தந்தையின் திட்டம்

Thenmozhi Das

தந்தை என்னைத் துறவியாக்க
திட்டமிட்டுக் கொண்டிருந்தார்
நானோ 
நூலாம்படையில் மாயவித்தைக்காரன் போன்ற பிம்பம் சுழன்று
நிழலால் ஓவியம் வரைவதை கவனித்தேன்
மேலும் அது அசரீரியாவதை
நிதானித்து அறிந்தேன்

அடர்ந்த வனாந்தர மெளனம்
புரட்டயியலாத புத்தகமாகவும்
யானைகளின் தந்தங்களும்
உதிர்ந்த மான்கொம்புகளும் கிடக்கும் பாதை
கன்னிமை கொஞ்சும் அமுத ஊற்றாகவும்
முடிவின்றிப் பதிந்தன

நேர்த்திக்குறிப்புகளை பேச வழியின்றி
உடல்கள் உறங்கும் கல்லறைக் காட்டுவழி
செப்புமணலாக்கினேன்

நடுவிரல் கையில் அசைவது போல்
நடுமுதுகில் பாம்பு சீறி எழுவதை
நீல அல்லித் தண்டால் பாடினேன்

நுரையீரலில் இருந்து கம்பளி போர்த்திய
கேளையாடு விடுபட்டு ஓடுவதை
கனவிடம் சொன்னேன்
பால்யத்தை இரகசிய உண்டியலாக்கி
வெள்ளிமலையில் பதுக்கினேன்

எல்லாம் நிலையற்றது என்ற வார்த்தைகளாகவே
மழை எப்போதும் பொழிவதை
கருத்தில் கொண்டேன்

வறுமைப் போராட்ட உச்சியிலும்
சேத்தாண்டி வேடத்தின் பின்னும்
கருப்பசாமி ஆட்டத்தின் முன்னும்
அன்பெனும் கரு
வெளிதனில் தொப்புள்கொடியோடு
பற்றி வளருவதைக் கண்டேன்

அப்பா எனது கூந்தலுக்கு
சாம்பிராணிப் புகையால் வாசனையேற்றுகையில்
போராட்டமே புனிதப் பயணம் என்று பேசி
மூளையில் செங்கண் ஒன்று பதித்தார்

அகக் கண் முத்தங்களை மட்டுமே ஏன் தேடியது
கருணையின் குளிரோடு
உடலெங்கும் ஏன் பாய்ந்தது
துறவியின் வஸ்திரங்களை விழித்திரையாக
எப்போது அணிந்தது
மலர்தலும் மரணம் என்பதை எப்போது அறிந்தது


– தேன்மொழி தாஸ்
10.5.2018
3.12 am

பின்னூட்டமொன்றை இடுக