கல்கியில் வந்த எனது சிறிய பேட்டி

Bogan Sankar

கல்கியில் வந்த எனது சிறிய பேட்டி

கேளிவிகளும் பதில்களும்.

1) வானம்பாடி காலத்திலும் சரி அதன் பின் இன்குலாப் பயணத்திலும் சரி கவிதைக்கு ஒரு நோக்கம் இருந்தது.மக்களுக்கு நேரடியாக அது தன் வினையை ஆற்றியது.அது போலியா?அல்லது ஏமாற்றுவேலையா என்பதை விட இது தான் இலக்கு என்ற கருத்து இருந்தது…இன்று பிறர் மற்றும் நீங்கள் எழுதும் கவிதையின் பயன் பாடு தான் என்ன ? எதற்கு ஸ்வாமி இந்த கவிதை?

2)உங்களிடமுள்ள ஒரு அம்சம் நக்கலடித்தல் ,பகடி .எள்ளல் இதை கவன ஈர்ப்புக்கு திட்டமிட்டு செய்கிறீர்களா…அல்லது இது தான் இயல்பா?

3)இலக்கிய சூழலில் விருது குறித்தும் பெறுதல் குறித்தும் என்ன அபிப்ராயம்?ஆத்மா நாம் விருது பெறும் நீங்கள் ஆத்மா வுடன் எவ்விதம் ஒத்திசைகிறீர்கள்?

4)கவிதை தோன்றுவதா? அல்லது ஒரு விஷயத்தின் மீதான அவதானிப்பா? அல்லது கவிதை தொழில்நுட்பத்தில் செய்யப்படுவதா?எது உங்கள் கவிதையின் மூலம்?

5)உங்க கவிதையின் அரசியல் என்ன?

6)சங்கரின் கவிதைகளில் அழுத்தமாகத் தெரியும் ஒரு பண்பாக அதன் ‘சினிக்கல்’ தன்மையைக் குறிப்பிடலாம் அந்த ஆங்கிலச் சொல்லிற்க்கு எல்லாவற்றிலும் குறை காணக்கூடிய, இன்பட்டத்தை அவ்வளவாக விரும்பாத, நன்மையில் நம்பிக்கையில்லாத, சிடுசிடுப்புத்தன்மையுடைய என்றெல்லாம் அகராதி பொருள் சுட்டுகிறது. இக்குணங்கள் ஒருவரின் சொந்த வாழ்க்கையில் இருந்தால் அது குறையாகத் தோன்றக் கூடும். ஆனால் இலக்கியத்திலோ அது நிறையாகவே அர்த்தப்படும்.—இந்த விமர்சனத்தை ஏற்கிறீர்களா?

7) இந்த கவிதை பயணத்துக்கு யார் உங்கள் ஆசான்? யார் உங்கள் சீடன்? யார் உங்கள் எதிரி?

8)இலக்கிய சூழலில் சாதியின் நிழல் தீவிரமாக படிய தொடங்கியுள்ள நிலையில் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறீர்கள்?

9) பெரும்பாலும் பெண் படைப்பாளிகளை /பெண்ணியவாதிகளை நீங்கள் நக்கலடிப்பதாக வரும் குற்றச்சாட்டை மறுக்கிறீர்களா? அல்லது அதுவொரு விதமான ( சமூகத்தில்) ஹோமியோபதி எதிர்சிகிச்சையா? அல்லது நான் தப்பிதமாக புரிந்திருக்கிறேனா?
***************************************************************************************************


எழுத்தாளர்.அமிர்தம் சூர்யா,
தலைமை துணை ஆசிரியர்-கல்கி வார இதழ்,

1)எனது கவிதையின் நோக்கம் எதற்கு ஸ்வாமி இந்தப் படைப்பு என்றோ எதற்கு
ஸ்வாமி இந்த ஸ்வாமி என்றோ கேட்பதுதான்.வாழ்க்கையிடம் அறிவியலோ தத்துவமோ
கேட்க முடியாத சில கேள்விகள் இருக்கின்றன.இந்த கேள்விகளை கவிதைகள்
மூலமாகவே கேட்க முடியும்.கவிதையின் நோக்கம் பற்றி, கவிதை சேரும் இடமும்
புறப்படும் இடமும் தெளிவாகத் தெரிந்த ஒரு பிரயாணம் அல்ல.அடையத் தெளிவாக
ஒரு கூடு உள்ள பறவைகள் நேர்கோட்டில் பறக்கும்.அந்த பயணத்தில்
கண்டுபிடிப்புகள் எதுவும் இருக்காது.நோக்கமற்ற பிரயாணத்தில் வழி
தொலைதலும் புதிய வழிகள் கண்டடைவதும் இருக்கும்.

2

நமது நீதி நூல்கள் எல்லாவற்றிலுமே நிலையாமை பற்றிய போதனைகள் உண்டு.உலகம்
முழுக்கவுமே கூட இப்படித்தான்.நம்முடைய எல்லா முயற்சிகளும் மரணத்தில்
குப்பையாகி விடுகின்றன.ராஜாவும் அடிமையும் நீதிமானும் பாவியும் மரணத்தில்
சமானமாகி ஒரே தரமுடையவர்களாகி விடுவார்கள் என்பதுதான் இதன் மைய
நோக்கு.இந்த நோக்கில் நிறைய கவிதைகள் ,பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.மேற்கே
இந்த விஷயம் மரணத்தின் நடனம் Dance macabre என்ற கலைவடிவமாக
பரிணமித்துள்ளது.நீங்கள் சற்று உற்றுக்கவனித்தால் நான் எழுதுவது இதன்
மறுவடிவம் தான்.நான் மனிதர்களின் மரணம் பற்றி மட்டுமல்லாது லட்சியங்களின்
மரணம் பற்றியும் கருத்துருக்களின் மரணம் பற்றியும் எழுதுகிறேன்.அவை
பகடியாகத் தெரிவது உங்கள் பார்வையில்தான்.வேறெந்த காலத்தைவிடவும் ஒரு
கருத்து காலாவதியாவதை இன்று மிக எளிதாக மிக சீக்கிரமாகக்
காணமுடிகிறதுதானே ?வாழ்நாள் முழுக்க நாம் பார்த்து வியந்த நமது
புகழ்பெற்ற ஆளுமைகள் இணையத்தில் எவ்வளவு எளிதாகக் கோமாளிகளாகி
விடுகிறார்கள்!ஒரு நாளின் நாயகர்கள் முகநூலில் எப்படி மறுநாளே
துருப்பிடித்துப் போய்விடுகிறார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டுதானே
இருக்கிறோம்!

3

ஆத்மாநாமின் அச்சொட்டு பிரதியாக நான் இருக்கமுடியாது.எவரும் இருக்க
முடியாது.ஆகவே அவருடனான எனது தொடர்பு வாழ்க்கை குறித்த அவரது பதற்றம்
தான்.தமிழில் வாழ்க்கை குறித்து மிகுந்த பதற்றத்தைக் கொண்ட கவிதைகளை அவர்
எழுதி இருக்கிறார்.மிகுந்த நம்பிக்கை இன்மையையும் .

4 கவிதை நேர்வாழ்வில் உங்கள் பின்மனம் அவதானித்தது.தொழில்நுட்பம் என்பது
அதுவரை நீங்கள் வாசித்த புத்தகங்கள் கொடுக்கிற கையுளிகள்.

5

எனது கவிதையின் அரசியல் கவிதை எழுதுகிற மனதுக்குள் கிடைக்கிற அரசியலையும்
அரசியலில் காணாமல் போய்விடட கவிதையையும் சுட்டிக்காட்டுவதுதான்.உதாரணமாக
காந்தி அரசியலுக்குள் கவிதையைக் கொண்டுவர முயன்றவர்.

6

ஆம்.அது விமர்சனம் என்பதை மட்டும் ஏற்கவில்லை.நான் அதை எனது
உயர்பண்புகளில் ஒன்று எனக் கருதிக்கொள்கிறேன்.

7

ஆசான் என்று கவிதையில் ஒருவருமில்லை.காதலில் யார் ஆசானாக இருக்க
முடியும் ?ஆனால் வியக்கிற முன்னோடிகள்
உண்டு.வண்ணதாசன்,கலாப்ரியா,சுகுமாரன்,சற்றே பின்னகர்ந்தும்
சமகாலத்திலும் தவசி ,சபரி நாதன்,வெயில் போன்றவர்கள் இவர்களே எனது
எதிரிகளாகவும் இருக்கக் கூடும்.நான் அவ்வப்போது இவர்கள் உலகுக்குள் நுழைய
முயல்கிறேன்.வெறுத்து வெளியேறவும் செய்கிறேன்.பாதிப்பு என்ற பொருளில்
கேட்டிருப்பீர்கள் எனில் என்னுள் எமிலி டிக்கின்சன் ,வில்லியம் பிளேக்
தொடக்கமான மேலைக் கவிஞர்களின் தாக்கம் உண்டு.தாகூரின் தாக்கமும்.

8

நீங்கள் தப்பிக்க முயலும் எதுவும் உங்களை வேடடையாடியே தீரும்.எனது
இயல்பான ஐயுறும் தன்மையும் எதையும் பகடியாக்கும் விழைவும் என்னை எந்த
குறுங்குழுவிடமும் முழுமையாக ஒடடவிடாத கிருமி நாசினியாக
செயல்படுகிறது.நான் குடிப்பதில்லை.அதிகம் இலக்கியக் கூடுகைகளில்
கலந்துகொள்வதில்லை என்பதும் இன்னொரு காரணம்.பொதுவாக சாதியக்
குழுமமாக்கம் இங்கேதான் நிகழ்கிறது.

9 நான் ஒரு புனிதக் கோமாளி .டயோஜினிஸ் வழி வருகிறவன்.கிறித்தவத்தில்
கோமாளி சிமியோன் என்ற ஒரு புனிதர் இருந்தார்.அவர் தேவாலயத்துக்கு
நிர்வாணமாக வருவார்.பிரார்த்தனை செய்கிறவர்கள் மீது எதையாவது
எறிவார்.ஆண்கள் பெண்கள் என்று பேதமில்லை.ஒருமுறை அவர் பற்றிப் புகார்
செய்த பெண்கள் கண்கள் மாறுகண்களாகி கஷ்டப்பட்டார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக