உண்மையும் அழகும்

பிஸ்தாமி

உண்மையும் அழகும் நிலையானவை என்ற கருத்து நிலையை பின்நவீனம் தகர்த்து விட்டது -பிஸ்தாமி

நேர்காணல்: நஸார் இஜாஸ்

பிஸ்தாமி இலக்கிய உலகின் தேர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர். மேடைப் பேச்சாளர், விமர்சகர் என பல்வேறு ஆளுமைகளைக் கொண்டவர். மல்வானை ரக்ஸபானைவைச் சேர்ந்த இவர், மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலை, பேருவளை ஜாமியா நளீமியாவில் இஸ்லாமிய கற்கைகளை  முதற்தர சித்தியில் நிறைவு செய்தவராவார். தற்போது மல்வானை அல்முபாரக் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரிகின்றார்.

காலம் சென்ற அரபுலக சிந்தனையாளர் முஹம்மத் குதுப் அவர்களது அரபு நூலான மேற்கதேய இஸ்லாமிய சிந்தனைகளுக்கிடையிலான மோதல் என்ற நூலை மொழிபெயர்ப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவை தவிர மீள்பார்வையிலும் பயணம், வைகறை, அல்ஹசனாத் போன்ற அச்சு ஊடகங்களிலும் தொடர்ந்தேர்ச்சையாக எழுதி வருகின்ற இவருடைய எழுத்துக்கள் ஆரம்பம் தொட்டே கவனிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அரபு இலக்கிய வாதிகள் குறித்தும், பின்னவீன இலக்கியம் குறித்தும் துல்லியமான கருத்தாடல்களை அவர் எம்முடன் மேற்கொண்டார். அவருடனான சந்திப்பில் பகிரப்பட்ட சுவரஷ்யமான விடயங்கள் இங்கு தொகுத்துத் தரப்படுகிறது.

உங்களுடைய இலக்கியத்தின் ஆரம்ப தளம் பற்றி எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா? 
பாடசாலைக்காலத்தில் பாடசாலை மட்ட தமிழ் மொழி தின  போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். கட்டுரை, சிறுகதைகள் எழுதியுள்ளேன்.அப்போதெல்லாம் இலக்கியத்தில் ஆர்வம் இருக்கவும் இல்லை. தூண்டுவதற்கு யாரும் இருக்கவும் இல்லை. தமிழ் இலக்கிய பாடத்தை விரும்பிக் கற்றேன். மொழியில் அலாதியான ஆர்வம் ஆரம்பம் முதல் இருந்தது. நளீமியா வளாகத்தில் நுழைந்த பிறகு அங்கிருந்த மிகப் பிரமாண்டமான நூலகம் புத்தகங்களுடன் என்னை பிணைத்து விட்டது. அங்கிருந்த தமிழ் உலக எழுத்தாளர் வைரமுத்து, கண்ணதாசன் போன்றவர்களின் புத்தகங்களை அதிகம் வாசித்தேன்.
குறிப்பாக இத்ரீஸ் ஆசிரியர் என்னை எனக்கு இனங்காட்டி எனது எழுத்துக்களின் வசீகரத்தை எனக்கு உணர்த்தி இலக்கிய உலகில் நுழைவித்தார்.அது தீராத வாசிப்பாக மட்டுமே பரிணமித்தது. வாசிப்பை நிறுத்துவது மிகவும் கஷ்டமாக மாறியுள்ளது. நஜீப் கைலாணி போன்ற அரபுலக இலக்கியவாதியின் நூல்களை அதிகம் வாசித்துள்ளேன். வரலாற்று நாவல்களை அதிகம் வாசிக்க வாய்ப்பு நூலகத்தில் கிடைத்தது. தவிரவும் அல்குர்ஆன்  மிகப்பெரும் இலக்கிய ஊற்று என்பதால் அதற்கு நடைமுறை வியாக்கியானம் வரைந்த ஷஹீத் சையித் குதுபின் அல்குர்ஆன் நிழலில் நூலை சுவைத்து வாசித்து அதன் இலக்கிய வாடையை நுகர்வேன்.
அடுத்து எனது நெருங்கிய நண்பன் இன்ஸாப் இலக்கிய உலகில் நுழைய எனக்கு ஆர்வமூட்டினார். அவரது தீராத ஆர்வமும் இலக்கிய உலகில் நுழைய முக்கிய காரணம். இவை தவிர நளீமியாவின் ராபிதா கலமியா அதே போன்று மன்றங்களில் நடைபெறும் நாடகங்கள் கலையம்சங்கள் நிறைந்த அரங்கேற்றங்கள் இலக்கிய உலகின் நுழைவுக்கு களமும் தளமும் அமைத்தன.

உங்களுடைய எழுத்துக்களின் தீவிரம் என்ன? உங்களுடைய எழுத்துக்களில் நீங்கள் எதைப் பற்றி அதிகமாக சொல்ல விரும்புகிறீர்கள்?

நான் தீவிர எழுத்தாளன் அல்ல.ஆனாலும் தொடர்ந்தும் எழுதுகிறேன்.எனக்கென்று வாசகர் வட்டத்தை உருவாக்கியுள்ளேன். அவர்கள் எனது ஆக்கங்களை வாசித்து பின்னூட்டங்களை தருவர்.  எனது எழுத்துக்களில் தமிழ் மொழியின் கடினம் தெரிவதாக சில அபிமானிகள் கூறியுள்ளனர். நவீன சிந்தனைகளை ஆய்வுகளை வாசிக்கையில் மொழியின் நவீன பாணிகள் நுழைவது தவிர்க்க முடியாது. தவிரவும் முடிந்த அளவு நான்கு மொழிகளிலும் தொடர்ந்தும் வாசிப்பதால் மொழியின் வேகமான வளர்ச்சியும் நவீனமும் தமிழ் மொழியையும் அந்த இடத்தில் வைக்க தூண்டிவிடுகிறது. ஆனாலும் மொழி அழகிய எளிய ஊடகமாக இருந்து மக்கள் மனங்களில் தாக்கம் விளைவிக்க வேண்டும் என்பதால் அதனை முடிந்த அளவு அழகாகவும் எளிமையாகவும் சுவையானதாகவும் அமைத்துக்கொள்கிறேன்.

எனது எழுத்துக்களில் கலைத்துவத்துடன் கூடிய பாணியில் கருத்துக்களை சிந்தனைகளை  முன்வைக்க எத்தனிப்பதால் அவை சிந்தனைகளையும் சமூக பிரச்சினைகளையும் ஏன் விமர்சனங்களையும் கூட கலைப்பின்னனியில் முன்வைப்பதாக உணரவும் கருதவும் முடிகிறது.எனது ஆக்கங்களில் இஸ்லாமிய சிந்தனையை பின்புலத்தை முடிந்த அளவு எளிமையாக முன்வைக்கின்றேன். பொதுவாக எல்லாத்துறைகளிலும் ஆக்கங்கள் எழுதி வருகிறேன். எனது எழுத்துக்களை நான் அதிகமாக விரும்புகிறேன். ஆனாலும் எனது எழுத்துக்களில் ஆன்மீக விவகாரங்களில் தான் வீரியம், உத்வேகம், உற்சாகம், அழகு, அர்த்தம், தாக்கம் இருப்பதாக கூறி ஆன்மீகம் சார் கருத்துக்களை சிந்தனைகளை எழுதுவதையே எனது அபிமானிகளும், எனது எழுத்துக்களை விரும்பி தேடி வாசிக்கும் நெருக்கமானவர்களும் எதிர்பார்க்கின்றனர். ஆசைப்படுகின்றனர். தனி மனிதனது உளப்பாங்கு மாற்றத்தை ஆன்மீக ரீதியாக ஏற்படுத்துவதில்  சொல்வதில் எனது எழுத்துக்கு வலிமையும்   ஈர்ப்பும் இருப்பதை உணர்கிறேன்.

நவீனம், பின்நவீனம் என்ற இரு போக்கில் இலக்கிய சமுகம் சமகாலத்தில் பிளவுபட்டுச் செல்கிறது. இதில் உங்களுடைய பார்வை எவ்வாறானது?

இலக்கிய உலகிலும் இதர துறைகளிலும் அறிமுகமாகும் சொல்லாடல்களின் பின்னனியை நோக்கினால் அவை மேலேத்தைய அல்லது ஐரோப்பிய உலகில் அறிமுகமாகி அலசி ஆராயப்பட்டு காலாவதியான பிறகே கிழக்குலகில் அல்லது தமிழ் உலகில் அறிமுகமாகின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த இரு சொற்களையும் அப்படித்தான் பார்க்கின்றேன். 19ம் நூற்றாண்டின் முன்னரை தசாப்தத்தில் வாழ்ந்த மெய்யியலாளர் நீட்சேயின் சிந்தனைகளின் இருப்பில் இருந்துதான் பின்நவீனம் வேர்கொள்கிறது. இதன் தொடர் வளர்ச்சியாக 1971 களில் பின்நவீனம் என்ற எண்ணக்கரு முழுமை பெறுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்கூறுகளில் அறிவுத்தளத்தில் பரவலாக கையாளப்பட்ட எண்ணக்கருவாக பின்னவீனத்துவம் அமைந்தது. பாரம்பரிய வழிமுறைகளை விட்டும் சமகாலத்தை வேறுபடுத்தி வித்தியாசமாக்கிக்காட்டும் எண்ணக்கருவாக நவீனம் அமைந்தது. நவீனத்தின் அதிவேக வளர்ச்சி நவனவீனமாக மேலெழுந்தது.
நவீன உலகின் அதிவேக வளர்ச்சி தொழில் நுட்பம் போன்றன கலைகளின் போக்கில் பாரிய மாற்றத்தை உருவாக்கியதை நிராகரிக்க முடியாது.பாரம்பரியத்தை அப்படியே தூக்கி எரிந்து விட்டு புதுமையை நவீனத்தை அனைத்திலும் புகுத்தி விடுவதையே நவீன பின்நவீன சிந்தனைகளின் படைப்புக்கள் கொண்டுள்ளன. இதனால்தான் இலக்கியவாதிகளும்  இவ்வாறு இருவேறு துருவங்களில் நின்று தமது படைப்பிலக்கியங்களை தயாரிக்கின்றனர்.
பழமையை விட்டும் புதுமை தனித்திருக்க முடியாது. பழமையின் அடித்தளத்தில் நின்றுதான் புதுமையும் நவீனமும் வேர்கொண்டதை இலக்கியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். ஜாஹிலிய காலத்தில் புகழ் பெற்ற அரபுக்கவிஞரான இம்ர உல் கைஸ் கூட அசிங்கத்தை மிகவும் அழகாகவும் லாவன்யமாகவும் கவர்ச்சியாகவும் சமூகத்துக்கு எடுத்துக்காட்டினான். கவிஞகர்களுக்கு எல்லாம் கவிஞனாக அவன் போற்றப்பட்டான். அவனது கவிதைகள் இன்றும் பாடநூலாக கருதப்படுகின்றன.
எனவே இலக்கிய உலகில்  எதனையும் நிராகரிக்கவோ உதறித்தள்ளவோ வேண்டிய அவசியம் இல்லை. படைப்பாளன் அவனது படைப்பாற்றளுக்கேட்ப வாசகர்களின் சுவையை உணர்ந்து அழகும் கலையும் இணைந்ததாக தனது படைப்பை ஆக்கும் போது இத்தகைய முரண்பாடுகளை தணிக்கலாம், தவிர்க்கலாம். எனினும் ஒவ்வொருவருக்கும் தத்தமது விருப்பு வெறுப்பு சார்ந்த முகாம்கள் இருப்பதை  போல இலக்கிய உலகில் கூட வித்தியாசமான பாணிகள்(style)  இருப்பதை அங்கீகரிக்க வேண்டும்.
உண்மையும் அழகும் நிலையானவை என்ற பாரம்பரிய கருத்து நிலையை பின்நவீனம் தகர்த்துவிட்டது. இந்தக்கருத்தில் மாக்ஸியமும் பின்நவீனத்தை அரவணைத்தது என்றுதான் கூற வேண்டும். மனித நலன்களை நோக்காக கொண்டு இவை அமைந்தமையால் மாக்ஸியம் இதனை கடுமையாக காரசாரமாக  விமர்சித்தது. அழகியல் அல்லது கலையம்சங்கள் அதிகாரத்தின் வடிவம் அது தனி மனிதனை மையப்படுத்தி ஆக்கிரமிப்பு பண்பை பெற்றுவிடுவதாக பின்நவீன சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
பின்நவீனத்தை CULTURAL LOGIC of LATE CAPITALISM (பிந்திய முதலாளியத்தின் பண்பாட்டுதாக்கம்) என்று FREDRIC JAMES கருதுகிறார். பின்நவீனத்தை நவீன அத்வைதம் என்று கூறும் தமிழ் எழுத்தாளர்களும் உள்ளனர்.
பின்நவீனம் கடந்த காலத்தை அப்படியே அறுத்துவிட்டு முன்னோக்கி நகர எத்தனிக்கிறது. வரலாற்று ஓட்டத்தில் மாக்ஸியத்தின் இடைவெளிகளை நிரப்பவே பின்நவீனம் அறிமுகமானது என்பர். ஆனால் பின்நவீனமும் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பின்நவீன சார்பாளர்களை பின் மாக்ஸியவாதிகள் என்றும் அழைப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இத்தகைய பின்புலத்தில் நின்று நோக்கும் போது இலக்கியவாதிகளும் அவர்களது முகாம்களுக்கு ஏற்ப தமது படைப்புக்களில் மரபையும் நவீனத்தையும் பின்னவீனத்தையும் தெரிக்க வைக்கின்றனர் என்பது கண்கூடு.

பிற எழுத்தாளர்களில் உங்களை பெரிதும் கவர்ந்த எழுத்தாளர்கள்? 

நான் இலக்கியத்தை சுவைக்கின்ற ரசிக்கின்ற வாசகனாகவே இன்னும் இருக்கின்றேன். அரபுலக இலக்கிய வாதிகளான தாஹா ஹுசைன், மஹ்மூத் தைமூர், தொவ்பீகுல் ஹகீம, அலி அஹமத் பாகதீர், பகாஉத்தீன் அல் அமீரி, நஜீப் அல் கைலாணி, முஹம்மத் குதுப் ஜாபிர் கமீஹா போன்றோரை குறிப்பிடலாம்.
மிக அண்மையில் காலம் சென்ற அரபுலக இலக்கியவாதி ஜாபிர் கமீஹா அவர்களது படைப்பாக்கங்களை விரும்பி படிப்பேன். தனது எழுத்துக்களால் மக்களை ஈர்த்த ஒருவர். சமகால பிரச்சினைகளை தனது இலக்கிய படைப்புக்கள் மூலம் உலகின் கண்களுக்கு காண்பித்து மனசாட்சியை தட்டி எழுப்பியவர். முஸ்லிம் உம்மாவின் ஐக்கியத்தை இருப்பை வலியுறுத்தி தனது படைப்புக்களை அமைத்தார்.
நளீமியாவில் கற்கும் போதே மர்ஹூம் உஸ்தாத் ஷாபிஈ அடிக்கடி அறிமுகம் செய்யும் ஒருவராக இருந்த முஸ்தபா லுத்பி மன்பலூதியின் ஆக்கங்களும் என்னை கவர்ந்தவை. நவீன அரபுலகில் கவிஞர்களின் இளவரசன் என்று சிலாகித்து கூறப்படும் அஹ்மத் ஷௌகியின் கவிதைகளும் என்னை பெரிதும் கவர்ந்தவை. நஜீப் அல்கைலானியின் நாவல் இலக்கியங்களை மிகவும் விரும்பி வாசிக்கின்றேன். தவிரவும் அவ்வப்போது மொழி அழகிட்காக கருத்து செறிவிட்காக தமிழ் உலக இலக்கியவாதிகளின் படைப்புக்களையும் வாசிக்கின்றேன்.

இன்றையகால கால இலக்கியவாதிகளிடையேயும் ஒருவித அரசியல் போக்கு காணப்படுகின்றதே. அது ஆரோக்கியமானதா? அது பற்றிய உங்களுடைய அபிப்பிராயம்?
உண்மைதான்.விரும்பியோ விரும்பாமலோ இன்று எல்லாமே அரசியல் மயமாகி விட்டது. அதனது அதிகார போக்கும், ஆக்கிரமிப்பு உணர்வும் இலக்கியத்தையும் இலக்கு வைத்துவிட்டது. இலக்கியவாதிகள் அரசியல் பொறிக்குள் அகப்பட்டு விட்டனர். திட்டமிட்டு சிக்க வைக்கின்றனர். விலைக்கு வாங்குகின்றனர். தனித்துவம் பேணும் ஒருசிலரை தவிர. இது தேசிய ரீதியிலும்  சர்வதேச அளவிலும் தொடர்ந்தும் நிகழும் இயல்பான ஒன்றாக ஆகியுள்ளது, ஆக்கப்பட்டுள்ளது. அரபுலக இலக்கியவாதிகளிலும் அரசியல் போக்குடன் கூடிய இலக்கிய படைப்பாளிகளை அதிகம் காணலாம். இவர்கள் அதிகாரத்திடம் கைக்கூலி பெறும் இலக்கியவாதிகள் என்பதை அரபுலக இலக்கிய விமர்சகர்கள் கருதுகின்றனர். அரசியல் சாயம் பூசப்பட்ட படைப்புக்களாக இலக்கியம் பரிணமிப்பது ஆபத்தானது. அரசியல் அனைத்தையும் விழுங்கி விடுகிறது. அதிகார பலத்திடம் அனைவரும் அடங்கி விடுகின்றனர். அதிகாரத்துக்கு முன்னாள் சத்தியத்தை உரக்க சொல்வதே அறப்பணியாகும். இலக்கிய படைப்புக்கள் மூலம் இதனை அழகாக முன்வைக்கலாம். கவிதையாக சிறுகதையாக ஓவியமாக என்று இதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் உதறிவிட்டு இலக்கியவாதிகள் அரசியல் புகழிடம், அடைக்கலம் தேட தயாராகி விட்டனர். இலக்கியத்தையும் அரசியல்வாதிகளிடம் அடகு வைத்துவிட்டனர். துரதிஷ்டவசமாக இலக்கியவாதிகளும் அரசியல் காய்நகர்த்தலில் பலிகடாவாக மாறிவிடுகின்றனர். இதனால் இலக்கியத்தில் அரசியல் சாயல் இழையோடி கலைப்பண்புகளை கொலை செய்து இலக்கியத்தை அர்த்தமற்றதாக ஆக்குகின்றது. அரசியலின் பிழையான  பக்கங்களின் திரைகளை கிழித்து  சமூகத்துக்கு முன்வைக்க இலக்கியத்தை கையாள்வது ஆரோக்கியமானது. அவசியமானது. பின்நவீனம் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. இலக்கியம் சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. ஆனால் இலக்கியத்தில் அரசியல் மேலெழுவது ஆரோக்கியமானதல்ல. அது ஆபத்தானது.
பின்நவீன அழகியலில் விளிம்புநிலை குறித்த சிந்தனை சிறப்பிடம் பெறுகிறது. அழகியலை அரசியல் மயமாக்கும் செயலாக இது அமைவதை காணமுடிகிறது. அரசியலை அழகியலுடன் கலையுடன் ஒன்றிணைக்க முற்படக்கூடாது என்பதை பின்நவீனம் வலியுறுத்துகிறது. அப்படி நிகழ்வது கலையை அதிகாரத்தொனியுடன் கூடியதாக ஆக்கி மேலாதிக்க உணர்வை கிளறிவிடும். பின்நவீனம் திணிப்பை தகர்க்கிறது. அதனை மறுக்கிறது. நிராகரிக்கிறது. அது அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கிறது. எனவே பின்னவீனப் பாணியில் கூறுவதாயின்  இலக்கியத்துடன் அரசியல் கலப்பதை பின்நவீனம் தகர்க்கிறது.
நவீன உலகில் கலையோ விஞ்ஞானமோ இன்னொரு துறையுடன் கலப்பதை அல்லது தழுவி நிற்பதை முழுமையாக தவிர்க்க முடியாது தான். ஆனாலும் இன்னொன்றுடன் சங்கமித்து மொத்தமாக தனது தூய்மையை இழந்து எல்லைகளை மீறி இன்னொரு வடிவம் பெறுவதை ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ முடியாது. அது கலையின் அல்லது இலக்கியத்தின் சுவையை கெடுத்துவிடும்.

பின்னூட்டமொன்றை இடுக