மன்சூர் ஏ. காதிர் -கவிதை

எதுவரை

நிச்சயமாய் அது எனது அழைப்பாய்
இருக்க முடியாதே தோழீ

மூன்றரை தசாப்தங்கள் வரை
கிடப்பிலே போடப்பட்டு பிரிதலை முக்குளித்த பின்னர்
புன்னகைத்தலைக் கூட விலாசம் மாற்றியவர்களல்லவா நாம்.

புரிந்து கொள்ளலின் ஒவ்வொரு செதில்களும்
வரட்டுக் கௌரவ கருநாக பாம்பின்
விஷ நாக்கினால் தீண்டப்படுகையில்
களிப்படைந்து விழித்திருந்த கபோதிகள் அல்லவா நாம்
அப்படியாய் இருக்க
ஒரு “நியூசென்ஸ் கோள்” போல
நான் உன்னையோ அல்லது நீ என்னையோ அழைத்தல்
எவ்வாறு சாத்தியம்?

மிகவும் திமிர் கொண்ட கழுதை
என்று என்னை நீயும்
எப்போதுமே கொட்டிவிடத்தயாராய் உள்ள ஒரு ராணித் தேனீ
என்று உன்னை நானும்
ஒற்றை நேர் கோட்டில் புரிந்து கொண்ட
அந்த ஒன்று மட்டும்தானே நமது ஒற்றுமை தோழீ!

நாம் காணும்போதெல்லாம் இரண்டாம் முறை
திரும்பிப்பார்க்க நானோ அல்லது நீயோ ஆசைப்பட்டதே இல்லையே.

நமது வரட்டுக் கௌரவத்தை
தொடர்ந்து நாம் கௌரவிப்போமே!

பின்னூட்டமொன்றை இடுக