ரிஷான் ஷெரீப்

Yadartha K Penneswaran

வடக்கு வாசல் இதழ் நடத்திக் கொண்டிருந்தபோது ஈழத்துக் கவிஞர் ரிஷான் ஷெரீப் கவிதைகள் நிறைய வெளியிட்டு இருக்கிறேன்.

ரிஷானிடம் இருந்து மாதம் 3 கவிதைகளாவது பிரசுரத்துக்கு வரும். உடன் கடிதம் எதுவும் வந்தது கிடையாது. ஓரிரண்டு கட்டுரைகளையும் வெளியிட்டு இருப்பதாக நினைவு.

ரிஷானுக்கும் எனக்கும் தனிப்பட்ட கடிதப் பரிமாற்றம் அல்லது தொலைபேசி உரையாடல் எதுவும் நடைபெற்றது இல்லை.

மின்னஞ்சலில் கூட தனிப்பட்ட விசாரிப்புக்களோ ஏதேனும் விஷயப் பரிமாற்றங்களோ நடைபெற்றது இல்லை.

கவிதைகள் வரும். ஒரு வரியில் நன்றி போகும். பிரசுரமானதை அவருக்கு அறிவித்ததாகக் கூட நினைவு இல்லை எனக்கு. இணையத்தில் வடக்கு வாசல் வெளிவந்த பிறகு அவருக்கு இணைப்பு அனுப்பி இருக்கிறேன். அவ்வளவுதான்.

ரிஷான் பெயர் தாங்கிய மின்னஞ்சல்களை திற க்கும் போது உற்சாகமாக உணர்வேன். ஈழத்தில் இருந்தோ அல்லது வேறு ஏதோ நாட்டில் இருந்தோ ஒரு கவிஞன் டெல்லியில் இருந்து வெளிவரும் ஒரு இதழுக்கு கவிதை எழுதி அனுப்பியது எனக்கு பெருமகிழ்ச்சி அளித்தது.

ஒவ்வொரு கவிதையையும் எடிட்டராக அல்லாமல் அந்த இதழின் முதல் வாசகனாக மிகவும் ஆர்வத்துடன் வாசித்து இருக்கிறேன்.

அனைத்து கவிதைகளையும் பிரசுரிக்க இயலாது எனினும் என்னை மிகவும் ஈர்த்த கவிதைகளை உடனடியாக பிரசுரித்து இருக்கிறேன்.

ரிஷான் கவிதைகளின் சொல் தேர்வு என்னை எப்போதும் மிகவும் ஈர்க்கும்.

இரண்டு பக்கம் விரிக்க வேண்டியதை சில சொற்களின் தேர்வினால் சம்பவத்தை உறைய வைத்து விடுகின்ற ஜாலம் அவருடைய வரிகளில் எப்போதும் கிடைக்கும்.

சொல் சிக்கனம் கொண்ட சொல் தேர்வு என்றால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதே போல அவருடைய கவிதைகள் காமிராவை தோளில் மாட்டிக் கொண்டு அலையும் வெளிநாட்டு யாத்ரிகன் போல ஏதாவது தெறிப்புக்களை நோக்கி அலைந்து கொண்டிருப்பதையும் வாசகனை எளிதாக உணர வைத்து விடுவார்.

இன்று காலை காலச்சுவடு பிப்ரவரி இதழில் வெளியான ரிஷான் ஷெரீப் எழுதிய “அரூபமான பூனையின் கண்கள்” என்ற கவிதையை வாசிக்கும் போது என்னுடைய பழைய எடிட்டிங் நாட்கள் நினைவுக்கு வந்தன.

எடிட்டிங் பார்வையில் அல்லாமல் வாசகனின் பார்வையில் இப்போதெல்லாம் கவிதையை வாசிப்பது எப்போதோ வாழ்ந்த வீட்டை ஏக்கத்துடன் எட்டிப்பார்க்கும் வயோதிகனின் மெல்லிய சோகத்தை உணர முடிகிறது.

இந்த கவிதையிலும் ரிஷான் பாவித்துள்ள சொற்சிக்கனம் மற்றும் அவருடைய கவிதைகள் கேமராவை சுமந்து அலைந்து திரியும் அனுபவத்தை உணரலாம்.

இவர் பூனையை பற்றி எதுவும் புதிதாக சொல்லவில்லை. நாம் கண்டதைத்தான் – நாம் அன்றாடம் பார்க்கும் ஏதோ பூனையைப் பற்றித்தான் இங்கும் சொல்லியிருக்கிறார்.

ஆனால் ரிஷான் தேர்ந்தெடுத்த சொற்களின் தேர்வு, பூனையை சுற்றிச் சுற்றி வந்து அவர் தட்டிவிட்டுச் செல்லும் சிறுபொறி கவிதைக்குள் நம்மை உள்ளிழுக்க வைக்கின்றது.

ஜாலம் பொதிந்த இக் கவிதையை இன்று பகிரலாம் என்று தோன்றியது.

அரூபமானவை பூனையின் கண்கள்

எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும்
ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும்
அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒரு

ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும்
மேனி வரிகளோடு
அச்சுறுத்தும் சிலவேளை அதன்
அசட்டுச் சிப்பிக் கண்கள்

இரைக்காகக் காத்திருக்கும் வேளையில்
அக் கண்களினூடு ததும்பும்
சலனமற்ற ஒற்றைச் சாதுவின் தியானம்

வேட்டை விலங்கின்
உடல்மொழியைப் பேசும்
பின்னங்கால்களில் அமர்ந்து
மீதிப் பாதங்களை ஊன்றி
நிமிர்ந்து பார்க்கையில்

ஏதேனும் யாசித்துப் பின்தொடரும்
அதன் பார்வையில்
தயை கூரக் கோரும்
கெஞ்சல் மிகைத்திருக்கும்

அபூர்வமானவை
பூனைப் பார்வைகளற்ற
குடியிருப்புக்கள்

அரூபமான கண்களைக் கொண்ட
பூனைகள்
பூனைகள் மாத்திரமேயல்ல.

-ரிஷான் ஷெரீப்

பின்னூட்டமொன்றை இடுக