மனித சாயலும் மத்தியானத்தின் ஒளியும்

Thenmozhi Das

என் படுக்கையிலிருந்து அப்பாம்பு சென்றபின்
மூன்று முட்டைகள் கிடக்கக் கண்டேன்
ஒரு கணம் முடியும் முன்
அவைகள் நீர்க்குமிழியெனப் பெருகி
வெளியில் உயர்ந்த போது
ஒன்றினுள் சிங்கத்தின் உருவம் பெறுகக் கண்டேன்
தனது வீரியமிக்க கால்களினால் குமிழியை உடைத்தது

மற்றொன்றில் குதிரை காற்றால் அக் குமிழியை நிறைத்தபடியே ஓடத்துவங்கியது

பிரிதொன்றில் இரண்டு மான்குட்டிகள் தன் கொம்புகளால்
விளையாடிக்கொண்டிருந்தன

எல்லாவற்றிகும் மனித சாயலும் மத்தியானத்தின் ஒளியும் சூழ்ந்திருக்கக் கண்டேன்

மான் குட்டிகளின் மேல் என் கனிவு
பனிபோல் இறங்கியது
தழுவத்துவங்கும் முன் குமிழிகள் பறக்க
எட்டுத்திசைகளிலும்
எட்டுவகைக் காற்றை உணர்ந்தேன்

காந்த மண்டலம் அச் சிங்கத்திற்கு திறவுண்டதையும்
தீர்க்கரேகை வழியாய் அக் குதிரை கடந்ததையும்
சுழலும் பூமியின் கரிய நிழல்
ஸவுந்தர்யம் மிக்க மான்குட்டிகளை
வானத்திற்குள் வளைத்துக் கொண்டதையும் கண்டேன்

வேற்றொரு கிரகத்திற்கு அருகே சிங்கம் கடக்கையில்
அதற்கு சிறகுகள் முளைக்கக் கண்டேன்

அப்போது எனக்குள் பல பள்ளத்தாக்குகள் நகர்வதையும்
மழையுண்ட வேர்கள் மூளையின் தாழ்வாரம் வரை நுழைவதையும் உணர்ந்தேன்
சிங்கத்தின் சிறகுகள் என்னை அழைத்தன

மலைகள் மண்டிய வனாந்தரமும் பறவையாய் என்னை ஏந்திக் கொண்டு பறந்தது
மான் குட்டிகளின் கால்கள் சில நதிகளை எனக்கென நகர்த்தி வைத்தன

சிங்கத்தின் கண்களில் தேநீரைப் போன்ற கடல் அசைவதைக் கண்டேன்

அக் கண்களை மீண்டும் மீண்டும் பார்த்ததில்
குமிழிகள் எங்கோ மீண்டும் உருவானதையும்
குதிரையையும் மான் குட்டிகளையும் எங்கோ
அவை எடுத்துச்சென்றதையும்
நான் காணவில்லை

சிங்கத்தின் கண்கள் என்னை கண்டு கொண்டேயிருந்தன

Composed By – Thenmozhi Das
5.11.2011 … 4.18 am
Edited again 22.10.2013 exactly at 4am to 4.18am

நிராசைகளின் ஆதித்தாய்

Painting : Leonardo Da Vinci

தேன்மொழி தாஸ்

பின்னூட்டமொன்றை இடுக