அனாரின் – கவிதைகள் குறித்து சில சொற்கள்

இமையம்

அனார்

கவிதை புத்தகங்களை வெளியிடுவதற்கு இப்போது பதிப்பாளர்கள் அதிகம் விரும்புவதில்லை. வெளியிட்டாலும் ஐம்பது, நூறு பிரதிகளை மட்டுமே அச்சிடுகிறார்கள். அச்சிட்ட புத்தகங்களையும் விரும்பி யாரும் வாங்குவதில்லை. அன்பளிப்பாக கொடுத்தால்கூட யாரும் படிப்பதில்லை. படித்தாலும் அது குறித்து வாய்த்திறப்பதில்லை. மீறித் திறந்தாலும் “பிரமாதம்” என்றோ, “குப்பை” என்றோ ஒரே ஒரு வார்த்தைதான் பேசுகிறார்கள். அதையும் முகநூலில் மட்டுமே பதவிடுகிறார்கள் என்று தமிழ்க் கவிஞர்கள் கவலைப்பட்டு புலம்புகிற சூழலில் அனாரின் கவிதைகளுக்கு இருபத்திநான்கு பேர் விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். ஒரு சிலர் பத்து, இருபது பக்க அளவிற்கு விரிவாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்கள். எழுதப்பட்ட விமர்சனங்கள் புகழுரைகளாக இல்லாமல், படைப்பின் தரம்சார்ந்து எழுதப்பட்டவைகளாக இருக்கின்றன. எழுதப்பட்ட விமர்சனங்களில் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பு நூலாக வெளியிடப்படுவது (தொகுப்பு – கிருஷ்ணபிரபு) அனாருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் அல்ல. அவர் எழுதிய கவிதைகளின் தரத்திற்கு கிடைத்த கௌரவம்.

ஓவியம் வரையாத தூரிகை (2004) எனக்கு கவிதை முகம் (2007) உடல் பச்சை வானம் (2009) ’பெருங்கடல் போடுகிறேன்’ (2013) என்று நான்கு கவிதை தொகுப்புகளையும், ‘பொடுபொடுத்த மழைத்தூத்தல்’ (2013) என்ற கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள் தொகுப்பையும், தன்னுடைய பங்களிப்பாக தமிழ்மொழிக்குத் தந்துள்ளார். அனாரின் கவிதைகளுக்குள் விவரிக்கப்படுகிற உலகமும், என்னுடைய உலகமும் எதிரெதிர் திசையில் இல்லை. அனாரின் கவிதைகள் எனக்கு அணுக்கமாக இருக்கிறது. அணுக்கமாக இருப்பதால் அவருடைய கவிதைகள் எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.

அனாரின் கவிதைகளைப் படிக்கிறபோது, அவரை ஈழத்துக்கவிஞர், நவீன பெண் கவிஞர், முஸ்லீம் பெண் கவிஞர் என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை. தமிழ்மொழி கவிஞர் என்று மட்டும்தான் சொல்லத் தோன்றுகிறது. வரையறைகள், அடையாளங்கள், முத்திரை குத்துதல்கள் மனிதர்களுக்குத்தான் தேவைப்படுகிறது. கவிதைகளுக்கு இல்லை.

அனாரின் கவிதைகளைப் படிக்கிறபோது, பெண் உடலைப் பற்றி எழுதியிருக்கிறார், பெண் உடலின் சுதந்திரம் பற்றி, பெண்ணுக்கான அடையாளம் பற்றி, பெண் உடல் அரசியலைப் பற்றி, பெண்ணுக்கான விடுதலைப் பற்றி, பெண்ணுக்கான மீட்புப் பற்றி, ஆணாதிக்கம் பற்றி, மரபின் ஆதிக்கம் பற்றி, பெண் உடல் சந்திக்கும் வன்முறைப் பற்றி, பெண்மொழியில், அதுவும் பெண்ணின் விடுதலைக்கான மொழியில் எழுதியிருக்கிறார் என்று தோன்றவில்லை. வாழப்படும் வாழ்க்கைப் பற்றி, வாழும் மனிதர்களைப் பற்றி, மனித உறவுகளுக்குள் இருக்கும் சிடுக்குகள் பற்றி, மனித உறவுகள், உணர்வுகள் பற்றி எழுதியிருக்கிறார். பல கவிதைகளில் ஆரவாரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லை. மௌனம்தான் நிறைந்திருக்கிறது. மௌனம் நிறைந்திருப்பதால் – அனார் எழுதியவை கவிதைகளாக இருக்கின்றன. மெளனத்துக்குத் திரும்புதல்தான் கவிதை. ஒவ்வொருவரும் வாழ்க்கையை எதிர்கொண்ட விதத்தில் அவரவர் தன்மைக்கேற்ப எழுதியிருக்கிறார்கள். அனாரும் அவருக்கேற்ற முறையில் வாழ்க்கையை எழுதியிருக்கிறார். மிகையில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல். அனார் ஞாபகங்களை எழுதவில்லை. கனவுக்கும் நனவுக்கும், கற்பனைக்கும் நிஜத்திற்கும் இடைப்பட்டநிலையில் உளவியல் ரீதியாக, அவதியுறும் மனநிலையில் குடும்ப ஆக்கிரமிப்புப் பற்றி, சமூக ஆக்கிரமிப்புப் பற்றி எழுதப்பட்ட கவிதைகள். மனதின் மீள் எழுச்சி.

“சொல்ல முடியாததை சொல்வது, பகிர்ந்து கொள்ள முடியாததை பகிர்ந்துகொள்வது கவிதை” என்றும், “நான் வாழ்கிறேன் என்பதற்கும், நான் எழுதுகிறேன் என்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கக் கூடாது என்பதே எனது கவிதைகளின் நோக்கம்” என்றும் அனார் கூறுகிறார். இந்த கூற்றுகளிலிருந்து அவருடைய கவிதைகளின் தன்மையையும், நோக்கத்தையும் அறியமுடியும். “பெண் உடலை கொண்டாடி எழுதுவதுவேறு, பெண் உறுப்புகளைச் சுட்டி எழுதுவது வேறு” என்று சொல்வதிலிருந்து அனார் சூழலை பயன்படுத்திக்கொள்ளாத கவிஞர் என்பது தெளிவு. “மனிதர்களின் வாழ்வையும், மனங்களையும் நெருங்குவதற்கு முன்தடைகள், முன்தீர்மானங்கள் தேவையில்லை” என்று சொல்கிற ஆற்றல் அனாருக்கு இருப்பதால்தான் அவருடைய கவிதைகள் எந்த வரையறைக்குள்ளும், அடைமொழிக்குள்ளும் அடைக்கப்படாமல் இருக்கின்றன. அடையாளங்களை, வரையறைகளை, அடைமொழிகளை உடைப்பதுதான் கவிதை. நல்ல கவிதை எல்லா அடையங்களையும் நிறமிழக்க செய்துவிடும். அனார் அரசியல் கவிதைகளை எழுதவில்லை என்று பலரும் எழுதியிருக்கிறார்கள். அது உண்மையில்லை, கவிதை எழுதுவது, கவிதைப்பற்றி சிந்திப்பதுகூட அரசியல் செயல்பாடுகள்தான்.

கவிதைகளைப் பற்றி சொல்வது சுலபமானதல்ல. அதனால் அனாரின் கவிதைகளில் எனக்குப் பிடித்தமான சில வரிகள் :

“மழை ஒவ்வொரு சொல்லாகப் பெய்கிறது.”
“ஒரு வயல் வெளியளவு சொற்கள் என்னுள் இருந்தன.”
“வாள் உறைக்குள் கனவுகளை நிரப்புங்கள்.”
“புரவிகள் பூட்டியக் குரல்”
“வானம் பூனைக்குட்டியாகி – கடலை நக்குகிறது.”
“வெளிச்சத்தை இருட்டைத்தின்று வளரும் கனவுகள்.”
“வளராத இறகுகளுடன் – அவனது சொற்கள் / மின்னிமின்னிப் பறக்கின்றன.”
“அமைதி வெளியே இருக்கிறது – அமைதியின் நிழல்தான் உள்ளே இருக்கிறது.”
“பூட்டப்பட்ட கதவுகளுக்குள் இருந்தபடி – எப்படி சுதந்திரத்தை அடைவது?”
“நீ அறுவடை முடித்துத் திரும்புகின்றாய் / இன்னுமிருக்கிறது விளைச்சல்”
“இரவு மின்விளக்குகளில் வெளிச்சம் பூத்துக்கிடக்கிறது.”

குறிஞ்சியின் தலைவி என்ற கவிதை ஒரு தொகுப்பிலும், நான் பெண் என்ற கவிதை மற்றொரு தொகுப்பிலும் வந்திருந்தாலும் – இரண்டு கவிதைகளின் மையமும் ஒன்றுதான். எழுதப்பட்ட காலம்வேறு. எழுதப்பட்ட விதம்வேறு. அதனால் அவற்றை கவிதை என்று சொல்ல முடிகிறது. ‘மேலும் சில இரத்த குறிப்புகள்’ என்ற கவிதை குறித்து நிறையபேர் பேசியிருக்கிறார்கள். நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். எல்லாருக்கும் பிடித்தமான கவிதையை அனார் எழுதியிருக்கிறார். ஆச்சரியம்தான். அனாரின் மூன்று தொகுப்பிலுள்ள கவிதைகளையும் நான் படித்திருக்கிறேன். அவருடைய கவிதைகள் படிப்பதற்கோ, புரிந்துகொள்வதற்கோ எனக்கு எந்த சிரமத்தையும் தரவில்லை. ஆனால் அவருடைய கவிதைகள் குறித்து “பிரவாகத்தில் மிதக்கும் காட்சி அடுக்குகள்” என்ற தலைப்பில் பெருமாள்முருகன் எழுதிய விமர்சனத்தையும், “அனார் கவிதைகளில் இரட்டை அரூபம்” என்ற தலைப்பில் எஸ்.சண்முகம் எழுதிய விமர்சனத்தையும்தான் படிப்பதற்கு சிரமப்பட்டேன். கவிதையாகவும் இல்லாமல், உரைநடையாகவும் இல்லாமல் இருப்பவற்றை எப்படிப் படித்துப் புரிந்துக்கொள்வது? கவிதைக்கு மற்றொரு புதிர் கவிதை எழுதி விமர்சனம் செய்வதை படித்து புரிந்துகொள்வதற்கு எனக்குப் போதிய பயிற்சி இல்லை என்று தோன்றுகிறது.

2017க்கான கவிஞர் ஆத்மநாம் – விருதை பெற்றிருக்கிற அனார், உங்களுடைய கவிதைகளின் திறத்திற்காக விமர்சனங்களும் கௌரவங்களும் கூடியிருக்கிறது. அதே நேரத்தில் உங்களுடைய கவிதைகளைச் சுற்றி ஆரவாரமான, ஆர்ப்பாட்டமான கூச்சல்களும் கேட்கின்றன. கூச்சல்களிலிருந்து சிலவற்றை தருவது பிழையாக இருக்காது.

“அனாரின் வேட்கையின் சொற்கள் வில்லேறிய அம்புகளாய்ப் பறந்துவந்து, நம்முடலில் பாய்வதன் அரசியலைப் புரிந்துகொள்ள முடிகிறது”,

“அனாரின் கவிதைகள் நினைவில் தீப்பிழம்பாய் எரியசெய்கிறது”,

“அனாரின் ஆளுமையின் மொழிப் பரப்பில் எழுந்து நிற்கும் வேட்டைமொழி, ஆளுமையின் இருமாந்தக் குரலாக வெளிப்படுகிறது”,

“தனிமை அனாரின் மொழிகளில் வேட்டையாடப்பட்ட இறையைச் சத்தமின்றி புசித்தவாறு இருக்கும் அரூப மிருகமாகிறது”,

“அனாரின் கவிதைக்குள் தகித்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களின் சுதந்திரம்”,

“அனாரின் கவிதைகள் கண்ணுக்குப் புலப்படாத காட்சிகளிலும், வெளிகளிலும் மிதக்கிறது, இவை அண்டங்களையும், பருவங்களையும், தாண்டியும், அமுங்கியும் படிமங்களாய் ஊடுப்பாய்கின்றன”,

“மொழி வெளியில் அனாரின் கவிதைகள் சஞ்சரிக்கின்றன”,

“அனாரின் கவிதைகள் வெடித்துக்கிளம்பிய புதுக்குரல்”

“பெண்ணிய செயல்பாட்டில் அடுத்தக்கட்டம்”,

“பெண் கவிகளின் அதிரடி நுழைவால் நவீன தமிழ் இலக்கியத்தின் நோக்கிலும், போக்கிலும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது”

“பெண் கவிஞர்களின் வருகையால், இலக்கியவானில் ஒளி கூடிவருகிறது”,

இதுபோன்ற கூச்சல்கள் உங்களுடைய கவிதைகளின் மீது ஏற்றப்படும் சுமைகள். விமர்சனங்கள் வேறு. வெற்று கூச்சல்கள் என்பதுவேறு. இரண்டுக்குமான வேறுபாடு உங்களுக்குத் தெரியும். மலினமான மதிப்பீடுகள் சமரசம் செய்துகொள்ள தூண்டும். உங்களை புகழ்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். பதிலுக்கு நீங்கலும் புகழ வேண்டும் என்று எதிர்ப்பார்பார்கள். யாருக்குதான் புகழப்பட வேண்டும் என்று ஆசை இருக்கிறதோ அவர்களே அதிகம் புகழ்கிறார்கள். ஆதாம், ஏவாள் கதையிலிருந்தும், அவர்களுடைய காலத்திலிருந்தும் இன்றுவரை அறிவை அல்ல, பொய்யை நம்பிக்கொண்டுதான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த காலத்திலிருந்தே ‘அறிவு’ பாவமாகக் கருதப்பட்டுவருகிறது. அதனால் உங்களுடைய மனதையும், காதுகளையும் ஆரவார, ஆர்ப்பாட்டமான கூச்சல்களுக்கு கொடுக்காதீர்கள். விலகியிருங்கள், எவ்வளவு விலகியிருக்கிறீர்களோ அவ்வளவு நல்ல கவிதைகளை எழுதுவீர்கள். நல்ல கவிஞராக இருப்பீர்கள். என் எழுத்திற்காக நான் சாகவும் தயார் என்று எவன் சொல்கிறானோ அவனுடைய எழுத்துக்களை தின்று செரிக்கும் வல்லமை காலத்திற்கும்கூட கிடையாது.

அனார், உங்களுடைய கவிதை வரிகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது “ஒரு வயல் வெளியளவு சொற்கள் இருந்தன என்னுள்” என்பதுதான். ஒரு வயல் வெளியளவு சொற்கள் உங்களிடம் இருக்கின்றன. அதனால் நீங்கள் பெரிய பாக்கியசாலிதான். ஒரு கவிஞருக்குத் தேவையானது சொற்கள்தான். சொற்களுடன் விளையாடுவதுதான் கவிதை. அதாவது மொழியை விழிப்படையச் செய்வது. உங்களிடமிருக்கும் சொற்களை முடிந்த மட்டும் சலித்தெடுங்கள். எந்தளவுக்கு சலித்தெடுக்கிறீர்களோ அந்தளவுக்கு உங்களுடைய கவிதைகள் உயிர்பெற்றதாக, மேன்மைப்பட்டதாக இருக்கும். உங்களுடைய வயலில் இருக்கும் வீரியமிக்க சொற்களை தானியமாக்கித் தாருங்கள் – பசியுடன் இருக்கிறோம் நாங்கள்.

‘சேற்றில் விழுந்த சொற்கள் தானியமாயின’.

குறிப்பு: 2017க்கான கவிஞர் ஆத்மநாம் நினைவு பரிசு வழங்கும் விழாவில் – பரிசு பெற்ற கவிஞர் அனாரின் கவிதைகள் குறித்து பேசியது. (30.09.2017)

பின்னூட்டமொன்றை இடுக