Kavitha Laxmi (கவிதா நோர்வே)

நஸ்புள்ளாஹ். ஏ.

நஸ்புள்ளாஹ். ஏ.

 

1980களில் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் ஆணாதிக்கம், சீதனம், பெண்களின் பருவ மாற்றத்திற்கு விழா எடுத்தலை கண்டித்தல், வெளியே போதல் தடை என வாழ்வியலின் சூழலை தமது படைப்புக்களில் கருப் பொருளாக உள்ளுணர்ந்து எழுதியதை காணமுடியும்.
எனினும் 90களுக்குப் பின் நாளாந்த அரசியல் அனுபவங்கள் புகலிட வாழ்வு என பல்வேறு காரணிகளால் படைப்புகளின் நிலையில் மாற்றங்கள் தோன்றின அதில் ஈழத்துப் பெண்படைப்பாளிகளின் கவிதைகளில் விழிப்புணர்வு தாக்கங்களின் பங்களிப்புக்களுடன் பேசாப் பொருட்களையும் அழுத்தமாக பேசியதை நாம் காணமுடியும்.
பெருந்தேசிய வாத்தினால் ஏற்பட்ட புகலிட வாழ்வு அதன் அகம் புறம் ரணங்கள் .அகதி நிலை, தனிமையென அனுபவங்களின் உணர்வுகளை ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த படைப்பாளிகள் தங்களது எழுத்துக்களில் காட்சிப்படுத்த தவரவில்லை .அவ்வாரான படைப்பாளிகளில் கவிதா முக்கியமானவர்.
யாழ்ப்பாணம், குரும்பசிட்டி இவரது கிராமம்.புலம்பெயர் படைப்பாளியான இவர் நோர்வே நாட்டில் வசித்துவருகிறார்.கவிதாவுடைய தொட்டிப் பூ கவிதைத் தொகுதியை 2009ல் நான் வாசித்த ஞாபகம்.கவிதா புலம்பெயர் படைப்பாளிகளில் இலக்கியவுலகிற்கு முக்கிய பங்களிப்பு செய்திருக்கிறார் என்பதற்கு கவிதா கலை இலக்கியத்தின் மீது வைத்திருக்கும் காதல் முதல் நிலையாக அமைகின்றது.குறிப்பாக இவரை ஒரு பகுதிக்குள் அல்லது ஒரு தளத்திற்குள் மதிப்பீடு செய்ய முடியாது.இவர் நதியென்றால் இவருக்குள் பல கிளைகள் பல இலக்குகளோடு பாய்கின்றன.கவிதாவிற்குள் கலை இலக்கிய மனோபா வத்தின் கூறுகள் பெருமளவு குவிந்து காணப்படுகின்றன.
நடனம், பாடல், கதை, கவிதை, மதிப்பீடு, ஒலிஒளியென கவிதாவின் மனப் பிரதியில் நிறைய அழகியல் வழிந்தோடுகின்றன.
2008ல் கவிதா தொலைக்காட்சி நிகழ்வுக்காக தினாவின் இசையில் சைந்தவியின் குரலில் “காலங்கள் அழித்துடுமோ கருவறையின் சுவடுகளை…”என்கிற அற்புதமான வரிகளைச் சுமந்த பாடலை தந்திருக்கிறார்.மெலோடி நம்மை புதிய வெளியொன்றுக்கு அழைத்துச் செல்கிறது.கவிதாவின் வரிகள் தாய் மண்மீதான ஏக்கங்களை பதிவு செய்வதோடு இழப்பின் வேட்கையை கண்ணீராய் கண்ணீரால் மனசின் எல்லாவோரங்களிலும் அப்பி நிற்கின்றது.
கவிதாவின் தொட்டிப்பூ கவிதைத் தொகுதியை நான் வாசித்த போது பல செய்திகள் என்னைக் கடந்து சென்றன. பல இழப்புக்கள் அப்படியே மனசில் உற்கார்ந்து கொண்டன.அதிகப்படியான புரிதலில் தாய் மண்ணின் இழப்பு அதனைத் தாண்டிய காயங்கள்.கோபங்கள், மன அதிர்வுகள் குறிப்பாக அகதி வாழ்வின் தனிமையென மனப் போராட்டங்கள் அனுபவங்களாய்.
தன் தேசத்தில் தன் இனம் கல்லறையாகிப் போன துயரங்களை நிஜங்களின் வலியோடு சொல்லியிருப்பது.கவிதைகளின் செறிவாக்கத்தையும் கவிதா நுட்பத்தையும் இயல்பாகவே நமக்குள் தருகிறது.

ஒரு சமூகத்தின்
சோகம் சுமந்த பாரத்தில்
கூனி முடமாகி
உருகுலைந்து
கண்களை குருடாக்கி
கொலைக் களத்திலிருந்து
உயிர் தப்பிய
கவிதை இது.

கவிதாவின் சமகாலக் கவிதைகள் இந்தக் கவிதைத் தளத்திலிருந்து மனநிலை மாற்றங்களுடன் அன்பின் ரணங்களுடன் பிரியத்தின் எதிரியுடன் போராட்டம் நடாத்தி நிற்கின்றன.

மார்பைப் பிராய்ந்து
பிடிங்கி எறியத் தூண்டும்
தனிமைக் காலங்களைக்
கவ்விக் கொண்டு
கட்டுடைத்துப் பாய்கிறது
நீ
விட்டுச் சென்ற காதலின்
மிச்சம்.

எனது நகரம் என்கிற இந்தக் கவிதையில் தனிமையின் உச்ச நிலையும் அன்பின் முரண்பாட்டு தவிப்பும் பிரியங்களுக்கு அடிமையாதலின் எதிர் விணையும் வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

காற்று கூட்டிவராமலே
குளிரின் ஊசிமுனை
சுருக்சுருக் கென்று
விரல்களில் தைக்கிறது.

ஆள் இல்லாத தெருக்களில்
அலங்கார விளக்குகள்
விழாக் காலத்தை
விளம்பரம் செய்கின்றன.

இனி எதுவுமில்லை
இன்னும் கடத்த வேண்டிய
சில இரவுகளைத் தவிர.
குளிர் காலத்து இரவு என்கிற இந்தக் கவிதை தனிமையின் ரத்த குறிப்புக்களை சொல்லாமல் சொல்லி வைப்பதோடு கவிதாவின் அகநிலைப் பதிவுகளின் திரட்சியாகவும் இன்னும் வலிகளாலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
கவிதாவின் சமகால கவிதை முகம் இப்படி கிளம்பி றெக்கையடிப்பதற்கு அவருக்குள் ஓராயிரம் காயங்களின் பறவைகள் கூடு கட்டி வாழ்ந்திருக்கலாம் அல்லது சூழலிய தாக்கமாக் கூடவிருக்கலாம்.கவிதாவின் கவிதைளை ஊடுருவிப் பார்த்த போது சில பொழுது பஹிமா ஜஹானை கவிதா கடந்து செல்வதாகவும் சில பொழுது பஹிமா ஜஹான் கவிதாவைக் கடந்து செல்வதாகவும் எனது கவி ஸ்தனங்களாய் திரண்டன.எனினும் கவிதா வேறு, பஹிமா வேறு.
கவிதாவின் கவிதைகள் பிரியங்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால்.அந்த தாஜ்மஹால் வரலாற்றை பேசி நிற்பதோடு தனிமையின் ஏக்கங்களுக்கு ஔடதமாகவும் கவிதை சார்ந்த தளத்தில் பெரும் தாக்கத்தை செழுத்துகின்றது.கவிதாவின் கவிதைகளை வாசிக்கின்ற ஒருவர் அந்த கவிதைகளைப் பிரியம் கொள்வார் காதல் செய்வார் .
கவிதாவின் தொகுதிகள்.

# பனிப்படலத் தாமரை
# என் ஏதேன் தோட்டம்
# தொட்டிப் பூ
# கருவறைக்கு வெளியே
# கறுத்தப் பெண்
இவரது ஒரு கவிதை.

சிரிப்பொலியில் இல்லை
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பறந்து பறந்து
பிரபஞ்சமாகி நிற்கிறேன்
ஒரு கடவுளைப் போல
கைகளை அகல விரித்து
கண்களை மூடிய வண்ணம்
கீழிறங்குகிறேன்
கனவு வானம்
எப்போதும் மிக அகண்டது
புனித பூமியில் பாதம் படும் போது
மட்டுமே எல்லாம்.

கனவுத் துண்டங்கள் வெடித்து
பனித்துண்டுகளாய்
பர்ப்பி பொம்மையைப் போல நான்
மீதமிருக்கும் முதிர்ந்த பொம்மைகளால்
எனது உலகம் விளையாடப் படுகிறது
பிறகு…

ஏ.நஸ்புள்ளாஹ்.

094 0757566261

பின்னூட்டமொன்றை இடுக