எழுத்தாளர் எப்படி உருவாகிறார்?

பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் உலகெங்கும் பிரபல்யம் பெற்றிருந்தனர். ஆனால் யூரோப்பில் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் தெரிய வந்த அளவுக்கு, யூரோப்பிய எழுத்தாளர்கள் பிரிட்டனில் தெரிய வந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. யூரோப்பிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஒரு குளிர்ப்போர் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. தீவுகளுக்கே ஓரளவு தனிப்படக் கிடக்கும் நிலையில்தான் மன அமைதி கிட்டும் போலிருக்கிறது. அதையே எழுத்தாளர்களும் பிரதிபலிக்கிறார்களோ என்னவோ.

பயணிகளாக வந்து எங்களைப் பார்த்து ரசித்து விட்டுப் போங்கள், வந்து குடியேறி விடாதீர்கள் என்று சொல்பவர்களாகவே பிரிட்டிஷார் எப்போதும் இருந்திருக்கின்றனர் என்பது ஒரு கர்ண பரம்பரைக் கதை. ஆனால் பிரிட்டிஷார் பற்பல நாடுகளுக்கும் சென்று வருவதோடு, ஒரு கணிசமான அளவில் அவர்கள் பன்னாடுகளில் தங்கி விடவும் முடிவு செய்திருக்கின்றனர். இதெல்லாம் ஏகாதிபத்திய அரசாக பிரிட்டன் செயல்பட்ட காலத்து நிகழ்வுகள். சமீப காலத்தில் பிரிட்டிஷார் ஓரளவு ஏழையான யூரோப்பிய நாடுகளில் பொருளாதார ‘அகதிகளாக’ -அதாவது பிரிட்டனின் விலை உயர்வு நிறைந்த பொருளாதாரத்திலிருந்து தப்பி, குறைவான செலவில் வாழக் கூடிய நாடுகளாகப் பார்த்துத் தங்க அங்கு போனவர்கள் இவர்கள்-  வாழ்ந்திருக்கிறார்கள். இருப்பினும் தொடர்ந்து யூரோப்பிய இலக்கியம், தத்துவம், கலை ஆகியனவற்றில் பிரிட்டிஷ் மக்களுக்கு அத்தனை ஈடுபாடு இருந்ததில்லை, இன்னும் கூட அத்தனை வளரவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது.

அந்தக் கருத்தை ஜூலியன் பார்ன்ஸ் என்னும் பிரிட்டிஷ் எழுத்தாளர் தன் பேட்டி ஒன்றில் சிறிது புன்னகையோடு அடிக்கோடிடுகிறார். அவரே பிரிட்டனில் ஃப்ரெஞ்சு இலக்கியத்தில் அவருக்கிருக்கும் அபரிமித ஈடுபாட்டால் சிறிது இளப்பமாகவும், ஏதோ இங்கிலிஷ் இலக்கியத்துக்கு அவர் துரோகம் செய்கின்றார் என்பது போலவும் கருதப்படுவதாக அவரே இந்தப் பேட்டியில் சொல்கிறார்.  இத்தனைக்கும் பார்ன்ஸ் இங்கிலிஷ் இலக்கியத்தின் நட்சத்திர எழுத்தாளர் ஸ்தானத்துக்குச் சமீப வருடங்களில் நகர்ந்திருப்பவர். அவர் ’80களிலிருந்தே நிறைய எழுதி வந்திருக்கிறார்.

இந்தப் பேட்டியை நடத்துபவர்கள் ஸ்பெயினின் ஒரு பள்ளி மாணவர்களின் குழு. இந்தப் பள்ளியின் பெயர் ‘El País de los Estudiantes’.   கூகிளின் இங்கிலிஷ் மொழிபெயர்ப்பு, ’த கண்ட்ரி ஆஃப் ஸ்டூடண்ட்ஸ்’ என்று இந்த ஸ்பானிய மொழிச் சொல்லை மொழி பெயர்க்கிறது. இந்தப் பள்ளி, நடு மற்றும் உயர் நிலைப்பள்ளி மாணவர்களைப் பத்திரிகையாளர்களாகப் பயிற்றுவிக்க உருவாக்கப்பட்ட ஒரு பாடத்திட்டத்தை அமலாக்கும் பள்ளி. இதன் மாணவர்கள் 2015 ஆம் ஆண்டு ஜூலியன் பார்ன்ஸை ஒரு பரிசுக்குத் தேர்ந்தெடுத்த பின் அவருடன் நடத்திய சிறு பேட்டிக்கான காணொளியை இங்கு பார்வைக்குக் கொடுத்திருக்கிறோம்.

இந்தப் பேட்டியில் பார்ன்ஸ் சில ருசிகரமான கருத்துகளைத் தெரிவிக்கிறார். இவற்றின் சாரத்தை இங்கு கொடுப்பது பேட்டியைக் காண உங்களைத் தூண்டலாம் என்பதால்தானே அன்றி, அதைப் பார்க்காமல் இதை மட்டும் படித்து விட்டுப் போய் விடலாம் என்ற வசதியைக் கொடுக்க அல்ல. பேட்டியைக் காணத் தேவையான காரணங்களில் பார்ன்ஸின் இங்கிலிஷ்தனம் நிறைந்த உச்சரிப்புள்ள இங்கிலிஷ் பேச்சு ஒன்று.

முதலாக, அவர் சொன்ன சில கருத்துகளைக் கவனிப்போம்.

மாணவர்கள், எழுத்தாளர்கள் எப்படி உருவாகிறார்கள் என்று கேட்க, பதிலாக ஜூலியன் சொல்கிறார், அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள், தாமே முயன்று என்று அடுத்துச் சேர்த்துக் கொள்கிறார். ஆனால் அப்படி உருவாக்குதலிலும் ஒரு கூறு தன்னியல்பு என்பதைச் சார்ந்தது. இது ஒரு வளம், தானாகக் கிட்டி இருப்பது. [பார்ன்ஸ் நாத்திகர் என்பதால் இறையின் கொடை என்று சொல்வதில்லை. இயற்கையில் நிகழ்வது என்றும் எளிமைப்படுத்துவதில்லை. மரபணுக்கள் வழியே இந்த வகை இயல்புகள் கடத்தப்பட்டுக் கிட்டினாலும், அவை கறாரான எதிர்பார்ப்புகளைச் சார்ந்து நிகழ்வதில்லை என்பதை அவர் அறிந்திருக்கிறார். இந்த வகைச் சர்ச்சையை அறிய அவர் எழுதிய ஓர் அருமையான புத்தகத்தை வாசகர்கள் படித்தல் அவசியம். ‘நத்திங் டு பி ஃப்ரைட்டண்ட் அபௌட்’ என்ற புத்தகம் அது.  Nothing to be Frightened About வெளி வந்த வருடம் 2008.  அந்தப் புத்தகத்துக்கான ஒரு மதிப்புரை இங்கே: https://www.theguardian.com/books/2008/mar/02/biography.julianbarnes ] இந்த வளம் இல்லாதவரும் அதை முயற்சியாலும், உழைப்பாலும் பெறலாம். மிகச் சிலருக்கே எந்த உழைப்பும் உதவாத நிலை இருக்கும் என்று தன் நம்பிக்கையை மாணவர்களுடன் பகிர்கிறார்.  எங்கே (எந்த ஊரில்) பிறந்தவர் என்பது எல்லாம் அத்தனை தாக்கமுள்ள விஷயங்களாக அவருக்குப் படவில்லை.

புகழ் பெற்ற பெருநகரம் என்பதோடு மட்டுமல்லாமல், உலகின் மாநகரங்களிலும் ஒன்றான லண்டனில் வளர்ந்திருக்கிறவருக்கு அதன் தாக்கம் தன் மீது என்னவாக இருந்திருக்கும் என்பது தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை. ஆனால் மாநகர் வாழ்க்கை என்ன வளங்களை ஒருவருக்குக் கொடுத்திருக்கிறதோ அதற்கொத்த சில வளங்களை வேறு பரிமாணங்களில், வேறு தளங்களில் அது கொடுக்க முடியாமல் இருந்திருக்கும், இழப்பும் அளிப்பும் ஒப்பீடு செய்து பார்க்கத் தக்கனவாக இரா என்பது அவருடைய உட்கிடையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

மற்றவர்கள் பேசுவதைக் கேட்டறிவது என்ற, எழுத்தாளருக்கு அவசியமான ஒரு வளம் ஒரு அளவில் இயற்கையாகக் கிட்டுவது என்றாலும், இது சுத்தமாக இல்லவே இல்லாதிருப்பவர்கள் மிகக் குறைவான நபர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் தான் கருதுவதைத் தெரிவிக்கிறார். ஆனால் இது இல்லாத போது அது ஒரு குறைதான், அதை மீறி எழுத்தாளராக வளர முயற்சி தேவைப்படும் என்பதையும் சொல்கிறார்.

முதல் புத்தகத்தை எழுத எத்தனை காலம் பிடிக்கிறது ஓர் எழுத்தாளருக்கு என்ற கேள்விக்கு, தன் அளவில் மிக நீண்ட காலம் பிடித்தது என்ற ‘உண்மையை’ப் பகிர்கிறார். தான் சுய நம்பிக்கை இன்மையால் பீடிக்கப்பட்டு இருந்ததால் இப்படி ஆயிற்று என்றும் சொல்கிறார். சூழல் உதவியது, வீட்டில் நிறைய புத்தகங்கள் சூழ்ந்த ஒரு நிலையில் தான் எழுத்தாளன் ஆவது உந்தப்பட்டது என்றாலும், எழுத்தாளர்களின் வாரிசுகள் எழுத்தாளராவது என்பது இயல்பாக நடப்பது அல்ல என்பதையும் சுட்டுகிறார்.

புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் படித்து விட்டு அவர்களின் எழுத்தைப் பிரதி எடுத்து எழுதுவதன் மூலம் ஒருவர் சிறந்த எழுத்தாளராகி விட முடியாது என்ற இன்னொரு கருத்து இவரிடமிருந்து இந்த பேட்டியில் கிட்டுகிறது. குறிப்பாக நவீனத்துவம் என்பது நேர்க்கோட்டு இயக்கத்தால் கிட்டப்பட்டதல்ல, அது சுழற்சியாக இருக்கும், இன்று நவீனத்துவம்/ பின் நவீனத்துவம் என்று பலரால் இனம் காணப்பட்டதெல்லாம் பழைய இலக்கியங்களில் ஏற்கனவே இருந்தவைதான். நவீனத்துவர்கள் தாமே கண்டு பிடித்ததாகச் சொன்னவை முன்பே இலக்கியங்களில் இருந்தவைதான் என்றும் சொல்கிறார்.

பரிசுகளால் இலக்கியாளர்களுக்கு ஏதும் பயனுண்டா என்ற கேள்விக்குப் பதில் ருசியானது. இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கவும், முது எழுத்தாளர்களுக்கு ஆறுதல் தரவும் பரிசுகள் உதவலாம் என்று வேடிக்கை செய்கிறார். நிஜத்தைச் சொன்னால் ஒவ்வொரு இலக்கியகர்த்தாவுக்கும், தனக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு இலக்கியப்பரிசு கிட்ட வேண்டுமென்றுதான் ஆசை இருக்கும், ஆனால் என்ன செய்ய அத்தனை பரிசுகள் உலகில் இல்லையே என்றும் கேலி செய்கிறார்.

தொழில் நுட்பத்தால் தாக்கம் பெற்று நாவல்கள் மடியத் துவங்கி இருக்கின்றனவா என்ற கேள்விக்குப் பதில், இல்லை. தொழில் நுட்பம் நாவலைக் கொல்லும் என்று பேசப்படுவது காலம் காலமாக நடப்பது. அது நிஜம் இல்லை என்று தன் கருத்தைச் சொல்கிறார். அதே நேரம் தான் மின்சார தட்டச்சு எந்திரத்தில் எழுதத் துவங்கி, கணினிக்குப் போய் அதில் அத்தனை வசதியாக உணராது, மறுபடி மின் தட்டச்சுக்குத் திரும்பிய பிறகு, இப்போது கையால் எழுதுவதையே விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.

இறுதியாக இளம் எழுத்த்தாளர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற கேள்விக்குப் பதில் சிலாகிக்கப்பட வேண்டியது.

படியுங்கள், படியுங்கள், படியுங்கள். ஆழமாக, துப்புரவாகப் படியுங்கள், படிப்பின் மீதுள்ள காதலால் உந்தப்பட்டுப் படியுங்கள் என்கிறார்.  ஒவ்வொரு எழுத்தாளரும் தானகத்தான் கற்கிறவர். எல்லாருமே எழுத்தாளராக ஆகக் கூடிய தன்மையை உள்கொண்டவர்கள்தான். எழுத்தாளராக ஆவது என்பது ஓரளவு அது உள்ளிருக்கும் திறமையை நம்பியது, பகுதி கடின உழைப்பு, பகுதி அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. எது தனக்கு உதவியதோ அது வேறொருவருக்கு உதவும் என்று சொல்ல முடியாது, ஒவ்வொருவரும் தமக்கு எது உதவும் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று இவர் சொல்லும்போது அது இந்தியர்கள் ஒவ்வொருவரும் தமக்கான குருவைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்வதையும், குருவும் ஓரளவுதான் வழி நடத்த முடியும் என்றும் ஒத்துக் கொள்வதும் நினைவு வந்தன.

இனி பேட்டியை எதற்குக் காண வேண்டும்? பார்ன்ஸின் பதில் அளிக்கும் முறையை நாம் காணொளியைப் பார்க்கையில்தான் அறிகிறோம். எத்தனை அடக்கமும், அதேநேரம் சுய நம்பிக்கையும் கலந்த உரையாடல் அது என்பதை அவர் சிரிப்பதிலிருந்து, கேட்பவர்களைப் பார்க்கும் விதத்திலிருந்து, தம்மோடு பேசுபவர்கள் பள்ளி மாணவர்கள் என்றாலும் அப்படிச் சிறிதும் கருதாது முழுக் கவனம் செலுத்திப் பேசி நேரான விளக்கங்கள் கொடுப்பது என்ற உரையாடல் பாணியை நாம் கவனிக்கலாம்.

இத்தனைக்கும் கேள்வி கேட்கும் மாணவர்கள் இங்கிலிஷில் கேட்டாலும், அவர்கள் ஸ்பானிய மொழி பேசுபவர்கள் என்பதால் அவர்களுடைய இங்கிலிஷ் உச்சரிப்பு கடினமாக இருக்கிறது. அதை எல்லாம் பார்ன்ஸ் பொருட்படுத்தாது இயல்பாகப் பேசிப் பதிலளிக்கிறார்.

இனி காணொளியைப் பார்ப்போம்.

பின்னூட்டமொன்றை இடுக