தமிழ் எழுத்தாளன்

பாரதி இலக்கியப் பண்பலை- வட்ஸ்அப்

எழுத்தாளன்

எழுத்தாளர்களையே பாத்திரங்களாக வைத்து நாவல் எழுதியவர்கள் உலகில் வேறு எங்கும் உண்டா? நகுலன் தான் அதைச் செய்துள்ளார். இதன் காரணமாக அவரது நாவல்கள் பிரசுரம் பெறுவதில் சிரமம் இருந்திருக்கிறது. பெரும்பாலும் அவர் தானே தான் வெளியிடவேண்டியிருந்திருக்கிறது.
இருப்பினும் அவர் சளைத்தவரில்லை. தனிமையும் அதன் சோகமும் தான் அவர் எழுத்துக்கு பெரிய காரணிகள் என்று சொல்லவேண்டும். இதற்கு சாட்சியம் அவர் எழுத்துக்களில் நீங்கா இடம் பெறும் 100 அல்லது 200 மிலி, பின் ஒரு கற்பனைப் பாவை, ‘சுசீலா’. இரண்டும் அவரது தனிமையின் சோகத்தைத் தணித்தவை. ஜெயதேவருக்கு சாருஷீலே, நகுலனுக்கு சுசீலா.

நகுலன் தன்னை சிறப்பாக ஒரு கவிஞராக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார் என்று எனக்குத் தோன்றுகிறது. கவிதை தவிர மற்ற எல்லாவற்றிலும், விமர்சனம், கட்டுரைகள், நாவல்கள் போன்ற எல்லாவற்றிலும், நமக்குக் கிடைப்பது, நகுலன் படித்த புத்தகங்கள், சந்தித்த எழுத்தாளர்கள், அவர்களுடனான அவரது அவ்வப்போது மாறும் உறவுகள், கசப்புகள், மறைமுக தாக்குதல்கள், கிண்டல்கள் போன்ற சமாச்சாரங்கள்.
எழுத்துலகமும், எழுத்தாளர்களும் நகுலனும் தான் அவர் நாவல்களின் கதா பாத்திரங்கள். பெயர்கள் கற்பனையேயானாலும், யாரைச் சொல்கிறார் என்று படிப்பவர்க்கு நன்றாகவே தெரியும். தெரியாது போகும் அளவுக்கு அதை மறைப்பதில் நகுலனுக்கு அக்கறை இல்லை. மறைமுகமாகத் தாக்கினாலும், தாக்கப்படுபவருக்கு அது தான்தான் என்று உறைக்காவிட்டால் அதில் என்ன சுவாரஸ்யமிருக்க முடியும்?

நகுலனின் ஒவ்வொரு நாவலைப் படிக்கும் போதும், நகுலனின் உறவுகள் மற்ற எழுத்தாளர்களோடு இருக்கும் அவ்வப்போதைய வெப்ப தட்பங்களைச் சொல்லும். ஒரு நாவலில் கண்ட வெப்ப தட்பம் அடுத்த நாவலில் தொடரும் என்பது நிச்சயமில்லை. உறவுகள் கெட்டிருக்கலாம். அல்லது சமாதானம் அடைந்திருக்கலாம். கற்பனைப் பெயர்கள் மறைப்பதால், யாரும் இதில் தப்புவதில்லை.

இந்த விசித்திர உலகத்தைப் பற்றி நகுலனின் நாவல்கள் விஸ்தாரமாகச் சொல்வதற்கு மேல், நீல பத்மனாபனின் தேரோடும் வீதியும் (‘மறைந்து தாக்குதல், வத்தி வைத்தல் காரியங்களைச் செய்யும் கே.எச்.கே’) ஆவணப் படுத்தும். இன்னும் சிலரும் (நகுலன் நாவலில் வரும் ஹேமசந்திரன், நீல பத்பனாபன் நாவலில் வரும் மந்திரமூர்த்தி) நாவலாக அல்ல, கவிதை வடிவில் நகுலனுக்கு பிரதி உபசாரம் செய்துள்ளனர். சுவாரஸ்யமான மனிதர் நகுலன். அவரது இப்பரிமாணமும் சுவாரஸ்யமானது தான்.

– வெங்கட் சாமிநாதன்

பின்னூட்டமொன்றை இடுக