கிரேக்கம் உங்களை வரவேற்கிறது

கிரேக்க கதைகள்

கிரேக்க இதிகாசக் கதைகள் / முன்னுரை

விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பியல்பு மனிதனுக்கு மட்டும் உள்ளது. அவன் சிந்திக்கத் தெரிந்தவன். அவனால் கற்பனை செய்யமுடியும். கற்பனைகள் அவனை வளப்படுத்தின, உற்சாகப்படுத்தின.  அச்சம், வீரம், காதல், இரக்கம் போன்ற உணர்வுகளின் பிரவாகத்தில், ஒருவகை ‘கலா மோகத்தில்’ அவன் தன்னை ஆட்படுத்திக்கொள்ள அவை உதவின.

மனிதனின் கலை வெளிப்பாடு என்பது பண்டைய காலம் முதலே தொடங்கிவிட்டது.  பூமி உருண்டையின் எல்லாப் பக்கங்களிலும் பேசப்படுகின்ற கதைகளே இதற்குச் சான்று.  விதவிதமான மொழிகளில், விதவிதமான வடிவங்களில் இந்தக் கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து உருவாயின. இந்தத்  தொன்மக் கதைகள் அனைத்தும் செவிவழிக் கதைகளாக பல தலைமுறைகளைத் தாண்டி நம்மை வந்தடைந்துள்ளன. இருந்தும் இன்றும் அவற்றை வாசிக்கும்போது நம் நெஞ்சம் கொள்ளை போய்விடுகிறது.

அமானுஷ்ய விஷயங்களின் மீது மனித சமூகம் காலங்காலமாகக் கொண்டிருக்கும் ஈர்ப்பும் ஈடுபாடும் இக்கதைகளில் வெளிப்படுகின்றன. இக்கதைகளின் மூலப் பெருமை தங்களுடையதே என்ற உரிமைக் குரலொலிகள் எல்லாப் பக்கங்களிலும் கேட்கின்றன. உண்மையில் இவை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானவை என்றுதான் சொல்லவேண்டும். கிரேக்கம், ரோமாபுரி, பாரசீகம், எகிப்து, சீனா என்று உலகம் முழுவதிலும் தொன்மக் கதைகள் உருவாகியுள்ளன. சமயம் இந்தக் கதைகளின் அடிப்படையாக அமைந்துள்ளது. இந்தியப் புராணங்களிலும் இதிகாசங்களிலும்கூட இதனைக் காணலாம்.

இந்நூல் கிரேக்கத் தொன்மக் கதைகளை அறிமுகம் செய்து வைக்கிறது. கிரேக்க நாட்டுக் கதைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற எத்தனையோ சொற்பதங்களுக்கு கிரேக்கக் கதைகள் மூலமாக அமைந்துள்ளன. அட்லஸ், ஏரியன், டைட்டன், ஒலிம்பிக்,  ஹெர்குலஸ், அப்பல்லோ என்று நமக்குப் பரிச்சயமான கிரேக்கப் பெயர்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை கிரேக்கக் கதைகளே. ஹெர்குலிஸும், ஹெலன் ஆஃப் ட்ராயும் மறக்கமுடியாத பாத்திரங்கள். இந்தச் சுவாரஸ்யமான கிரேக்கக் கதைகளில் இந்தியத் தொன்மக் கதைகளின் அம்சங்களும் அடையாளங்களும், ஏன் கதை நிகழ்வுகளும்கூட அதிகமாகக் காணப்படுவதை ஒருவர் உணரலாம்.

***

ஒலிம்பஸ் மலைத் தொடர்

மாசிடோனியாவையும் தெஸ்ஸாலியையும் அணைத்துக் கொண்டு, கிழக்குப் பக்கமாய் ஆழக் கடலைத் தொட்டுக் கொண்டு, வானத்தை 9800 அடிகள் முட்டிக்கொண்டு பிரமாண்டமாக விரிந்திருக்கிறது ஒலிம்பஸ் என்னும் மலைத்தொடர். கிரேக்க நாட்டின் ஆதர்சனம் இது.

கிரேக்கத்தின் மிகவும் உயரமான, மாபெரும் மலைத்தொடர் மட்டுமல்ல ஒலிம்பஸ். பண்டைய கிரேக்க மக்கள் புனைந்த கதைகளின் மையமும் இதுதான்.  நாயகர்கள், நாயகிகள், தெய்வங்கள் என்று பல சுவாரஸ்யமான கதபாத்திரங்கள் ஒலிம்பஸை சுற்றியே படைக்கப்பட்டுள்ளன. யதார்த்தத்தையும் பகுத்தறிவையும்மீறி உருப்பெற்ற கற்பனைக் கடவுள்களை கிரேக்கர்கள் ஒலிம்பியன் கடவுள்கள் என்றே அழைத்தனர்.

இந்த அறிமுகத்தோடு இனி கதைகளுக்குள் நுழையலாம்.

***

1) ஆதிதேவன் யுரேனஸ்

ஜீ அல்லது ஜீயா (Gaea) என்பவள் கிரேக்கர்களின் ஆதி தெய்வம். இவள் பிரபஞ்சங்களும் படைப்புகளும் உருவாகும் முன்பே தோன்றியவளாம். இவளுக்கு டான்டரஸ் என்ற சகோதரன் உண்டு. பூமி வடிவத்தில் இருந்த  ஜீ துணை யாருமில்லாமல் வான் தேவனான யுரேனஸ்ஸையும், மலைகளின் தேவனான ஊரியாவையும் (Ourea) கடல் தேவனான போன்ட்டஸையும்  (Pontus) பெற்றெடுக்கின்றாள்.  பின்னர் யுரேனஸ்ஸை மணந்து கொள்கின்றாள். யுரேனஸ் தேவலோக மன்னனாக முடி சூட்டிக் கொள்கின்றான்.

இவர்களது இல்லறத்தின் அடையாளமாக ஒற்றைக் கண்ணர்களையும் (Cyclopes). பின்னர் பிரமாண்ட தோற்றமும் அமானுஷ்ய ஆற்றலும் கொண்ட பன்னிரு ஆதி தேவர்களையும்  (Titans)  நூறு கைகளை உடைய மூன்று அரக்கர்களையும் ஜீ பெற்றெடுக்கிறாள். ஆனால் ஒற்றைக் கண்ணர்களையும் அரக்கர்களையும் காணப் பிடிக்காமல் யுரேனியஸ் அவர்களை பூமியின் வயிற்றில் அடைத்து வைக்கின்றான். பூமியான ஜீக்கு இது தாளமுடியாத வேதனையை ஏற்படுத்துகிறது. இதற்கு ஒரு முடிவு காண வேண்டுமென்று நினைக்கிறாள்.

மேலும், யுரேனஸ் ஆஜானுபாகு தோற்றம் கொண்ட டைட்டன்களையும் விரட்டி, டான்டரஸ் (Tantarus) என்ற தேவனிடம் (இவனுடைய மாமனிடம்) ஒப்படைத்து அவனிடம் அடிமைப்பட்டுக் குற்றேவல் புரிய விட்டவிடுகிறான். இந்நிலையில் டைட்டன்களுக்குத் துணிச்சல் ஊட்டி மாற்றத்தை ஏற்படுத்தி, புரட்சி ஒன்றை நடத்தி தந்தை யுரேனஸைப் பதவியைவிட்டு நீக்கி, தான் தலைமைப் பீடத்தில் அமர வேண்டுமென்று திட்டம் தீட்டுகிறான் டைட்டன்களில் ஒருவனான க்ரோனஸ்.

இதனை எப்படியோ அறிந்துகொண்ட இவனுடைய தாய் ஜீ, க்ரோனஸ்ஸைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறாள். யுரேனியஸின் கொடுமைகளை ஒடுக்க ஒரு கருவியாக க்ரோனஸ் பயன்படுவான் என்று ஜீ நம்புகிறாள். தந்தையைக் கொன்றால் பதவியை நீ கைப்பற்றிக்கொள், நான் உனக்கு உதவுகிறேன் என்கிறாள் ஜீ. கூடவே, அரிவாள் ஒன்றைத் தயார்செய்து அவனுக்குக் கொடுக்கிறாள். சரியான சந்தர்ப்பம் வரும்போது சொல்கிறேன், செயல்படு என்றும் அறிவுரை சொல்கிறாள்.

ஒருநாள் யுரேனஸுடன் உறங்கும்போது, மறைவாகப் பதுங்கியிருந்த க்ரோனஸுக்கு ஜீ சமிக்ஞை அளிக்கிறாள். உடனே அவன் யுரேனஸ் மீது பாய்கிறான். ஆயுதத்தையும் செலுத்துகிறான். யுரேனஸின் உடல் பாகங்களை வெட்டி துண்டுகளாக்கி கடலில் தூக்கி வீசுகின்றான். ஆனால், க்ரோனஸ் யுரேனஸை வெட்டும்போது வெளியான ரத்தம் ஜீ மீது பட்டுவிடுகிறது. உடனே ப்யூரிஸ் (Furies) என்ற குண்டோதரனும், மெலியா என்ற மோகினியும் (Ash nymphs) தோன்றுகின்றனர். யுரேனஸின் உடல் பாகங்கள் கடலில் விழுந்தவுடன் கடல் கொந்தளிக்க, நுரை பொங்குகிறது. அலைகள் எழுகின்றன. அந்த நுரைப்பின் வழியே ஆஃப்ரோடைட் என்ற அழகு தேவதை தோன்றி வருகிறாள். தந்தையை ஒழித்துக்கட்டிவிட்டு க்ரோனஸ் ஆட்சியைப் பிடிக்கிறான்.

யுரேனஸை ஒழித்துக்கட்டுவதில் க்ரோனஸுடன் உடன் பிறந்தவர்களான டைட்டன்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நின்றபோதிலும், ஓஷனஸ் என்ற டைட்டன் மட்டும் ஒதுங்கி நிற்கிறான். மேலும், தன் தந்தையான யூரேனஸை முறையற்ற விதத்தில் வீழ்த்தினார்கள் என்ற மனக்குறை இவனுக்கு இருந்தது. (இதனால்தான் இதேபோன்ற ‘ஆட்சிக்கவிழ்ப்பு’ நிகழ்வு மறுபடி நேரிட்ட வேளையில் இதே க்ரோனஸை எதிர்த்து அவனது மகன் ஸீயஸ் போர்க்கொடி தூக்கியபோதுக்ரோனஸுக்குத் துணையாக எல்லா சகோதர டைட்டான்களும் உடன் நின்றபோது ஓஷனஸ் மட்டும் ஒதுங்கிக் கொள்கிறான்).

யுரேனஸின் ஆதிக்கம் மறைந்து, க்ரோனஸின் ஆட்சி தொடங்குகிறது. ஜீயா போன்டஸ் (Pontus) மூலமாக ஏராளமான குழந்தைகள் பெற்றுக் குவிக்கிறாள். நீரஸ், தாவுமஸ், போர்சிஸ், செட்டோ, யூரிபியா ஆகியோரைப் பெற்றெடுக்கிறாள்.  இவர்களைத் தவிர ஏராளமான அரக்கர்கள் அரக்கியர்களையும் உருவாக்குகிறாள். எகிட்னா என்ற பயங்கர அரக்கியையும் தைபூன் என்ற ராட்சசஅரக்கனையும் டான்டரஸ் மூலம் பெற்றெடுக்கிறாள். இவர்களில் தைபூன் என்பவன் பின்னர் ஸீயஸை எதிர்த்துப் போர் புரிந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டமொன்றை இடுக