பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

Brinthan Kanesalingam 

வலைப்பூ

மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள் சிறை வைத்தேன். அறைக்கு மேலே கட்டடங்கள் கிடையாது. வெயிலுக்கு திறந்துவிடப்பட்ட மொட்டைத் தலை போல எனது அறை. உலகத்தின் முழு உஷ்ணமும் அதற்குள் தான். கண்ணாடி யன்னலைத் திறந்தால் சிங்களப் பாடசாலை ஒன்றின் வெட்டை மைதானம். விரும்பிக்கூட குளிர்காற்றை தரமுடியாத நிலைமை மைதானத்திற்கு. ஜன்னலைத் திறந்து அருகில் கதிரையைப் போட்டிருந்தால் வருகின்ற அனல் காற்று முகத்தின் மெல்லிய குழிகளுக்கூடாக ஊடுருவி முகத்தெலும்புகளை சூடாக்கும்.  மாடியிலிருந்து இறங்குகின்ற சூட்டை வயதான காற்றாடி வலிந்து அறை முழுக்கப் பரப்பும். ராத்திரி பன்னிரண்டிற்கும் முகமும் மேலும் பிசுபிசுப்பாகவே இருக்கும். நிறைந்து பெய்கின்ற மழையின் போதும் இதே நிலைமை தான். யன்னலுக்கருகில் வயதாகிப்போய் கிளைகள் மட்டும் எஞ்சிய பெயர் தெரியாத மரமொன்று நிற்கிறது. அதற்கு காற்று என்று பெயர் வைத்திருக்கிறேன். எல்லாமும் இழந்து இறந்துபோய்க்கொண்டிருக்கிறது அது. மைதானத்தின் எதிர்க்கரையில் ஆறேழு வாழைமரங்கள் நிற்கின்றன. அனைத்தும் ஒருமித்து காற்றில் அசைய எனது காற்றோ விறைப்பான பிளாஸ்டிக் பொம்மை மாதிரி நிற்கும். உடம்பு மடிந்திருக்கின்ற இடங்களிலெல்லாம் உஷ்ணக்காற்று வியர்வையையும் கடியையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும். குறுகிய குளியலறைக்குள் சிலை போல நின்று சுற்றி தண்ணீர் தெளித்துவிட்டுவந்தால் கொஞ்ச நேரத்திற்கு நிம்மதியாக இருக்கும். அப்படியும் சகித்துக்கொள்ளாத நேரங்களில் அறையைவிட்டு வெளியேறி கீழே இறங்கிவிடுவேன். காற்று சுத்தமானதாக இருக்காது தான், அகற்றப்படாத குப்பைகளின் வெடுக்கோடு குமட்டுகின்ற வாசம், இரண்டு மாதங்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. கீழே இறங்கினால் அம்மல் இருக்காது. பிசுபிசுப்பு இருக்காது. வெதுப்பகம் ஒன்றிலிருந்து தப்பித்துவந்த பச்சை மாவைப்போல மனதோடு நிம்மதி ஒட்டிக்கொள்ளும்.

 

உடல் முழுக்க வியர்த்து கண்கள் இரண்டும் எரிந்துகொண்டிருந்த நாளொன்றில் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு படிகளில் இறங்கினேன். இரண்டு மாடிகள் இறங்கி கீழ் தளத்திற்கான படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான், வெள்ளையும் வெளிர்ந்த மஞ்சள் நிறமுமுடைய பூனை என்னை மறித்தது. சதா காலமும் இதே படிகளில் இதே வேகத்தோடு இதே வெறுப்போடு இதே அலைச்சலோடு  ஏறுகிறேன் இறங்குகிறேன். எப்போதும் இடை மறிக்காத பூனை இன்று உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறது.

 

சிறியவனாக இருக்கும்போதே மிருகங்களை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. முக்கியமாக பூனைகள். மூன்றாமாண்டு படிக்கும் போது அழகியல் பாடத்திற்காக அம்மா பாரதியின் வெள்ளைநிறத்தொரு பூனையை சொல்லித்தந்தார். அம்மாவின் கண்கள் பிரகாசமானவை. எந்த நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கண்களையும் உதட்டினையும் சுளித்து அவர் எனக்குச் சொல்லித்தந்த பாடலை ஐந்தாம் ஆண்டு முடியும் வரை  நடித்துக்காட்டி அழகியல் பாடத்தை தேற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவிலிருந்த நளினம் ஒவ்வொரு முறை நான் பாடி நடிக்கும் போதும் எனக்குள் ஒட்டிக்கொள்ளும். எங்கள் வீட்டில் எப்போதும் தாய்ப்பூனையும் குட்டிகளும் அலைந்தபடியே திரியும்.  வீட்டின் ஓரத்தில் ஒதுக்கமாக இருக்கும்  பழைய உடுப்பு பெட்டிகளுக்குள் குட்டி போட்டுவிட்டு வீடு முழுக்க குட்டிகளை பாதுகாத்துவைத்து தன்னை ஒரு ரகசிய போராளியைப் போல நினைத்துக்கொண்டு திரியும். முதன்முதலாக எங்கிருந்தோ வீட்டிற்கு வந்து சேர்ந்தது வெள்ளையும் கறுப்பும் கலந்த பெண் பூனையொன்று. அன்றிலிருந்து எங்கள் வீடு பூனைகள் சரணாலயம் ஆனது. அந்தப் பூனையின் மூன்று தலைமுறையினைப் பார்த்திருக்கிறேன். வீட்டைவிட்டு வரும் போது அதன் மூன்றாம் தலைமுறை தன் அடுத்த  தலைமுறை உலகத்திற்கு கொண்டுவர சுமந்துகொண்டிருந்தது. நான் அவற்றைத் துரத்தவிட எத்தணித்ததில்லை. எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதைத் தவிர பூனைகள் பற்றி நான் சிந்தித்தது கிடையாது. ஆரம்பத்தில் அவை எல்லோருக்கும் அருவருப்பாக தெரிந்தன.  நசுங்கிக்கொண்டு திரிகின்ற குணத்தை எங்கள் வீட்டில் எல்லோரும் இயல்பாக வெறுத்தார்கள். இதனால் ஆரம்பத்தில் எல்லோரும் சேர்ந்து பிடித்துக்கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டு வந்தாலும் அடுத்தநாள் அதே கள்ளக்கண்களை விழித்தபடி வந்துநிற்கும். ஒரு முறை வீட்டிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருக்கின்ற ஓமந்தைக் காட்டில் துரத்திவிட்டு அப்பா வீட்டிற்கு வந்த இராண்டாவது நாளே அவை வீட்டிற்கு வந்து சேர்ந்தன. பூனைகளைக் குட்டிகளாக இருக்கும் போதே பிடித்துக் கடத்திவிட வேண்டும். நீங்கள் நினைப்பதை விட இன்னும் சிறிய குட்டிகளாக. இப்படித்தான் சற்று வளர்ந்த குட்டியினைப் பிடிக்கப்போய் எங்கள் தெருவின் மூலைவீட்டு அக்கா கைகளிரண்டிலும் நகக்கீறல்களோடு அவளது வீடு திரும்பினாள். பூனைகள் கொடூரமான சகவாசிகள். எங்கள் வீட்டிலிருந்த பூனை, எங்கிருந்தோ எல்லாம் பூனைகளை அழைத்து வீட்டில் விட்டுவிடும். குடலைப் பிடுங்குகிற நாற்றம் எடுக்கிற கறுப்பு பூனை ஒன்றை ஒருமுறை கொண்டுவந்தது இரண்டாம் தலைமுறைப் பூனை. தனி மஞ்சள் நிற பூனை ஒன்றை மூன்றாம் தலைமுறைப் பூனை கொணர்ந்தது. வாழ்க்கையில் நான் சந்தித்த மிகக் கொடூரமான உயிரினங்கள் அவையிரண்டும். அவற்றின் உடலிலிருந்து வீசுகின்ற பிண நாற்றம் நரகத்தை ஞாபகப்படுத்தும். அவை வெளி விறாந்தை, அறைகள் என்று கடைசியில் சமயலறைக்குள்ளும் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அமசடக்கு கள்ளன் மசிவதைப்போல என்னைப் பார்த்ததும் நடந்துகொள்ளும். இப்போது இவையனைத்தையும் விட இன்னொரு பூனையை எதிர்கொள்கிறேன். என்னை மறிக்க நாதியற்ற இந்த பெருநகரத்தின் நெருக்கலான குடியிருப்புகளில் பூனையொன்று இடைமறிக்கிறது.

 

மனிதர்கள் தவிர

மற்ற பிராணிகளுடன்

பழக்கமில்லை எனக்கு

 

எனினும்

உள்ளங்கைச் சூடுபோல

மாறாத வெதுவெதுப்புள்ள

பூனைகளின் சவகாசம்

சமீபகாலமாய் பழக்கமாச்சு

 

மயிலிறகை அடை வைத்த பருவத்தில்

கால் குலுக்கக் கை நீட்டி

விரல் கிழித்த பூனையால்

‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்

 

இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்

வடுவாக மிஞ்சிய இப்போது

பூனைப்பயம் பொய்த்துப் போச்சு

 

வீடு மாறியபோது புரிந்தது –

நன்றியின் சொரூபம்

நாய்களல்ல

பூனைகள்

 

நாய்கள்

மனிதரைச் சார்ந்தவை

சுதந்திரமற்றவை

 

எப்போதோ

சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை

இன்னும் உறிஞ்சியபடி

காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது

 

பூனைகள்

வீடுகளைச் சார்ந்தவை

சுதந்திரமானவை

 

நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு

பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்

 

உலர்ந்த துணியில் தெறித்த

சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்

பூனைகளுடன் இப்போது

பகையில்லை எனக்கு

 

உடல் சுத்தம்

சூழ்நிலைப் பராமரிப்பு

ரசனையுள்ள திருட்டு

காதற்கால கதறல்

பொது இடங்களில் நாசுக்கு – என்று

பூனைகளைப் புகழ காரணங்கள் பலப்பல

 

எனினும்

என்னைக் கவரக்

காரணங்கள் இரண்டு

 

இதுவரை சுகுமாரன், இனி நான்

 

இல்லை

ஒன்றே ஒன்று

 

பூனைகள்

என்வீட்டின் ஒவ்வொரு அணுவையும்

எனக்குள் உருவாக்கி

மீட்டுகின்றன

 

 

என்னையறியாமல் அந்தக் கணத்தில், என்னை வழிமறித்து தன் பின்புறத்தை தூக்கி உடலை சிலிர்ப்பிக்கொண்டு நிற்கின்ற இந்தப் பூனையின் முன் கண்களை மூடி மண்டியிடுகிறேன். என்னுடன் முழுதும் கண்ணீர்.

 

எங்கள் வீட்டிலிருக்கின்ற மூன்று தலைமுறைப் பூனைகளும் உரத்துச் சத்தமிடாது. தமக்கு மட்டுமே கேட்கின்ற அலைவரிசையில் பேசிக்கொள்ளும். ஆனால் இடையிடையே வந்து போகின்ற நாற்றமடிக்கும் நசுங்கற் பூனைகளின் அலறல் பயப்படுத்துபவையாக இருந்தன. நள்ளிரவில் தாயைப் பிரிந்த குழந்தையொன்றைப்போல அழும். எப்போதும் கேட்காத பூனைகளின் சத்தம் காதின் மென்சவ்வுகளில் உறைந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.

 

நானும்

கண்மூடுகிறேன் ‘மியாவ்’

பின்னூட்டமொன்றை இடுக