து ஆயிரத்து எண்ணூற்று தொண்ணூற்று இரண்டில் லண்டன் மாநகரில் அரங்கேற்றினார்.

‘மனைவி இழந்தோர் இல்லங்கள்’ என்பது தான் நாடகத்தின் பெயராகும். அந்த நாடகத்தில் சேரிகளில் காணும் கொடுமைகளையும் பணக்காரர் ஏழைகளின் இரத்தத்தை (Blood) உறிஞ்சுகின்ற கொடுமைகளையும் நன்கு விளக்கியிருந்தார். அத்தகைய கொடுமை யதார்த்தமெனினும் லண்டன் மேடைகளில் புதுமையாக இருந்தது. தவிர்க்க முடியாத சூழலில் இந்த நாடகம் வெற்றிபெறவில்லை.

பின்பு ஷா வாழ்க்கையில் அதிகப்படியான மக்களைப் பாதிக்கும் பொது விஷயங்களைப் பற்றி எழுதினார். ஆயிரத்து தொள்ளாயிரத்து நான்காம் ஆண்டு லண்டன் கோர்ட் தியேட்டரில் நடைபெற்ற அவருடைய நாடகம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

ஜோன்புல்லின் மற்றொரு தீவு என்ற அயர்லாந்து அரசியல் பற்றிய நகைச்சுவை நாடகம் பிரசித்திபெற்றது. இதனைத் தொடர்ந்து ‘மனிதனும் மேம்பட்ட மனிதனும்’ என்ற நாடகமும் லண்டன் கோர்ட் அரங்கில் மேடையேற்றப்பட்டது.

மனித சமூகத்தை நாடக அரங்கின் மூலம் திருத்த முடியும் என்று பெர்னாட் ஷா நன்கு உணர்ந்து கொண்டார். எனவே உன்னத நாடகங்களைத் தொடர்ந்து எழுதினார்.

சட்டத்தின் மூலம் திருத்த முடியாத மன நிலையை நாடகத்தின் மூலம் திருத்த இயலும் என்பது அவரது நம்பிக்கை. கலை கலைக்காக மட்டும் என்று முழக்கமிடுவதில் பயனில்லை. கலையிலே நல்லபுரட்சி தேவை.

புரட்சியினால் மனித அறிவு வளர்ச்சியடைந்து முன்னேற்றம் காண முடியும். போலித் தன்மையையும் வெளிவேஷத்தையும் இல்லாமல் செய்வதற்கு நாடகம் உறுதுணை புரிய வேண்டும் என்பது அவரது வாதம் ஆகும்.

‘பிக்மேலியன்’ என்ற புகழ்பெற்ற நாடகத்தையும் எழுதினார். என்னுடைய சொத்தில் (Property) ஒரு பகுதியை ஆங்கில வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்று உயிலில் எழுதினார். பெர்னாட்ஷா உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியராக விளங்கினார். உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக ஷாவைக் கருதினாலும் ஷாபின் கருத்துக்களை ஏற்க முடியாதவர்களால் அவர் வெறுக்கப்பட்டார்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து முன்றில் ஷா எழுதிய ‘செயினட் ஜோன்’ நாடகம் அவர் புகழை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றது. அதனைத் தொடர்ந்து எழுதிய ‘மெதுசலாவுக்கு மீண்டும்’, ‘அப்பிள் வண்டி’ போன்ற நாடகங்களின் தத்துவத்தை உணர்ந்த லண்டன் அரசு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வழங்கிக் கெளரவித்தது.

வெளிநாடுகளுக்கு விஜயத்தை மேற்கொள்ள விரும்பாத ஷா குறைந்த அளவே அந்நிய நாடுகளுக்குப் பயணித்தார். அவரது மனைவி மற்றும் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உலகச் சுற்றுலா மேற்கொண்டார். அவ்வேளையில்தான் பெர்னாட்ஷா மும்பாய்க்கு விஜயம் (Visit to Mumbai) செய்தார்.

ஷா சிறியதும் நீண்டதுமான ஐம்பது நாடகங்களை எழுதினார். இவற்றைத் தவிர ‘அறிவுள்ள நங்கைக்கு பொதுவுடமைக்கான வழி’ முதலிய கட்டுரைகளையும் (Essays)  எழுதினார்.

பெர்னாட் ஷா மக்களிடம் நகைச்சுவை ததும்பவே கலந்துரையாடுவார். ஏலவே ஷாவின் நகைச்சுவைகள் சிலவற்றை அறிந்திருப்பது அவசியமாகும்.

பெர்னாட் ஷாவிற்கு மலரின் மீது மிகவும் பிரியம் என்று கேள்விப்பட்ட நபரொருவர் அவரது வீட்டிற்குச் சென்றார். ஆனால் அங்கு புஷ்பங்களையோ மலர்ச்சாடிகளையோ காணவில்லை. தனக்குக் கிடைத்த தகவல் பொய்யானதாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அந்த நபர் ஷாவை நோக்கி உங்களுக்கு புஷ்பங்கள் மீது அதிக பிரியம் என்று கேள்விப்பட்டேன் பூமரத்தையோ, பூச்சாடிகளையோ காணவில்லை என்றார். அதற்கு ஷா ‘ஆமாம் இல்லையென்று யார் கூaனார்கள்? எனக்கு குழந்தைகள் மீதுதான் அலாதி பிரியம் அதற்காக அவர்களின் தலைகளைக் கொய்து பூச்சாடியில் அழகுபடுத்த வேண்டுமா?’ என்று பதில் கிடைத்தது.

இன்னொருவர் ஷாவிடம் ‘நீங்கள் ஏன் குடியை அடியோடு வெறுக்கின்aர்கள்?’ என்று கேட்டார். ‘எனது குடும்ப உறுப்பினர்களாக இருந்த முன்னோர் எனக்கு கிடைக்க வேண்டிய பங்குகளையும் சேர்த்துக் குடித்து விட்டார்கள். ஆகையால் அதில் எனக்கு அறவே இல்லாமல் போய்விட்டது’ என்று பதில் அளித்தார்.

பெர்னாட் ஷா ஒருமுறை விருந்துக்குச் சென்றிருந்தார். விருந்து நிறைவு பெற்றதும் வயலின் வித்துவான் ஒருவரின் கச்சேரி இடம்பெற்றது. நிகழ்ச்சியை ஷா உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருந்தார். விருந்து ஒழுங்குபடுத்திய பெண்மணி ஷாவை அணுகி ‘வித்துவானைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கின்aர்கள்?’ என்று வினவினாள்.

அதற்கு ஷா ‘கச்சேரியைக் கேட்கும் போது எனக்கு வின்ஸ்டன் சேர்ச்சிலின் ஞாபகம்தான் வருகிறது’ என்றார். இதைக் கேட்டு அந்தப் பெண்மணி சரியாகப் பதற்றம் அடைந்தவளாக சேர்ச்சில் ஒரு வயலின் வித்துவான் இல்லையே? என்றதும் ‘இவர்மட்டும் என்னவாம்?’ என்று ஷாவிடமிருந்து பதில் கிட்டியது. இதனால் அந்நங்கை சர்ச்சைக்குள்ளானார்.

அன்றொருநாள் பெர்னாட்ஷா புத்தகசாலை (Book Depot) ஒன்றிற்குச் சென்று புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். ஒரு புத்தகத்தைக் கண்ணுற்றதும் பெர்னாட் ஷா திடுக்கிட்டார். அது உண்மையில் அவர் நண்பரொருவருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்த அவர் எழுதிய புத்தகமாகும்.

சீனக்காரர் ஒருவர் பெர்னாட் ஷாவைப் பார்க்க வந்தார். அவருக்கு ஷாவின் உதவியொன்று அவசரமாகத் தேவைப்பட்டது. இதன் காரணமாக ஷாவை அவ்வப்போது புகழ்ந்துகொண்டேயிருந்தார். உங்களுடைய உடம்பில் உள்ள உறுப்புக்கள் யாவும் மிகவும் கவர்ச்சியாகக் காணப்படுகின்றன. உங்கள் முகம், கண், மார்பு, கை, கால்கள்…’ என்று அடுக்கிக் கொண்டே சென்றவரை ஷா தடுத்து நிறுத்தினார்.

‘அதுசரி எனது பற்கள் எப்படி?’ என்று கேட்டார். ‘உங்களது பற்கள் அசைக்க முடியாத வலிமைமிக முத்துப்பற்கள்’ என்றார் சீனாக்காரர். ‘மகிழ்ச்சி இதை நீங்கள் நன்றாகப் பார்த்து ரசியுங்கள்’ என்று கூறி தனது செயற்கைப் பல் ‘செற்றை’ கழற்றி சீனக்காரரின் கரத்தில் வைத்தாராம்.

இன்னொருநாள் இளம் எழுத்தாளர் ஒருவர் பெர்னாட் ஷாவிடம் சென்று தான் ஒரு நாடகம் எழுதியிருப்பதாகவும் அதுபற்றி ஷாவின் அபிப்பிராயத்தைக் கேட்டறிய வந்ததாகவும் கூறினார். உடனே ஷா அந்த இளம் எழுத்தாளரிடம் ‘உங்களது நாடகத்தைப் படியுங்கள் பார்க்கலாம்’ என்று கூறிவிட்டு கதிரையொன்றில் அமர்ந்து கொண்டார். அந்த எழுத்தாளர் மகிழ்ச்சி பொங்க தன் கைவசமிருந்த நாடகப் பிரதிகளை எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.

படித்துக் கொண்டிருந்தவர் பக்கத்தில் யாரோ குறட்டை! விடும் சத்தத்தைக் கேட்டு வாசிப்பதை நிறுத்தி சுற்று முற்றும் பார்த்தார். அவருக்கு திகில் உண்டாகிய நிலையில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த ஷாவிற்கு அருகில் சென்றார். உரத்துப் படிக்கும் சப்தம் நின்றதும் பெர்னாட் ஷாவும் விழித்துக் கெண்டார். வாசித்தவருக்கு சரியான ஏமாற்றம் உண்டாகிற்று.’ தங்களது கருத்தை அறிய விரும்பியல்லவா தனது நாடகப் பிரதியைப் படித்தேன்’ என்றதும் ‘சற்று முன்னரே எனது கருத்தைக் கூறிவிட்டேனே’ என்று ஷாவிடமிருந்து பதில் கிடைத்தது.

ஒருநாள் ஜோர்ஜ் பெர்னாட்ஷாவிற்கு ஒரு கடிதம் (Mail)  வந்தது. முகவரி எழுதியவர் ஷா என்பதற்குப் பதிலாக ஆங்கிலத்தில் ஷார்ம் (Sharm)  என்று குறிப்பிட்டிருந்தார். ஷாவிற்கு சரியான கோபம் உலகப் பிரசித்திபெற்ற எனது பெயரைக்கூட சரியாக எழுதக்கூட தெரியாத ‘ஜடம்’ என்று சீற்றம் கொண்டார்.

ஒருநாள் பெர்னாட்ஷா ஒற்றையடிப் பாதை ஒன்றால் சென்று கொண்டிருந்தார். அவர் வருவதைப் பார்த்ததும் எதிர்ப்பக்கமாக வந்து கொண்டிருந்த ஒருவர் ஒதுங்கி நின்று வழிவிட்டார். பெர்னாட்ஷா அவனருகில் சென்றது ‘நான் முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை’ என்றார். உடனே அவன் பணிவாக ‘ஐயா நான் விடுவதுண்டு’ என்றான்.

ஷா ஒருமுறை அமெரிக்கா சென்றார் அங்கு அதிக நாட்கள் தங்காமல் விரைவில் திரும்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொண்டார். இதை அறிந்து கொண்ட நிருபர்கள் (ஞிலீportலீrs) அவரைச் சூழ்ந்து கொண்டனர். அத்துடன் கேள்விக் கணைகளையும் தொடக்கினார்கள். சலிக்காமல் பதில் கொடுத்தார் பெர்னாட்ஷா. நிருபர் ஒருவர் பெர்னாட் ஷாவை நோக்கி நீங்கள் அமெரிக்காவில் எதை விரும்புகிaர்கள்? என்று கேட்டார். ஷா பெருமிதமாக உங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை என்றார்.

உலக நாடுகளில் எல்லாம் பரவியுள்ள ஆங்கில சாம்ராஜ்ஜியம் அழிந்துவிட்டாலும் அங்கெல்லாம் அயர்லாந்து தந்த பெர்னாட் ஷா வின் பெயர் மட்டும் அழியாது என்பது உறுதி.

அரசியல், சமூகம், கலை, இலக்கியம் இப்படி எல்லாத் துறைகளிலும் தனது பேனாவைப் பதித்த மேதை பாதி அறிஞர் எனவும், மிகுதி கோமாளி எனவும் பெருமைக்கு பெயர் போனவர்தான் ஜோர்ஜ் பெர்னாட்ஷா ஆவார்.

வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பளிச்சென்று பதில் அளிப்பதில் ஷாவை யாரும் மிஞ்சிவிட முடியாது. நகைச்சுவை களஞ்சியம் என்றும் புகழப்படுபவர் ஷா மட்டும் தான் என்று துணிந்து கூறலாம். அதேவேளை பெர்னாட்ஷாவைக் குறித்து பலர் பலவிதமாகக் கூறினாலும் ஷாவை விட ஒரு மேதாவி கிடையாது என்று ஒரு சாரர் கூறும் அதேவேளை அவர் ஓர் கோமாளி. உலகத்திற்கு மாறாக ஏதாவது கூறி சிரிக்க வைக்கும் விகடம் என்கின்றனர் சிலர். மற்றவர்கள் காலால் நடந்தால் இவர் தலையால் நடப்பார் என்று கூறுவோரும் உள்ளனர்.

பெர்னாட்ஷா தலையிடாத துறைகள் இல்லை. அவர் எதில் வல்லவர் என்று கூறுவது கடினம், சொல்லின் செல்வர், உரைநடைவேந்தன் அரசியல் அறிவாளி, மெய்ப்பொருளை ஆராயும் பழுத்த ஞானி, நகைச்சுவை மன்னன், சமுதாயத்தை அலங்கரிக்கும் சான்றோன், உலகம் போற்றும் பெரும் நாடக ஆசிரியராகத் திகழ்ந்தவர் ஜோர்ஜ் பெர்னாட் ஷா ஆவார்.

இவரது நூற்று ஐம்பத்து நான்காவது ஜனன தினமாகிய இன்றைய நாளை மேற்குலகில் வாழுகின்ற ஆங்கில இலக்கியவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அளவுக்குமீறி நல்லவனாய் இருப்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை குஜராத்தில் அவதரித்த மகாத்மா காந்தியின் மரணம் பறைசாற்றியது’ என்பது பெர்னாட் ஷாவின் பொன் மொழிகளில் ஒன்றாகும். பெர்னாட் ஷா ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதில் தனது தொண்ணூற்று ஐந்தாவது வயதில் காலமானார்.

பின்னூட்டமொன்றை இடுக