கைவிடப்பட்ட பிரதி

பாலகுமார் விஜயராமன்

கைவிடப்பட்ட பிரதி
(ஆலன் கின்ஸ்பெர்க்: ஹௌல் மற்றும் சில கவிதைகள் நூலுக்கான முன்னுரை)
———————————
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இதனை இறக்கி வைக்கவும் முடியாமல், தூக்கி எறியவும் முடியாமல் சுமந்து அலைந்து கொண்டிருக்கிறேன். வலசை இதழுக்காக அவ்வப்பொழுது, உலகக் கவிதைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த சமயம். ஒரு பின்மதியப் பொழுதில், ஸ்ரீதர் ரங்கராஜ் அழைத்திருந்தார். வழக்கமாய் சந்திக்கும் மல்லிகை காபி பாருக்குச் சென்ற பொழுது, கவிஞர் ஸ்ரீசங்கரும் உடனிருந்தார். என்னைப் பார்த்ததும், இருவரும் கண்களால் பேசிக் கொண்டனர். “இவர் அதுக்கு சரிப்பட்டு வருவாரா?” என்பது போல ஸ்ரீசங்கர் கேட்க, ஸ்ரீதர் வழக்கமான மென்மையான புன்னகையோடு ”ஆம்” என்பது போல கண்களை மூடித் திறந்தார். அப்படித் தான் சரக்கு கைமாறியது. நானும் ஸ்ரீதரும் இணைந்து, ஆலன் கின்ஸ்பெர்க்கின் “ஹௌல்” நீள்கவிதையை மொழிபெயர்ப்பது என்று முடிவானது. அக்கவிதைக்கான மனநிலையை உணர்ந்து கொள்வதற்காக “ஹௌல்” படத்தின் குறுந்தகடையும் கொடுத்திருந்தனர்.

வீட்டுக்கு வந்து, படத்தைப் பார்த்துவிட்டு, பிரதியையும் ஒரு முறை வாசித்த பின், வழக்கமாய் செய்யும் ரிவர்ஸ் இன்ஜினியரிங் உத்தியின் மூலம், கவிதையின் பின்புலம், அரசியல், காலாகட்டம் பற்றி அறிய முற்பட்டேன். “ஹௌல்” துவங்கி, ஆலன் கின்ஸ்பெர்க் வழியாக “பீட் தலைமுறை” எழுத்தாளர்கள் ஒவ்வொருவர் பற்றிய சித்திரமும் அவர்களின் படைப்புலகமும் இணைய மேய்ச்சலில் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான, அமெரிக்க கலாச்சாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றின் பாதிப்பில் துவங்கிய இலக்கிய இயக்கமான “பீட் தலைமுறை” குறித்த சித்திரம் கிடைத்தது. 1950களில் அமெரிக்காவின் கலை இலக்கிய செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக மாற்றிய படைப்புகள் அவை. வழமையான நேரடி கதைக்கூற்று முறையை மாற்றியமைத்தல், மனோத்துவ தேடல், பொருள்முதல் வாதத்தை மறுதலித்தல், மாயத்தோற்றம் உண்டாக்கும் போதை, பாலியல் சுதந்திரம் மற்றும் தேடல் குறித்தான சோதனை முயற்சிகள் ஆகியன “பீட்” கலாச்சாரத்தின் மையப்புள்ளிகள் புலப்படத்துவங்கின. ஒரு சுற்று வந்து மீண்டும் “ஹௌலை” நெருங்கும் பொழுது, கொடுக்கப்பட்ட கெடுவான மூன்று மாதங்கள் முடிந்திருந்தன. ஒரு வரியும் மொழிபெயர்க்கத் துவங்கியிருக்கவில்லை.

படைப்பின் கனம் என்னை பலமாக அழுத்தத்துவங்கியிருந்தது. அது தந்த அலைக்கழிப்பு, அன்றாட வாழ்வை பாதிக்குமோ என்ற பயம் சூழ்ந்த பொழுது , கவிதையை மொழிபெயர்க்கும் பணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஸ்ரீதரை அழைத்தேன். பொதுவான உரையாடல்களுக்கு நடுவே ஸ்ரீதர் கூறிய நம்பிக்கை வார்த்தைகள் உற்சாகமளிக்க, சரி, முடிந்தவரைப் பார்க்கலாம் என்று எண்ணி, பணியைத் தொடரலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் ஒவ்வொரு முறை “ஹௌல்” கவிதைக்குள் நுழைய முயலும் போதும், ஆற்றாமையும் துயரும், விரக்தியான மனநிலையும், கையறுநிலையும் தானாக சூழ்ந்து கொள்ளும். ஒரு வழியாக “ஹௌல்” முதல் பாகம் பாதியளவும், இரண்டாம் பாகம் முழுமையும் முடித்திருந்தேன். மேலும் ஆறுமாதங்கள் சென்றிருந்தன. ஒரு கட்டத்தில், அக்கவிதையின் ஊடாகவே உழல்வது, விட்டேர்த்தியான மனநிலையிலேயே கொண்டு போய் நிறுத்தியது. மனதை சமநிலைப்படுத்த, இடையிடையே வேறு புத்தகங்களை வாசித்தாலும், இந்த அலைக்கழிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. இதிலிருந்து விடுபட மொழிபெயர்ப்பை நிறுத்திவிடுவது தான் சரி என்று மீண்டும் தோன்றியது.

எடுத்துக் கொண்ட வேலையைப் பாதியில் கைவிடுவது குறித்த தயக்கமிருந்தாலும், கவிதை ஏற்படுத்திய வாதை, அந்த மனநிலையில் இருந்து வெளியே வந்தால் போதும் என்ற நிலைக்குத் தள்ளியிருந்தது. காலம் கடந்து கொண்டே செல்வதைக் காரணம் காட்டி, மொழிபெயர்த்தது வரை ஸ்ரீதருக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு, அதிலிருந்து விலகிக் கொள்வதாய் அவரிடம் தெரிவித்தேன். அதே சமயத்தில், அவரும் அக்கவிதையை மொழிபெயர்க்கத் துவங்கி இருந்தார். என் மின்னஞ்சலைப் பார்த்துவிட்டு, மொழிபெயர்த்தவரை மிக நன்றாக வந்திருப்பதாகக் கூறி, தொடர்ந்து முயன்று முடித்துவிடும் படியும், காலக்கெடு பற்றி கவலைப்படாமல் தோன்றும் போது செய்யுமாறும், ஆனால் நிச்சயம் முடிக்க வேண்டும் என்றும் உற்சாகமூட்டினார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியச்சூழலில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் அக்கவிதையின் மொழிபெயர்ப்பு, நிச்சயம் ஒரு மிகப்பெரிய பதிவுகாக இருக்கும் என்றும் அவர் சொன்ன வார்த்தை புதுத் தெம்பைக் கொடுக்க, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். தொடர்ச்சியான அவரது உள்ளீடுகளோடு, நானே “ஹௌல்” கவிதையை முழுமையாக மொழிபெயர்க்கிறேன் என்று சொன்னதையும் ஸ்ரீதர் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்.

ஒருவழியாய், “ஹௌல்” மூன்று பாகங்களையும் முடித்த பிறகு, ஸ்ரீசங்கர் ஒருமுறை திருத்தங்கள் பார்த்து உதவினார். இதற்கிடையே கவிஞர் நேசமித்ரனிடம் அனுப்பி கருத்துக்களைக் கேட்டிருந்தேன். அவரது நுணுக்கமான பார்வை, பிரதியை இன்னும் செழுமையாக்கியது. இப்படியாக, “ஹௌல்” தமிழ் மொழியாக்கம் தயாராகி இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். நீள்கவிதையின் அளவு, சிற்றிதழ்களில் கொண்டு வருவதற்கு பெரியதாகவும், புத்தகமாக வெளியிடுவதற்கு சிறியதாவும் அமைந்தது. எனவே “ஹௌல்” உடன் சேர்த்து கின்ஸ்பெர்க்கின் வேறு சில முக்கிய கவிதைகளையும், அவரது புகழ்பெற்ற “பாரிஸ் ரிவ்யூ” நேர்காணலையும் இணைக்க முடிவு செய்து, அதற்கான தேடலைத் துவங்கினேன். கவிஞர் சமயவேல் அவர்கள் தந்த கின்ஸ்பெர்க் படைப்புகளின் தொகுப்பான “எஸென்ஸியல் கின்ஸ்பெர்க்” சரியான கவிதைகளை தேர்ந்தெடுக்க உதவியாய் இருந்தது.

”ஹௌல்” உடன், கடந்த இரண்டு வருடங்களாகச் சிறுகச் சிறுகக் கோர்த்த மற்ற கவிதைகளும், கின்ஸ்பெர்க் நேர்காணலும், ”ஹௌல்” பற்றிய கட்டுரையும் சேர்ந்து இன்று ஒரு தொகுப்பாகி இருக்கிறது. ஆக, இது இப்பொழுது, இப்படியாகத் தான் வெளியாக வேண்டும் என்று இருந்திருக்கிறது. ஆலன் கின்ஸ்பெர்க் கவிதைகளுக்கு, தமிழில் ஒரு ஆவணமாக இத்தொகுப்பு இருக்குமென்று நம்புகிறேன். இந்த நீண்ட பயணத்தில், எனது மொழிபெயர்ப்புக்கு பல நண்பர்கள் உறுதுணையாகவும், சரியான கருத்துக்களைக் கூறி வழிநடத்துபவர்களாகவும், உற்சாகமூட்டுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பெருந்தகையாளர்கள் ஸ்ரீதர் ரங்கராஜ், ஸ்ரீசங்கர், நேசமித்ரன், கார்த்திகைப்பாண்டியன், சமயவேல், எஸ்.அர்ஷியா, பாவண்ணன், சிபிச்செல்வன், போகன் சங்கர், வெய்யில், கௌதம சித்தார்த்தன், அருணாசலம், பரணிராஜன், நூல்வனம் மணிகண்டன் மற்றும் வாசிப்போர் களம் நண்பர்கள் ஆகியோருக்கும் எனது அன்பும், நன்றியும். இத்தொகுப்பை பதிப்பிக்கும் ”பாதரசம்” சரோலாமா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

 

பின்னூட்டமொன்றை இடுக