அகிரா குரோசாவா – மார்க்கேஸ் உரையாடல்

s ramakrisnan

திரைக்கதையும் அணுகுண்டும்

தமிழில்: ராம் முரளி

1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், உலக புகழ்பெற்ற கொலம்பிய எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் டோக்கியோ நகருக்கு சென்றிருந்தபோது, RHAPSODY IN AUGEST எனும் தனது புதிய படத்தை இயக்கிக் கொண்டிருந்த அகிரா குரோசாவாவை சந்தித்து உரையாடினார். மார்க்கேஸ் தனது “ONE HUNDRED YEARS OF SOLITUDE” மற்றும் “LOVE IN THE TIME OF CHOLERA” போன்ற மகத்தான கிளாசிக்கல் நாவல்களை எழுதிடும் முன்பாக, சில ஆண்டுகள் BOGOTAவில் திரைக்கதையாசிரியராகவும், திரைப்பட விமர்சகராகவும் பணிச் செய்துள்ளார். பல்வேறு தளங்களுக்கு தாவி படர்ந்திருந்த அகிரோ குரோசாவா – காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ஆறு மணி நேர தொடர் உரையாடலின் தமிழ் வடிவமிது.

••••

மார்க்கேஸ்: நான் நமது உரையாடலை, ஒரு ஊடக நேர்காணலைப்போல இறுக்கமாக நிகழ்ந்திட விரும்பவில்லை. மனதுக்கு நெருக்கமான நண்பரிடம் பேசுவதைப்போல பேசிடவே விரும்புகிறேன். உண்மையில், மிகச் சிறந்த திரைக்கலைஞரான உங்களைப் பற்றியும், உங்களது படைப்பாக்கங்களை பற்றியும் அறிந்துக்கொள்ளவதில் பேரார்வத்தில் இருக்கிறேன். நானும் திரைக்கதையாசிரியனாக பணிச் செய்துள்ளேன் என்பதாலும், மிகச் சிறந்த இலக்கிய படைப்புகளை முதல் தரமான திரைப்படங்களாக உருவாக்கியவர் நீங்கள் என்பதாலும் உங்கள் திரைக்கதைகளை எப்படி எழுதுகிறீர்கள் என்பதையே முதலில் அறிந்துக்கொள்ள விரும்புகிறேன்.

குரோசாவா: திரைக்கதையாக மாற்றிட முடியுமென ஒரு கருவின் மீது என்னால் திடமாக எண்ணங்கொள்ள முடிகிறபொழுது, நான் புற உலக செயல்பாடுகளிலிருந்து என்னை முற்றாக துண்டித்துக்கொண்டு காகிதம் மற்றும் பென்சிலோடு அறையொன்றினில் தனியே என்னை பூட்டிக்கொள்வேன். சரியாக, அத் தருணத்தில் நான் தேர்வு செய்துள்ள கருவைப் பற்றி முழுமையற்ற சிறுசிறு எண்ணக் குவியல்களே என்னிடம் தேங்கியிருக்கும். அதன் முடிவு, முடிவின்மை குறித்தும்கூட நான் அதிகம் கவலைக்கொள்வதில்லை. என்னால் முதற்காட்சியை சீரான மன நிலையுடன் வடிவமைக்க முடியாதப்போது, என்னுள் அக்கதை குறித்து குழுமுகின்ற எண்ணங்களை பிணைத்து அதன் மீது மெல்ல சவாரி செய்யத் துவங்குவேன்.

மார்க்கேஸ்: திரைப்படம் சார்ந்து உங்கள் மூளையில் முதலில் உதிப்பதுஏதேனும் காட்சி பிம்பமா அல்லது நீங்கள் சொல்ல விழையும் கருத்தா?

குரோசாவா: என்னால் இக் கேள்விக்கு தெளிவான பதிலை விளக்கிச் சொல்ல முடியாது. எனினும், தெளிவற்ற சிதறிய சிறுசிறு காட்சித் துணுக்குகளையே முதலில் நான் உணர்கிறேன். ஜாப்பானில் திரைக்கதை எழுதுகிற எல்லோரிடமும் ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. அவர்கள் முதலில் ஒரு கதையை மேலோட்டமாக உருவாக்கிவைத்துவிட்டு, பிறகு காட்சிகளை அதனுள் திணிக்கிறார்கள். இத்தகைய இயந்திரத்தனமான செயல்பாட்டினையே திரைக்கதை எனவும் கொள்கிறார்கள். ஆனால், என்னால் அப்படி என் திரைக்கதைக் குறித்து முன் முடிவுகளுக்குள் சென்றிட முடியாது. நாம் ஒன்றும் கடவுள் இல்லையே.

மார்க்கேஸ்: உங்களது இத்தகைய திரைக்கதை அமைக்கும் முறையினைஷேக்ஸ்பியர், தஸ்தயேவ்ஸ்கி, கார்க்கி ஆகியோரின் படைப்புகளைகையாளுகிறபோதும் கடைப்பிடிக்கிறீர்களா?

குரோசாவா: அரைக்குறைத் தன்மையோடு இலக்கிய பிரதிகளை தங்களது திரையாக்கங்களில் கையாளுகின்ற இயக்குனர்கள் பலரும் இலக்கியம் ஒரு மனிதனின் மனதில் வரைகின்ற சித்திரத்தை சினிமாவாக உருமாற்றுவதில் உள்ள கடினங்களை அறிந்திருப்பதில்லை.  இளைய இயக்குநர் ஒருவர் துப்பறியும் நாவலொன்றை திரைப்படமாக்குவதில் அதிக தீவிரத்துடன் செயலாற்றிக் கொண்டிருந்தார். அவரை அந்த நாவல் மிகவும் ஈர்த்திருந்தது. நாவலின்படி ரயில் தண்டவாளத்தின் அருகே சடலம் ஒன்று கிடக்க வேண்டும். நான் அவரிடம், அக் காட்சியை அப்படியே புத்தகம் கூறுவதைப்போல எடுக்காமல், வேறு விதமாக சிந்திக்கும்படி வலியுறுத்தினேன். ஏனெனில், அந் நாவலை வாசிக்கக் கிடைத்த எல்லோருக்கும் இறுதியில் ரயில் தண்டவாளத்தின் அருகில்தான் சடலம் கிடைக்கப்பெறும் என்று உறுதியாக தெரிந்திருக்கும். எனினும், நாவலை வாசிக்க கிடைக்கப் பெறாதவர்கள்? அவர்களுக்கு அவ்விடம் துளி முக்கியத்துவமும் இல்லாதது. ஆகையால், நாவலை திரைப்படம் ஒன்றிற்குள் உட்படுத்துகையில், அதன் நிறைக்குறைகளை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டே தீர வேண்டும்.

மார்க்கேஸ்: சினிமாவாக காட்சிப்படுத்த சாத்தியமேயில்லாதது எனஎப்போதாவது, எதைப் பற்றியாவது நீங்கள் நினைத்ததுண்டா?

குரோசாவா: என்னுடைய இளம் வயதில், இலிடாச்சி எனும் சுரங்க தொழிற்சாலை அமைந்த ஊருக்கு நாங்கள் படப்பிடிப்பு நிமித்தமாக சென்றிருந்தோம். அப்படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். என்னுடைய இயக்குனர் இலிடாச்சி நகரம் மிகவும் குழப்பமானதாகவும், அதிகம் இறுக்கம் சூழ்ந்ததாகவும் இருந்ததால் அங்கு படப்பிடிப்பை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால், நாங்கள் கேமராவில் பதிவு செய்திருந்தவை வெறும் சுரங்க தொழிற்கூடத்தின் இயங்குதலை மட்டுமே. இலிடாச்சி நகரத்தில் ஒருவர் வாழ்வது மிகவும் துன்பகரமானது. பெண்களும், குழந்தைகளும் அந்த நகரத்தில் தங்களது இயல்பினை முழுமையாக இழந்திருந்தனர். அந் நகரை எதேச்சையாக காண நேர்கின்ற சந்தர்பத்தை பெற்ற என்னால் அவர்களது துயர வாழ்வை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. நான் அந்த நகரில் அடைந்த வேதனையை, வெறும் கேமராவின் ஊடாக பார்வையாளருக்குள் புகுத்திட முடியாது.

மார்க்கேஸ்: உண்மை என்னவெனில், வெகு சொற்பநாவலாசிரியர்கள்தான் திரைப்படமாக மாற்றமடைகின்ற தங்களதுபடைப்பு குறித்து திருப்தி அடைகிறார்கள். இவ்விஷயத்தில் உங்களுடையஅனுபவம் எப்படிப்பட்டது?

குரோசாவா: முதலில், நான் ஒரு கேள்வியை கேட்கிறேன். என்னுடைய ரெட்பியர்ட் படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

மார்க்கேஸ்: கடந்த 20 ஆண்டுகளில் ரெட் பியர்ட் திரைப்படத்தை ஆறு முறை பார்த்திருக்கிறேன். என்னுடைய குழந்தைகள் அப்படத்தை காணும் வாய்ப்பை பெறுகின்ற வரையிலும் அவர்களிடம் ரெட் பியர்ட் குறித்துப் பலமுறை பேசி சிலாகித்திருக்கிறேன். உங்களுடைய சினிமாக்களில் எனக்கும் என் குடும்பத்துக்கும் பிடித்தது மட்டுமல்ல, உலகில் சிருஷ்டிக்கப்பட்ட ஒட்டுமொத்த சினிமாக்களிலிருந்தும் எங்களுக்கு பிடித்தமான சில படங்களில் ரெட் பியர்ட்டும் ஒன்று.

குரோசாவா: என்னுடைய திரைப்பாணியில் குறிப்பிடும்படியான மாற்றத்தை நிகழ்த்தியது ரெட் பியர்ட் திரைப்படம்தான். அதற்கு முன்பான திரைப்படங்களையும், ரெட் பியர்டுக்கு பிந்தைய திரைப்படங்களையும் தனித்தனியே வகைப்படுத்திட முடியும். ரெட் பியர்ட் என் திரை வாழ்வில் ஒரு இடை நிறுத்தம்போல. அதிலிருந்துதான் என் திரைப்பட பாணி வேறொரு பரிணாமத்திற்கு நகர்ந்தது.

மார்க்கேஸ்: உண்மைதான். அதிலும் ரெட் பியர்ட் படத்திலேயே இரண்டு காட்சிகள் மிகமிக மகாத்தானவை என்று குறிப்பிடுவேன். ஒன்று, தொழுகைக் காட்சி மற்றொன்று மருத்துவமனை வளாகத்தில் நிகழும் கராத்தே சண்டைக் காட்சி.

குரோசாவா: ஆமாம். ஆனாலும் ரெட் பியர்டை படமாக்குவதில் பல சிக்கல்களை நான் சந்திக்க நேர்ந்தது. அதன் ஆசிரியரான ஷுகுரோ யமாமோட்டோ தொடர்ந்து சர்ச்சை கிளப்பியபடியே இருந்தார். அவருடைய நாவல் படமாக்கப்படுவதில் அவருக்கு துளி விருப்பமும் இல்லை. பல கோரிக்கைகளை என் முன்னால் வைத்தார். எனினும், என்னுடைய தொடர் போராட்டத்தில் விளைவாக, ரெட் பியர்டை நான் நினைத்ததைப்போல இயக்கி முடிக்க முடிந்தது. முழுமை செய்யப்பட ரெட் பியர்டை பார்த்துவிட்டு ஷுகுரோ இவ்வாறு தெரிவித்தார், “என் நாவலைவிடவும் உங்கள் திரைப்படம் அதிக சுவாரசியமாக உருவாக்கப்பட்டிருக்கிறது”

மார்க்கேஸ்: அப்படியா..! ஷுகுரோவை, ரெட் பியர்ட் அத்தனை தூரம்கவர்ந்துவிட்டிருந்ததா?

குரோசாவா: ரெட் பியர்ட் அவரை அதிகம் கவர்ந்திழுத்ததற்கு காரணம், சினிமாவில் ஒரு பாத்திரம் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பதைப் பற்றிய தெளிவான புரிதல் அவருக்கு இருந்ததுதான். முற்றாக கைவிடப்பட்டு தோல்வியுறும் பெண்ணின் கதாப்பாத்திரத்தை கச்சிதமாக உருவாக்க வேண்டுமென்றுதான் ஷுகுரோ என்னிடம் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தார். எனினும், நான் அந்த நாவலில் அப்பெண்ணின் பாத்திர படைப்பில் அவர் வலியுறுத்திய தீவிரத்தை காணவில்லை. மாறாக, என் திரைக்கதையில் அதனை சாத்தியப்படுத்தினேன்.

மார்க்கேஸ்: அவர் அப்படி இருந்ததாக எண்ணியிருக்கக்கூடும். நாவலாசிரியர்களான நாங்கள் பலமுறை இதுபோன்ற குழப்பங்களுக்கு ஆட்படுவதுண்டு.

குரோசாவா: அதைத்தான் நானும் குறிப்பிடுகிறேன். தங்களது நாவலின் அடிப்படையில், அதிலிருந்து உருவாக்கப்பட்ட சினிமாவை நோக்குகின்ற எழுத்தாளர்கள், “என் நாவலின் சில பகுதிகள் சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன” என்று பொதுவில் சொல்வதுண்டு. உண்மையில், அவர்கள் சூசகமாக அதனை சிறப்பாக கையாண்ட இயக்குநர்கள் குறித்தே பேசுகிறார்கள். சில முறை அவர்கள் நேரிடையாகவே தங்களது எழுத்தில், இயக்குனர்களை பாராட்ட எண்ணுவதுண்டு. ஆனாலும், ஏதோவொன்று அவர்களை அப்படி செய்வதிலிருந்து விலக்கி நிறுத்துகிறது.

மார்க்கேஸ்: “கவிஞர்கள் விஷமேற்றப்பட்டவர்கள்என்று அதனால்தான்குறிப்பிடுகிறார்கள்போல. உங்களுடைய புதிய படத்தைப் பற்றிபேசுவோம். டைஃபூன்களை வைத்து வேலை வாங்குவது கடினமாகஇருந்ததா?

குரோசாவா: இல்லை. நிச்சயமாக இல்லை. மிருகங்களை வைத்துக்கொண்டு வேலை வாங்குவதுதான் உண்மையில் அதிக சிக்கலானதாக இருந்தது. வீட்டில் பழக்கப்படுத்தப்பட்ட பாம்புகள் முழுக்க முழுக்க தாங்கள் உயிர் உருவக்கூடிய, விஷம் நிரம்பியிருந்த பாம்பு என்பதையே மறந்து, வளர்ப்பு நாய்க்குட்டியைப்போல துள்ளுகின்றன. அதனால், உண்மையிலேயே கடும் விஷம் நிறைந்த பாம்புகளை பிடித்து படப்பிடிப்புக்கு பயன் படுத்தினோம். பாம்பின் சதா தப்பி ஓட எத்தனிக்கும் குணத்தையும், அச்சத்தையும் எங்கள் படத்தின் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டோம்.

எறும்புகளை பொறுத்தவரை மிக உயரத்திலிருந்த ரோஜா குவியலை நெருங்க அதிக நேரம் இழுத்துக்கொண்டன. நாங்கள் அவை சிறிதுசிறிதாக இடம்பெயரும்வரை பொறுத்துக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று. அதனால், நாங்கள் ரோஜா செடியில் தேன் தடவி, எறும்புகளை விரைவுப் படுத்தினோம். இது மிகவும் சிக்கலானதாக, கடுமையான பணிச் சுமையை சுரக்கக்கூடியதாய் இருப்பினும், நாங்கள் இதனை வெகு சிறப்பாக செய்து முடித்தோம். நான் பல பாடங்களை இதன் மூலம் கற்றுக் கொண்டேன்.

மார்க்கேஸ்: ஒஹ்பாம்புகளையும், எறும்புகளை வைத்து நீங்கள்படமாக்கிக் கொண்டிருக்கும் படம் எதைப் பற்றி பேசுகிறது?

குரோசாவா: அதைப் பற்றி மிக குறைவான வார்த்தைகளில் சொல்வது சாத்தியமில்லாதது.

மார்க்கேஸ்: அதில் யாரும் யாரையும் கொல்கிறார்களா?

குரோசாவா: இல்லை. நாகசாகி அணு தாக்குதலிலிருந்து மீண்ட ஒரு முதிய பெண்ணை, அவளது பேரக் குழந்தைகள் காண வருவதைப் பற்றியது என் புதிய படம். நான் அதனை அதிர்ச்சியளிக்கும் வகையிலோ, காண்பவர்கள் மனம் நோந்துப்போகும் விதமாகவோ உருவாக்கவில்லை. அணு தாக்குதல், இங்கு வாழ்பவர்களின் இதயத்தில் எத்தகைய வலியை உண்டாக்கியிருக்கிறது என்பதையும், அதிலிருந்து மக்கள் எவ்வாறு மெல்ல மீளத் துவங்கியிருக்கிறார்கள் என்பதையும் மட்டுமே பேச விழைகிறேன். நான் அந்த கொடிய நாளை துல்லியமாக நினைவு வைத்திருக்கிறேன். பூமியில் அதுப்போன்ற குரூரமான சம்பவமொன்று நிகழ முடியுமென்று இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை.

மார்க்கேஸ்: ஜப்பானிய மக்கள் அந்த துயரிய சம்பவத்தை எவ்வாறுநினைவு கூறுகிறார்கள்? ஜப்பானின் எதிர்காலத்தை பற்றிய ஐயம் இன்றும்நீடிக்கின்றதா?

குரோசாவா: மக்கள் அந்த சம்பவத்தை பற்றி அதிகம் பேசிக்கொள்வதில்லை. எங்கள் அரசியல்வாதிகளும் மெளனம் சாதிக்கிறார்கள். இச் சம்பவம் குறித்து அமெரிக்கா பேசுகையில், “இரண்டாம் உலக யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரவே அத்தகைய பைசாச செயல்பாட்டினை நடைமுறைப்படுத்தினோம்” என்கிறார்கள். ஆனால், நாங்கள் இன்னமும் வலியை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். நாகசாகி, ஹிரோஷிமா அணு தாக்குதலில் 2,30,000 மக்கள் இறந்ததாக செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், உண்மையில் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தார்கள். 45 ஆண்டுகளை கடந்துவிட்ட பின்பும், இன்றும் 2,700 பேர் சாவை எதிர்பார்த்து மருத்துவமனையில் கிடக்கிறார்கள். எப்போதோ ஜப்பானின் மீது கரிசனமின்றி வீசி எறியப்பட்ட அணுகுண்டு இன்றைக்கும் மக்களை கொன்றபடியே இருக்கிறது.

மார்க்கேஸ்: மிகக் கொடுமையான விஷயம் என்னவெனில், ரஷ்யா ஜப்பானை தங்களது கட்டுக்குள் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதற்காகவே அமெரிக்கா இதனை செய்ய துணிந்ததுதான் என்பதுதான்.

குரோசாவா: ஆமாம். ஆனால் உலக ஏகாதிப்பத்தியங்களின் அகோரபசிக்கு இரையாக போருக்கு துளியும் சம்பந்தமில்லாத அப்பாவிமனிதக்கூட்டம்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா?

மார்க்கேஸ்: அமெரிக்கா தனது துருப்புகளை தரை வழியாக இறக்கி போரை நீட்டித்துக் கொண்டிருக்க விரும்பாமல், ஜப்பானின் ஒதுக்குப்புறமாக அணு குண்டுகளை கொட்டி தனது பலத்தை நிறுவ முயன்றுள்ளது. வேறெந்த நாடும் உலகில் அனுபவித்திராத கொடுந் துயரமிது. அணு குண்டு இல்லாமல் ஜப்பான் சரணடைந்திருக்கும் என்று நம்புகிறீர்களா?

குரோசாவா: அதனை தெளிவாக கூறிட முடியாது. நாகசாகி அணு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்தவர்கள் அதுப்பற்றி பேச ஒருபோதும் தயாராய் இல்லை. தங்களது தாய் தந்தையரை, சகோதர சகோதரிகளை உரு தெரியாமல் சிதைத்து விழுங்கிய அக்கொடுர சம்பவத்தை எல்லோரும் நினைக்கவே நடுக்கமுறுகிறார்கள். அச் சம்பவம் நிகழ்ந்து முடிந்தும்கூட அமெரிக்கா எங்கள் மீது அதிகாரம் செலுத்திய அடுத்த ஆறு ஆண்டுகளுக்கும், ஜப்பானிய மக்கள் எண்ணற்ற சித்தரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது. நான் இவை யாவுமே போரினால் உருவாக்கப்பட்டவைகளே என நினைத்துக்கொண்டேன். இப்போதும் என்றாவதொரு நாள் அமெரிக்கா தான் இழைத்த குரூரத்திற்காக மனம் வருந்தி மன்னிப்பு கோர வேண்டுமென்றே விரும்புகிறேன். அதுவரையிலும், இந்த துயர வரலாறு முடிவுக்கு வராது.

மார்க்கேஸ்: சக மனித நேசிப்பின் மீது நான் கொண்டுள்ள பற்றினை உங்களுடைய படங்களிலும் என்னால் கண்டுணர முடிகின்றது. அணு குண்டு வீசி அப்பாவிகளை கொலை செய்ததும், அத்தகைய துயரத்தை மக்கள் மனதிலிருந்து மழுங்க செய்ய அமெரிக்காவோடு, ஜப்பானிய அதிகாரிகளும் கைக்கோர்த்துக்கொண்டதும் உங்களை வெகுவாக பாதித்திருப்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் அதே சமயத்தில், அணுவினால் மனிதனுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளையும் ஏற்காது முழுவதுமாக அதனை தடை செய்ய வேண்டுமென்பதும் தவறென்றே கருதுகிறேன். நீங்கள் இந்த நூற்றாண்டின் மிகக் கொடுரமான துயர சம்பவமொன்றை கடந்து வந்திருப்பதனால் உணர்ச்சிவசப்பட்டு அப்படியான முடிவினை எடுத்திருக்கிறீர்கள்.

குரோசாவா: அணு அவசியமில்லாமலேயே மனிதர்களால் மிகவும் மேன்மை பொருந்தியவர்களாக வாழ முடியுமென்பதை மக்கள் உணர்ந்துக்கொள்வார்கள். உயிர்கள் பிறப்பிக்க வேண்டுமே ஒழிய, உற்பத்தி செய்யப்படக்கூடாது என்பதே என் கருத்து. அதோடு இந்த விவாதம் மிகவும் தீவிரமாக மாறுவதை உணர்கிறேன். அதை நான் விரும்பவில்லை.

மார்க்கேஸ்: உண்மைதான். நான் இப்போது தீவிரமாகஉரையாடிக்கொண்டிருக்கும் விஷயம்தான் உங்களுடைய புதிய படத்தில்பிரதிபலிக்கப்போகின்றதா?

குரோசாவா: நேரிடையாக இல்லை என்றாலும், என்னுடைய கருத்தை எனது படத்தில் நிச்சயமாக புகுத்தி இருக்கிறேன். நாகசாகியில் குண்டு வீசப்பட்டபோது நான் இளைய பத்திரிகையாளனாக பணி செய்துக் கொண்டிருந்தேன். அதனால், அங்கு என்ன நேர்ந்ததை என்பதைப் பற்றி முழுமையான கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தேன். ஆனால், அது இறுதி வரை பிரசுரிக்கபடவேயில்லை. இப்போது, அதே சம்பவத்தை திரைப்படமாக உருவாக்க முனைந்துள்ளதால், பல்வேறு கள பணிகளை நான் மேற்கொண்டுள்ளேன். இப்படம் ஜப்பானிலோ அல்லது வேறு எங்குமேகூட வெளியிடப்படாமல் போகலாம் என்பதை உணர்ந்தேதான் படத்தை துவங்கினேன்.

மார்க்கேஸ்: உங்களுக்கு நன்றி. நானும் ஒருவேளை ஜப்பானியனாக இருந்திருந்தால், உங்களது நிலைப்பாடே என்னுடையதாகவும் இருந்திருக்கலாம். இருப்பினும், போர் எப்போதும் யாருக்கும் நல்லதே இல்லை.

குரோசாவா: உண்மைதான். ஆனால், சிக்கல் என்னவென்றால் என்னுடைய படப்பிடிப்பு துவங்கிவிட்டால் கடவுளும், தேவதைகளும்கூட ராணுவ உபசகர்களாக உருமாறி விடுகின்றனர்.

••

நன்றி

http://pilgrimwrites.blogspot.in/

பின்னூட்டமொன்றை இடுக