கலையும் கலைஞனும்

Rajarajan Artist

Rajarajan Artist

ஓவியர் ராஜராஜன்
———————————————
பல மாதங்களுக்கு முன் ஒரு கலந்துரையாடலில் பரிமாறிக்கொண்ட என் உரையாடலின் விரிவாக்கம்.

கலை, பண்பாடு ,இலக்கியம் இவை அனைத்தும் ஒரு மண்ணுடைய, மக்களுடைய, நாட்டுடைய அடிப்படையான அடையாளக்கூறுகள். ஒரு நாட்டைப் பற்றிய புரிதலைச் சரியாகத் தெரிந்து கொள்வதற்குக் ,அந்த நாட்டின் கலை இலக்கியங்களும் ,கலைஞர்களும் தான் சிறந்த சான்று . கலை என்ற அளவில் எது சரியான கலை, கலையல்ல என்பதற்கு நிரந்தர தீர்வு கூறியவர்கள் இல்லை. இன்றுவரை இதுதான் கலை எது என யாராலும் சரிவர விளக்க முடியவில்லை. விளக்க முடியாத நிலை பெற்றதுதான் கலையாக இருக்க முடியும். கலைக்கு அடிப்படையான விஷயமும் அதுதான். கடவுள் என்றால் அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். அதற்கு உருவம் எனும் அடையாளம் மனிதனால் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, உருவம் இதுதான் என எந்த கடவுளும் கடுமையாக சொல்லிவிட்டு போனது கிடையாது . கடவுளை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், கலை எப்படி பார்க்கப்படுகிறது. கலைகளை அனைவராலும் சரிவர புரிந்துகொள்ள முடியாது. விளக்கவும் முடியாது .கலைகள் உள்ளங்களால் மட்டுமே உணரக்கூடியது
நாங்கள் பல ஓவியத் தேர்வுகளுக்குப் போகிறோம். ஒரு 25 ஓவியங்களைக் கொடுத்து எது சிறந்தது என்று கேட்டால் ஒன்று இரண்டு மூன்று என எடுத்துவிடலாம். அது எப்படிச் சிறந்தது என்று கேட்டால் அதை அறிவியல் வழியாகவோ , பெளதீக,ரசாயன வழியாகவோ விளக்க முடியாது. அதற்கு வரையறை கிடையாது. இந்தக் கலருடைய குவாலிட்டி எப்படிப்பட்டது, என்ன “கான்செப்ட்” இருக்கிறது எத்தனை கிராம் வண்ணங்கள் கலக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் விளக்க முடியாது. அதற்கு காரணம் என்னவென்றால் மனம் தான் அதைத் தீர்மானிக்கிறது. ஒரு நல்ல கலையை புரிதலுடைய மனம் தான் தீர்மானிக்கும்.
பொதுவாக கலைகளில் முக்கியமான விஷயம் ” பெர்ஃபெக்ட் புராடக்ட் என்பது கிடையாது. கலைப் படைப்பு என்பது உருவாக்கம் மட்டுமே இல்லை. “நாற்காலி” என்றால் அது உருவாக்கப்படுகிறது. அதைப் பெரிய கலைப் பொருளாக யாரும் சொல்ல முடியாது. புராடக்ட் எனும் செய்பண்டம் வேறு. கிரியேட்டிவிடி எனும் கலைப் படைப்பு வேறு.
காலங்காலமாக நடராஜர் சிற்பங்களை வழிபடுகிறோம். ஆனால், அதைச் சிறந்த கலையாக நாம் பார்ப்பது கிடையாது பரிச்சயமான பஞ்சலோக . சிற்ப படிமமாக காண்கிறோம் .அதைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுச் சென்றுவிடுகிறோம். அதில் ஒரு சிறந்த தத்துவம் இருக்கிறது என்பதை அறிஞர் ஆனந்த குமாரசாமியின் விளக்கத்திற்கு பின் அறிந்துகொண்டோம் ,வெகு நாள் வரை நாம் அது சமய பார்வையை கடந்த சிறந்த கலைப்படைப்பு என யாரும் நினைத்துப்

பார்த்ததில்லை . வெகுசன மக்களிடம் நடராசர் சிலை பிரபலமானது என்பது முக்கியமான விஷயம். எனவே கலையைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படையான புரிதல் தேவைப்படுகிறது. மகாபலிபுரத்தில் பல்லவர் காலத்தின் “மகிஷாசுரமர்த்தினி” சிற்பம் இருக்கிறது. எல்லோரும் அதைப் பார்த்திருப்பார்கள். அதை எப்போது ஊடுருவிப் பார்ப்பார்கள் என்றால் அதைப் பற்றி யாராவது விளக்கி இருந்தாலோ அல்லது படித்துப் புரிந்திருந்தாலோ மட்டும்தான் கிட்டத்தில் இருந்து பார்த்து ரசிப்பார்கள். அந்த ரசனைக்குக் குறைந்தபட்ச அடிப்படையான புரிதல் அவசியம்.
கலை வடிவங்கள் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே இருக்கிறது. அரசியல் ரீதியான மாற்றம் மிக முக்கியமானது. கோவில்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சி மாற்றத்திற்கு ஏற்ப, கலைகளில் மாற்றம் இருக்கும். இது சோழர் கால கலை, இது பாண்டியர் காலத்தின் கலை வடிவம், இது பல்லவர் காலத்தின் கலை வடிவம், இது நாயக்கர் காலத்தின் கலை வடிவம், இது மராத்தியர் காலத்தின் கலை வடிவம், இது ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு உருவான கலை வடிவம், இவை எல்லாம் போய் நிகழ்காலத்தில் இருக்கின்ற தற்கால கலை வடிவம் ஆகியவற்றைக்கூட பார்க்க முடிகிறது. மதிப்பு மிக்க “கலை” என்பது மாறக்கூடிய தன்மை உடையது. ஒரு சிறந்த கலை என்பது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளக் கூடிய, மாற்றிக்கொள்ளக்கூடிய தன்மையை பெற்றிருக்கவேண்டும் . அதனால்தான் காலம்காலமாகவும் , காலத்துக்கு ஏற்பவும் மாறிக் கொண்டே வருவதை நாம் காண்கிறோம் . மக்களிடம் தொடங்கிய கலை, அரண்மனை வழியாக, ஆலயம் வழியாகப் போய் திரும்பவும் மக்களிடமே, மீண்டும் வருகிறது.
தொன் மக்களிடம் தொடங்கிய மரபு கலைகள், சிற்பங்கள் ஓவியங்கள் யாவும் அரசர்களிடம் இருந்தும் வரவில்லை ,செல்வ சீமான் களிடம் இருந்தும்வரவில்லை. உலக வரலாற்றில் எல்லா கலைகளும் , தத்துவங்களும், அறநெறிகளும், மெய்யியகோட்பாடுகளும் எந்த கோடீஸ்வரர்களிடமிருந்தும் கிடைக்கப்பெற்றதில்லை, சாதாரண மக்களிடம் இருந்தும், எளிமையான மனிதர்களிடமிருந்தே இருந்தே கலைகளும் இலக்கியங்களும் தொடங்கி மெருகூட்டப்பட்டது, குறிப்பாக ஓவியக்கலை குகைகளில் தொடங்கி.பாறைகளில் பக்குவமடைந்து, சுவரில் சுத்திகரிக்கப்பட்டு, அரண்மனைக்குச் சென்று அலங்கார மடைந்து . அதன்பிறகு, தேவாலயங்கள், கோவில்களில் போஷிக்கப்பட்டு . சமயக்கலை சாதனமாகியது . மீண்டும் படிப்படியாக மக்களிடமே வந்து சேர்கிறது. இது ஒருவகையான கலைச் சுழற்சி. வளர்ந்துகொண்டே இருக்கிறது. மாறிக் கொண்டே இருக்கிறது.
அரசியல் ஆட்சி மாற்றம் என்பது கலை பரிணாமங்களுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. கலையை எப்போது நாம் ரசிக்கிறோம்? எந்தளவிற்கு நமக்குப் புரிதல்

இருக்கிறதோ அப்போதுதான் கலைகளை நுகர இயலும் . உதாரணமாக, ஐரோப்பியக்கலைகளை எடுத்துக் கொண்டால் காலம்காலமாக கிளாசிக் ஆர்ட் ஒன்று இருக்கிறது. சர்ச்சில் இருக்கின்ற கிறித்தவசமய ஓவியங்கள் ,பெரும்பாலும் ,மசாக்கியோ, சாண்ட்ரோபொட்டிசெல்லி ,மைக்கேல்ஏஞ்சலோ பொன்னரெட்டி , லியானார்டோ டா வின்சி, ரபேல் போன்றோர் தேவாலயங்களில் ஓவியங்களை தீட்டினர் . அந்த கிளாசிகல் ஃபார்மட்டை ஏறத்தாழ 400 வருடங்கள் மெயிண்டெயின் செய்துகொண்டு வந்தனர் . அந்த வழிமுறைகளில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்த ஒரு காலமாற்றம் தேவைபட்டது .
மேலே குறிப்பிட்டுள்ள ஓவியர்களுக்கு முன்னோடியாக ” கியாட்டோ ” எனும் மகா கலைஞன் மரபுகளை கொஞ்சம் மாற்றியமைக்கிறார். எல்லாம் சிமெட்ரிக்காக இருக்கிறது. அதைக் கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டும் என விரும்புகிறார். அடுத்தது ஐரோப்பாவில் ” ரனசைன் பீரியட் “எனும் மறுமலர்ச்சிக் காலம் அது. 15ஆம் நூற்றாண்டில் இருந்து 16ஆம் நூற்றாண்டு வரை ஒரு அழுத்தமான மறுமலர்ச்சிக் காலம். செம்மைக் கலைகள், செவ் இலக்கியங்கள், புதிய தத்துவங்கள்யாவும் படைப்பாளிகளால் உருவக்கப்பட்டன . மிகச்சிறந்த படைப்பாளிகளின் காலமது . ரெம்பிரண்ட் வென்ரெஜின் போன்ற மிகச் சிறந்த ஓவியர்கள் உருவாகி கொலோச்சி னார்கள் . ஐரோப்பிய மக்கள் செம்மையான மிக செம்மையான கலை வடிவங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது 17ஆம் நூற்றாண்டு வரை வருகிறது. இதில் ஒரு தேக்கநிலை உருவாகிறது. என்னவென்றால் காலம் காலமாக நாம் செய்து கொண்டிருப்பதை நாம் திருப்பிச் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. புதிதாகப் படைக்க முடியாதா? என்ற கேள்வி வருகிறது. அந்தத்தேக்கம் கிளாசிகல் போக்கினை தடுத்து நிறுத்துகிறது. அதுவரை பின்பற்றல்கள்தான் இருக்கிறது. ஒரு தேவாலய ஓவியம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஒரு கட்டிடம் என்றால் அதன் அமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதான பின்பற்றல்கள் இருக்கிறது.
வின்செண்ட் வேன்காக் என்பவர் ஒப்பற்ற ஓவியர். நவீன ஓவிய வரலாற்றில் அவரைத் தவிர்த்துவிட்டு நவீன ஓவிய வரலாற்றைப் பேசவே முடியாது. வாழும் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர். அவர் இறந்தபிறகுதான் அவருடைய படைப்புகள் கொண்டாடப்பட்டன. அவர் 18 வயதுக்குப் பிறகுதான் ஓவியம் வரையவே ஆரம்பித்தார். அதற்கு முன்பு ஓவியக் கண்காட்சிகளில் கேலரிகளில் வேலைகள் செய்கிறார். படங்களை விற்கும்போது அவருடைய அண்ணன் எதைக் கேட்டாலும் நல்ல படமாக எடுத்துக் கொடுக்கிறார். இது நல்ல படம் இல்லை. இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு ஓவியத்தை ரெஃபர் செய்கிறார். இதைப் பார்த்த அவருடைய அண்ணன் திட்டுகிறார். உன் வேலை படத்தை விற்பது மட்டும்தான். வருகிற படத்தை நல்ல படம் என்று மட்டும் தான் சொல்லனும். உன்னை யார் அதை வைத்து டிஸ்கஸ் பண்ணச் சொல்வது என்று கேட்கிறார் அவருடைய அண்ணன். அது

நல்ல படமா இல்லையா என்பது எனக்குத் தெரியும் என்கிறார். சொல்லிவிட்டு வேலையை விட்டு நின்றுவிடுகிறார்.
அடுத்ததாக பெயிண்டிங் செய்ய ஆரம்பிக்கிறார். செய்து முடித்தபிறகு, திரும்பத் திரும்ப பார்க்கிறார். அது எப்படி இருக்கிறது என்றால் ஓவியர் ரபேல் செய்தது போலவோ, மைக்கேல் ஏஞ்சலோ செய்தது போலவோ டாவின்சி செய்தது போலவே பிரதின்மையாக இருக்கிறது. அவர்களுடைய பாதிப்பு நிறையவே இருக்கிறது. எனக்கான அடையாளம் இது அல்லவே! என்னுடைய படைப்பாற்றல் எங்கே இருக்கிறது என்று தேடுகிறார். அப்படித் தேடும்போது இதுவரை செய்துவந்த படைப்புகள் எல்லாமே பிம்பங்களின் வழியாகவே வந்துள்ளது. நமக்கான படைப்பாற்றல் எங்கே உள்ளது என்ற கேள்வி எழுகிறது. ஒரு படைப்பாளிக்கான அடிப்படையான விஷயம் என்பதே கிரியேட்டிவ் என்பதில்தான் இருக்கிறது. அந்த ஆர்ட் வெர்ஷன் மூலமாகத்தான் படைப்பாளி நிற்க முடியும். கிரியேட்டிவிட்டியில் ஒரு எஸ்ஸென்ஸை எடுத்து வைக்கும்போதுதான் ஒரு படைப்பாளி தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளவோ, இனங்காட்டப்படவோ வாய்ப்பாக அமையும். அப்படி அவர் தேடும்போதுதான் சிக்கலாகிறது. அந்தத் தேடலின் விளைவாக இப்படியெல்லாம் ஓவியம் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வருகிறார். வேறு மாதிரியான ஓவியத்தைச் செய்ய முற்படுகிறார். அப்படி அவர் வரைந்த ஓவியங்களை ஆரம்பத்தில் யாரும் ஏற்றுக் கொள்ளவேயில்லை. குழுவாக இயங்குகிறார்கள். பிசாரோ, பால் காகின் ஜார்ஜ் சியுரட், பால் செசான் போன்ற ஓவியர்கள் இணைந்து குறுங்குழுவாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் ஏற்கனவே இருக்கின்ற போக்குகளை விட்டுவிட்டு தங்களுக்கான படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று இயங்கினார்கள் .
ஏற்கனவே இருக்கின்ற படைப்புகள் ஒரு பொதுப்போக்காக மாறுகிறது. நடராசர் சிலை எப்படி ஒரு பொதுப் படைப்பாக இருக்கிறதோ அப்படி ஐரோப்பிய ஓவியங்கள் என்பதும் ஒரு பொதுப்படைப்பாக இருக்கிறது. பிசாரோவுடைய படைப்புகள் ஒரு மாதிரியாக இருக்கும். காகினுடைய படைப்பு அதிலிருந்து மாறுபட்டு வேறுமாதிரியாக இருக்கும். செசான் வொர்க் அது வேறுமாதிரியாக இருக்கும். செசான் தான் Father of the contemporary movement. இதை யாரும் ஏற்றுக் கொள்வதேயில்லை. கண்காட்சியில் எல்லாம் இது படைப்பே இல்லை என்கிறார்கள் நாம் நவீனத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பது போல ஐரோப்பாவிலும் சிலர் அப்படி இருந்தார்கள். கிளாசிக் பெயிண்ட்டிங்கைப் பார்த்துப் பார்த்து ஒரு மைண்ட் செட் ஆகிவிட்டதால் நவீனத்தின் உச்சத்தில் ஆளுமை செய்த இம்ஃப்ரணிசம் ,எக்ஸ்பிரசனிசம் , ஃபாவிசம், பியூச்சரீசம் போன்ற நவீனத்தின் நாயகர்களான மார்ஷல் டூசம் , வில்லியம் தி கூனிங்க் , ஹென்றி மட்டிஸ் போன்ற ஓவியர்கள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை புதுமைகளில் திளைத்தனர் இவர்களின் புதுப்புது ஓவியங்களைப் பார்க்கும்போது புரியவில்லை. என வெறுத்தவர்களும் இருந்தார்கள் .

ஒரு ஓவியம் அழகாக இருக்க வேண்டும். தெளிவாக இருக்க வேண்டும். மனதை நெகிழச் செய்வதாக இருக்க வேண்டும். ரம்மியமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இவர்கள் செய்த ஓவியங்களுக்குப் பெரிதாக வரவேற்பு இல்லை. அதேசமயம் இதனை ஆதரிப்பவர்களும் இருந்தார்கள்.
தனக்கான ஓவிய பாதையை தேடிய வின்செண்ட் வேங்கோ விற்கு உடல் நலமும், மன நலமும் பாதிக்க படுகிறது, மருத்துவமனைக்குச் செல்கிறார். வைத்தியம் பார்க்கிறார்கள். வாழ்க்கையில் பல தோல்விகளை எதிர்கொள்கிறார். அந்தத் தோல்விகள் எல்லாம் “க்ரியேட்டிவிட்டி” தொடர்பான தேடலின் விளைவால் உண்டானது. கிரியேட்டிவிட்டி தொடர்பான தேடலினால் அவரது மனம் சிதைவடைகிறது. அவர் எதைத் தேடுகிறார்? படைப்பாளிக்குரிய படைப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். யாரோ ஒருவருடைய படைப்பைப் பிரதிமை செய்யக் கூடாது என்கிறார். இந்தச் சிக்கல் அவர் மனதைத் தொந்தரவு செய்கிறது.
பொதுவாகவே கலைஞனுக்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பர். நல்லகாட்சிகளையும் சிறந்த ஓவியங்களைக் காணும் போதும் மனம் தெளிவடைவதைப் போல, நல்ல ஓவியங்களைப் படைப்பதற்கும் மனம் தயாராக இருக்க வேண்டும். இதுமாதிரியான தேடலின் விளைவால் வின்சென்ட் வாங்க்கோ மனச்சிதைவுக்கு உள்ளாகிறார் ,அவரது வாழ்க்கை முடிந்துபோகிறது. ஒருகட்டத்தில் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு இறந்து போகிறார். அவர் இறந்தபிறகு, சிறிது காலத்திற்குப் பிறகு அவரது ஆளுமை மெல்ல வெளிப்படுகிறது. அவரது அண்ணன் தியோவுக்கு அவர் எழுதிய கடிதங்களை அவரது அண்ணி தொகுக்கிறார். படித்துப் பார்க்கிறார். அப்போது கடிதத்தில் இழையோடுகிற இலக்கிய நயம் அவரை மிகவும் பாதிக்கிறது. அதில் ஆழமான செரிவான இலக்கிய நயம் இருப்பதை உணர்கிறார். இவ்வளவு நாள் இத்தனை ஆழமான சிந்தனை கொண்ட படைப்பாளரின் படைப்புகள் எப்படி சுமாராக இருக்க முடியும் என்று நினைத்து, மீண்டும் அவரது ஓவியங்களை எடுத்துப் பார்க்கிறார். இலக்கிய நயம் மிகுந்த கடிதத்தில் இருந்து ஓவியத்திற்குச் செல்கிறார். அவரது மனதில் இருந்த தேடல் ஓவியத்தில் பிரதிபலித்திருப்பதை உணர்கிறார். கலை விமரிசகர்களும் வாங்காக் படைப்புக்கள் குறித்த கருத்துக்களை பதிவு செய்தனர் .
எனவே, சரியான கலை எதுவெனில், தனிப்பட்ட மனிதனின் ஆற்ற, தீர்க்கமான முடிவுகள் ஆகியவற்றில் இருக்கிறது. அது அவனுக்கான கலையாக இருக்கிறது. மக்கள் அதை ஏற்கிறார்கள், ஏற்கவில்லை என்பது வேறு விஷயம்.
பிகாசோவும் இப்படித்தான். பிகாசோவை இன்று வரை நாம் அவரை பேசுவதற்கு என்ன காரணம்? 50 வயதில் மேதைகள் எல்லாம் செய்த படைப்பு முயற்சிகளை அவர் 16 வயதிலேயே செய்துவிடுகிறார். அவருடைய அப்பாவும் அடிப்படையில் ஒரு ஓவியர்தான். பிகாசோவுக்கும் இந்தச் சிக்கல் வருகிறது. இது யாரோ ஒருவருடைய ஓவியம் போல இருக்கிறதே என்ற கேள்வி எழுகிறது. அந்தத்

தேடலின் காரணமாக சின்ன சின்ன சோதனை முயற்சிகளைச் செய்து பார்க்கிறார். வாழ்நாள் முழுவதும் சோதனை முயற்சிகளையே செய்து பார்த்தவர் பிகாசோ. அதில் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும், பல்வேறு அனுபவங்களையும்தமது படைப்புக்களில் வைத்துள்ளார். கடைசி காலத்தில் ஒருநாள் அவருடைய போட்டோகிராஃபரை அழைத்துக் கொண்டுபோய் அவரது மாளிகையின் அண்டர்கிரௌண்டில் அடுக்கப் பட்டிருந்த சில ஓவியங்களைக் காட்டுகிறார்.இதுவரை யாருமே பார்த்திராத ஓவியங்களாக இருக்கின்றன அவை. சுமார் 300 ஓவியங்கள் அண்டர்கிரௌண்டில் இருந்துள்ளன. அவரும் தன்னுடைய தனிப்பட்ட படைப்பாற்றல் மூலம்தான் இன்றளவும் நினைத்துப் பார்க்கப் படுகிறார். சிறந்த கலைஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள் எதில் நிற்கிறார்கள் என்றால் இப்படியான அவரவர்களுக்கான தனித்த அடையாளங்களின் வாயிலாகத்தான் அடையாளம் காணப்படுகிறார்கள்.
நிகழ்கலைக்கும் ,நுண்கலைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் என்ன? காலம்காலமாக இருக்கின்ற மரபார்ந்த கலை, கிளாசிக்கல் இசை இவையெல்லாம் ஏற்கனவே ஒரு ஃபார்மட்டில் இருக்கிறது. ராகங்கள், தாளங்கள் எல்லாம் யாரோ எழுதி வைத்திருப்பார்கள். வரிகள் கூட யாரோ எழுதியிருப்பார்கள். ஒரு கர்நாடக கச்சேரி செய்ய வேண்டுமெனில் 50 கீர்த்தனைகள் தெரிந்தால் போதும். அதில் கொஞ்சம் சங்கதிகள் சேர்ப்பார்கள். ஆனால் ஓவியமும் சிற்பமும் நிகழ்காலப் புரிதல் இல்லாமல் செய்யவே முடியாது. அவரவர்க்கான படைப்பை அவரவர்தான் செய்தாக வேண்டும். ஒரேமாதிரியான படத்தைக் கேலரியில் வைத்தால் பெயர் கெட்டுவிடும். தனிப்பட்ட முறையில் அவரவர்க்கான படைப்பைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இத்தகைய தேவையை, தேடலை படைப்பாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆழமான பின்புலம் உள்ள கலைவடிவங்கள் எவை? கட்டிடமாக இருக்கட்டும், சிற்பமாக இருக்கட்டும், ஓவியமாக இருக்கட்டும் எல்லாவற்றுக்கும் ஒருவிதப் பார்வை இருக்கிறது. இந்தக் கலை வடிவங்களுக்கும் ஐரோப்பியக் கலைவடிவங்களுக்கும் சிறிய வேறுபாடு உள்ளது. அது ஆழமான ஒருவித அக அழகை அடிப்படையாகக் கொண்டது. இந்தியக் கலையில் சிவன் துர்க்கை போன்ற மனிதர்கள் போலவே இருக்கின்ற, ஆனால் மனித உருவத்திலிருந்து சற்று மாறுபட்ட உருவ அமைப்பு இருக்கும். சிவன் என்றால் சிவனுக்கென்று ஒரு தாளம் இருக்கும். அதாவது ஸ்கேல் இருக்கும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு ஸ்கேல் இருக்கிறது. மூக்கு இருக்கும். ஆனால் மனித மூக்கு போல இருக்காது. கண் இருக்கும். ஆனால் மனிதனுடைய இயல்பான கண் போல இருக்காது. ஏன் என்றால் கடவுள் என்பது நம் பக்கத்து வீட்டில் இருக்கின்ற ஒருவரைப் போல, அல்லது நமக்குப் பரிச்சயமான ஒருவரின் முக அமைப்பைப் போல இருக்காது. இதை அவர்கள் மாற்றவே மாட்டார்கள். இதுதான் இந்தியக் கலைகளுக்கு உள்ள அடிப்படையான கூறு. ஒரு சிவன் கோவில் எப்படி இருக்க வேண்டும்? ஒரு பெருமாள் கோயில் எப்படி இருக்க வேண்டும்? கிராம தெய்வங்களுக்கான கோயில் எப்படி இருக்க வேண்டும்
என இந்தியக் கலை வடிவங்களில் ஒரு வரையறை இருக்கிறது. இந்த வரையறையை ஒட்டித்தான் காலம்காலமாகக் கோவில்கள் வடிவமைக்கப்படுகின்றன. இருந்தாலும்கூட நம்மிடம் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று மரபுகளையும் பண்பாடுகளையும் பாதுகாக்க வேண்டும் என்பது. மற்றொன்று அவற்றை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாடு.

புகைப்படம், திருவாவடுதுறை ஆதினத்தின் உட்புறம் நாகலிங்க மரத்தருகே அருமை நண்பரும் ஓவியருமான .எம்.அனீபா எடுத்தது .
அமர்ந்து இருக்கும் சிறுவன் அங்கு நூலகத்தில் பணிபுரியும் ஒருவரின் மகன், ஆதீனத்தின் உள்ளே எங்களுக்கு வழிகாட்ட உடன் வந்த அமைதியான சார்.

பின்னூட்டமொன்றை இடுக