கவிஞர் சோலைக்கிளி

காகம் கலைத்த கனவு

சோலைக்கிளி

சோலைக்கிளி இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்த கவிஞர். இவரது இயற்பெயர் உதுமாலெவ்வை முகம்மது அதீக் ஆகும். இவர் 1980களிலே எழுதத் தொடங்கியவர். ஈழத்து கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். பாம்பு நரம்பு மனிதன், காகம் கலைத்த கனவு, பனியில் மொழி எழுதி, எட்டாவது நகரம் போன்றவை இவரின் கவிதை தொகுப்புகளில் சிலவாகும்.
இன்றும் எனது நகரம்
கையையும் வாயையும் பொத்தி
மெளனித்திருக்கிறது.
இடைக்கிடை இப்படித்தான் விரதம்
அனுஷ்டிக்கும்
எனது நகரம்
இன்றும் ஏதோ ஒரு நிர்பந்தத்தின் பேரில்
நோன்பிருக்கிறது.
(பனியில் மொழி எழுதி – கவிஞர் சோலைக்கிளி)
சோலைக்கிளியின் கவிதைகள் வாழ்தலின் பல்வேறு உணர்வுநிலைகளைப் பற்றி பேசுபவையாக இருக்கின்றன. தனது நாட்டின் போருக்கும் அழிவுக்கும் காரணமான எல்லா அடிப்படைகளையும் அவர் வெறுத்தொதுக்குகிறார். அந்த போரையும் அழிவையும் தவிர்த்த வேறொரு உலகத்தைத் தன் கவிதைகளுக்குள் கொண்டு வந்திருக்கிறார் சோலைக்கிளி.

அந்த வகையில் இம்மாத சுவடுகள் பதியுமொரு பாதையில் கவிஞர் சோலைக்கிளியோடு பயணிப்போம்.

இதைத்தான் இவன்

இவ்வளவு நாட்களாகப்

படித்துக் கொண்டிருந்தான்

மேசைப் புத்தகத்தின் பக்கங்களை

ஒவ்வொன்றாக விரித்துக் காட்டுகிறது

மின்விசிறி ஜன்னலருகில்

எழுத்தறிவற்ற அந்தியொளியோ

மஞ்சள் கைகளால் தடவித் தடவி

இல்லாத சித்திரங்களைத் தேடுகிறது.

கவிதைமொழிக்கு எப்போதுமே ஓர் அழகு இருக்கிறது. எதைப் பற்றி பேசினாலும் நல்ல கவிதைகளில் தானாகவே அந்த அழகு வந்து அமர்ந்து விடுகிறது. எப்போதும் எதையாவது தேடியபடியே இருக்கும் கவிதைமொழி தனக்கான அழகுகளைத் தேடிப் பிடித்து வரிகளாக்கி கொடுத்துவிட்டு போய்க் கொண்டே இருக்கிறது. எவன் எதைப் படித்துக் கொண்டிருந்தால் நமக்கென்ன என்றெல்லாம் அது யோசிப்பதில்லை. அதன் தேடுதல் அலாதியானது. அந்த தேடுதல் ஏதோ ஒரு அர்த்தத்தைத் தேடி தன்னிச்சையாக அலைந்தபடியே இருக்கிறது. அந்த அலைதலே ஒரு நல்ல கவிஞனுக்கு மிகச் சிறந்த கவிதைகளையும் வரிகளையும் வார்த்தைகளையும் வழங்கிப் போகிறது.

நுரையாகவும்

குமிழியாகவும்

முட்டையாகவும்

நினைவுகள்…

அலையாகவும்

சிலநேரம்

சீறிக்கொத்தும் பாம்பாகவும்

அவைதான்…

மிக மிக எளிய வரிகள்தான். ஆனால் இந்த வரிகள் நம்மை வந்தடைந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். இந்த வரிகளை வாசித்து முடிக்கும் போது ஏதோ ஒரு நினைவிற்குள் அது நம்மை இழுத்துச் சென்று விடுவதைத் தவிர்க்க முடியவில்லை. எப்போதும் ஏதோ ஒரு நினைவிற்குள் நாம் ஆழ்ந்தபடியேதான் கிடக்கிறோம். ஏதாவதொரு சிறு சம்பவம் நம்மை ஒரு பெரும் தொடரான நினைவுகளுக்குள் ஆழ்த்திவிட்டு போய்க்கொண்டே இருக்கிறது.

ஒரு மிக சிக்கலான அனுபவத்தைக் கூட மிக எளிய முறையில் சொல்லிவிட்டு போகிற தன்மை கவிதைக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. சில வேளைகளில் அது அந்த கவிதையைப் படைக்கும் கவிஞனையும் சார்ந்தே இருக்கின்றது. சிலவேளை அதுவாகவே எளிதான அப்படியே பிறந்தும் விடுகின்றது.

வெடிக்கும்

இன்னமும் குண்டுகள் வெடிக்கும்

இங்கிருந்து சுடப்போகும் துப்பாக்கி ரவையினால்

வெள்ளிகள் மரணிக்கும்

பொத்தல் விழுந்த ஆகாயம்

தொங்கும்

நிலவு சில நேரம் நாளைக்கே…

வரையறைகள் கவிதைகளுக்கு இருப்பதில்லை. நிலத்தில் இருந்துகொண்டே ஒரு கவிதையினால் எதை நோக்கியும் பயணிக்க முடியும். கவிஞர்களிடம் தனித்துக் கிடைக்கும் ஒரு நுண்ணுணர்வு அவனது எல்லா பயணங்களையும் சாத்தியப்படுத்துகிறது. ஒரு ரவையினால் இரத்தத்தை மட்டுமே கற்பனை செய்ய முடியும் சாதாரண மனிதனைத் தாண்டிய பார்வை ஒரு கவிஞனுக்கு வாய்த்திருப்பதால்தான் சாதாரண மக்களிடமிருந்து வெளியே நின்று கொண்டு அவனால் கவிதைப் படைக்க முடிகிறது. அதனால்தான் உனக்கும் எனக்கும் புலப்படாத “ஒரு துப்பாக்கி ரவையினால்” நாளேயேனும் விழுந்துவிடப் போகும் நிலா குறித்து அவனால் மட்டும் வார்த்து வடித்து வைக்க முடிகிறது.

ஒரு சிறகு முளைத்த கவிஞனைப்போல

மேகம்

சுதந்திரமாய்த் திரிகிறது.

ஒரு கவிஞனுக்கும் அவனது கவிதைக்குமான உறவின் நிலை ஒரு நல்ல பக்தனுக்கும் அவனது கடவுளுக்கும் இருக்கின்ற உறவின் நிலை ஆகும். ஒவ்வொரு நல்ல கவிதையும் ஒரு ஆத்மார்த்த புள்ளியில் நிகழ்ந்துபோன பிரசவங்கள்தான். ஒரு கவிஞன் தான் பெற்ற அனுபவங்களை, தனக்குக் கிடைக்காத ஒன்றை பற்றிய ஏக்கம் குறித்த கவிதைகளைப் பதிவு செய்கிற போது அந்தவொரு கவிதையின் ஏதாவதொரு புள்ளியில் வாழ்ந்தபடியே இருக்கிறான். உங்களுக்கும் எனக்கும் காணக்கிடைக்காத கவிஞன் உணர்ந்த ஒன்றுதான் கவிதையாகி இருக்குகிறது. ஒரு படைப்பாளனுக்கு எழுதுதல் என்பது ஒருவித விடுதலை உணர்வைத் தரக் கூடியது. அந்த விடுதலை உணர்வு எழுதுவதன் மூலம் இந்த கவிஞனுக்கும் கிடைப்பதாகவே நான் நினைக்கிறேன்.

இன்றும் எனது நகரம்

கையையும் வாயையும் பொத்தி

மெளனித்திருக்கிறது.

இடைக்கிடை இப்படித்தான் விரதம்

அனுஷ்டிக்கும்

எனது நகரம்

இன்றும் ஏதோ ஒரு நிர்பந்தத்தின் பேரில்

நோன்பிருக்கிறது.

தான் வாழும் வாழ்ந்த நாட்டின் மீது தனியொரு பற்றுதல் எல்லாருக்கும் இருக்கும். எந்தவொரு கவிஞனுக்கும் அவன் வாழ்கின்ற வாழ்நிலம் என்பது மிகவும் முக்கியமானது. எப்போதும் போரும் காயமும் இரத்தமுமாய் இருக்கும் தனது நகரம் குறித்த நடுக்கம் இந்த கவிஞருக்குள் இருக்கிறது. அதன் அமைதி, அதன் மெளனம் இந்த கவிஞரை வெகுவாகப் பாதிக்கிறது. ஆனால் அந்த அமைதியும் மெளனமும் நிர்பந்தத்தின் பேரில் ஏற்பட்டுள்ளது என்பது ஒரு நிரந்தரமற்ற சூழலையே தந்து போகிறது.

சோலைக்கிளியின் கவிதைகள் வாழ்தலின் பல்வேறு உணர்வுநிலைகளைப் பற்றி பேசுபவையாக இருக்கின்றன. தனது நாட்டின் போருக்கும் அழிவுக்கும் காரணமான எல்லா அடிப்படைகளையும் அவர் வெறுத்தொதுக்குகிறார். அந்த போரையும் அழிவையும் தவிர்த்த வேறொரு உலகத்தைத் தன் கவிதைகளுக்குள் கொண்டு வந்திருக்கிறார் சோலைக்கிளி. இயற்கையின் தோழனாகவும் அவர் இருக்க வேண்டும். அவரது கவிதைகள் இயற்கையைத் தழுவியே பேசிச் செல்கின்றன. இளம் படைப்பாளர்கள் கண்டிப்பாக சோலைக்கிளியையும் படிக்க வேண்டும் – நம்மால் பேச முடியாத இயற்கையோடு அவர் பேசிக் கொண்டிருக்கிறார் தனது கவிதை மொழியில்.

தொடரும் ………………….
நன்றி

ஓட்டமாவடி நளீம்
From whatsapp

1 Comments

பின்னூட்டமொன்றை இடுக