ஒற்றை வர்ணம்

Ashroff Shihabdeen

வானவில்லொன்று வந்திறங்கி நின்றது போல்
வெளிச்சம் தெருவெங்கும்
பளிச்சென்ற தோற்றம் பலவர்ண ஆடையிலே
பஸ் பார்த்து நிற்கின்றாய்

வர்ணக் கலவை வார்த்த புடவைகளில்
இந்த நூற்றாண்டின் இணையற்ற வடிவமைப்பு
ஆள்பாதி என்றாலும் அழகுமிகு ஆடையிலே
அழகாகத்தான் இருந்தாய்

பக்கத்தே நிற்கின்ற பெண்கள் பார்த்தார்கள்
எட்டி நின்றிருந்த இளைஞர்களும் பார்த்தார்கள்
தரிப்பே உன்மீது தனிக்கவனம் செலுத்தியது
வெசாக் காலத்
தோரணத்தைப் போல தோற்றம் கொண்டிருந்தாய்

வர்ணங்களுக்கு வலிமை மிகவுண்டு
வாழ்க்கை
வர்ணங்கள் கொண்டே வடிவம் எடுக்கிறது

சும்மா கதையா
நிறங்களுக்குள்ளே நீந்தி விளையாடும்
ஓவியர்கள் எல்லாம் உலகப் புகழ் பெற்றார்

கவன ஈர்ப்புக்கு
நிறங்களை மிஞ்ச நெம்புகோல் கிடையாது
வாழ்வை ரசிக்க வரமாய்க் கிடைத்ததிது

மறுகரையில் நின்று மாறுவதற்கிடையில்
வெட்கம் இன்றி
மூன்று முறை உந்தன் முகம்பார்த்தேன்

நான்காம் முறைபார்க்க நான் நிமிர உன்பின்னால்
கூன் விழுந்த கிழவர் குறுக்கறுத்தார்
அதைக் கண்டேன்

கையில் வெண்பிரம்பு, கடக்கும் அம்மனிதர்
காலம் முழுக்கக் கண்டதெல்லாம் ஒரு நிறமே

எண்ணம் உறுத்த எட்டடி நடைபோட்டேன்
என்கண்ணில் எந்த நிறங்களும் தெரியவில்லை

அஷ்ரப் சிஹாப்தீன்

பின்னூட்டமொன்றை இடுக