அமைதியின் அடர்வன இரவுகள்

Nasar Ijas

இத்தனை நாள் இரவிலும்
இந்தப் பசி எனக்கொன்றும்
புதிய ஒன்று இல்லை.
என் அறை முழுவதும் அடங்கியிருக்கின்ற
அமைதியின் அந்தரங்கத்தில்
வயிற்றிலிருந்து புறப்படும்
கரடு முரடான சந்தம்
ஒரு மோசமான சங்கீதமாக
எனக்குள் இன்னும்
இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்பிப் போயிருக்கின்ற குடலும்
ஒட்டிப் போயிருக்கின்ற கன்னமும்
பொட்டல் நிலத்தில்
வளர்ந்து கிடக்கின்ற பயிரின் தாகத்துக்கு நீரற்றுப் போயிருக்கின்ற
நிலையை மீண்டுமொரு தடவை
நிரூபித்துக் கொண்டிருந்தது.
நீண்டு வளர்ந்து கொண்டிருக்கின்ற
இந்த இரவை இன்னும்
வளர விடாமல் ஒரு குவளை
தண்ணீரோடு முடித்துக் கொண்டு
தூங்கி வழிய முனைகையில்
சமையலறை மேசையில்
வைக்கப்பட்டிருந்த பீங்கானை
அங்கு வந்திருந்த பூனையொன்று
நாவால் நக்கி ஏக்கத்தோடு
அவ்விடத்தை விட்டு நகர்ந்தது.

-நஸார் இஜாஸ் –

Nasar Ijas

பின்னூட்டமொன்றை இடுக