அமைதி

Ashroff Shihabdeen

அடை மழைக்குப் பின்னர் வரும்
அமைதி 
ரசிக்கத் தகுந்ததாய் இருந்ததில்லை

சண்டையொன்றை விலக்கிய பிறகான
அமைதி
சண்டையிட்டவர்கள் பற்றி
நல்லெண்ணம் தருவதில்லை

கொழுத்தும் வெய்யிலில் காயும்
வெற்றுத் தெருவின் அமைதி
சஞ்சலத்தைக் கொண்டு வருகிறது

ஓர் ஆழ்ந்த முத்தத்துக்குப் பின்னரான
அமைதி
அதிகம் வெட்கப்படுத்துகிறது

விருந்துக்குப் பின்னரான அமைதி
மயக்கத்தையும்தூக்கத்தையும்
கொண்டு வருகிறது

எண்ணியதை அடைந்தபின்
உண்டாகும் அமைதி
பெருமைக்குள் தள்ளிவிடுகிறது

கூடலுக்குப் பின்னர் வரும்
அமைதி
விலகிப்படுக்க வைத்து விடுகிறது

யுத்தத்துக்குப் பின் நிலவும்
அமைதி
வறுமைக்குள் மட்டுமே வந்து நிற்கிறது

ஒரு மரணத்தின் பின் நிகழும்
அமைதி
பாரிய இடைவெளியைத் தோற்றுவிக்கிறது

இரகசியமாக ஓர் ஏழைக்கு
செய்து விட்டு நகரும்உதவிக்குப் பின்
ஏற்படும் அமைதி போல்
அற்புதமான ஒன்றை
வேறெதிலும் அடைய முடிவதில்லை!

Ashroff Shihabdeen

பின்னூட்டமொன்றை இடுக