சல்மாவின் படைப்புகள்

Mohamad Buhari Naleem

சல்மாவின் படைப்புகள் சமூகவெளியில் உண்டாக்கும் அதிர்வலைகள் சற்று வித்தியாசமானவை. இஸ்லாமியப் படைப்புலகு புறக்கணித்த பெண்ணுடல் குறித்த பதிவுகளை முன்னெடுக்கின்றன சல்மாவின் படைப்புகள். சல்மாவின் படைப்புலகம் என்பது ஆணாதிக்க விடுபடலுக்கானதாக மட்டுமின்றி, இஸ்லாமிய சமயத்தோடும் தொடர்புபடுத்தப்படுகிறது. ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ மீதான மதிப்பீடுகள் படைப்பைவிடவும் படைப்பாளியை நோக்கியே அமைந்தன. மூடுண்ட சமூகத்தில் மறைக்கப்பட்ட பெண்களின் இருப்பை சல்மா தன் நாவலால் திரைவிலக்கினார். அதன் காரணமாக, அவர் தான் சந்தித்த எதிர்வினைகளை நெட்டித்தள்ளித் தனது அடுத்த படைப்பைப் பொதுவெளிக்குக் கொணர சில ஆண்டு இடைவெளியாவது தேவைப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்வாழ்வைத் தமிழ்ச்சூழலில் புதினப்படுத்தும் ஓர் ஆளுமை என்ற அளவில் அவருக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

இந்த மண்ணின் தகவமைப்பிற்கு ஒவ்வாத உடைகள், உதடுகள் உச்சரிக்கத் தடுமாறுகிற மொழி போன்றவற்றால் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், பத்து வருடங்களுக்கு முன்புவரை உறவுநிலையில் பழகிய மக்களைக் ‘காபிர்’ என்று ஒதுக்கித் தள்ளுதல், நாடு மற்றும் நபர்களின் இஸ்லாமியப் பெயர்களில் தம் உறவுகளைத் தேடல் என்று தனக்கும் தன் மண்சார்ந்த சூழலுக்கும் பொருந்தாத பண்பாட்டை விதைக்கும் பகல் கனவுகளுக்கும், ஏற்கெனவே இந்த மண்ணில் புதையுண்டுபோன பெண் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான விடுதலைக் கனவுகளுக்குமான மோதல் புள்ளியில் பரிணமித்துள்ளது சல்மாவின் ‘மனாமியங்கள்.’

தமிழ்ச்சூழலில் இருக்கும் அடுக்கதிகாரச் சமூக அமைப்பிலிருந்து சாதி உடல்களை விடுவித்தலுக்காகத் தோன்றிய மார்க்கம் என்று தன்னை இங்கு நிலைநிறுத்திக்கொண்ட சமயத்திற்குள் புதுவரவாய் வந்துசேர்ந்த அரபுச்சித்தாந்தங்கள் ஜமாஅத்துகளைப் பிளவுறவைத்துள்ளன. அது பிறசமூகங்கள் மட்டுமல்லாது தன் சமூக மக்களுக்குள்ளும் உறவுகளுக்குள்ளும் பிரிவினையை உண்டாக்கியுள்ளது. தூய்மைவாதம் என்று தம்மைப் பறைசாற்றி, ஏற்கெனவே நடப்பில் உள்ள மரபுகள் அனைத்தையும் அழுக்குவாதம் என்ற எதிர்ப்பதமாக – இழிவாகப் புறந்தள்ளும் அடிப்படைவாத முயற்சி தமிழக இஸ்லாமிய சமூகப் பண்பாட்டுக் கட்டமைப்புக்குள் புதிதாகக் காலூன்றியுள்ளது. இது சமூக அளவில் இந்த மனித உறவுகளின் சிதறலுக்குக் காரணமாக அமைந்ததைக் குடும்ப அளவில் உறவுகளின் சிதறலாகப் பொருத்திப் புனையப்பட்ட புதினமாகும் மனாமியங்கள்.

இந்த மண்ணின் விளைச்சலை உண்டும் பருகியும் தம் இருப்பை வைத்துக்கொண்டு, பேரீச்சமரங்கள் குறித்தும் ஜம்ஜம் தண்ணீர் குறித்தும் புளகாங்கிதம் கொள்கின்ற அல்லது வளமான செம்மண் பூமியில் தம் அடையாளத்தைப் புதைத்துவிட்டுப் பாலைவன மணலுக்குள் தன் வேர்களைத் தேடியலைகின்ற கூட்டத்தின் குறியீடாக ஹசன் என்னும் பாத்திரம் அமைந்துள்ளது. சினிமாவும் பொழுதுபோக்கும் என்று பொறுப்பற்றவனாக ஒரு வட்டத்திற்குள் உழன்றுகொண்டிருந்த ஹசன் அரேபிய தேசம் சென்று திரும்பிய பின் தனக்கான வளையத்தைச் சமயம்சார்ந்து இட்டு நிரப்பிக்கொள்கிறான். அவ்வளையத்திற்குள் ஒட்டுமொத்தச் சமய உடல்களை இழுத்துச் சேர்ப்பதற்கும் அதற்கான பிரதிநிதியெனத் தன்னைத் தானே முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கும் பிரயாசை கொள்கிறான். அதாவது, அரபுதேசப் பின்பற்றுதல்களையே இஸ்லாமியக் கொள்கைகளென வறட்டுத்தனமாகப் பின்பற்றுகிறான். அவற்றைத் தமிழ் இஸ்லாமிய உலகிலும் விதைக்க முற்படுகிறான். தமிழ்ச்சூழலுக்குப் பொருந்தாத அரேபியப் பண்பாட்டைத் திணிப்பதை ஊரைத் திருத்துவதாகப் பொருள்கொள்ளும் ஹசன், பெண்ணுடல் மீதான ஆதிக்கத்திற்கும் தனக்குச் சாதகமான சூழலுக்கும் நியாயம் கற்பிக்கிறான். இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற ஒற்றை நியாயத்தை முன்னிருத்தி, இரண்டாவது திருமணம் செய்வதையும் (ப. 30) அதன் விளைவான குடும்பச் சிதறலையும் நாவல் விவரிக்கிறது.

முதல் மனைவியாகிய மெஹர் அவனை மணவிலக்கு செய்வதற்கும் இருவருள்ளும் பழிவாங்கும் உணர்வு மேலோங்குவதற்கும் குழந்தைகள் துண்டாடப்படுவதற்கும் ஹசனின் இரண்டாம் திருமணம் காரணமாக அமைகிறது. இம்மண்ணிற்குப் பொருந்தாத பண்பாட்டை இங்கு விதைக்கிறேன் என்று வந்தவன் குடும்பத்தோடும் சமூகத்தோடும் பொருந்தாமல் போவதைப் பிரதி விரிவாகப் பேசுகிறது.

ஹசன் வலியுறுத்தும் இஸ்லாமியச் சட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்கான அறிவுப் புகட்டலாகவும் ஒழுக்கப் புகட்டலுமாகவே இருக்க, அவனின் நெருங்கிய உறவுப் பெண்கள் (தாய், மனைவி, சகோதரி, மகள்) அவனை மீறுபவர்களாக, தங்களுக்கான வாழ்வைத் தேடி வாழ முற்படுபவர்களாக உள்ளனர்.

சுபைதா தன் மகன் அணிவிக்கச் சொன்ன கனமான புடவைகளைப் புறந்தள்ளியும், மெஹர் தன் சம்மதமின்றி மறுமணம் முடித்த கணவனை மணவிலக்கு செய்தும், பர்வீன் தன் மறுமணத்திற்குச் சகோதரன் தேர்வுசெய்த மாப்பிள்ளைகளை நிராகரித்தும், சாஜிதா தன் தந்தை வலியுறுத்திய மார்க்கக் கல்வியைப் புறக்கணித்துத் தான் கற்க வேண்டிய கல்வியைத் தானே தெரிவுசெய்தும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

இஸ்லாமல்லாத பெண்களோடு ஒப்பிடுகிறபோது குடும்பம் என்ற அதிகார அமைப்பிற்குள்ளும் குடும்பத் தலைவனின் அதிகாரப்பிடிக்குள்ளும் அகப்பட்டுக் கிடக்கிறார்கள். இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியல் மிகக்குறுகிய புழங்குவெளியை, மிகையதிக உடலுக்கான நெருக்கடிகளை (ஆடைக் கட்டுப்பாட்டை) கொண்டதாக உள்ளது. இருப்பினும் இம்மண்ணின் தட்பவெப்பநிலையோடு தொடர்புபடுத்தப்பட்ட பருத்திநூலால் ஆன கூடுதல் ஆடையானது, அது உடுத்தியவரிடத்துப்போலவே இஸ்லாமியரல்லாத பிறரிடத்தும் பெரிதும் நெருடலைத் தரக்கூடியதாக இருக்கவில்லை. சமய எல்லைக்குள்ளும் வெளியிலும் மனித உடல்களைப் பகுப்பதற்கும் பொருளாதார, சமூக உறவுகளில் தனிமைப்பட்ட அடையாளத்தோடு தங்களை இருத்துவதற்கும் தேவையை உண்டாக்காமலிருந்தது. இது ஒருவகையான மனிதசமூக இணக்க உறவின் நுட்பமான உளவியல் செயல்பாடு.

மாமன், மச்சினன் என்ற உறவுமுறைப் பெயர்களோடு தமிழ்ச்சமூகத்தோடு ஒட்டி உறவாடிய இயல்பான மண்சார்ந்த வாழ்வு முந்திய தலைமுறையோடு காலாவதியாகியிருக்கிறது. அருகில் இருப்பவனோடு உறவாக இருக்கமுடியாதவன் கடல்கடந்து நெருங்கி உட்கார முடியுமா? உலகெங்கும் பயங்கரவாதத்தின் பெயரால் புறவுலகின் தொடர்புகளற்றுத் தனித்து விடப்பட்டிருக்கும் சூழலில், ஏற்கெனவே உருவாகி வளர்ந்துவந்திருக்கும் பாரம்பரியத்தைத் தகர்த்து, அரேபியப் புனர்நிர்மாணத்தைச் செய்வதன் முயற்சியில் மக்கள் பல குழுக்களாகச் சிதறுண்டிருக்கிறார்கள். இது, இந்த மண்சார்ந்த வாழ்வியலுக்கு மேலும் நெருக்கடிகளை உண்டாக்கும். அதைத்தான் புறமாக இருந்து ஊக்கும் சக்திகள் எதிர்பார்க்கின்றனவா? பெண் உடல்மீது பெரும் அச்சுறுத்தலாகப் புதிய அடிப்படைவாதம் செயல்படுகிறது. ஆக, முந்திய பாரத்தின்மீது புதிதுபுதிதாக விழும் பாரங்கள் எங்ஙனம் எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு வெளியேறுவதற்குக் காரணமாக அமையுமென்பதை நாவல் சுட்டுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட அரபுக் கலாச்சாரம், தான் நிறுவப்படுவதற்காகப் பெண்ணுடல்மேல் கூடுதல் சுமையாகப் பர்தாக்களையும் பிற அடக்குமுறைகளையும் கொண்டுவந்து குவிக்கின்றது. அரபுக் கலாச்சாரத்துக்கு மாற்றுகின்ற செயல்பாடு ஒருவகையில் தங்களுக்கான வியாபாரத் தளத்தை விரிவடையச் செய்யும் வணிகத் தந்திரத்தின் மாற்று வடிவம் என்று கருதுவதற்கும் இடமளிக்கின்றது. ஏனெனில், ஆடையின் ஆடம்பரத்தைக் குறைப்பதாகச் சொல்லி இவர்கள் திணித்த பர்தாக்கள் ஆடம்பரத்தின் உச்சத்தில் வணிகர்களுக்கு வளம் சேர்க்கின்றன.

அடுக்கதிகாரச் சமூக அமைப்பில் ஒருவனின் பிறப்பு எப்படி அதிகாரம் செய்யத் தகுதியாக்கப்பட்டதோ அதுபோல ஆணாதிக்கச் சமூகத்தில் பாலினத் தகுதி நிலையாக்கப்படுகிறது. பெண்ணுடலின் மூளை, கருப்பை முதலான ஒவ்வோர் உறுப்பும் ஆண்பிடிக்குள்ளேயே இருத்தப்படுகிறது. பெண் கருப்பை மீதான ஆதிக்கம் ஆணுக்கான வாரிசு சுமக்கும் உறுப்பாக மாற்றப்பட்டதுபோல பெண் மூளை ஆணுக்கான அவனது அதிகாரம் நிறுவப்படுவதற்கான சொற்களைப் பதிவேற்றவும் நினைவுபடுத்தவும் கட்டிக்காக்கவுமான உறுப்பாக மாற்றப்பட்டுள்ளது. நாவலில் மெஹரின் மணவிலக்கையும் மறுமணத்தையும் அவள் தாய் தவிர பர்வீன், சுபைதா, சுலையா ஆகியோர் எதிர்த்தல், பர்வீனை ஆமினா ஆதரிக்கும்போது எச்சரிக்கையை வெளிப்படுத்துதல், சாஜிதாவைப் படிக்கவைக்க வேண்டாமென கதீஜா மொழிதல் முதலான பெண்சார்பான பதிவுகளில் பெண் தனக்கான முடிவுகளைத் தீர்மானிக்கையில் அதனை எதிர்ப்பவர்களாகப் பெண்களே இடம்பெறுகிறார்கள். ஆண் ஆதிக்கக் களனாகப் பெண்ணுடலை நிறுவியது மட்டுமல்லாமல் பெண்ணே தன் இனத்தின் மீதும் ஆண் ஆதிக்கத்தைச் செலுத்துகின்ற தானியங்கிக் கருவியாகவும் மாற்றப்படுகிறாள்.

அதே சமயத்தில் கண் தெரியாத ஆமினாவிற்கு அவளின் புரிதலின் பொருட்டு ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தும் அவள் தாய், பர்வீனின் இளமைக்கால உடல் தகிப்பை உணர்ந்து ஆறுதல்படுத்தும் ஆமினா, மணவிலக்கு மறுமணம் இவற்றின் போதும் தாயைப் புரிந்துகொள்ளும் சாஜிதா, மெஹரின் துயரங்களில் பங்கெடுக்கும் பர்வீன், மெஹரின் முடிவுகளைப் புரிந்து துணையாயிருக்கும் ஆசியா எனப் பெண்களுக்குப் பெண்கள் புரிதலுடையவர்களாகிறார்கள். இது ஒருவகையான எதிர்ப்பு அரசியல். இத்தகைய எழுத்து நூற்றுக்கணக்கில் இந்தச் சமூகத்திற்குத் தேவையாயிருக்கிறது.

சமகாலப் பெண்ணியலாளர்களைப் போலல்லாமல் பெண்ணுடலின் வலிமையைப் பதிவுசெய்வதில் சல்மாவின் எழுத்தில் தயக்கம் வெளிப்படுகிறது. பெண்ணுடல் குறித்து ஆணாதிக்கம் கற்பித்த தாழ்வான மதிப்பீடுகள் உள்வாங்கப்பட்டிருப்பது அதன் காரணமாக இருக்கலாம். பெண்ணுடல் வலிமைப் புறக்கணிப்பு, பெண்ணுடல் மீதான நிறம் – வடிவு – அழகு ஆகிய ஆணாதிக்கக் கற்பித ஏற்புத்தன்மை, பிரசவத்திற்குப் பின்னான பெண்ணுடல் மீதான தாழ்மையான மதிப்பீடு முதலான வெளிப்பாடுகள் இதனை உணர்த்துகின்றன. (சல்மாவின் படைப்புவெளியெங்கும் பதினாலாம் பக்கத்து நிலவாட்டம் இருத்தல் அழகு என்றும்[‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ ப. 264] கன்னங்கரேலென்று கொள்ளிக்கட்டையாட்டம் இருத்தல் அழகின்மை என்றும் [‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ ப. 338] பிரசவத்தின் பிந்திய பெண்ணுடல் பெருத்த – அருவருக்கத்தக்க உடல் [ஒரு மாலையும் இன்னொரு மாலையும் பக். 80, 81] என்றும் தந்தையதிகாரச் சமூகம் வரையறுத்துள்ள அழகுபொருந்திய பெண்ணுடல்களையே பாத்திரங்களாகத் தான் ஏற்றுள்ளமையையும் நிறுவுகிற முனைப்புகள் பளிச்சிடுகின்றன.) சித்திஜுனைதாவுக்குப் பிறகான மிக நெடிய இடைவெளியில் பெண் எழுத்தாளராக யாரும் பெரிதாக அடையாளப்படாத நிலையில் சல்மாவின் பெண்ணியப் பதிவுகள் தீவிரப்பட வேண்டும்.

சல்மாவின் படைப்பு வெளியில் சஞ்சரிக்கும் பெண்கள் பொருளாதார உயர்வுடைய, பகட்டான வாழ்விற்குப் பழகியவர்களாக இருக்கின்றனர். கார் வைத்திருக்கக்கூடிய, பருவமெய்திய ஈராண்டிற்குள் ஐம்பது வெளிநாட்டுச் சேலைகளைச் சீராக எடுத்துவைத்துத் திருமணத்திற்கு வழங்குகின்ற, தலைமுதல் பாதம் வரை தங்கத்தால் அலங்கரித்து மணமுடித்துக் கொடுக்கின்ற, ஆண்கள் பெரும்பாலும் வளைகுடாப் பகுதியிலிருப்பதால் செல்வம் கொழிக்கிற, ஊர் மத்தியில் செல்வாக்குடையதான குடும்பங்களே இவரது படைப்புவெளியை நிறைக்கின்றன.

பொருளாதார விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டு, புழுதிபடிந்த தெருக்களின் இண்டு இடுக்குகளில் மிதிபடும் பெண்ணுடல்களின் வலிகளும் ஓலங்களும் எதிர்ப்புணர்வுகளும் இவரது படைப்புவெளிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். அங்கேதான் வாழ்க்கை தழும்பேறிப்போன கோடிக்கணக்கான கதைகள் சேறும்சகதியுமாக ஆதிக்கக் கால்களின் அடியில் மிதிபட்டுக் கிடக்கின்றன. கடவுள் மறுப்புக் கொள்கைக்கு முரணாகச் சமயத் தூய்மை காத்தல், செயல்பாடுகளோடு உடல்கள் சார்ந்து நிறபேதம் காட்டல், ஏழை உடல்களைப் பேசாமை, சாதிய அடுக்கதிகாரத்தை மறைமுகமாக ஏற்றல் என்ற தனது நுண்மையான அரசியல் நிலைப்பாட்டைக் கேள்விக்குட்படுத்துவதைத் தவிர்க்கக் கோரும் இவரது தன்னுரைகள் வாசகனுக்கு இடும் கடிவாளங்களாக அமைந்துள்ளன. இது, படைப்பாளியின் முரண்பட்ட நிலைபாடன்றோ? கடவுள், சமயம் இரண்டும் தொடர்பற்ற கருத்தியல் கட்டமைப்புகளா? இதுகுறித்து சல்மாவின் படைப்புவெளி முழுமைக்குமான தனித்த விவாதம் தேவையாக இருக்கிறது.

நுட்பமான சமயச் சார்புநிலைக்கு வெளியே சல்மாவின் படைப்பு கொண்டாடத்தக்கதே. பொதுவாக, உடல்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் சமயங்கள் மனிதன் சிந்தித்தலை விரும்புவதில்லை. முஸ்லிம் சமூகத்தில் சிந்தனைச் சுதந்திரம் தடைசெய்யப்படுகிறது. இங்கு இறை, இறைத்தூதர், குர்ஆன், ஹதீதுகள், சொர்க்கம் செல்லும் வழிகள், நரகம் குறித்த அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்கள் என இதன் வழியில் அசைக்கப்படக்கூடாத வகையில் ஆணதிகார அடிக்கட்டுமானத்தை வலுப்படுத்தும் அரசியல் ஆகியவையே அனுமதிக்கப்படுகின்றன. இவற்றைத் தாண்டிய சிந்தனை கூடாததாக, மனித குலத்திற்கு ஒவ்வாததாக ஒதுக்கப்படுகிறது.

தந்தையதிகாரமும் சமய அதிகாரமும் வரையறுக்கின்ற வாழ்வெல்லையை வாழ்வதற்கே பெண் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். சமய வழிப்பட்ட தந்தையதிகாரத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாடுகளும் பெண்மீதானதாகவே இருக்கின்றது. இந்தச் செயல்பாடுகளில் ஒருவிதப் பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கின்றது. ஏனென்றால் பெண் சுதந்திரப்படுத்தப்பட்டால், சிந்திக்க அனுமதிக்கப்பட்டால் தந்தையதிகாரத்தால் வளர்த்தெடுக்கப்பட்டகட்டுமானங்கள் தகர்க்கப்படும். ஆகவே, இந்த அதிகாரம் ஒருவிதக் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கின்றது. பெண்ணுடலைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே பழகிப்போன ஆண் மனம், சமயக் குறுக்கீடு காரணமாகவும் வேறு கலைநேர்த்தியான சிந்தனைகளுக்கு இடம்தர மறுக்கிறது. ஆண், ஆணதிகாரத்தின் பிடியிலிருந்து விடுபடலுக்கும் சேர்த்துப் பெண் சிந்திக்க வேண்டிய நிலைதான் இன்று இருக்கிறது.

தனக்குக் கற்பிக்கப்பட்ட அறிவுக்கு வெளியே தானே செல்லத் தயங்கும் ஒரு தந்தையதிகாரக் கட்டமைப்புக்குள் பெண் உடலின் வலிகளை மிகத்துணிவாகப் பேசும் சல்மாவின் மொழியும் இஸ்லாமியப் பெண்ணுடல்களுக்கான விடுதலைச் சிந்தனையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தனவாகும்.
தேடல்

Mohamad Buhari Naleem

 

பின்னூட்டமொன்றை இடுக