காற்றில் அலையும் யாரோவொருவனின் பட்டம்

”இறந்தவர்களை அலங்கரிப்பவன்” கவிதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்

Iranthavargalai_Alangarippavan_Pambatti_Chithan_Sithan_Sidhan

“பறவை பாடலின் இறுதிவரியை பாடிக்கொண்டிருந்தது
அதன் வளைநகங்களில் மரம் கரைந்து கொண்டிருந்தது

வானில் மேகங்கள் திருகிக் கொண்டிருந்தன
அதன் அனைத்து வெடிப்புகளிலிருந்தும்
நிலப்பரப்பின் மூழ்கும் கொள்கலனில்
இருள் பொழிந்து கொண்டிருந்தது

தந்திக்கம்பிகளில் மட்டும் ஒரு செய்தி
இன்னும் அதிர்ந்து கொண்டிருந்தது

வீ-ட்-டி-ற்-கு-. வா-.
உ-ன-க்-கு-. ம-க-ன்-.
பி-ற-ந்-தி-ரு-க்-கி-றா-ன்-.”

மிராஸ்லாவ் ஹோலுப் எழுதிய “உலகின் முடிவு” என்னும் இந்தக் கவிதை உலகின் கடைசித் தருணங்களுக்கான காட்சிப்படிமத்தையும் அதன் மீட்சியாய் ஒலிக்கும் புதுத் துவக்கத்தின் செய்தியையும் சொல்வதாய் அமைந்திருக்கிறது. தொழில்முறையில் உயிரி தொழில்நுட்ப வல்லுனரான ஹோலுப்பின் கவிதைகள் விஞ்ஞானத்தையும் ஆன்மாவையும் தொடர்புபடுத்துவனவாக இருக்கின்றன. அறிவியல் கலைச்சொற்களை கவிதையில் கொணர்வது தொடர்பான விவாதங்கள் முன்னெடுக்கப்படும் காலகட்டத்தில் பாம்பாட்டி சித்தன் எழுதிய “இறந்தவர்களை அலங்கரிப்பவன்” தொகுப்பு வெளியாகியிருக்கிறது. குழந்தைகள் உலகின் பிரத்யேக அழகியலைப் பேசிய ”குற்றவுணர்வின் மொழி”, விஞ்ஞானத்திற்கும் மனிதனுக்கும் இடையேயான பிணைப்பை பௌதிகத் தன்மையுடன் விவரித்த “இஸ்ரேலியம்” என்ற இரண்டு தொகுப்புகளுக்குப் பிறகு மூன்றாவதாக வந்திருக்கிறது ”இறந்தவர்களை அலங்கரிப்பவன்”.

தலைப்புக் கவிதையான “இறந்தவர்களை அலங்கரிப்பவன்”, காலத்தின் ஊஞ்சல் விளையாட்டையும், முன் பின் முரண் நிகழ்வுகளையும் அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறது. சாவு குறித்திருக்கும் பல்வேறு கனவுகள் பொய்த்துப் போய் எதிர்பாராமையின் மடியில் நிகழும் மரணம் ஒருவரை நித்தியத்தில் ஆழ்த்துகிறது. இறந்தவரை அலங்கரிக்க வந்தவனுக்கோ, அவனது வேலையானது மரணம் அடைந்திருக்கும் உயர்திணையின் மௌனத்தை இடையூறு செய்வது போல தோன்றுகிறது, அதற்காக அவன் வருத்தமும் கொள்கிறான். அவன் வேலை செய்யத்துவங்கியதும் உயர்திணை அஃறிணையாகி விடுகிறது. பூதவுடலை அவன் பதப்படுத்தும் போது சவம் தன் கலையை இழந்து புதுப்பொலிவு பெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட உடல் பொதுவில் பார்வைக்கு வைக்கப்படும் போது மீண்டும உயர்திணை ஆகிறது சவம். அவனது அலங்காரத்தினால் சற்று தாமதமாக சாவை அனுகும் அவர், யாருக்கும் புலப்படாமல் சாவு நுழையும் சரியான தருணத்தில் அதனை வரவேற்கத் தயாராகக் காத்திருக்கிறார்.

அதாவது ஒரு சவம், இறுதி யாத்திரைக்காக தன்னை அலங்கரித்தவனின் உதவியால், சாவிற்கு முந்திய காலத்திற்கு சென்று தன் மரணத்தை வாஞ்சையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. காலத்தை கலைத்து விளையாடும், முன் பின் மாற்றி ஆடும் இந்த ஊஞ்சலாட்டம், பாம்பாட்டி சித்தனின் மூன்றாவது தொகுப்பாக வெளிவந்திருக்கும் “இறந்தவர்களை அலங்கரிப்பவன்” புத்தகத்திலுள்ள அநேக கவிதைகளில் காணக்கிடைக்கிறது. இடஞ்சுழித்துச் (anti-clockwise) சுற்றும் அசைவைத் தருகின்ற இந்தக் கவிதைகள், கவிஞனின் அலைவு மனவோட்டத்தின் அனிச்சை பிரதிபலிப்பா (reflex action) அல்லது தற்செயல் நிகழ்வா என்ற எண்ணம் தொக்கிக் கொண்டே நின்றது

இறந்தவர்களை அலங்கரிப்பவன்

சாவைக் குறித்த கனவுகள் பொய்த்துவிட்டன அவருக்கு
மரணம் என்ற நித்தியத்தில் ஆழ்ந்திருக்கிறார்
அவரை இடையூறு செய்வதற்கு
எப்போதும் வருத்தப்படுபவனாய் இருக்கிறான்
இறந்தவர்களை அலங்கரிப்பவன்

சாவிற்கோ சடலங்களுக்கோ அவன்
எப்போதும் முகத்தைக் காட்டுவதில்லை
கைகளில் அணிந்த உறைகளோடு
கண்கள் வரை மூடிய முகத்தோடு
அறுவை சிகிச்சை நிபுணனைப்போல்
சவத்தைக் கழுவுகிறான்

அதிலிருந்து தேவையான அளவு
ரத்தத்தை வெளியேற்றி
பூதவுடல் கெடாமல் பாதுகாக்கும்
திரவத்தை உட்செலுத்தி
அது சீராக பரவுமாறு தேய்த்துவிடுகிறான்
தனது களையை இழந்து
சவம்
புதுப்பொலிவுறுகிறது
உடை முகம் மற்றும் சிகை
ஒப்பனை முடிந்தபின்
அதன் உதட்டில் புன்னகை முகிழ்க்கிறது

இப்போது அதைப் பிறரின்
பார்வைக்கு வைக்கிறான்
அவனுக்குப் பரிச்சயமானவர்களோ
அவன் இம்முறையும் சாவை
வென்று விட்டானெனச் சொல்கிறார்கள்
மற்றவர்களோ
இறந்தவர் இன்னும்
உயிரோடு
இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள்

அதனாலேயே இறந்துபோனவருக்கு
சாவு சிறிது தாமதப்படக்கூடும்
அதுவரை
பிறரின் விமர்சனங்களை
செவிமடுத்தவாறு
பத்திரமான மௌனத்தில்
உறைந்திருக்குமவர்
அந்த அறையிலிருக்கும்
கண்ணுகளுக்குத் தெரியாத
கதவின் வழியாகச் சாவு நுழையும்
சரியான தருணத்தில்
கண் விழித்தெழவும்
அதை வரவேற்கவும் தயாராக்க் காத்திருக்கிறார்.

காற்றாலைக்காரனிடம் நிலத்தை விற்ற சம்சாரியின் கொடுங்கனவை விவரிக்கிறது “உணவுச் சங்கிலி” எனும் கவிதை. இதிலும் கூட விவசாயத்திற்கு ஆதாரமான நிலம், நீர், தாவரங்களில் இருந்து நுகர்வோரை அடையும் உணவுச் சங்கிலியின் எதிர் விசைச் சுற்றான நுகர்வோர், அவர் அணுகும் சந்தை, சந்தைக்குத் தேவையான பொருளை விளைவிக்கும் சம்சாரி, அவனது ஆதாரமான நிலம், நீர் மற்றும் தாவரங்கள் என்றே காட்சிப்படுத்தப்படுகிறது.

உணவுச் சங்கிலி

நுகர்வோர் -> சந்தை -> சம்சாரி -> நிலம், நீர், தாவரங்கள்
காற்றாலைக்காரனுக்கு நிலத்தை விற்ற சம்சாரி
இரவில் திடுக்கிட்டு விழித்து பெட்டியிலிருக்கும்
பணத்தை எண்ணிக்கொண்டிருக்கிறான்
அவனையுமறியாமல் அவன் கால்கள்
நிலத்தை நோக்கி நடக்கின்றன

முழுநிலவொளியில் காற்றாலை
சுழலும் மூன்று இறக்கைகள்
ஒன்றில் தாவரங்கள்
மற்றொன்றில் சம்சாரியும் சந்தையும்
இன்னொன்றில் நுகர்வோர்
ஒன்றையொன்று
பிடிக்கவே முடியாமல்
துரத்திக் கொண்டிருக்கச் செய்கின்றன
கார்ப்பொரேட் நிறுவனங்கள்

(நம்மாழ்வாரின் நினைவாக)

”ஈர்ப்பு” என்ற தலைப்பில் ஒரு கவிதை: ஊதிப் பருத்த சிவப்பு பலூன் ஒன்று காற்று குறைந்து, சுருங்கி கையளவு பழமாகிறது. மேல்நோக்கித் தட்டப்படும் அது, நகர்ந்து மேலிருந்து ஈர்க்கும் மரத்தை நோக்கிச் செல்கிறது. எதிர் புவியீர்ப்பு விசையாய் சுட்டப்படும் இக்கவிதையும் உள்ளிருந்து வெளி நோக்கிச் செல்லும் தன்மைமையே (extrovert) விளக்குகிறது

இன்மையின் பூரணத்துவத்தை “காலி செய்த கோப்பையிலிருந்தே தனது தேநீரைப் பருகும், தன்னைப் போலவே தன் மொழியையும் நிர்வாணமாக்கியிருக்கும் ” பாஷோ’வின் கிளி வழியே மொழிந்திருப்பது அழகு. ஒன்றுமில்லாததில் இருந்து அனைத்தையும் பெறும் அரூபத்தை சொல்லிச் செல்கிறது இந்த கவிதை. “பறக்கும் பறவை” என்னும் கவிதையிலோ, ஆகாயத்தை அளந்து ஒவ்வொரு முறையும் இலக்கை குறி தப்பாமல் வீழ்த்தும் பறவை, ஒரு துர்கனவைப் போல மீண்டும் மீண்டும் வந்து பயிற்றுநரின் உறை போர்த்திய கையில் அமர்கிறது. பயிற்சிக்கு அடிமைப்பட்டபின் ஆகாயமும் ஒரு கூண்டைப் போலத் தான் காட்சியளிக்கும் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது.

இந்த உள்நோக்குதல் (introvert), வெளி நோக்குதல் (extrovert) ஊசலாட்டம் ஏன் என்ற கேள்விக்கு, ”ஆராய்ச்சி மையம்” கவிதையை கருவாக, மையப்புள்ளியாக வைத்து அடுக்கடுக்கான பொதுமைய வளையங்கள் வரைந்து மற்ற கவிதைகளை ஒவ்வொரு வெளி வட்டத்திலும் பொருத்தினால் கிடைக்கும் சித்திரம், கவிதைகளின் இந்த அலைவு தற்செயலானது அல்ல மாறாக அவை கவிஞரின் மன அலைவையே நுண்ணிப்பாக பிரதிபலிக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. ”வாயிலோன், ஆளுயுர மதிற்சுவர், அதற்கப்பால் பசும்புல்வெளி, அதில் யாருமற்ற சருக்குமரம், ஊஞ்சல் அதைக் கடந்தால் கருப்புக் கண்ணாடிகளாலான ஆரய்ச்சி மையம் …” என்று வெளியிலிருந்து உள்நோக்கி பார்வையை செல்லுத்தியவர், உள்ளே சுகாதாரமான உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சோதனை மற்றும் ஆராய்ச்சிக்காக பரிசோதனைக் கூடத்து எலிகளாக, உயிரியல் ஆயுதங்களாக பாவிக்கப்படுவதைக் காண்கிறார். இப்போது மொத்த சித்திரமும் தலைகீழாய்த் தெரிகிறது. “எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கருப்புக் கண்ணாடிகளாலான ஆராய்ச்சி மையம், யாருமற்ற சறுக்குமரம், ஊஞ்சல், பசும்புல்வெளி, ஆளுயர மதிற்சுவர், வாயிலோன்”

ஆராய்ச்சி மையம்

வாயிலோன், ஆளுயர மதிற்சுவர்
அதற்கப்பால் பசும்புல்வெளி அதில்
யாருமற்ற சறுக்குமரம், ஊஞ்சல்
அதைக் கடந்தால் கருப்புக் கண்ணாடிகளாலான
ஆராய்ச்சி மையம்

குளிரூட்டப்பட்ட அதன் அறைகளில்
எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட தளிர் குழந்தைகள்
அவர்களுக்கு வழங்கப்படுகிறது சுகாதாரமான உணவு
நுண்ணுயிர்கள் நீக்கப்பட்ட நீர் மற்றும் சிகிச்சை
அவர்களின் ரத்தத்திலிருந்து மேற்கொள்ளப்படுகிறது
சோதனை மற்றும் ஆராய்ச்சி

பரிசோதனிக் கூடத்து எலிகளாக
உயிரியல் ஆயுதங்களாக இருக்கும் அவர்கள்
தங்களுக்குள் விளையாடுவதை விடுத்து
உங்களோடு கழிகிறது
அவர்களின் ஒரு பொழுது
அதன்பின் அவர்களிடமிருந்து விடைபெறுகிறீர்கள்

தற்பொழுது எல்லாமே உங்களிடம் துளிர்க்கிறது
தலைகீழாக
எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்
கருப்புக் கண்ணாடிகளாலான ஆராய்ச்சி மையம்
யாருமற்ற சறுக்குமரம், ஊஞ்சல்
பசும்புல்வெளி
ஆளுயர மதிற்சுவர்
வாயிலோன்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் மையச் சரடாக இந்த அலைதலை உணர்ந்து கொள்ளலாம். கோர்த்துத் தொடுத்தது போலின்றி, அள்ளி எடுத்தது போல் இருக்கும் தேர்வுகளில் கூட இன்னும் சற்று கவனமும் பொறுமையும் சேர்த்திருக்கலாம். அது போக கவிதையின் பாடுபொருளாக கவிதையே மீண்டும் மீண்டும் வந்து தன் பெயரை வலிய பிரஸ்தாபிக்கும் முறைக்கு கொஞ்சம் விடுதலை கொடுக்கலாம். கவிதைக்குள்ளே கவிதை வருவதெல்லாம் அலுப்பையே தருகிறது. கனிமங்கள் சேர்மங்களாகும் வேதியியல் முறையில் கூட அறிக்கைகளை கவிதைகளாக்கும் நுகைப்பான்களின் சேர்மானம் சரியாக கையாளப்படாததால் சமநிலை அடையாத சமன்பாடாய் தோற்றமளிக்கின்றன சில கவிதைகள். கவிஞர் தனது அடுத்த தொகுப்பில், சேர்மானங்களை இன்னும் கூட சரியாகக் கலந்து ஒரு சமநிலை சமன்பாட்டை (balanced equation) எய்துவார், ரசாயனத்தில் வல்லுநரான பாம்பாட்டி சித்தனிடம் அதற்கான உள்ளீடுகள் இருக்கின்றன என்பதில் ஐயமொன்றுமில்லை.

வாழ்த்துகள் பாம்பாட்டி சித்தன் !

பின்னூட்டமொன்றை இடுக