இந்திரஜித் எனும் மாயக்காரன்

umayaal

சிலேயில் ராணுவப் புரட்சி நடந்தது. டாக்டர் அயந்தேயின் மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி நடந்தது. அயந்தே கொல்லப்பட்டார். அவரது உற்ற நண்பரும் கவிஞருமான பப்லோ நெருதா அயந்தே இறந்து இருபது நாளில் இறந்து போனார். இந்த நிகழ்வுகள் லத்தின் அமேரிக்க இலக்கியத்தின் போக்கை மாற்றின. அது ஒரு paradigm shift. ராணுவ ஆட்சி பற்றியும் அதன் கொடுமைகள் பற்றியும் லத்தீன் அமேரிக்க எழுத்தாளர்கள் இலக்கியம் படைத்தனர். குறிப்பாக சிறுகதைகளில் அதன் தாக்கமும் வீச்சமும் அதிகமாக இருப்பதை, 70களிலும் 80களிலும் தொடர்ந்து எழுதப்பட்ட ராணுவ ஆட்சி சம்மந்தமான கதைகளை இப்போது வாசிக்கக் கிடைக்கிறபோது உணர்ந்துகொள்ள முடிகிறது. மார்க்வேசின் ‘one of these days’, இசபெல் அயந்தேயின் ‘two words’ போன்ற கதைகள் ஞாபகத்துற்கு வருகின்றன. 

1970களில் லத்தீன் அமேரிக்க கதை உலகம் உச்சந்தொட்டிருந்த காலமாக இருந்தது. கற்பனையில் மாய உலகத்தை சிரிஷ்டிப்பதும், அதன் மேல் கபடி ஆடுவதைப் போல கதைகளைப் புனைவதும் பரவலாக நிகழ்ந்துகொண்டிருந்தன. உலக இலக்கியத்தின் முழுக்கவனமும் லத்தீன் அமேரிக்க இலக்கியத்தில் குவிந்திருந்தது. 80களில் தொடங்கி இலக்கியத்திற்கான நோபல் பரிசு அடுத்தடுத்து லத்தீன் அமேரிக்க எழுத்தாளர்களை வந்து சேர்ந்தது. தொடர்ந்து, அவர்களது இலக்கியம் உலகமொழிகளில் அதிகதிகமாக மொழிபெயர்க்கப்பட்டது. 80களின் ஆரம்பத்தில் அந்தப் போக்கு தமிழையும் எட்டியது. ஆர்.சிவகுமார், பிரம்மராஜன் எனப் பலரும் லத்தீன் அமேரிக்க இலக்கியப் படைப்புக்கள் தமிழில் கிடைப்பதில் பங்காற்றினர். 

00

‘சந்திப்பு’ எனும் சிறுகதையை சுரேஷ்குமார இந்திரஜித் 1991யில் எழுதுகிறார். சமூரியா எனும் ஒரு நாட்டில் ராணுவத்திற்கும், கொரில்லா போராளிகளுக்கும் இடையில் நடந்த சண்டையை பின்னனியாக கொண்டதாக கதை விரிகிறது. அந்தக் கதையில், சமூரியா என்றும், ஜம்பூரோ என்றும் புதிது புதிதாக நாடுகளையும், அவற்றிக்கு மாநிலங்களையும், மொழிகளையும் உருவாக்க முயன்றிருப்பார். இந்த நாடுகளின் பெயர்களை வைத்துக்கொண்டே நான்கைந்து கதைகள் எழுதி இருக்கிறார். முற்றாக ஒரு புது உலகம் புனைதல் எனும் சுரேஷ்குமாரின் இந்த முயற்சி, குழந்தைகளையும் பெண்களையும் கொல்வதில் ஒரு ராணுவ வீரனின் மனச்சிக்கல்களை கதை ஆக்குவதில் எவ்வளவு அவசியம் என்பதைத் தாண்டி, புனைவின் அத்தனை சாத்தியங்களை தொட்டுவிட எண்ணங்கொண்டு எண்பதுகளில் எழுத ஆரம்பித்த ஒரு இளம் எழுத்தாளனை தொன்னூறுகளின் ஆரம்பத்திலேயே தமிழ் இலக்கிய உலகிற்கு இனங்காட்டி இருந்தது.

33CF37C6-D05F-4B2F-8299-7D323067A8F31998யில் சுரேஷ் குமாரின் ‘காலத்தின் அலமாரி’ எனும் 17 பக்கச் சிறுகதை வெளிவருகிறது. இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள ஒரு நாட்டில்-எந்த நாடு, எந்தப் பிராந்தியம் போன்ற தகவல்கள் கொடுக்கப்படவில்லை என ஒரு ஞாபகம்- நடக்கும் சம்பவங்களின் பின்னனியில் எழுதப்பட்ட ஒரு கதை. One hundred years of solitude போன்று ஒரு நாவல் அளவிற்கு விரித்து எழுதப்படக் கூடிய பின்னனிகளையும் உட்கதைகளையும் கொண்ட ஒரு களம். இந்தக் கூற்றை மெய்ப்பிப்பதைப் போல பதினொரு பகுதிகளாக கதையைப் பிரித்து எழுதி இருப்பார் ஆசிரியர். சுரேஷ்குமார் எழுதியதில் மிக நீளமான சிறுகதை(!) இதுவாகத்தான் இருக்கும். வாசிக்கும் போது அந்தக் கதை தருகிற புனைவின் இன்பம், வாசித்து முடித்த மறுக்கணம் ‘இதில் கதைதான் என்ன!’ என்கிற  ஆச்சரியக்குறி உடன் நிறைவுறுகிறது. சுரேஷ்குமாரின் பல கதைகளையும் வாசிக்கிற போது இந்த சிக்கலை தவிர்க்க முடியவில்லை. மையமற்ற கதைகளை பின்தொடர்வதில் உள்ள சிக்கல்தான் இது என்பதை புரிந்துகொள்ள முடிந்தாலும், பொதுவாக அப்படியான கதைகளிலும் ஒரு பிடிமானம் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக போர்ஹே எழுதிய பலகதைகளும் இந்த வகைக்குள் அடங்குபவைதான். பாத்திரங்கள் இல்லாமலும், சமயங்களில் சம்பவங்கள் கூட இல்லாமலும் போர்ஹே கதை சொல்லி இருக்கிறார். The disk, the book of sand என வரிசையாக கதைகள் ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் அந்தக் கதைகளில் இருக்கும் ‘பிடிமானம்’ சுரேஷ்குமாரின் கதைகளில் தவறிப்போவது போல தெரிகிறது.

The book of sand கதையை கீழ்க்காணும் சுட்டியில் வாசிக்கலாம்.

http://archives.evergreen.edu/webpages/curricular/2010-2011/natural-order/Readings/Week_09/The_Book_of_Sands.pdf

00

‘பீஹாரும் ஜாக்குலினும்’ எனும் கதை 1975யில் மதுரையில் சந்திக்க நேர்ந்த ஜாக்குலின் என்ற பிரன்ச்சுப் பெண்ணையும் அவன் காதலனையும் பற்றியது (அப்படிச் சொல்லலாமா! இல்லை என்றால் எதைப்பற்றியது அந்தக் கதை!). பிறகு பீஹாரில் ஒரு கலவரத்தில் அகப்பட்டு, ஒரு வெள்ளைக்காரியின் காதலன் இறந்ததைப் பார்த்ததும் எதுவும் செய்யமுடியாமல் போனதை, ஆண்டுகள் பல கழிந்து பிரான்ஸ் பயணத்தில் நினைவுகூறுகிற கதைசொல்லி, பீஹாரில் காதலனை இழந்த பெண் ஜாக்குலின்தான் என தெரிந்துகொள்கிறான். இந்தக் கதையை 1996யில் எழுதி இருக்கிறார் ஆசிரியர். நான்கு ஆண்டுகள் கடந்து 2000ம் ஆண்டு எழுதிய ‘புனைவுகளின் உரையாடல்’ எனும் ஒரு கதையில் பீஹாரும் ஜாக்குலினும் என்று, தான் முன்னர் எழுதிய கதையையே இந்தக் கதைக்குள் கொண்டு வந்து புனைவை விளக்க முயல்கிறார்(!). ‘புனைவு மர்மம் நிறைந்தது’ என்பதை நிறவ எழுதிய கதை இது என அந்தக் கதையே மன்றாடுவதை பார்க்க முடிகிறது. வாசித்து முடிக்கையில் ‘ஓ, அப்படியா!’ என்பதைத் தாண்டி எதுவும் மனதில் ஒட்டவில்லை. 

போர்ஹே, புனைவின் மர்மத்தை அட்டகாசமாக கையாண்டிருப்பார். The other என்கிற அவரது சிறுகதையிலும், Borges and I எனும் அவரது creative essayயிலும் அது அநாயாசமாக நிகழ்ந்திருக்கும். தானே தன்னைச் சந்தித்தல் எனும் இடத்தில் இருந்து புனைவு விஸ்வரூபங்கொண்டு நிற்கும். தன்னுடைய வயதான காலத்தில், தன் இளமையை வாழ்பவனைச் சந்தித்தல் என்பது எவ்வளவு பிரமாண்டமான கற்பனாவாதம்! 

Borges and I யை கீழுள்ள சுட்டியில் வாசிக்கலாம்.

http://www.amherstlecture.org/perry2007/Borges%20and%20I.pdf

00

‘கடந்துகொண்டிருக்கும் தொலைவு-’ 

தொலைபேசி ஒலிக்கிறது. அவள் பேசுகிறாள். கணவனுடன் பிரிச்சினை, குழந்தை உடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன் என்கிறாள். அவளை ஒரு விடுதியில் தங்க வைக்கிறான். அவள் குளித்து விட்டு ஈரத்தலை உடன் வருகிறாள். அதைப் பார்க்கும் இவனுக்கு காமம் பொங்குகிறது ( ஈரத்தலை கொண்ட பெண் மீது மோகங்கொள்வது ஆசிரியரின் பல் கதைகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது). அவள் இருக்கும் இந்த நிலையில் என்ன இது கேவலமான எண்ணம் என அவனே அவனைக் கடிந்துகொள்கிறான். இப்படியாக அந்தக் கதை நகரும். கதை முடிகிற போது அவன் இன்னமும் மணி அடித்தகொடுண்டிருக்கும் தொலைபேசியை எடுக்கப் போய்க்கொண்டிருப்பான். அப்படி என்றால் இடையில் நடந்த அவ்வளவு விசயங்களும் என்ன? அந்தப் பெண் யார்? 

புனைவின் சாத்தியங்களை எழுதித் தீர்க்கும் ஒரு யுக்திதான் இது. வாசகர்களை கத்தியின் முனையில் நடக்க வைத்து, திடீரென தள்ளிவிடுவதைப் போல. இந்த யுக்தியைப்  பல கதைகளிலும் திறம்பட பயன்படுத்தி இருக்கிறார் சுரேஷ்குமார். அப்படியான எழுத்து அவருக்கு ரொம்ப அநாயாசமாக கைகூடி வருகிறது. அற்புதமான தருனங்களை கடைசியும் முதலுமான வரிகளுக்கிடையே கொண்டுவருதல் ஒரு திறமையான கதைசொல்லல் முறைதான். ஆனால் சிறுகதையில் இந்த யுக்தி புதியதொன்றுமில்லை. சிறுகதையின் ஆரம்ப காலந்தொட்டு, கதையின் முடிவில் திடீர் திருப்பம் இருப்பது ஒரு பொதுவான அம்சமாக இருந்து வருவதைக் காணலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் Guy De Maupassant தான் எழுதிய அனைத்துக் கதைகளிலும் இவ்வாறான அதிர்வுகளை கதையின் முடிவில் நிகழ்த்திக் காட்டினார். The necklace கதையை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அளவிற்கு அதிகமாக ஆசைப்பட்ட மனைவியும், அவள் ஆசைக்கு துணைபோன கணவனும் தோழியிடம் இருந்து இரவல் பெற்ற வைர நெக்லசை தொலைத்துவிட்டு, அதை வாங்கிக் கொடுக்க எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார்கள் எனச் சொல்லி, கடைசியில் அவர்கள் பட்ட அந்தப் பத்தாண்டுத் துன்பம், அர்த்தமில்லாத ஒரு விடயத்துக்கானது என கதை முடிகிற போது வாசகனுக்குள் ஏற்படுகிற ஒருவிதமான கிளர்ச்சியைத்தான் சுரேஷ்குமார இந்திரஜித்தும் இன்னொரு வகையில் வெளிப்படுத்தி வாசகனையும் உணரவைத்திருக்கிறார். 

The necklace கதையை கீழுள்ள சுட்டியில் வாசியுங்கள்.

https://fac.ksu.edu.sa/sites/default/files/the_diamond_necklace.pdf

00

தமிழ் சிறுகதை மரபில், கதையின் வெளிப்பாடு சார்ந்து, கு.பே.ராவையும் அசோகமித்திரனையும் இருதுருவங்களாக்க் கொண்டால், மௌனி இரண்டிலும் அடங்காமல் தனியே துருத்திக்கொண்டு தெரிவார். அப்படியான மௌனியின் வாரிசாக சுரேஷ்குமார இந்திரஜித்தை பலரும் சொல்கிறார்கள். எனக்கு அதில் உடன்படில்லை. மௌனிக்கும் இந்திரஜித்துக்குமான இலக்கியப் பொழுமையை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் அவர்கள் விலகிநிற்கும் பிரதான இடமாக கதை வெளிப்பாட்டு முறைமையை முன்வைக்கிறேன்.

மௌனி தன்வாழ்நாளில் மொத்தமாக 24 கதைகளைத்தான் எழுதி இருந்தார். சிறுகதைக்கான எந்த வடிவத்தில் அவை வந்தமர்கின்றன என்பதில் எனக்கு இன்னமும் ஐயமுண்டு. ஒருவரியில் எழுதி, போகிற போக்கில் வாசித்து அப்படியே கடந்து செல்லக்கூடிய சிறிய உணர்ச்சிகளை விரித்து பக்கம் பக்கமாக எழுதியவர் மௌனி. அவரது மொழியும் தெளிவும் அந்த எழுத்திற்கு ஒரு உறுதியான வடிவம் கொடுத்தது. புதுமைப்பித்தனும் இந்த முறைமையில் கதைகள் எழுதி இருக்கிறார். ஆனால் அந்தக் கதைகளில் எதுவும் இன்றுவரையில் பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஆனால் மௌனியின் கதைகளை யாரும் தவிர்ப்பதில்லை. இது ஒரு முறன்.

அதே நேரம், லாசராவின் எழுத்தும் மொழியும் மௌனியை ஒத்ததாக இருப்பதைக் காண்கிறேன். ஆயினும் லாசரா அந்த மொழியை வைத்துக்கொண்டு நிகழ்த்திக்காட்டிய அற்புதங்களை மௌனி தன் கதைகளில் தொட்டவரில்லை. காதலை ஒரு உணர்வு நிலையில் மௌனி அற்புதமாக கையாண்டிருப்பார். ஒருவகையான கட்டுரைத்தன்மை கொண்டதாக அவை இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஒரு புதுவகையான எழுத்து முறைமையை ஆரம்பித்து வைத்தவர் என்பதைத் தாண்டி மௌனிக்கு தமிழ் இலக்கியத்தில் வேறு எந்த இடமும் இல்லை என்பதுதான் எனது நிலைப்பாடு. இன்னும் சற்று அதிகமாக இதே வடிவத்தில் மௌனி கதைகளை எழுதி இருப்பாரே ஆனால், தமிழ் இலக்கிய உலகம் அவரை புறக்கணித்திருக்கவும் வாய்ப்புள்ளது. அது தெரிந்துதானோ என்னவோ, வெறும் 24 கதைகளுடன் அவர் நிறுத்திக்கொண்டார். 

சுரேஷ்குமார் அப்படி இல்லை. தொடர்ந்து தன்னையும், தன்கதைகளையும் சுய பரிசோதனை செய்தும், கேள்வி கேட்டும் தன்னைத்தானே விமர்சித்துக்கொண்டும் இருந்து ஒரு எழுத்தாளர் அவர் என்பது அவரது முன்னுரைகளை வாசித்தாலே தெரிந்து விடுகிறது. தமிழ் சிறுகதை உலகில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றி தொடர்ந்து பேசுகிற அவர், ‘தானும் கதையற்ற கதையில் இருந்து கதை உள்ள கதையை நோக்கி நகர்ந்திருக்கிறேன்’ என்பதை வெளிப்படையாகவே ஒத்துக்கொள்கிறார். அதை மெய்ப்பிப்பதைப் போல, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர் எழுதிய சிறுகதைகளில் அவருக்கே உரிய ஒரு மந்திரக் கதை மொழியுடன் ஆழமான கதைக்களனும், பின்னனியும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ‘நானும் ஒருவன்’ தொகுப்பிலும் அதற்குப் பின்னர் வெளிவந்த ‘நடன மங்கை’ தொகுப்பிலும் இடம்பெற்ற பலகதைகளும் இந்த வகைமாதிரியை சேர்ந்தவைதாம். உ-ம்; ஒரு திருமணம், கணியன் பூங்குன்றனார், நானும் ஒருவன், நிகழ்காலமும் இறந்தகாலமும், புதுவிதமான செடிகளும் வர்ணப் பூக்களும், ஒருகாதல் கதை….இப்படியாக பலகதைகளிலும் அந்த மாற்றத்தைக் அவதானிக்க முடிகிறது. 

இந்த மாற்றத்தை நான் abstract அல்லது formless கதைகளில் இருந்து structured வகையான கதைகளை நோக்கி நகர்தல் எனப் புரிந்துகொள்கிறேன். அதாவது அரூபமான கதைகளில் இருந்து ஆழமான, அகலமான ரூபங்கொண்ட கதைகளை புனைதல் என்பதாக. இந்த நகர்தல் இரண்டாயிரங்களின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்துவிட்டது என்பதை சுரேஷ்குமாரின் கதைகளை காலவரிசையில் வாசிக்கிற போது புரிந்துகொள்ளமுடிகிறது. மேலும் இந்த நகர்தல்தான் சுரேஷ்குமார் இந்திரஜித்தை மௌனியில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அதுவேதான் அவரை நூறு சிறுகதைக்களுக்கும் மேலாக எழுத வைத்து, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. 

00

எழுத்தை சுவாரஷ்யமானதாக மாற்றுவதில் சொற்தேர்விற்கும், வாக்கிய அமைப்பிற்கும் பாரிய பங்கிருக்கிறது. குறைந்த, நேரடியான சொற்களைக்கொண்டு சிறிய சிறிய வாக்கியங்களை எழுதி, கதையை முன்னகர்த்துவது வாசிப்பை இலகுவானதாக்கும். தமிழில் இன்றைய நிலையில் ஷோபாசக்தி தன்கதைகளில் அப்படியான சிறிய வசனங்களை பயன்படுத்துவதை அவதானித்திருக்கிறேன். ஆனால், என்னுடைய வாசிப்பிற்கு உட்பட்டு, சுரேஷ்குமார் அளவிற்கு சிக்கலான கதைகளில் சிறிய நேரடியான வசனங்களை கையாண்டவர்கள் தமிழ் இலக்கியத்தில் வேறு யாரும் இல்லை எனத்தான் தோன்றுகிறது. 

கதையின் போக்கில் கதை இறுக்கங்கொண்டு கெட்டியானதாகி, வாசிப்பனுபவத்தை சிக்கலாக்குவதைப் பற்றியதல்ல இது(சுரேஷ்குமாரின் பல கதைகளும் இப்படியான சிக்கல் தன்மை கொண்டவைதாம்). மாறாக பிசிறில்லாத வாசிப்பை சாத்தியப்படுத்துவது பற்றியது. 

இந்த வகையில் சுரேஷ்குமாரின் கதைகளை வாசிப்பது எப்போதும் அலாதியானதே. 

00

ஒரு படைப்பாளியின் படைப்பு மனதை கிளர்ச்சி அடையச்செய்து, ஆக்கச் செயற்பாட்டில் ஈடுபடத் தூண்டத்தக்கதான படைப்புகளும் ‘தரமான படைப்புகள்’ என ஒரு அளவீடு உண்டு. சுரேஷ்குமாரின் பலகதைகளையும் வாசித்து முடிக்கையில், என்னுடைய எழுத்து மனம் விளித்துக்கொள்வதையும், நான் எழுத முனைவதையும் அவதானித்திருக்கிறேன். அப்படி எனில் அவை யாவும் நிச்சயமாக தரமான படைபுகளே. 

கதையே இல்லாது ஆசிரியர் எழுதிய பலகதைகளிலும் கூட அவர் உருவாக்கிய கதை உலகமும், பாத்திரங்களும், அவற்றின் பின்னனிகளும்தான் சுரேஷ்குமாரின் எழுத்தின் பலமும் வெற்றியும். சமீரியா எனும் ஒரு புனைவு நாட்டை வாசிப்பில் கடக்கும் ஒரு எழுத்தாளனுக்கு தானும் புனைவில் ஒரு நாட்டைப் படைத்தால் என்ன என்கிற எண்ணம் எழ வாய்ப்புகள் இருக்கிறது. இது மூலப் படைப்பின் வெற்றி இல்லாமல் வேறென்ன!

00

‘மறைந்து திரியும் கிழவன்’ கதையின் வாசிப்பும் சரி, அலையும் சிறகுகள், கால்பந்தும் அவளும் போன்ற கதைகளின் வாசிப்பும் சரி, சாத்தியமாக்கும் வாசிப்பு வெளிகள் எவ்வளவு பரந்துபட்டது! ஆனால் தன்னுடைய முன்னுரைகளில் சுரேஷ்குமார் அந்தக் கதைகளின் ஆசிரியர் பிரதியை விளக்குவதன் மூலம், அல்லது அந்தக் கதைகள் எப்படிப் படித்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என விளக்குவதன் மூலம் அந்தக் கதைகளுக்கான வாசிப்புச் சாத்தியங்களை அடைத்துவிடுகிறாரோ என எண்ணத்தோன்றுவதும் உண்டு. தன்கதைகளை எல்லா வாசகர்களும் சரியாக உள்வாங்கிக் கொள்ளமாட்டார்கள் என்கிற அச்சம் ஆசிரியருக்கு இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தேர்ந்த வாசகர்கள் ஆசிரியர் பிரதியைத் தாண்டி தமக்கான பிரிதியை உருவாக்கிக்கொள்வதில்தான் pleasure of textயை அனுபவிக்கிறார்கள். அதற்கான சாத்தியங்கள் தடைப்பட்டுப்போகும் போது, கதைகளில் ஒரு அன்னியத்தன்மை உருவாவதை தவிர்க்க முடிவதில்லை. 

00

தமிழ் இலக்கிய உலகில் சுரேஷ்குமார இந்திரஜித் எனும் ஒரு எழுத்தாளன் உருவாக்கிய தடம் அழிவில்லாதது. அவரது காலத்திற்குப் பின்னர் தமிழில் யார் abstractive வடிவில் கதை எழுதினாலும், அவை நிச்சயம் சுரேஷ்குமாரின் புனைவுலகுடன் சேர்ந்தே பார்க்கப்படும். 

பின்னூட்டமொன்றை இடுக