முகநூல் பதிவு3

#மூக்குகள்

அன்றைய உரையில், ஒரு இலக்கியவாதியாக, புனைவெழுத்தாளனாக தான் ஒரு சிற்பத்தில் இருந்து அல்லது ஓவியத்தில் இருந்து எவற்றை எல்லாம் எடுத்துக்கொள்கிறேன் என்பது பற்றிய குறிப்புகளை அங்கங்கே சொல்லிச் சொன்னார் ஜெமோ. அது மட்டுமில்லாமல், பிற கலைவடிவங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏன் அது குறித்து எழுத வேண்டும் என்பது பற்றியும் ஜெமோ பேசி இருந்தார். உதாரணமாக, சீனிவாசன் ஒரு கட்டுரையில் தன் முகம் பற்றி எழுதி இருந்ததை மேற்கோள்காட்டி, ஒருவனின் முகத்தை அவனது ஆளுமையே வடிவமைக்கிறது என நிறுவிய தருணம் அழகானது.

முகங்களை அவதானிப்பதைப் பற்றியும் ஜெமோ பேசி இருந்தார். இந்துக் கடவுள்களுக்கு உருவம்கொடுத்த ஓவியர் ரவி வர்மாவின் கடவுள் உரு ஓவியங்களில் கேரளாவின் நாயர்களின் சாயல் இருப்பது பற்றிக் கிண்டலடித்துக்கொண்டார். ரவி வர்மா இந்திய மரபை பிரதிபலித்த ஓவியன் இல்லை என்றும், ஐரோப்பிய பாரம்பரியத்தை வரைந்ததால்தான் ஆங்கிலேயர்கள் அவரை முன்னிலைப்படுத்தினர் என்பது பற்றியும், இது பற்றி விவேகானந்தரின் கூற்றையும் குறிப்பிட்டிருந்தார்.

ஜெமோ, முகங்களை அவதானிப்பதைப் பற்றிச் சொன்ன போது கடந்த ஓராண்டாக நான் மனித மூக்குகளை அவதானிப்பதை பற்றி எண்ணிக்கொண்டேன். இலண்டன் மெட்ரோவில் பயணிக்கிற போதும், சன நெரிசல் மிக்க இலன்டன் வீதிகளில் நடக்கும் தோறும் நான் என்னை கடந்து போகிற மனிதர்களின் மூக்கை அவதானிப்பவனாக ஆகி இருக்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், என்னுடைய அவதானிப்பில் இருந்து, ஒரு மனித மூக்கை அவதானித்து குறித்த அந்த மனிதன் உலகில் எந்த பிரதேசத்திற்குரியவர் என்பதை ஓரளவிற்கு துல்லியமாக என்னால் சொல்லிவிட முடியும். மூக்கு பற்றிய என்னுடைய தேடலுக்கு இணையமும் உதவி இருக்கிறது.

சின்னவனாக இருந்த போது முத்திரை சேகரிக்கும் பழக்கம் இருந்தது. அதைப் போலவே இப்போது மனித மூக்குகளையும் அவதானிப்பதாக எண்ணி இருந்தேன். ஆனால் ஜெமோவின் அந்த உரைக்குப் பிறகு நான் மனித மூக்குகளை அவதானிப்பது வெறுமனே பொழுதுபோக்குக்காக அல்ல; அது வெவ்வேறான திறப்புகளை எனக்கு எழுத்தில் சாத்தியமாக்கும் எனத் தெரிந்துகொண்டேன். அது உண்மைதான். ஏதாவதொன்றை உன்னி அவதானிப்பது, அதுபற்றியதான பல கதவுகளையும் சாத்தியங்களையும் திறந்துவிடுகறது. இலக்கிய ஆர்வலனாக அப்படியான திறப்புகள் அவசியமாக இருக்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக