Anar Issath Rehana

Anar Issath Rehana

அவளது விரல்கள்
தானியக் கதிர்களென விரிந்திருக்கின்றன

கிரீடமாக ஆகாயமிருந்தது

கண்கள் இரண்டும் நாவற்பழங்கள்

முகம் காலைப் பொழுது

முடிந்த கூந்தல் தூக்கணாங் குருவிக்கூடு

பற்கள் ஆயுதங்களென பளிச்சிட்டன

நடக்கத் தொடங்கியிருந்தாள் சுயேச்சையாக
எவருக்கும் உடைமையற்றவளாக
வரலாற்று உடலை நிமிர்த்தி
காலத்தின் ஆன்மாவை மிகைத்து
ஏறி மிதித்தவாறு….

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

வெளிச்சத்தை இருட்டைத்
தின்று வளர்கிறது கனவு

தண்ணீரிலும் காற்றிலும்
தன்னைப் பூசிவிடுகின்றது

காலத்தின் தொலைவுவரை தகிக்கும்
வெப்பத்தைக் குடித்த கடுங்கோடையென
உதடுகளில் தேங்கிக்கிடக்கிறது

அறியப்படாத புலத்திலிருந்து
நீலச்சிறகுகள் மின்னலென விரிந்திற்று
அவ்விரு சிறகுகளில் தூக்கிவைக்க முயல்கிறேன்
தழல் விட்டெரிகிற அதே கனவை
தப்பமுயன்ற அதன் அதிசய நிழல்
காலை வெயிலில்
உருவற்று அலைகின்றன

ஆதியில் விடுபட்டுப்போயிருந்த
என் பொற்காலக் கனவை
மெல்லக் கைகளில் அள்ளுகிறேன்

இசையின் நுண்இழைகளால் மூடுண்டகாடு
அதன் இயல்புகளுடன்
அனுமதிக்கின்றது

மழையின் கனவை
நீர்ப்பெருக்கின் கசிவு படிந்திருக்கும் கரையில்
தீராத கேவல்களாய்ப்
பரவிச் சிதறும் கனவுக் குமிழிகள்

கட்டிலின் மூலை நான்கிலும்
முயலின் பளபளக்கும் கண்களாய்
மிரட்சியுடன்
உன்னை வெறித்தபடியிருக்கும் என் கனவு

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

மந்திரங்களில் இருந்து பிரியும் தூபம்
செக்கல் பொழுதில்
திசைகுழம்பிய பறவையாகிப் புறப்படுகிறது

நீலத்தில் விரியும் கண்களில்
மந்திரக் குறியீடுகள் ஜொலிக்கின்றன

கிழக்குத் திசையில்
மலைவிடும் புகையென
வசியக்காரியின் தூபம்
வங்கக் கடலையே இரண்டாகப் பிளக்கிறது…

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

 

பின்னூட்டமொன்றை இடுக