அயல்

Athanas Jesurasa

இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகள் பேசும் மக்கள்தான் வாழ்கின்றனர். ஆயினும், இரு மொழிகளிலுமுள்ள இலக்கியங்களின் மொழிமாற்றச் செயற்பாடுகள் பெரியளவில் நடைபெறவில்லை. ஆங்காங்கே தனியாள்களின் சில முயற்சிகள் நடைபெற்றுள்ளன. எழுபதுகளில் எஸ். எம். ஜே. பைஸ்தீன், சிங்களக் கலை இலக்கியச் செயற்பாடுகள் பற்றி ஏராளமான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதியுள்ளார்; அவ்வப்போது சிறுகதை, கவிதை போன்றவற்றை மொழியாக்கம் செய்து முள்ளார். இவையெல்லாம் மல்லிகை, அலை, ஞாயிறு வீரகேசரி போன்ற வற்றில் வெளிவந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக அவை இன்னும் தொகுக்கப்பட வில்லை; அதனால், பைஸ்தீனின் முக்கியத்துவமும் பலர் அறியாததாக உள்ளது. மறைந்த எம். எச். எம். ஷம்ஸ் – தினகரனில் தனது ‘சாளரம்’ பக்கத்தின்மூலம், சிங்கள மொழிப் படைப்புகளையும் படைப்பாளரையும் வாரந்தோறும் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழாக்கம் செய்யப்பட்ட சிங்களப் படைப்புகள் பற்றி மேமன்கவி எழுதிய, பன்னிரண்டு கட்டுரைகளைக் கொண்ட ‘மொழி வேலி கடந்து….’ என்னும் நூல், 2013 இல் வெளிவந்துள்ளது. ‘எஸ். கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிட்டட்’ நிறுவனம், அண்மைக் காலங்க ளில், மொழியாக்க நூல்களை இரு மொழிகளிலும் வெளியிட்டு வருகின்றது.

வேறுபட்ட மொழி பேசுவோரின் வாழ்நிலைமைகள், பண்பாட்டுச் சூழல் என்பவற்றை அறிவதற்கு மட்டுமல் லாமல் – அம்மொழியிலான இலக்கிய வளர்ச்சி நிலையை அறிவதற்கும் மதிப்பிடுவதற்கும்கூட, மொழியாக்க நூல்கள் துணையாக அமையும். குறிப்பிடத்தக்க தொகையிலான சிங்கள மொழிப் படைப்பிலக்கியங்கள், தற்போது தமிழ் மொழியாக் கத்தில் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றிய அறிமுகத்தையும் மதிப்பீட்டையும், இத்தொடர் வாயிலாகச் செய்ய விரும்புகிறேன்.

1. போகல சவுந்திரிஸ்

ஜே. எம். சரத் தர்மஸிரி சிங்களத்தில் எழுதிய இந்நாவலைத் திக்குவல்லை கமால் மொழியாக்கம் செய்ய, கொழும்பிலுள்ள ‘எஸ். கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிட்டட்’ நிறுவனம், 2016 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது ; சிறந்த மொழியாக்கத்துக்கான சாகித்திய மண்டலப் பரிசையும் இந்நூல், . 2017 இல் பெற்றுள்ளது.

போகல என்ற இடத்திலுள்ள காரீயச் சுரங்கத்தையும் அதனுடன் தொடர்புறும் செயற்பாடுகளையும் பின்னணியாகக் கொண்டு நாவல் எழுதப்பட்டுள்ளது. கொள்ளைகளிலும் பெண்களைத் துன்புறுத்துவதிலும் ஈடுபட்டுக் கைதுசெய்யப்பட்ட குற்றவாளியான ‘சவுந்திரிஸ்’, பொலிஸ்காரர் மற்றும் ‘ஆராச்சி’யினால் மாட்டு வண்டியில் குருநாகலுக்குக் கொண்டுசெல்லப் படுகிறான். இடையில் சூழ்நிலையை அவன் பயன்படுத்தி – காயப்பட்ட நிலையிலும் – கண்டிப்பக்கம் தப்பிச் செல்வதோடு ஆரம்பிக்கும் நாவல், இறுதியில், இருபது வருடச் சிறைவாசத்தின் பின் விடுதலையாகி போகலவுக்கு வந்து, மனைவியும் மகனும் இரத்தினபுரிப் பக்கம் நீண்ட காலத்தின் முன்னரே சென்றுவிட்டதை அறிந்து, அவர்களைத் தேடிச் செல்வதுடன் நிறைவு பெறுகிறது. இடைப்பட்ட காலத்தில் காரீயச் சுரங்கத்துடன் தொடர்பான நிகழ்வுகள் சித்திரிக்கப்படுகின்றன. கண்டியிலுள்ள ஜெராமியஸ் ரொட்ரிகு என்ற வழக்கறிஞரின் கடிதத்துடன் செல்லும் சவுந்திரிஸுக்கு, போகல காரீயச் சுரங்க முதலாளியான ஜோஸப் டி மெல் வேலை கொடுக்கின்றான். அங்கு மேற்பார்வை யாளனாக இருந்து தொழிலாளிகளைக் கொடுமையாக நடத்தும் கரகல பாஸ் என்பவனுக்குத் துணையாக, சவுந்திரிஸ் செயற்படுகிறான். அவனது திடகாத்திர மான உடலும் சண்டித்தனமும் தொழிலாளிகளை அடக்கிவைப்பதற்கு உதவியாக உள்ளன; அதனால், அவன் சுதந்திரமாக நடக்க முதலாளியும் அனுமதிக் கிறான். சுரங்க வேலைகள், தொழிலாளிகளின் அடக்கப்பட்ட நிலைமை, பெண்களுடனான பாலியல் தொடர்புகள், கூட்டாகச் செயற்படும் தொழிலாளர் சிலரின் எதிர்ப்பு நடவடிக்கைகள், கொழும்புவரை விரிவடையும் ஜோஸப் முதலாளியின் காரீய வியாபாரம், கொழும்பில் மாட்டு வண்டிக்காரரின் முரண்பாடுகள் – வேலை நிறுத்தம் போன்றன கதைக்குள் வருகின்றன.

மேரி என்ற தொழிலாளிப் பெண் கரகல பாஸுடன் உடல் உறவு வைத்திருக்கிறாள்; சவுந்திரிஸ் அங்கு வந்தபின் அவனுடனும் உடல் உறவு கொள்கிறாள்; கரகல பாஸின் இடத்துக்குப் பின்னர் வரும், மதாயஸ் என்பவனுடனும் உடல் உறவு கொள்கிறாள். சவுந்திரிஸ் பின்னர், பரியாரியின் மகளான நோனியுடன் உறவு வைக்கிறான்; அவள் கர்ப்பமடை கிறாள். அவளின் தம்பியான ஹெந்திரிக், ஹெவன் பொலவுடனும் மற்றும் சிலருடனும் சேர்ந்து – முதலில் கரகல பாஸுக்கும், அவனது இடத்துக்குப் புதிதாக வந்த மதாயஸுக்கும் எதிராக இயங்குகிறான்; இறுதியில் மதாயஸைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுச் தப்பிச் செல்கிறான். ஆரம்பத்தில் தொழிலாளிகள் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் அடியாளாகச் செயற்பட்ட சவுந்திரிஸில், பிற்காலங்க ளில் மாற்றம் ஏற்படுகிறது; தொழிலாளிகளுடன் மென்மையாக நடக்கிறான். அதனால் முதலில் கரகல பாஸும், பிறகு மதாயஸும் அவனுக்குத் தீங்கிழைக்க சதிமுயற்சிகளில் ஈடுபடுகின்றனர். தொழிலாளிகளில் முக்கியமான சிலர், சவுந்திரிஸின் பக்கம் சேர்கின்ற னர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் – காரீயச் சுரங்கப் பின்னணியில் கதை நடைபெறுவது, வித்தியாசமானது. 27 ஆம் சுரங்கம் மூடுண்டது பற்றி விபரிக்கப்படுகிறது. “…. ஒரே குழுவில் சகோதரர் போல இயங்கினோம்…. கல் துளைப்பது, சேர்ப்பது, தாங்குதடி பொருத்துவது இப்படிப் பகிர்ந்து செய்தோம்…. வேலையும் அவசரமா முடியும்.” என்று வேலை வகைகளும் சொல்லப்படுகின்றன. ஆயினும், அந்த வாழ்க்கைச் சூழல் ஆழமானதாக உயிர்த்துடிப் புடன் நன்கு வெளிப்படவில்லை; மேலோட்டமான அனுபவத்தையே பெற இயல்கிறது. பாத்திர உருவாக்க மும் ஆழமான மனப் பதிவை ஏற்படுத்துவதாக இல்லை. தொழிலாளர் மீது மேற்பார்வையாளர் – முதலில் கரகல பாஸ், சவுந்திரிஸ் பிறகு மதாயஸ் – பிரயோகிக்கும் அடக்கு முறைகளினால் அவர்கள் மீதே தொழிலாளரின் அதிருப்தி இருக்கிறது ; முதலாளி மீதல்ல!

“எங்களுக்கு சுரங்கத்தோடு எந்தக் கோபமுமில்ல.”

“இந்தக் கெட்ட நாய்களின்ற வேலயால இப்போதான் இப்படி நினைக்கிறாங்க. முன்பு முதலாளிமாரும் தொழிலாளர்களும் அப்பாவும் பிள்ளைகளும் போல. சுரங்கத்துக்காக உயிரே கொடுக்கத் தயாராக இருந்தாங்க.” (பக். 182 – 183)

எதிர்ப்புணர்வுடன் செயற்படும் (சிலரான) தொழிலாளர்களின் இக்கூற்றுகள், நாவலின் கருத்துநிலையைப் பலவீனமாக்குகின்றன.

ஆணும் பெண்ணும் தங்கச்சி (நங்கி), அண்ணே (அய்யே) என்று அழைத்தபடியே பழகிக்கொண்டு காதலிப்பதும், உடல் உறவுகொள்வதும் சிங்களச் சூழலில் இயல்பானவை; இந்நாவலிலும் அது மேரி, நோனி ஆகிய பெண் பாத்திரங்களுடனான சவுந்திரி ஸின் உறவுவழி வெளிப்படுகிறது. தமிழ் வாசகருக்கு இது புதுமையாயிருக்கும்!

**

ஒரு மொழியிலுள்ள படைப்பைப் பிறமொழியில் மாற்றும்போது, படைப்புத் திறன்கொண்ட வெளிப்பாடு முக்கியம்; அதிலும் மொழிக் கையாளுகையில் கவனம் மிகத் தேவை.. மூலமொழியில் அறிவுகொண் டிருப்பதோடு, இலக்குமொழியில் வெளிப்பாட்டுத் திறனும் இன்றியமையாதது. ஏற்கெனவே வாசிக்க நேர்ந்த சிங்கள மொழிப் படைப்புகள் பலவற்றின் மொழியாக்கங்களில், மொழிக் கையாளுகையின் பலவீனங்களை அதிகம் உணர முடிந்திருக்கிறது. இந்த நூலிலும் அவ்வாறான நெருடல்களைப் பல இடங்களில் காண முடிகின்றது.

1. ‘’இல்லை ஜேராம், அது என்ற ஒழுங்கல்ல.” (பக். 18)

நிச்சயமா …. உன்ற பாய்ச்சலுக்கு இப்படி ஆக்கள் அவசியம்.” (பக். 21)

என்ற, உன்ற என்பவை முறையே – என்ர, உன்ர என வருவதே சரியாகும்.

2. “அது அவ்வாறே நடக்கணுமென்று பிரார்த்திக் கிறன். ஆனா அப்படி ஆகணுமென்றா உன்னிடம் பெருந்தொகையான காரீயம் இருக்கணும்…. உண்மையிலேயே விசாலமான அளவு இருக்கணும்.”

பெருமளவு என்பதை அர்த்தப்படுத்தும் விதமாக ஜெராமியஸின் குரல் கனத்தது. சட்டத்தரணி ஒருவனின் ஆடம்பரத் தன்மையும் அதில் தொனித்தது. (பக். 19)

ஆடம்பர என்பது சிங்களத்தில் பெருமை பிடித்த என்ற அர்த்தத்தில் வருகிறது; தமிழில் இங்கு அது வேறு அர்த்தமாகிறது.

3. தாங்குதடி மடுவத்திற்கு நெருப்பெடுத்திருந்தது. ( பக். 87)
நெருப்புப் பற்றி இருந்ததே, இங்கு சொல்லப்படுகிறது.

4. பங்களா சமையலறையால் கிடைத்த தேநீர் கோப்பையை இரண் டொருதடவை உறிஞ்சி விழுங்கிவிட்டு …. (பக். 88)

5. “…. நாங்க கறுவாப்பட்டை தகர்த்தவங்கள். எங்க பரம்பரையே அப்படித்தான். பிறகுதான் சுரங்கத் தொழிலுக்கு வந்தோம்…..” (பக். 97)
கறுவாப்பட்டை உரித்தவர்கள் என்பது பொருத்தமாகும்.

6. தாங்குதடிக் கொட்டிலுக்கு தீப்பிடித்தது முகம் மூடிக்கொண்ட ஆசீர்வாதமொன்றாக அமையுமென ஹென்திரிக் கருதினான். (பக். 89)

7. ‘…. எதுக்காக இந்தளவு உதவி செய்தீங்க? கடந்த ஆத்மாவில் என்ற சகோதரியா இருந்தீங்களோ தெரியல்ல.” (பக். 111)

8. …. ஹெவன்பொலவின் நிலைப்பாடு எந்தளவு மனப்பூர்வமானதென சவுந்திரிஸ் யோசித்தான். ‘தான் தவறு செய்துவிட்டேனே’ என்ற மோசமான எண்ணம் காரணமாக அவனால் ஹெவன்பொலவின் முகத்தை பார்க்க முடியவில்லை. (பக்.112)
செய்துவிட்டானே என்று வரவேண்டும் அல்லது ‘தான்’ என்பது ‘நான்’ என்று வரவேண்டும்.

9. “நீ எப்படி மலையுச்சி வாடியிலிருந்து பெரும் வாடியருகே நின்றவன விளங்கிக் கொண்டாய்?”
“நிலா வெளிச்சத்தில கண்டன்.” (பக். 138)

1௦. ஹெந்திரிக்கின் இரத்தோட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

ஹெவன்பொலவும் ரதுபாஸும் சவுந்திரிஸை கெளரவம் மிகுந்தவர்களாகப் பார்த்திருந்தனர். (பக். 139)

11 தினாந்திர வேலை அளவு எட்டு காரீயப் பெட்டிகளாகும். (பக். 145)

12 நோனி அழுது குழறினாள். கொடஹேனயில் சவுந்திரிஸ் வெடிபட்டு இறந்துவிட்டதாகவே ஆரம்பச் செய்தி வந்தது. பின்னர் அவன் காயமடைந்து சிகிச்சை பெறுவதாக அறிந்தபோது அவள் கடவுளுக்கு புண்ணியம் செய்தாள். (பக். 172)
.
மொழியாக்கம் செம்மையாக அமையாதவிடத்து, அதனைப் பூரணமாக இரசிக்க முடியாது என்பதுடன், மூலப் படைப்பையும் அதன் ஆசிரியரையும் பற்றிய சரியான மதிப்பீட்டை மேற்கொள்ளவும் முடியாது. மூலமொழி அறிவு கொண்ட ஒருவர் முதலில் மொழியாக்க வேலைகளைச் செய்த பிறகு, கூரிய இலக்கிய இரசனையும் படைப்பு மொழித் தேர்ச்சியும் கொண்ட ஒருவர் செவ்விதாக்கம் செய்வது நல்லது. இருவரும் இணைந்து செயற்படுகையில், மூலமொழிப் படைப்பு மற்ற மொழியில் செம்மையான விதத்தில் அறிமுகமாகும் சாத்தியம் உள்ளது. மொழியாக்கம் செய்தோராக இருவரின் பெயர்களும் பதியப்பட வேண்டும். ஆனால், நமது சூழலில் இவ்வித இணைந்த செயற்பாடு எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுமென்று தெரியவில்லை!

– 27. 02. 2018

– ‘ஜீவநதி ‘

(பங்குனி 2018))

பின்னூட்டமொன்றை இடுக