கவிஞர் அனாரின் பார்வையில் “பேரன்பின் ஈரமொழி.”

No photo description available.

facebook

(பேரன்பின் ஈரமொழி நூல் வெளியீட்டு நிகழ்வில் Anar Issath Rehana பேசிய உரையின் முழு வடிவம்).

வாழ்வதுதான் பெரும் கலை என நினைக்கிறேன். அந்த வகையில் வாழ்வைக் கலையாக மாற்றுவதும் உணரச் செய்வதும்தான் ஒரு இலக்கியத்தின் பயன்பாடாக இருக்க வேண்டும். கலையின் தோல்வி வாழ்க்கையின் தோல்விதான். துடிப்பற்றுப்போதல், சாரமற்றுப்போதல் என்பதையே தோல்வி என்கிறேன்.

கனலும் தணலுடன் எரியும் ஆன்மாதான் வாழ்வை ஒளிரச் செய்கின்றது. அந்த ஒளியிலிருந்து விகாசமடைவதே கவிதை அல்லது எந்தவொரு இலக்கிய வடிவமும்.

அன்புதான் அதன் ஈரமொழி… கவிஞனின் அணையாச் சுடர்.

மக்காவில் ஒவ்வொரு வருடமும் கவிதைப் பெருவிழா நடந்த ஒரு காலம் இருந்தது. அரேபியக் கவிஞர்களிடம் கவிதைகளை எழுதச் சொல்லிக் கேட்டு வெற்றிபெற்ற முதலாம் கவிதையை கெளரவிப்பதற்காக கஃபாவில் அடுத்த வருடம் வரை அக்கவிதை தொங்கிக் கொண்டிருக்குமாம். ஒருவேளை அதிலிருந்து பெறப்பட்ட சுடர்கள்தான் ஒன்றிலிருந்து ஒன்று பற்றிப்பிடித்து உலகமெல்லாம் பேரொளி வீசுகின்றதோ என நான் நினைத்துப் பார்க்கின்றேன். அத்தகையதுதான் நமது தொன்மமான கவிதை வரலாறு.
ஒளியுள்ள கவிஞர்கள் யாரென்பதை காலம் நிர்ணயிக்கும். ஒரு கவிதையானது உங்களை உங்களுடனே பிணைத்து உறவாட வைக்கும். கவிஞர்களின் உணர்வை உங்களுக்கு புரியவைக்கும். எனவே கவிதையின் ஒளிரும் சுடர்களை நீங்கள் கண்டறிபவர்களாக இருக்க வேண்டும்.

யாருக்கெல்லாம் அதில் ஆர்வமிருக்கிறது? இந்த நெருக்கடி மிகுந்த வாழ்வில் ஆற ஆமர இருந்து கவியொன்றின் ஆன்மாவில் ஒளிரும் சுடர்பற்றி யோசிப்பதற்கு? அல்லது கவிதைக்குள் சுடர் அணைந்து கவிந்திருக்கும் இருளின் துயர்பற்றி உரையாடுவதற்கு? வாழ்வின் எதிரும் புதிருமான ஓட்டத்தில் மேடு பள்ளத்தின் சறுக்கலில் துரோகத்தின் வஞ்சணையின் ஏமாற்றத்தின் கொடுங்கரங்களிலிருந்து தப்பி யாருக்கு அவகாசமிருக்கின்றது ஒரு கவிதையின் ஈரத்தை தொட்டுணர வேண்டுமென்ற ஆவலைத் தீர்க்க? அந்தச் சுடரில் எரிந்து தானும் ஒரு சுடராக மாறிப் போவதற்கு?
அத்தர்போல மணக்கும் ஒரு கவிதையின் ரகசியத்தை பூசியபடி நாளெல்லாம் காற்றில் மிதப்பதற்கு.

உங்கள் ரசனைக்காக மஃமூத் தர்வீஷ் அவர்களின் கவிதையொன்று :

// தந்தையே நான் யூசுப்
என் சகோதரர்கள் என்னை நேசிக்கவில்லை
நான் தங்கள் மத்தியில் இருப்பதை விரும்பவுமில்லை
தந்தையே அவர்கள் என்னை அடிக்கின்றனர்
கல்லெறிகின்றனர்
தூசிக்கின்றனர்
நான் சாகவேண்டுமென்று விரும்புகின்றனர்
அதனால் வஞ்சப் புகழ்ச்சி செய்கின்றனர்
என்முன் உமது கதவை மூடுகின்றனர்
உன் வயலில் இருந்து நான் துரத்தப்பட்டேன்
என் திராட்சை ரசத்தை அவர்கள் நஞ்சூட்டினர்
தந்தையே
காற்று என் தலையைத் தடவிச் சென்றபோது
அவர்கள் பொறாமைப்பட்டனர்
உம்மீதும் என்மீதும் காழ்ப்படைந்தனர்
தந்தையே
நான் அவர்களுக்கு என்ன செய்தேன்
என்னால் அவர்கள் எதை இழந்தனர்
வண்ணத்துப் பூச்சிகள் என் தோளில் அமர்கின்றன
கோதுமை எனை நோக்கி தலைகுனிகின்றது
பறவைகள் என் கையின்மேலே தரித்து நிற்கின்றன
நான் என்ன தவறு செய்தேன்
தந்தையே
ஏன் என்னை துன்புறுத்துகின்றனர்
நீர்தான் எனக்கு யூசுப் என்று பெயரிட்டீர்
அவர்கள் என்னை கிணற்றுக்குள் தள்ளினர்
பின்னர்
நரியின் மீது பழிபோட்டனர்
தந்தையே
நரி என் சகோதரர்களைவிட கருணையுள்ளது
நான் கண்ட கனவை உமக்குச் சொன்னபோது
யாருக்கும் தவறிழைத்தேனா
நான் கனவில் கண்ட
பதினேழு கிரகங்கள்
சூரியனும் சந்திரனும் என்முன்
முழந்தாளிட்டனவே //

வாழ்க்கை மீது தீர்க்கமான புரிதலைக் கொண்டிருக்கின்ற ஒருவருடைய சமூதாய நோக்கமும் மிகுந்த தெளிவானதாகவே அமையும். தெளிவான இலக்கை இலட்சியமாகக் கொண்ட ஒருவருடைய சிந்தனை, மனித அறம் சமநீதியின்பால் சார்ந்திருக்கும். அவருடைய செயல், சிந்தனை இலக்கியத்திலும் வெளிப்படும். அத்தகைய தெளிவையும் மானுட அறத்தையும் சிராஜினுடைய கவிதைகளில் நான் காண்கின்றேன்.

சிராஜ் முழுக்க இலக்கியம் சார்ந்து செயற்பட்டுவந்தவரல்ல. பன்முகத் தளங்கள் கொண்ட ஒருவர். சமூக இயக்கம், இலக்கியம், மார்க்க இயக்கம்சார் எழுத்துப்பணி, அரசியல் என அவர் பங்காற்றிய இந்த நான்கு தளங்களையும் ஒரு நேர்கோட்டில் புரியாமல் சிராஜ் அவர்களுடைய கவிதையை தனித்து விபரிக்க முடியாது. அத்தகைய விபரிப்புகள் சிராஜினுடைய கவிதைகள் பற்றிய ஒரு முழுமையான பார்வையாகவும் அமையாது என்பதே எனது கருத்து.

சுருக்கமாகக் கூறுவதானால் புனைவாகக் கட்டமைக்கப்பட்ட முஸ்லீம் காங்கிரஸ் அலையிலிருந்து விலகிய ஒரு மாற்று மாணவர் அரசியல் இயக்கத்திற்கு, மாணவராக இருந்த சிராஜ் அவர்களின் அன்றையப் பங்கு அளப்பரியது. அதுவே ஒரு பலமான மாற்று அணியை முஸ்லீம் அரசியலில் தோற்றுவித்தது. அத்தோடு ”எதிர்ப்பிலக்கியம் ஒரு காலாச்சார ஆயுதம்” என்ற சிராஜ் வெளியிட்ட சிறு நூல் அதிக கவனம்பெற்ற ஒன்றாகின்றது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

முஸ்லீம் தேசம் என்ற பிரகடனம் இன்றைய அரசியல் ஓட்டத்தில் சிறு புன்னகையுடன் கடந்து செல்லும் புராதனமாகிவிட்டாலும் அன்றை அரசியல் சூழலில் தனித்துவமான இருப்பை பறைசாற்றுவதில் மிகவும் கவனம் பெற்றது. அதிலும் சிராஜ் எனும் ஆளுமையின் வகிபாகம் வலிமையாக இயங்குகின்றது என்பதைக் கூற விரும்புகின்றேன்.

அதன் பிறகான அவருடைய செயல்தளத்தில் மீள்பார்வை சஞ்சிகையைக் குறிப்பிட வேண்டும். சமய இயக்க அரசியல் பத்திரிகையூடான எழுத்து. வேறொரு அரசியல் விமர்சக எழுத்தினூடாக சிராஜை பிறிதொரு ஆளுமையாக அடையாளம் காட்டுகின்றது. மீள்பார்வையில் அவர் தொடராக எழுதி வந்த பத்திகள் முக்கியமானவை. அவற்றையும் அவர் தொகுக்க வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் சிராஜின் தற்போதைய நேரடி அரசியல், அவரின் அப்போதைய மாற்று அரசியல் மீதான சமரசமற்ற கருத்துக்களாலும் எழுத்துக்களாலும் இன்னும் கூர்மையடையும் என்பதே நிதர்சனம்.

இவ்விதமான பன்முகத் தளங்களிலான சிராஜின் பயணத்தின் ஆன்மாவின் பிரதிபலிப்புகளாகவே அவருடைய கவிதைகள் இருக்கின்றன. அதாவது அவர் இயங்கிவந்த பல செயல் தளங்களில் இணைந்ததாகவே கவிதையும் மற்றொரு தளமாக அவருக்கிருந்ததாகக் கூறமுடியும்.

இந்த பன்முக அரசியல் தளங்களினூடாகவே சிராஜின் கவிதைகள் தமக்கான செயற்படு தளத்தினை தகவமைக்கின்றன என்றே கருத முடிகின்றது. அந்த வகையில் அவருடைய நேர்மைக்கும் சமூக அறச்சீற்றத்திற்குமான பொருத்தமான கவிதை இது.

// தொப்பியைத் தூக்கிப் பார்க்கிறேன்
நீ அங்கு இல்லை
முக்காட்டை விலக்கிப் பார்க்கிறேன்
அங்கும் நீ இல்லை
வேட்டி சால்வையிலும் இல்லை
சரிகைச் சேலையிலும் இல்லை
நெற்றிப் பொட்டிலேனும் இருக்கின்றாயா என்றால்
அங்கும் இல்லை
பெற்றிக் சாரனிலும்
உன்னைக் காணவில்லை… //

வேறொரு கவிதையில்,

// கேள்விகள் தெளிவாகிற அளவுக்கு
விடைகள் தெளிவதாய் இல்லை
எல்லாமே முடிந்து போகிற உலகில்
எதுவும் நிச்சயம் இல்லை
முதிர்ந்த இரவின் பேரமைதிக்குள்
நமக்காய்ப் பிரார்த்திக்கும்
இதயங்களுக்காய்
தாகித்து தவித்திருக்கிறது மனசு //

கற்பனாவாதப் புரட்சியைப் பேசாதவர் சிராஜ். அவரது கவிதைகளை எதிர்பிலக்கிய வகையில் வைத்து பார்க்க வேண்டும். ”பேரன்பின் ஈரமொழியை” முழுக்க வாசித்தபொழுது சிராஜின் சில கவிதைகள் பலஸ்தீனக் கவிஞர் மஃமூத் தர்வீஷை நினைவூட்டின.

// நிலை குலையாமல் இருக்க
அலையை மடித்து
தோளில் தூக்கிப் போடுகிறேன்
கால்களோடு கூடவே
வாழ்க்கையும் நடந்து வருகிறது
தெருவில் வெளிச்சம் இல்லை
யாருக்குமிங்கு
எதுவும் வெளிச்சமில்லை
பூமிக்கு இன்னும்
ஒளி வந்து சேராத
நீள் நெடுந் தொலைபுலத்து
நட்சத்திரங்கள் அவை
அண்டப் பெருவெளியில்
பௌதீக அதீதமாய் பரவிச் செல்கிறேன்
அலைவதும் அழிவதும்
எதுவெனப் புரியாது
நடுங்குகிறது உடல் //

மற்றொரு கவிதையில்,

// காலத்தை
எதிர்த்திசையில்
நகர்த்தும் போதெல்லாம்
பருவமாறிப் பெய்யும் மழைபோல
கண்ணீருக்குள்
கவிதையும் சேர்ந்தே
காற்றோடு கலக்கிறது //

இவை சிராஜின் வரிகள். அவர் தன் காலத்தின் இக்கட்டான அரசியல் சூழலிடையே வாழ்ந்தவர். அவருடைய கவிதைகள் அதிலிருந்துதான் பலம் பெறுகின்றன. அவர் தெரிவு செய்தது தன் சமூகத்தின் மீதான மாற்று அரசியல் என்ற படியால் கவிதையில் ஒரு தொடர்ச்சியை கையாள முடியாதவராகின்றார். இது கவிதைக்கு நிகழ்ந்த துயரம் என்பதையும் அவர் நன்கு அறிந்துதான் இருப்பார். தன்னைப் பகுதி பகுதியாக பிரித்து செயற்படுகின்ற ஒரு ஆளுமை அவர் எனும் புரிதலுடன் அவருடைய கவிதைகளையும் அணுகவேண்டும்.

உண்மையில் சிராஜினுடைய மொழி பேரன்பின் ஈரமொழி. அந்த ஈரத்தில் கண்ணீரின் வெம்மையும் பிசுபிசுப்பும் உள்ளது. அந்த பேரன்பில் ஆற்றாமையும் வடுக்களும் வரலாறுகளும் மறைந்துள்ளன.

// சில வார்த்தைகளுக்கு
உயிரிருக்கிறது
சில வார்த்தைகள்
செத்துப்போய்விட்டன
இன்னும் சில
குற்றுயிராய்க் கிடக்கின்றன
சிலதோ
அரைகுறையாய் அலைகின்றன
யாரையும் காயப்படுத்தாத
வார்த்தைகளால்
நம் கனவுகளை வரைவோம்
நம் கண்ணீராலும்
வியர்வையாலும்
அதைக் கழுவுவோம் // என்கிறார்.

அதிகாரத்தை நோக்கி நீளும் கவிஞர்களுடைய மொழி கண்ணாடிக் கூர் போன்றது என்பதை சிராஜின் இந்த வரிகளில் காணலாம்.

// சூடேறிய வார்த்தைகள்
நம்மை உரசிப் பார்க்கையில்
நாம் தளர்வதுமில்லை
துவண்டு வீழ்வதுமில்லை //
அவர் கவிதைகளில் மெல்லுணர்வைக் காண முடிகின்றது.

கவிதை சொற்களால் மாத்திரம் எழுதப்படுவதல்ல. அதற்கு வாழ்க்கையும் அவசியம். தம் கவிதைகள் தொடர்பான விமர்சனத்தை வெளிப்படையாக முன்வைக்குமாறு கேட்டிருந்தார். நல்ல விடயம்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை விமர்சிப்பவர்கள் யார் என்பதை நான் கவனத்தில் எடுப்பேன். அதன் பிறகே அந்த விமர்சனத்துக்குரிய மரியாதையை வழங்குவேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் நம்மை நாமே ஆழ உற்று நோக்கி விமர்சித்துக் கொள்வதுதான் அனைத்தையும் விட மேலானது. ஏனெனில் வேறு எவரையும் விடவும் நாமே நம்மை நன்கறிந்தவர்களாக இருக்கின்றோம்.

கவிதை என்பது அதன் பிரக்ஞையோடும் துடிப்போடும் ஓடிக் கொண்டிருக்கும் நதி.

யாரெல்லாம் ரசிக்கமுடியுமோ தூரத்திலோ நெருக்கமாகவோ இருந்து ரசிக்கலாம்.
யாருக்கெல்லாம் நீந்த முயுமோ அந்த நதியில் மூழ்கி நீந்தலாம். கைகளை நனைத்தால் மட்டும் போதும் என்பவர்கள் நதி சுடும் என்பவர்கள் நதியின் ஆழம் சென்றால் உயிர்போய்விடும் எனப் பயந்தவர்கள் பற்றியெல்லாம் கவிதை நதி கவலைப்படமாட்டாது. அதன் வசீகரம் புராதனமானதும் அதே சமயம் ஒவ்வொரு நொடியும் புதிதாக இருப்பதுமாகும். நாமே இன்னொரு நதியாகி அதனுடன் கலந்தாலன்றி அதனுடன் இரண்டறக் கலப்பது சாத்தியமல்ல.

மனதின் ஆழங்களைத் தேடியும் வாழ்வின் முரண்களை எதிர்கொள்வதன் நுட்பங்களையும் நம்மை நாமே கொண்டாடும் திளைப்பின் ரகசியங்களையும் கலை உணர்வால்தான் உய்த்துணரலாம். வானத்திற்கும் பூமிக்கும் அப்பால் சுவர்க்கமாகவும் நரகமாகவும் தெரிகின்றதை அவை இரண்டுமே அல்லாத வேறொன்றை,
எட்டாத கற்பனைகளுக்கும் அப்பால் இருக்கின்ற இருப்பின் தெய்வீகத்தையும் எனக்கு கவிதைகள் தான் திறந்து காட்டுகின்ற ஜன்னல்கள். நமது பாரம்பரியத்தலிருந்து பண்பாட்டிலிருந்து நம்மை ஆகர்சித்திருப்பது கவிதைகள் தான்.

அத்தனை கொடை மிகுந்தது நமது மொழி.
மொழிதான் பரவசத்தின் ஒலி.
பித்தின் ஒளி
காதலின் திரை
கவிதையின் உயிர்.

நான் எப்படி இந்த மண்ணில் பிறந்தவிட்டு கவிதையைப் பாராட்டாமல் இருப்பது?

சிராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

குறிப்பு:
அனார் என்ற பெயரில் எழுதும் இஸ்ஸத் றிஹானா சமகால தமிழ்க் கவிதைப் பரப்பின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவர். சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சாகித்திய விருது உட்பல பல விருதுகள் வென்றவர். தேர்ந்த சொல்லாட்சியும் கவிநுட்பமும் வாய்க்கப் பெற்றவர்.

1 Comments

பின்னூட்டமொன்றை இடுக