என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!

வண்ணதாசன்

‘ஒரு சிறு இசை’ சிறுகதை நூலுக்காக (வெளியீடு: சந்தியா பதிப்பகம்) வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. எல்லோரும் அதை நற்செயலாக  ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் புதிய பயணத்தில் அவரை விட்டுவிட்டு இம்மியளவும் யாரும் நகர முடியாது. மனிதர்களின் மீதான அவரின் அன்பு மூப்பறியாதது. இவ்வேளையில் நடந்தது உரையாடல்.
‘‘உங்களின் கதையுலகம் முழுக்க அன்பு சார்ந்தது. தொடர்ந்து அதிலிருந்து நகராமல் இருந்தது எவ்விதம்?’’
‘‘என்னைப் பற்றிய குற்றச்சாட்டாகவே இதைச் சொன்னாலும், அதையும் பாராட்டாகவே எடுத்துக்கொள்வேன். அம்மா, அம்மாச்சி என இவர்களின் வளையத்திற்குள்ளேயே இருந்து வந்திருக்கிறேன். அப்பா எப்போதும் படிப்பதில் மட்டும் நிறைவு செய்துகொண்டே இருப்பார். பரஸ்பரம் மாறாத பிரியத்தை இந்தப் பெண்களிடம் இருந்தே அறிந்தேன். ஒரு சமயத்தில் தி.ஜா.வின் உலகத்தில் புகுந்தேன். அவரின் மனப்போக்கை அடியொற்றிப் போய்விட்டேன். பெண்களை அவர் மாதிரியே புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். இந்த இழை என் கடைசி கதை வரைக்கும் இருக்கும்னு நினைக்கிறேன்.’’

‘‘எப்போதும் பெண்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை நீங்கள்…’’
‘‘நான் எழுதிய கதைகளில் 90 சதவீதம் புனைவுகள் இல்லை. இப்படிப்பட்ட அன்பான மனிதர்கள் இருப்பது சாத்தியம்தானா என்றால், சாத்தியம்தான் என்பதாகவே என் வாழ்வு அமைந்திருக்கிறது. நான் அவர்களின் சில முகவரிகளைக் கூட சொல்ல முடியும். நிலக்கோட்டைக்கு மாறுதலானபோது ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை’யை எழுதினேன். நீண்ட வரிசையாக கட்டிய எட்டு வீட்டில் ஒன்றில் இருந்தேன்.

பாங்க்கில் வேலை செய்கிறவன் என்பதோடு, எழுதுகிறவன் என்பதிலும் கூடுதல் மரியாதை. 35 வயது என்பது பெண்களை அருமையாகவும், உண்மையாகவும் புரிகிற வயது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நான் வாசலில் நுழையும்போது வீட்டுப் பெண்கள் எல்லோரும் கூச்சத்தோடு எழுந்து ஒதுங்கி நின்றது ஞாபகத்தில் இருக்கிறது. சொல்லப்படாத மரியாதையான பிரியங்கள் எப்பவும் இருந்தது.

வெளி வட்டத்தில் மேலாக அன்பு வளைய வளைய வந்துகொண்டே இருக்கும். பெண்கள் மீது எனக்கு ஒரு புகாரும் வைக்க முடியாமலேதான் இருந்தது. நல்ல சிநேகிதிகள் நிறையப் பேர் இப்போதும் இருக்கிறார்கள். என்ன ஒரு பிரச்னை என்றாலும், என்னைக் காப்பாற்றி ஒரு நல்ல இடத்தில் வைக்கிற வேலையை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.’’

15878827_1227256583990527_1628545430_n
‘‘உங்களை இந்தப் போக்கில் கொண்டு வர யார் உடன் இருந்திருக்கிறார்கள்?’’
‘‘என் இயல்புக்கு, இப்போது இருக்கிற கல்யாணிக்கு ஆதாரம் என் தாத்தா. இந்தப் பெயர்கூட அவரிடமிருந்து பெற்றதுதான். அவருடைய குணங்கள் அப்படியே எனக்கு வந்திருக்கு. பாரம்பரியமாக இருக்கலாம். எந்த சிராய்ப்புகளும் இல்லாமல், அப்படியே ஒரு வாழ்க்கை வழி வந்ததுதான் ஆச்சர்யம்.

நான் பி.காம் ஃபெயிலாகி மதுரைக்கு ஓடிப் போறேன். அப்ப என்னை சரியாகப் புரிந்துகொண்டது தாத்தாதான். ‘கல்யாணிப் பய என்ன பெரிசா பண்ணிட்டான்’னு சொன்னது அவர்தான். என்னை மாதிரியே ஃபெயிலாகிப் போன சொக்கு வீட்டிற்குப் போயிருந்தேன். அங்கே இருந்த சொக்குவின் அக்கா நாகமக்கா எனக்கு அவ்விதமே இருந்தார். என்னை என் இன்னல்களிலிருந்து காப்பாற்றியதும், மீட்டுக் கொடுத்ததும் அவர்களே.

‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்களி’ல் வருகிற ஹெட் கான்ஸ்டபிளை இன்னமும் எனக்குத் தெரியும். அவர் போட்டுக் கொண்டிருந்த மினுமினுக்கற சிவப்புக் கடுக்கன் வரைக்கும் எனக்கு ஞாபகம் இருக்கு. ‘சின்னு முதல் சின்னு வரை’யில் இருந்த சின்னு இன்னும் என் கண்ணுக்கு முன்னால் நடமாடிக் கொண்டிருக்கிறாள். என் மனிதர்கள் கற்பனையாளர்கள் கிடையாது!’’

‘‘எப்போதும் உரத்த குரலில், தோற்றத்தில், மிடுக்கில் கூட நீங்கள் வெளிப்பட்டது கிடையாது…’’
‘‘நான் சரியாக இருக்கிறேன் என முதலில் இருந்தே தோன்றிவிட்டது. இதுவே போதும் என நினைத்துவிட்டேன். வாழ்க்கை என்னைக் கீறாமல், உருட்டித் தள்ளி விடாமல், மலையில் ஏற்றி விடாமல் சமவெளியிலேயே வைத்திருந்தது. நான் பள்ளத்திற்கும் போகலை, மேட்டுக்கும் போகலை.’’

‘‘வாழ்க்கை சந்தோஷமாகப் போகிறதா?’’
‘‘நான் மிகவும் தனியனாக உணர்கிறேன். 70 வயதாகிவிட்டது. 60 வயது வரைக்கும் பெரிதாக துக்கம் இல்லாமல்தான் போனது. அப்போ எனக்கு சிநேகிதர்களின் உலகம் மிகத் தேவையாக இருந்தது. என்னைப் புரிந்துகொண்டு தோள் பற்றிக் கொள்ள பரமன் இருந்தான். அவன் பெரிய குடிகாரன். அவனோடு சேர்ந்து நான் குடித்திருக்கிறேன்.

அவன் மரணம் என்னை நிலை குலையச் செய்துவிட்டது. சுடலை மாடன் தெருவில் நுழைய முடியாதபடி அப்பா இறந்த பிறகான சொத்துப் பிரச்னைகள் சூழ்ந்து கிடக்கு. கண்ணுக்குத் தெரியாத சுவர் எழும்பி நிற்குது. இவ்வளவு செடி, கொடி, காத்து இருந்தும் எனக்கு மூச்சு முட்டுகிற மாதிரி இருக்கு!’’

‘‘எழுதுவது சந்தோஷம்தானே?’’
‘‘இதையே 15 வருஷத்திற்கு முன்னாடி கேட்டால் ‘ஆமாம்’னு சொல்லியிருப்பேன். இப்ப ‘எழுதுவதற்கு சந்தோஷம் தேவையில்லை’னு சொல்வேன். வண்ணநிலவன் கஷ்டப்பட்ட காலத்தில் பிரமாதமான கதைகள் எழுதியிருக்கான். இப்ப அவன் பசங்க நல்லா செட்டிலாகி ஃபாரீனில் இருக்காங்க. பிள்ளைகளை கட்டிக் கொடுத்தாச்சு. மனைவி சந்திரா வேலைக்குப் போய் நல்லா சம்பாதிக்கிறாங்க. ஒண்ணுக்கு இரண்டு அபார்ட்மென்ட் இருக்கு. ஆனால் அவனோட ‘பாம்புப் பிடாரன்’ எந்த புத்துக்குள்ள போனான்? ‘கம்பா நதி’ சங்கரம் பிள்ளை எங்கே போனாருன்னு தெரியலை. பழைய வண்ணநிலவனை தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கு.

அதுக்கு நேர் எதிரடியாக அப்ப இருந்ததைவிட இப்ப என் சமீபத்திய கதைகள் அமைஞ்சிட்டு இருக்கு. ரொம்ப சீராகவும், சரியாகவும் இருக்கு. நெருக்கடியும், கண்ணீரும், அழுத்தமும் சேர்ந்து ஒரு கலைஞனுக்கு நல்லுறவாக இல்ல, வல்லுறவாக இருக்கு. என்னை ஆறடி உயரத்தில், அழகா சிரிக்கிற படங்களா பார்த்துப் போடுகிறார்கள். உலகின் ஆராதிக்கப்பட்ட மனுஷன்னு நினைக்கிறாங்க.

ஆனால் அப்படிக் கிடையாது. நான் மனிதர்களை குறைத்து மதிப்பிட்டதே கிடையாது. எப்படியிருந்தாலும் என்னுடைய புகார் புத்தகத்தில் வாழ்வு குறித்த முதல் வரியை நான் எழுதவே மாட்டேன். அதிகாரியாக ஒரு பைசா கையூட்டு நான் வாங்கினதில்லை. அதிகபட்ச நேர்மை, உண்மைன்னு இருந்திருக்கேன். முகநூலில் கடந்த நாலைந்து நாட்களாக வாழ்த்தாக பதிவிடுகிறார்கள். யார் யாருன்னே தெரியலை. இவ்வளவு பேரை இந்த எழுத்தின் மூலம் அடைஞ்சிருக்கேன்!’’

15910221_1227256543990531_1306036945_n

‘‘இன்னும் உங்களை கேள்வி கேட்க தோணலை.’’

‘‘எனக்கு பேசணும்னு இருக்கு. எங்க ஊரு தாமிரபரணி மாதிரிதான். மண்ணெல்லாம் அள்ளிக்கிட்டு போயிட்டாங்க. கருவை முளைச்சிடுச்சு. சகதியா இருக்கு. குளிக்க ஆள் கொஞ்சம் வர்றாங்க. ஆனால் ஈரம் அப்படியே இருக்கு. மனுஷன் உடம்பில வியர்வையும், கண்ணுல தண்ணீரும் இருக்கிறவரைக்கும் எப்படிப்பா உலகத்தில் ஈரம் வத்திப்போகும்? இந்த மார்கழியில் பூ உதிர்வது எனக்குப் பிடிக்கும்.

உதிர்வதன் மூலமே பூக்கள் அழகா இருப்பது இந்தப் பனிக்காலம்தான். எல்லா இலைகளும் உதிர்வதன் மூலம் அழகா இருக்கிற பருவம் கோடைக்காலம். டெல்லியில் உலர்ந்த சருகுகளோடு காலை நீட்டி கோடு போட்ட சட்டையோடு உட்கார்ந்திருக்கிற படம் எனக்குப் பிடிக்கும். கோடைக் காலத்தில் சருகுகள் சுக்குநூறாக நொறுங்கி இன்னும் அழகா இருக்கும். ஒரு தாவரமாகவே என்னை நினைச்சுக்கிறேன். யாரோ விதையைப் போட்டுட்டு போனாங்க. முளைச்சேன். அடிச்ச வெயில், மழைக்குத் தக்கன பூத்து, காய்த்து, கனிஞ்சேன். இப்ப மனசார உதிர்வதற்கும் ரெடியாக இருக்கேன்.’’

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=11573&id1=4&issue=20161230
– நா.கதிர்வேலன்
படங்கள்: சதீஷ்

பின்னூட்டமொன்றை இடுக