நஸ்புள்ளாஹ். ஏ.

நஸ்புள்ளாஹ். ஏ.

கடலை கொத்திச் செல்கிறது
ஒரு பறவை
அது ஞாயிற்றுக் கிழமை என்பதால்
கடல் பார்க்க வந்தவர்களெல்லாம்
கடலைக் காணவில்லையென
தலையிலடித்த படி அழுகிறார்கள்.
ஒருவன் சொல்லுகிறான்
கடலை சைத்தான் தின்றுருக்க வேண்டுமென்று.
இன்னொருதன் சொல்லுகிறான்
பக்கத்து நாட்டுக்காரன்
கொள்ளையிட்டிருக்க வேண்டுமென்று.
பலர் சொல்லுகிறார்கள்
ஊரின் எல்லையில்
கடலை யாரோ மறைத்து வைத்திருப்பதாக,
கடல் பார்க்க வந்த
சிறுவர்களுக்கு அந்த
அசாத்திய தைரியம்
எங்கிருந்து வந்ததோ
சிறுவர்கள் எல்லோரும் சிறுநீர் கழிக்க தொடங்கினார்கள்
அங்கு கடல் மீண்டும்
வளரத்தொடங்கியது.
கடல் பார்க்க வந்தவர்களுக்கு
ஞாயிற்றுக் கிழமை
மாலை இனிதாய் தொடங்கியது.

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

நன்கு பழக்கமான
சில சொற்களை
கனவொன்றுக்குள்
பதுக்கி வைக்க நினைக்கின்றேன்
கனவிற்குள் நுழையவிடாமல் 
பார்த்துக் கொள்கின்றது
ஒரு வெள்ளை ஆடு
எனினும்
பின் வாங்குவதில்லை என்பதில்
கவனமாக இருக்கிறேன்
சொற்களை தின்றுவிடும் ஆடு
என்பதாக
யாராே திரும்ப திரும்ப
என் காதுகளுக்குள் ஓதுவதை
பகல் பொழுதை
அந்தி விழுங்குவதைப் போல
அடை மழையின் நடுவிலும்
நான் விழுங்கத் தவறவில்லை.
கடைசிவரை கனவென்பதும் பொய்தானே
என்பதாக
இன்னொரு குரல்
உடைத்து நொறுக்கியது
என் இயலாமையை
மிக தூரம் கவ்விச் சென்றபடி.

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

பேசும் ஓவியம்.

அவளது கைகளால் வரைந்த
மலை ஓவியத்தில்
நதி ஒன்றை துவங்கி வைத்தேன்
மலை பிளந்து
நதியானதில் அவளுக்கு ஆனந்தம்.
நதியில் குளிக்க வேண்டும் என்று
ஒன்றுக்கு நூறு முறை முறையிட்டிருக்கிறாள்.
தற்சமயம் நீராடிக் கொண்டிருகிறாள்
அவளுக்கு மேலால்
ஒரு கண்ணாடிப் பறவை
பறந்து செல்கிறது
பறவையோடு
அவளும் பறக்க எத்தனிக்கும் முன்
என்னிடம்
பறப்பதற்கான ஆலோசனையை வேண்டினாள்
அவள் அருகில் இல்லாத
நிமிசம் எனக்கு சூனியம் என்பதால்
பாய்ந்தோடிய நதியையும்
கண்ணாடிப் பறவையையும்
அழிப்பானால் அழித்துவிடும்படி
ஆலோசனை சொன்னேன்
அவள் இயல் நிலைக்கு திரும்பினாள்

.mmmmmmmmmmmmmmmmmm

தவறி விழுந்த
மூன்றாம் நினைவுகளோடு
சுதா
என் உரையாடலைத் தொடங்கி
நம் 
உரையாடல்களுக்கு வருகிறேன்.
வெட்கம் கெட்ட
அந்த முத்தத்தின்
தீயிலிருந்து
நீ விடுபடவில்லையென்பதற்கு
என் புகைப்பட அழிப்பு போதுமான
சாட்சியாக இருக்கிறது.

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

புல்லாங்குழலை வாசித்தபடி
வார்த்தைகளற்று
என் ஆன்மா
உன் மீதான
மகிழ்ச்சியின் வாசத்தை பருகிய
நள்ளிரவு நேரத்தை
திருடிச் சென்ற
உனக்குப் பிடிக்காத
அந்த
ஒற்றை முத்தத்தை
நொந்து கொள்கிறேன்
சில காத்திருப்பின்
வலிகளை
ஊர் சுற்ற விட்டவனாய்.

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

நீ விட்டுச் சென்ற
கஸல் கவிதைகள்
நான்
நாம்
பிரிவு
வலி
சில ஞாபகங்கள்
அந்த
ஒற்றை முத்தம்.

 

பின்னூட்டமொன்றை இடுக