நெல்லை வருக்கக் கோவை

Jawad Maraikar
Jawad Maraikar 

நெல்லை வருக்கக் கோவை  என்றொரு நூல் ; 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ‘ நெல்லை மாலை ’ என்ற பெயரும் இதற்குண்டு.

நெல்லை நாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட (காப்பு , சிறப்புப் பாயிரம் தவிர ) 98 அகத்துறைப் பாடல்கள் கொண்ட இந்நூலின் ஒவ்வொரு பாடலினதும் முதலடியின் முதல் எழுத்து அகர வரிசையில் அமைந்துள்ளதால் இந்நூல் ‘ வருக்கக் கோவை ‘ எனப்படுகின்றது. இந்நூலின் கடைசிப் பாடலில் வரும்

‘ வெண்ணீ றணியம்பி காபதி வீரையில் வேதியன் சொல் ’

என்ற அடியின்மூலம் நூலாசிரியரின் பெயர் வீரை #அம்பிகாபதி எனக் கருதப்படுகின்றது . எனினும் , மகா மகோபாத்யாய உ.வே . சாமிநாதையர் இந்நூலாசிரியரின் பெயர் ‘ நெல்லை #பெருமாளையர் என்று நிறுவுகின்றார் .

இங்கு நான் சொல்லவந்த விடயம் , இந்நூலின் அரங்கேற்றத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சுவையான சம்பவமொன்று பற்றியது.

நூலாசிரியர் , இந்த நூலைத் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கூடியிருந்த புலவர்கள் முன்னிலையில் அரங்கேற்றுவற்கு ஏற்பாடு செய்தார். முதற் பாடலான ‘ காப்பு ’ச் செய்யுளை அவர் படிக்கத் தொடங்கியதுமே பிரச்சினையும் தொடங்கியது. காப்புச் செய்யுளின் முதலிரு அடிகளான

‘ தேரோடும் வீதியெல்லாம் செங்கயலும் சங்கினமும்
நீரோ டுலாவிவரும் நெல்லையே ’

என்பதைப் படிக்கும்போதே அங்கிருந்த புலவரொருவர் இடைமறித்து ,
“ இந்தப் பாடலில் பிழை உள்ளது . தேர்கள் ஓடுகின்ற இத்திருநெல்வேலி வீதிகளில் நீரோடுவதாகவும் அதில் கயல் மீன்களும் சங்கினமும் நீந்திச் செல்வதாகவும் பாடல் இயற்றியுள்ளீர் . இங்கு எந்தத் தெருவில் இவை உலா வருகின்றன ? காட்டும் பார்ப்போம் ” என்று சவால் விட நூலாசிரியர் பதறிப் போனார்; அவரால் பதில் கூற முடியவில்லை . அரங்கேற்றமும் தடைப்பட்டது. சில மாதங்களில் அவர் மரணித்துவிட , அவரது ஒரே மகன் தனது தந்தையின் நூலை எவ்வாறாயினும் வெளியிட்டே ஆகவேண்டுமென முடிவு செய்தார். அதே கோயிலில் அதே புலவோர் முன்னிலையில் அரங்கேற்றம் நிகழ ஏற்பாடாயிற்று.

பெருமாளையர் ( அம்பிகாபதி ) மகன் நூலின் காப்பைப் படிக்கத் தொடங்கவே முன்னர் வினா எழுப்பிய அதே புலவர் எழுந்து ,

“ இப்பாடலில் குற்றமிருப்பதை உமது தந்தையாரிடமும் கூறினேன். அதை அவரும் ஏற்றுக்கொண்டார் . எனவே இந்நூலை அரங்கேற்ற முடியாது ” என்றார் .
“ என்ன குற்றம் இருக்கிறது ? ” என்றார் மகன் .
“ தந்தையாருக்குக் கூறியது போல இவருக்கும் பிழையைச் சுட்டிக் காட்டினார் அந்தப் புலவர் . அதனை மறுத்த புலவர் மகன் ,
“ அந்தப் பாடலின் பொருள் அதுவல்ல ; தேரோடும் வீதியெல்லாம் ( வீதிகளில் தேர் ஓடும் ) – செங்கயலும் சங்கினமும் நீரொடுலாவி வரும் ( கயல் மீன்களும் சங்கினமும் நீரில் உலா வரும் ). இப்படிப் பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும் ” என்றார்
இதனைக் கேட்ட அப்புலவர் , “ இந்த விளக்கத்தை உன் தந்தை தந்திருந்தால் அப்போதே இதை அங்கீகரித்திருப்போமே ” என்றுரைத்தார் .

பின்னூட்டமொன்றை இடுக